Friday, December 19, 2008

4. இருதய பூமி

நிராதார இலிங்கம் ஆறாதார யோனிக்குள்
பராபரனே புகுத்தினான்! பீறிட்ட நாதவிந்து
தராதலத்தைப் புரட்டியே ஏற்றிய ஜோதிமலை
பராதயத் திரட்சியாய் மாற்றுதே பூமியை!

ஒரும் 'ஐ'யாய் அவமனைத்தும் அகத்தவத்தில் கரைத்து
வெறும் 'ஐ'யாய்ச் சிவமலையில் அமர்ந்திருக்க விரைந்து
வரும் ஐயா, தயவென்னும் மனவடக்கம்! மரணம்
அறும், ஐயன் குருவள்ளல் அருண்மொழியே சரணம்!

அம்மையும் அப்பனும் குருமகனும் அமர்ந்தனர்
இம்மையில் நம்இரு தயபூமியில்! தயவெனும்
செம்மையில் நம்மனங் கனிந்ததே! தம்போல்
நம்மையும் இக்கணம் மாற்றினார் வள்ளலே!

"இரு தயவாய்" என்னுமோர் இரத்தினச் சுருக்கமாய்
"இருதய வாய்" திறக்கும் குருமொழி அருளியே
அம்மையாய் அப்பனாய் குருமகத் திருவதாய்
இம்மையே இருதயம் அமர்ந்தார் வள்ளலே!

அடங்காப் பிடாரியாய் ஆர்ப்பரிக்கும் மனந்தான்
அடங்கவே பிரானவர் ஆட்கொண்டார் நம்மையே!
கடத்துளே பிரகாசமாய் ஆண்டவர்தம் இடமாய்ச்
சுடச்சுடப் பிறக்குதே தூயபூமியாம் இருதயம்!

மூவரும் ஒன்றினர் இருதய பூமியில்
யாவரும் அருந்தவே அமுத வாரியை!
போவதும் வருவதும் முடிந்த நித்திய
வாழ்வது தந்தவர் பரம வள்ளலே!

ஆறுக்கு அப்பால் ஓடும் அருளாறு!
ஆறுள்ளே தித்தித் தோடும் பாலாறு!
ஊறியுள்ளே வன்பின் சூடும் நீஆறு!
மாறியுள்ளே அன்பின் ரூபம் நீஆகு!

இருதய பூமியில் அருந்தவப் பயனாய்
அருட்பெருஞ் ஜோதியின் ஆனந்த நடனம்!
பராபர வள்ளல் தனிப்பெருங் கருணை
தராதலத் துள்ளே தயவாய் இருக்கும்!

பரஞானம் தூயநோக்கம் குருமந்திர அகதீட்சை
சிரந்தாண்டிப் பாயுமாற்றின் நிராதாரத் தரமெல்லாம்
சிரங்கீழேப் பாயுமாறுப் பராபரன்செய் யோகதந்திரம்
அரங்கேறும் தூயபூமி இருதயத்தே காண்குருபிரான்!

நிராமயன் நிர்மலன் பராபரன் வள்ளல்தாம்
தராதலம் இன்புற இற(ர)ங்கினார் இருதயத்தே!
மெய்யுளே ரகசிய வழியினைத் திறந்தவர்
மெய்தனில் மாயா நிலைதனை எழுப்பினார்!

அறுபடி மேலேறி எழும்உச்சி மீறி
உறுபடி மேம்பாலம் எட்டியதை முட்டி
எழுபடி மேல்ஜோதி கொட்டியதை முகந்து
விழும்படிக் கீழ்பூமி எங்குமருள் சேர்!

உருப்படியாய்ப் பராபர வள்ளலைப் பற்றி
உருப்படும்மெய் வழியில் உள்ளத்தை நாட்டி
குருமொழிநெய் வழியும் வெள்ளத்தை உண்டு
உருவொளியும் மாயா மெய்ந்நிலையைச் சேர்!

இல்லமாக்கி இருதய பூமியைத் திரித்துவ
வல்லமைதன் அருட்தல மாக்கிய அதிசயம்
வள்ளல்தம் குருமொழி யாலா னதே!மெய்
அள்ளட்டும் குருபரன் மாயா நிலை!

