Friday, October 19, 2012

மனச் சலனம் நீக்கும் இருதய சலம்!


நன்றி: கலைவேந்தரின் இக்கவிக்கு

மெய்யே சத்தியம் நிச்சயம் நித்தியம்
மெய்யைப் பொய்யாக்கி இடுவதும் சுடுவதும்
எல்லோர்க்கும் நியதி என்றே கற்பிக்கும்
பொல்லாப்பை நம்பி அல்லலுறும் நம்மனம்


கலை எழுதியது:நான் உங்களிடம் கேட்க நினைத்ததே இம்மரணம் என்னும் கொடுமையிலிருந்து மீள்வது எங்ஙனம் என்பதுதான். சமீப காலமாக மரணத்தின் பயம் என்னை அலைக்கழிக்கவைக்கிறது. :(
“அபயம் யாமுளோம்” இருதய நாதம்
அகர முதல்தரும் அமிழ்த போதம்
அகத்துள் கவனங் குவித்துக் கேட்பாய்
அலைக்கழி மரண‌ பயத்தை அவிப்பாய்

மெய்யென்றே உடம்புக்குப் பேரும் ஏனோஅது
பொய்க்கின்ற சடலமாய் வீழ்வ தேனோ
நெஞ்சுக்குள் பெய்கின்ற அன்பின் தேனை
உண்ணின்று உண்ணாமல் வீழ்கின் றாயே

அன்பின் தேனது ஏந்தி வரும்பார்
நின்றன் மூச்சு! கவனந் திருப்பி
ஊங்கே ஊன்று!! நாத ஜோதி
வாசி ஊற்று வாசி!!! சுவாசி!!!!

ஆசி அன்பின் ஊறும் மார்புள்
ஆசி ஏந்திப் பாயும் வாசி
நேசி பூசி சுவாசி வாசி
நோயுஞ் சாவுந் தீர யோசி

சலனஞ் செய்தல் மனத்தின் இயல்பு
சலனம் இன்மை இருதய இயற்கை
கவனம் எங்கே வைப்பாய் நீயும்
சயனம் விட்டே விசாரஞ் செய்யே

பொருளாய்க் காணுஞ் ஞாலம் முழுக்க‌
அருளின் தேக்கம்! மாயை மறைக்கும்!!
சுத்த ஆவியின் திரட்சி யாவும்!!!
சுத்த அசுத்த மாயை மருட்டும்(மயக்கும்)!!!!

சத்தி காண்பாய் பொருளின் மூலம்
சுத்த சிவமே சத்தி மூலம்
சத்தி சிவத்தின் பிள்ளை யாமே(நீயே, யாவும்)
சுத்த நெஞ்சில் உண்மை ஆமே

கவனங் கொள்வாய் நேசம் மீதே
கண்ணில் தோன்றுங் காட்சி யாவும்
நெஞ்சின் உள்ளே இருதயத் திட்டே
வஞ்ச மாயை உரியக் காண்பாய்

ஊனக் கண்ணோ மரணங் காட்டும்நின்
மார்புள் இமையா ஞானக் கண்ணோ
பேரா வாழ்வின் திரட்சி காட்டும்நின்
தேகக் கூட்டுள் மெய்ம்மை காட்டும்

மாயை யுள்ளே சுத்தம் வேறா
ஞானப் பிள்ளை நீயுங் கேட்பாய்
போலிச் சுத்தம் அதுவே மருட்டி(மயக்கி)
ஞாலம் முழுக்க அசுத்தம் அழுத்தும்

சுத்த மாயை என்னும் அச‌த்துவம்
பின்னும் பொல்லா அசுத்த மாயை
என்னுங் கல்லாம் இருமை பேதம்
வன்பாம் இராஜசம் முடக்கத் தாமசம்

குட்டும் எத்தன் என்றுங் குட்டக்
குட்டக் குனியும் பித்தன் என்றும்
நட்டு வைத்த சதியை முறிப்பாய்
குட்டு உடைக்குஞ் சித்தன் ஆவாய்