3. குருமந்திர அகதீட்சை

1
அம்மையாய்ப் பரஞான போதந் தந்தீர்!

அப்பனாய்த் தூயநன் நோக்கைத் தந்தீர்!

குருவாய் அகதீட்சை மந்திரந் தந்தீர்!

அருள்நிதி வள்ளலே நீரே என்கதி!


2
குருமந்திரம் பத்தும் ஒருமூன்றும் அருளி

இருட்குழியுள் கிடந்த என்னைத் தெருட்டி

அருட்தவத்தே நிறுத்தித் தம்கடை விரிக்கும்

பெருவரமுந் தந்த வள்ளலே என்கதி!


3
அவத்தே பழுத்து அழுகிய என்னைத்

தவத்தே பழுக்கும் அதிசயஞ் செய்தீர்!

குருமந்திர தாரணை வசப்பட வைத்தீர்!

பெருந்தயாள வள்ளலே நீரே என்கதி!


4
சவமாய்க் கிடந்த எந்தையுட் புகுந்து

சிவமயச் செம்பூ என்கையகந் திணித்தீர்!

எரியுது சிதையில் மரணம்பார் என்றீர்!

பெரியோன் வள்ளலே நீரே என்கதி!


5
வன்பின் சிகரமாய் ஆடிய என்னை

அன்பின் பிடியுள் அடங்கச் செய்தீர்!

குருமந்திரம் அகத்தே ஓதிமா யாநிலை

தருந்தந்திரர் வள்ளலே நீரே என்கதி!


6
சத்தே உன்நாமம் சித்தே உன்உருவம்

சத்திய தரிசனமே உன்பே ரானந்தம்

மந்திரந் தந்தென்மயக் கறுத்த உட்போதகர்

சுந்தரர் வள்ளலே நீரே என்கதி!


7
மண்டையின் மேலும் முன்னும் பிளந்தது!

தொண்டையுள் மந்திர வழியும் திறந்தது!

நிராதார மாயா நிலையும் புகுந்தது!

தராதலத்தே வள்ளலின் வாய்மை வென்றது!


8
நிராதார அருட்பால்

ஆறாதாரக் கலசத்தடி சேர

தொண்டைக் கதவம் திறக்கவே

வள்ளல் பிரான் வழங்கும்

குருமந்திர அகதீட்சை!


9
கருத்தகன் மனத்தனாய் இருள்சேர் இருவினைக்

கருங்குழிக் கிடந்தவென் மனம்வெளுக் கவேகுரு

மந்திரம் அளித்தெனை அருந்தவ மலைமேல்

வைத்தீர் வள்ளலே நீரே என்கதி!


10
உச்சி துளைத்துப் பரஞானம் அளித்து

நெற்றி திறந்து நன்நோக்கம் அருளி

தொண்டை புகுந்து குருமந்திரம் புகட்டிய

ஆண்டவர் வள்ளலே நீரே என்கதி!


11
நிராதார நிர்மல அருட்ஜோதித் தூணையே

ஆறாதாரத் தண்டிலே புகுத்தும்பே ரதிசயம்

தராதலத்தே செய்யவே பெருந்தயவாய் இற(ர)ங்கினார்

பராபரத்தே வாழும் வெள்ளங்கி ஆண்டவர்!


12
யந்திர மெய்யுளேகுரு மந்திரம் முழக்கி

அந்தர நிராதாரம் மொத்தமும் இறக்கும்

தந்திரஞ் செய்யவேபெருந் தயவாய் இற(ர)ங்கும்

சுந்தரப் பராபரவள் ளலாரே என்கதி!


13
நிராதாரம் ஓடும் பரசிவ வெள்ளம்

ஆறாதாரம் வழியே மெய்க்குள் பாய்ச்ச

பராபரத்தே வாழும் வள்ளலார் இற(ர)ங்கி

தராதலத்தே முழங்கும் குருமொழி கேண்மின்!


14
அருளம்மை இற(ர)ங்கினாள் பரஞா னபோதமாய்!

அருட்தந்தை இற(ர)ங்கினார் தூயநன் நோக்கமாய்!

குருவள்ளல் இற(ர)ங்கினார் மந்திர முழக்கமாய்!

ஒருமையாம் திரித்துவம் மாயா மெய்ந்நிலையாய்!


15
மாயாத் தாயார் உச்சிமீ தமர்ந்தாள்!

மாயா எந்தை நெற்றியில் எழுந்தார்!

மாயா மெய்க்க்குரு தொண்டையுள் பொழிந்தார்!

மாயா மெய்ந்நிலை வென்றேநான் எழுகிறேன்!


16
தலைவியாம் வாலையே உச்சித் தாமரை!

தலைவனாம் நாயகன்தான் நெற்றித் தீவிழி!

தலைமகன் சற்குருவே தொண்டைத் தேன்வழி!

தலைமை(மெய்) யால்மாயா மெய்ந்நிலை சேர்ந்தேனே!


17
வாலை நாயகி உச்சியில்! மெய்வழிச்

சாலை நாயகன் நெற்றியில்! குருமொழிப்

பாலை ஊற்றுவன் தொண்டைக் குழியினில்!

பாலை தேகமுஞ் சோலை யாகுதே!


18
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!அருள்

ஆற்றுள்ளே ஊறித் தேற்றிக் கொள்!குரு

வாக்குள்ளே ஏற்றிப் போற்றிக் கொள்!நின்

நாக்குள்ளே பூட்டி நன்நோக் கைக்கொள்!

2. தூய நோக்கு

உடம்பின் எழுநிலை தாண்டி எழு!

உச்சி மீதேறி திடவரம்புகள் மீறு!

நிராதார மேம்பாலம் எட்டு! முட்டு!

பராபர அருளாற்றுள் ஆழ்ந்து ஊறு!

பரஞான போதம் உச்சியில் தேறு!

பரந்தவுன் நெற்றியுள் தூய்மை சேரு!

தரமான தூயநோக்கை எப்போதும் பாரு!

வரமான வள்ளல்வாக்கை மறவாமல் வாழு!உச்சி பிளந்தது பரஞான போதம்!

நெற்றி வெளுக்குது தூய நோக்கு!

வள்ளல் வாக்கு மெய்யாய்ப் பலிக்குது!

கொள்ள வாரீர் பெய்யும் அருண்மழை!தொற்றி நின்ற அருள் வெள்ளத்தால்

உச்சி பிளந்து நெற்றியில் பற்றியதே தீ!

கள்ள மனந்தான் கற்பூரமாய் வெளுத்துப்

பற்றிய தீபவொளியில் மணக்குதே தூயநோக்கு!மருண்ட நெற்றியைத் தெருட்ட வந்தார்

திருஅருட் பிரகாச வள்ளலார்! சிரஉச்சி

திறந்து பரஞான போதமும் நெற்றிக்கண்

திறந்து தூயநன் நோக்கையுந் தந்தார்!உச்சியைப் பிளந்துள்ளே புகுந்த

சுத்தமாம் பூரணந்தான் திறக்குதே

நெற்றியை! சுயஞ்சுடரொளி தோன்றக்

கண்ணுளே தூயநோக்குப் பிறக்குதே!நிராதாரத்தே ஓடும் பரசிவ வெள்ளம்

ஆறாதாரத்தே ஓடும் (இ)ரகசிய வழியைப்

பராபரத்தே வாழும் பெருமான் வள்ளல்

தராதலத்தே இற(ர)ங்கித் தயவாய்த் திறந்தார்!மெய்யான மெய்யைப் பொய்க்கும் மெய்க்குள்

உய்த்திடுமோர் மெய்வழிச் சாலை யாவரும்

எய்தற்கே பரஞான போதந் தந்தார்

தெய்வநிலைத் தூயநோக்குந் தருகின்றார் வள்ளலார்!சாவா நிலை யார்க்குஞ் சொந்தம்

வாவா என்றே பார்க்குள் வள்ளல்

விரித்தி ருக்கும் கடைக்குள் வாரீர்!