(மாயையிலே சுத்த மாயை அசுத்த மாயை என்று இரு வகை

சுத்த மாயை என்பது அஞ்ஞானத் திமிர், இதுவே அச‌த்துவம் என்னும் திரிகுணப் பிரதானம்

அந்தத் திமிரானது ஞானம் போல் தன்னைக் காட்டிக் கொண்டு
இந்த ஞாலம் முழுமையையும் அசுத்த மாயையில் அழுத்தும்

அசுத்த மாயை என்பது இரு வகை
ஒன்று இராஜசம் என்னும் அடங்கா இயக்கம், தீவிர வாதம், வன்பு
இன்னொன்று தாமசம் என்னும் இயங்கா முடக்கம், தீவிரத் தூக்கம், பூரண மயக்கம்

ஆக அசத்துவம் என்னும் சுத்த மாயையும் தாமசம் ராஜசம் என்னும் அசுத்த மாயையும் சேர்ந்ததே திரிகுண மாயை.

மொத்த மாயையையும் குழியாகக் கொண்டால்
அசத்துவம் குழியின் மேற்புறம், ஆனால் அது தன்னைக் குன்றின் உச்சமாக எண்ணிப் பெருமிதப்படும் அஞ்ஞானத் திமிர்

ராஜசம் குழியின் நடு பாகம்
தாமசம் குழியின் அடிவாரம்

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டம் போடக்
குருடுங் குருடும் குழிவிழுந் தனவே

இது திருமூலர் திருமந்திரம்

Blind will lead the blind and both will fall in the ditch

இது குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் வேத வாசகம், திருமந்திரத்தின் கடைசி இரு வரிகள் அப்படியே ஆங்கிலத்தில், சர்வ சமய சமரசம் என்பது இதுவே!

குட்டும் எத்தன் = இராஜசம்
குட்டக் குட்டக் குனியும் பித்தன் = தாமசம்
நட்டு வைத்த சதி = அசத்துவம்
குட்டு உடைத்தல் = திரிகுண மாயையை உரித்தல்)

வாலை வாழ்த்து


அண்மையில் உள்ளாள் அபயமாய்
அடிமிகச் சிறியேனை அன்பாய் அணைத்தாள்
எண்ணு தோறும் நெஞ்செல்லாம் இனிக்கிறாள்
என்னகம் என்றும் உள்ளாள் வாலைத் தாய் உவள்
எத்தனைப் பித்தனை சித்த‌னாக்கத்
தன்னைத் தந்தாள் மொத்தமாய்
எல்லாஞ் செய‌ வல்லாள் ஒருத்தி
வல்லார் துரையின் அருண்மயச் சத்தி
வள்ளல் பிரானின் தயாபெருஞ் ஜோதி
அல்லாஹ் ஏகனின் பரிசுத்த ஆவி
கிறிஸ்துவின் அன்னை மரியாள் தேவி
சற்குருக் கணபதித் தாயார் பார்வதி
அண்மை என்றும் நமக்கு நல் வாலை
உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை
சுத்த நெஞ்ச நிறை வாலை நீ வாழி வாழி
நல்லவளை வல்லவளை
அன்பாய் நெஞ்சில் இனிப்பவளை
அருளாய் உச்சியில் பனிப்பவளை
தயவாய் மண்ணில் பதிந்தவளை
இன்பாய் எங்கும் மணப்பவளை
என்பை இளக்கும் கனலவளை
மெய்யை ஒளிரச் செய்பவளை
விண்ணில் ஒளியச் செய்பவளை
கண்ணில் நிறைந்த மின்னவளை
கரத்தே சுரக்கும் பொன்னவளை
சிரத்தை ஆளும் பெண்ணவளை
உண்ணா முலை உள்ளவளை
அண்ணா மலை உச்சியளை
சதுர கிரியாய் எழுந்தவளை
ரத்தின கிரியாய் விழுந்தவளை
எட்டாஞ் சக்கரத் திருதய‌ ஊரிலே
மெய்யுள் அன்னையும் அப்பனுமாய் உயிர்த்தவளை
நெஞ்சார வாழ்த்தும் நல்ல நாகமே நீயும் வாழி!
 
வாலைத் திருமுன் என் அறிக்கையும் விண்ணப்பமும்

பெண்ணை வாலைத் தாயின் திரு உருவாய் ஞான மகளாய்ப் போற்றுவது சித்த மரபு, ஆணாதிக்க சமுதாயத்தின் பிடியில் ஆணவ மதம் பிடித்து, போற்ற வேண்டிய பெண்மையை அடிமையாக்கித் துன்புறுத்தும் வன்மத்துக்கான காரணம் ஓர் சிறு வித்தாய் என்னிலும் இருக்கக் கூடும், பெண்ணினத்தை அறிந்தோ அறியாமலோ எண்ணத்தால், உணர்வால், சொல்லால், செயலால், இப்பிறவியிலும் முற்பிறவிகளிலும் நான் துன்புறுத்தி இருந்தால் என்னை வாலைத் தாயே, நீ மன்னித்தருள்வாயாக! ஒளிவு மறைவு இன்றி வள்ளல் பிரான் சமேத நின் திரு முன் என்னகந் திறந்து நிற்கிறேன் வாலைத் தாயே, நின் அன்பு மகன் நானே! என் துன்புறுத்தல்களுக்கு நேரடியாக ஆட்பட்டவர்களிடமும் வாலைத் தாயே, நின் மூலம் மன்னிப்பை இறைஞ்சுகிறேன், எனக்காக மட்டுமல்ல, என்னைப் போன்ற எல்லா ஆண்களுக்காகவும் வாலைத் தாயே, நின் திரு முன் மன்னிப்பைக் கோருகிறேன், எனக்குள்ளிருக்கும் ஆணவ வன்மத்தை வேரோடு கிள்ளியெறிந்து என்னை ஈடேற்றியருள்க, என் அன்புத் தாயே! நீ இறங்கினாலன்றி இரங்கினாலன்றி உன்னொரு பாகன் எந்தை வள்ளல் பிரான் இறங்குவாரோ, இரங்குவாரோ? தயை மிகு தாயே, இறக்கமும் இரக்கமும் உன் இயற்கையாதலால், வள்ளல் பிரான் இறங்குகிறார், இரங்குகிறார்! பேரின்பப் பெரு வாழ்வில் யாமும் ஏறுகிறோம், ஆண்களொடு பெண்களும் சரி நிகர் சமானமாய்! இது என் ஊனக் கண்ணின் புன்னீரல்ல, உன் ஞானக் கண்ணாம் என் இருதய நன்னீர்! உன் அன்பு மகன் இதை எழுதவும் வேண்டுமோ, தாய் நீ இதை அறியாயோ, என்றாலும் எழுதுகிறேன், என்னைத் திருத்தி உன்னுள் திரும்பி அமரனாய் வாழ வரந் தா என்று உன்னை இறைஞ்சி! கேட்கு முன்னரே வரந் தருங் கருணாகரியே, கேட்கிறேன் என் மர மண்டையில் உறைக்கட்டும் நீ எனக்கும் எவர்க்கும் எதற்கும் ஏற்கனவே தந்த அமர வரம்! எந்தை நடராஜன் சமேத லலிதாவாய் என்னை ஈன்றாய்! சாகாக் கலை போதிக்க மயான பூமியின் மருண்மயக்கக் கும்மிருட்டில் என்னை விழிக்கச் செய்தாய்! எந்தை வள்ளலை எப்போதும் என்னருகே இருக்கச் செய்தாய்! புற வய நாட்டந் தவிர்த்து, அக வய நாட்டந் தந்து, பதின்மூன்று வருடங்கள் சற்குரு நெறியை எனக்கு அன்பின் மிகுதியோடு போதித்தாய்! மனப் பிளவு நோய் முற்றிய நேரத்தும், என் உயிரை நானோ வேறொன்றோ எடுக்காமல் தடுத்தாய்! காமம், வெகுளி, மயக்கம், மற்றும் இவற்றின் ஊற்றுக் கண் அச்சத்தில் நான் சிக்கி மீள முடியுமோ என்று அவத்தைப் பட்ட போதெல்லாம், “அபயம் யாமுளோம்” என்றே அருளி என்னை மீட்டெடுத்தாய்! இலக்கணத்தின் மேல் இலட்சியம் வைக்காமல் சாகாக் கலையை