தரித்திர மரணம் ஒழியும் நிச்சயம்!வெளுத்த தன்நெற்றி உரசி வீண்மனப்

பளுவைக் கொளுத்திச் சிதம்பர வெளியில்

அருட்பெருஞ் ஜோதியைத் தரிசிக்க வைத்தார்

பெருந்தயாளத் திருஅருட் பிரகாச வள்ளலார்!பள்ளத்தே சவமாய்க் கிடந்த கள்ளமனக்

குள்ளனெனைத் தவத்தே நிறுத்த எழவைத்து

வெள்ளமெனப் பாயும் அருளை நிறைவித்து

வெள்ளைமனச் சேயாய் எனைமாற் றினார்வள்ளல்!உய்விக்கும் மெய்யேதான் உரைக்கின்றேன்! வள்ளலார்

பெய்விக்கும் அருண்மழையில் கரைக்கின்றேன் கன்மனம்!

பரஞான போதத்தால் திறந்ததேயென் சிரவுச்சி!

தரமான தூயநோக்கால் வெளுக்குதேயென் கருநெற்றி!அருட்தாயின் கொடையாகப் பரஞான போதம்!

அருட்தந்தை வரமாகத் தூயநன் நோக்கு!

மருண்டவென் தலையைத் துவட்டித் தெருட்டும்

அருட்குருவாம் வள்ளலேயெந் தன்சர ணாகதி!தாயாகித் தந்தையாய்க் குருவுமாகி

ஓயாது பாய்கின்ற அருளினாலே

பேயானப் பாழ்மனத்தைத் தெருட்டித்தன்

சேயாக்கி உய்வித்தார் வள்ளலாரே!

1. பரஞான போதம்

1
பழுதான உடம்பும் மனமும்

பழுதனைத்தும் நீங்கிப் பழுக்கப்

பரமனின் அருளாய் விழும்

பரஞான போதம் விழுஙக

சிர உச்சி மீதில் வீறுடன் எழு!


2
அருந்தரமான பரம்பொருள்

தருஞ்சுகமான வரங்கொள

சிர உச்சி மீதில் தவமிரு!

பரஞான போதம் விழும்! விழும்!

பரமதயாள வள்ளல் மீதாணை!


3
கள்ள மனந் தாண்டி

வெள்ளங்கி வள்ளல்

அள்ளி வீசும் அருளைத்

துள்ளிப் பருக வருமே

உள்ளத்தே பரஞானம்!


4
பட்டுப் போங்கடம்

பட்டுப் போல் மினுக்கக்

கொட்டு வார் வள்ளல்

எட்டலாகா போதமாம்

விட்டகலாப் பரஞானம்!


5
எட்டு! மேம்பாலம்

முட்டு! சிர உச்சியில்

கொட்டும் அருளால்

கிட்டும் பரஞானம்!

நட்டமா கும்மரணம்!


6
வெள்ளங்கி ஒளியருள்

வெள்ளத்தில் மூழ்கி

உள்ளத்தே ஒளிந்திரு

வள்ளலார் வருவார்

நள்ளிரவில் பரஞான விடியல்!


7
ஆறு வழி தாண்டி

ஏறு! எழும் உச்சியை

மீறு! எட்டு மேம்பாலம்!

ஊறு அருளாறு உள்ளே!

ஆறும் மனத்துள்ளே பரஞானம்!


8
சிற்சபையாம் உளத்திற்தன்

பொற்சபையைப் பதித்தாரே

வள்ளலார்திரு அருட்பிரகாசர்!

கொள்ளவாரீர் பெருவாழ்வை

அள்ளித்தரும் பரஞானபோதம்!


9
பிரதான சிரந்தாண்டு!

நிராதார வரங்கொண்டு

சிரமிறங்கு! அருட்தரத்தை

ஆறாதாரத்தின் ஆழத்தேயிறக்கு!

பரஞானந்தந் தாரேவள்ளல் இன்று!


10
மெய்யேதான் உரைக்கின்றேன்!

உய்யும்வழியாய் எழுநிலையில்

பெய்யுமேமெய்யுள் நிராதார

மெய்யருட்தாரை இன்றுமுதல்!

மெய்யுரைத்தார் வள்ளலாரே!


11
பொய்ப்போக இருள்நீக்கி

மெய்ஞ்ஞான அருள்விளக்கி

உய்விக்க உச்சிபிளக்க

உய்ந்தாரே வள்ளலார்

மெய்யுணர்ந்து உய்வீரே!


12
முடியும் மரணம்!

விடியும் பெருவாழ்வு!

வடியும் அருள் எழு

படிகளில்! வள்ளலார்

அடிகள் மீதாணை!