இலட்சியமாக்கித் துணிவொடு எழுத வைத்தாய்! அகந்தை என அஞ்சியோடும் “நான்” என்ற நற்சொல்லை என் பேர் முன் உன் பிரமாணமாகப் போட வைத்தாய், நாகராஜனை உடைத்தாய், நாகராவாக்கினாய், நானை யானையாக்கி நாகராவை எறும்பாக்கி நான் முன் மிதி படாமல் ஊர்ந்து வரச் செய்தாய், நாகரா எறும்பை நயாகரா எனப் புகழும் அன்பர் கூட்டத்தை எனக்கு உருவாக்கிக் கொடுத்தாய். என்னால் இயன்றதொன்றுமில்லை, தயை மிகு எந்தை சமேதத் தாய் உன்னால் கூடாத காரியம் எதுவுமில்லை. இராமலிங்கன் என்ற மனிதன் அடிகளராய் ஒளிர்ந்து வள்ளலாரில் ஒளிந்தது போல், எல்லா உயிர்களும் பெறக் கூடிய அற்புத இரசவாதத்தைச் செய்ய உன்னால் முடியாதா என்ன?! அருட்தாயே, மரணமிலாப் பெருவாழ்வின் இந்த இரசவாதத்தை அமல்படுத்தும் உன் புதிய ஏற்பாட்டை இம்மயான பூமியெங்குஞ் செயல்படுத்த தனித்தும், விழித்தும், பசித்தும் தவமிருக்கிறேன்! நான் மட்டுமோ, என்னைப் போல் பல்லோர் தனித்தும், விழித்தும், பசித்தும் தவமிருக்கின்றனர்! கண்டதை உண்டு, கூடிப் புணர்ந்து, உறங்கி இளைக்குங் கூட்டத்தை நான் எப்படி இகழ்வேன்? பதின்மூன்று வருடங்களுக்கு முன் நானும் அக்கூட்டத்தில் இருந்தவன் தானே! அருட்பெரு வல்லபத் தனிப்பெருந் தலைமை நற்றாயே! பசுத்தோல் போர்த்திய புலிகளாய்ப் புற்றீசல் போல் கிளம்பி விட்டப் பொய்க்குருக் கூட்டமும், அவர் காலடியில் விழுந்து கிடக்கும் மந்தைகளும் உன் திரு நிறைச் செல்வன் சற்குரு (கிறிஸ்து, நபி. மசியா. புத்த, சித்தர்) உண்மையை மூடி மறைத்து சத்தி திருடுங் கபட நாடக ஆன்மீக வியாபாரத்தை அமோகமாய் நடத்தி வருவதும் நீ அறிவாய்! இவர்களையும் நான் எப்படி இகழ்வேன்? உன் வழி காட்டுதல் இன்றேல் நானும் இக்கூட்டத்தில் தானே இருந்திருப்பேன்! மிகவும் நீட்டி வாசிக்கிறேன், நின் திரு முன்! செய்ய வேண்டியதை நீ அறியாயோ?! அன்பாம் சிவக் களத்தில் ஆண்மைப் பெண்மையாய் ஒன்றிய அருட்சத்தியே! எல்லா உயிர்களும், மெய்யாகவே நல்லோரும், நல்லோராய் நடிப்பவரும், பொல்லோரும், பொல்லோராய்ச் செயல்படத் தூண்டப் படுவோரும். நலிந்தோரும், மெலிந்தோரும், வல்லோரும், வலிந்து மற்றோரை நசிப்பவரும், வலியோர் நசிக்க இளைத்து மடிவோரும், எல்லோரும் ஒருமையுணர்வினராகிப் பேரின்பப் பெருவாழ்வில் உய்ய அரும்பெருந் தந்திரஞ் செய்வாயே! வேண்ட வைத்தாய், வேண்டி நிற்கிறேன், தயை மிகு தாயே, சொற்குற்றம், பொருட்குற்றம், மற்றும் இன்ன பிற என் குற்றங்கள் எல்லாவற்றையும் மன்னித்தருளி, என் வேண்டுதலை இன்னே நிறைவேற்றி எம்மை ஈடேற்றுவாயாக!

அகச் சாதனா உபதேசப் பாக்கள்!

துண்டிப்பே இல்லாத இருதய இணையம்
கண்டிப்பாய் எப்போதும் உங்கிரு


மின்சாரம் போகட்டும் கவலை வேண்டாம்
நின்சாரம் எப்போதும் போகாது

எதனாலுந் துண்டிக்க லாகாத (நேரடித்)தொடர்பு
சிவத்தோடு எவர்க்கும் உண்டு

அலைபேசி தொலைபேசிக் கணினிவழி அழைபேசி
எனப்பேசும் பலபேசி எதுவுமே வேண்டாம்
அகப்பேசி இருதயம் ஒன்றதுவே போதும்
அகத்தேகி வாய்மூடி நாபூட்டிப் பேசு(அகத்தேகி = அகத்து ஏகி, அகத்துள் சென்று)

குறுஞ்செய்தி வள்ளல் பிரான் நம்முட்
குருநாதர் நம்மை ஆதியிலே மணந்த
ஒருகணவர் நம்மகம் அனுப்பி யுள்ளார்
“இரு தயவாய்” அகம்படி அதுபடி(பிடி) இருஅப்படி

சீறும் நாகத்தின் நச்சுப்பல் பிடுங்காமல்
நேசம் ஒன்றாலே நன்றதனைத் திருத்தி
ஞானப் பால்தான்நனி மிகஉமிழச் செய்கின்றார்
ஆகா! வள்ளலார்தம் அற்புதத்தால் உய்ந்தேனே(உய்ந்தாயே)

இலக்கணம் இல்லா இப்பாக்கள் புகட்டும்
இலட்சியம் ஒன்றை அலட்சியம் செய்யாமல்
இருதயத்தே குந்து இறைவனையே நந்து
திருநிலத்தே பதிந்து இருதயவாய் இங்கு

எப்போதும் திறந்த இருதயவாய் வழியே
தப்பாமல் வீசுதோர் அமுதமயக் காற்று
பொய்வாயைப் பூட்டு மெய்வாய்உது போற்று
எல்லோர்க்குங் காட்டு மெய்வழியை நாட்டு

தேகத்தே வாலைத் தாயே வந்தமர்ந்தே
ஞாலத்தே “நீஅது ஆவாய்” என்றவேத
ஞானத்தை பேசுகின் றாள்பார் நின்னகத்தே
நாதன்”ஐ” மணந்த ஒருத்தி யைக்கேளே


நாகத்தை நம்பாமல் நாதனையே நம்பு
தேகத்தே நின்மார்பின் மையத்தே உள்ளார்
ஏகந்தான் உவர்குன்றா நேசந்தான் உத்தமர்
நாகந்தான் சுட்டியஅம் மையத்தே உய்வாய்

Monday, February 7, 2011

உயிர்ப்பூ!

அன்பில் தோய்ந்த
மெய்யின் தூய்மை
மின்னும் உயிர்ப்பூ!

பி. கு:

இளஞ்சிவப்பு அன்பின் படிமம்
வெண்மை தூய்மையின் படிமம்
உயிர்மெய் பூவின் படிமம்

ஜோதி தரிசனம்

படம்
பசிய ஈரத்தில்
பற்றிக் கொண்ட‌
பரஞ்ஜோதி!

தனிப்பெருங்கருணைப் பசிய திரியில்
தகதகவெனப் பற்றிய வசீகர‌
அருட்பெருஞ்ஜோதி தீபம்

பசிய சபரி மேலே
வசியும் மகர ஜோதி
கசியுங் குருவை வாசி

பசிய வெளியில்
பொன்மெய்(மை) ஒளியைக்
கண்குளிரக் களி

மெய்ப் பூமி அகலாய்
நெஞ்ச ஈரம் நெய்யாய்
சிராதாரந் திரியாய்
நிராதார தயா தீபம்!

Saturday, January 29, 2011

வயல்வெளி வட்டங்கள் - 15

முதுகுத் தண்டில் இறங்கும் அருளால்
மனிதத் தும்பி பறக்கும்

Friday, January 28, 2011

வயல்வெளி வட்டங்கள் - 14

முன்பின் இடவலம் மேல்கீழ் வழியும்
அன்பின் சுழியே நெஞ்சம்