13
புணரத் தானே வந்துமெய்

யுணர்ச்சி தன்னைத் தந்துபொய்ப்

புணர்ச்சி போகம் அறுத்துநசியும்

கணக்கை முடித்து மெய்யருட்

பணத்தைத் தந்தாரே வள்ளலார்!

நாயகனின் பேருபதேசம் 10

ஊற்றுதே எப்போதும் என் அருளாறு!
ஆற்றுள் ஆழ மூழ்கி உன் மனமாறு!

மெய்வழிச் சாலையின் இரகசிய மார்க்கம்
மெய்யுன் உடம்புளே பகிரங்கமாய் விளம்பியே
உய்வித் துனைஎனில் வேறறச் சேர்க்கவே
உய்ந்தேன் நடராஜ வள்ளல் நான்!
பொய்க்கும் உன்மெய்யை மெய்யாகவே மெய்யாய்ச்
செய்விக்கும் என் மகாயோகம் தேர்!
உன் மகுடதீப ஒளியில் என்னைப் பார்!

அம்மையப்பனாம் நாத-விந்து கலாதி சற்குரு உன் முதுகடியில் இட்ட தெய்வீக வித்தை ஞாபகங்கொள்!
அடுத்த கணமே நாபியின் கீழ் குண்டலினி நாகம் விழிப்பதில் கவனம் வை!
படமெடுத்த நாகம் நாபியில் உன் ஆணவத்தைத் தீண்ட விடு!
ஆணவம் நசிய உன் மனமடங்க, நடு மார்பின் கீழ் படமெடுக்கும் என் அருட்கரத்தைத் தொடு!
நடு மார்பில் உதயமாகும் அருட்பெருஞ்ஜோதியைத் தரிசி!
தொண்டையின் கீழ்ப் பாயும் தனிப்பெருங்கருணை வெள்ளத்தில் தொப்பமாய் நனை!
தொண்டையில் நாயகனாம் என் அருள்வாக்கைக் கேள்!
நெற்றியில் மாயைத் திரை விலக சிதம்பர தரிசனம் காண்!
தலையுச்சியில் மனிதமுன் மகோன்னத எழுமையில் சேர்!
தலைக்கு மேல் நிராதாரப் பாலம் எட்டு! அதை முட்டு!
நிராதார எழுமை உன் தலையுச்சி தொட்டு
ஆறாதாரம் விழுகின்ற அதிசய இற(ர)க்கத்தை உணர்!
என் பரஞான போதம்(1) உன் தலையுச்சி பிளக்கும்!
என் தூய நோக்கு(2) உன் நெற்றி வெளுக்கும்!
என் குரு மந்திர அகதீட்சையால்(3) உன் தொண்டை திறக்கும்!
என் இருதய பூமி(4) உன் நடு மார்பில் இற(ர)ங்கும்!
என் சத்திய தரிசனம்(5) உன் நாபியில் விளங்கும்!
உன் நாபியின் கீழ் நிகழும் ஓர் அதிசயப் பரிமாற்றம்(6)!
உன் முதுகடியில் ஜொலி ஜொலிக்கும் என் ஜோதி ஸ்வரூபம்(7)!
உன் பாதங்களின் கீழ்ப் பூமியைப் புரட்டும் நவயுக உதயம்!

Thursday, December 18, 2008

நிராதார எழுமையின் இற(ர)க்கம்!

அம்மையப்பனைத் தன்னுள்ளடக்கிய

சற்குரு மூலாதாரத்தில் இட்ட வித்து

குண்டலி நாகமாய் சுவாதிட்டானத்தில் எழுந்து

மணிபூரகத்தில் ஆணவத்தைத் தீண்டி நசிக்க

மனமடங்கி சூரிய சக்கரத்தில் அருட்கரம்

அனாகதத்தில் அருட்பெருஞ்ஜோதி உதயம்

அமுதகலசத்தில் தனிப்பெருங்கருணை வெள்ளம்

விசுத்தியில் நாயகனின் பேருபதேசம்

ஆக்கினையில் மாயைத்திரை விலக சிதம்பர தரிசனம்

சஹஸ்ராரத்தில் மனிதத்தின் மகோன்னத எழுமை

தலைக்கு மேல் நிராதார மேம்பாலம் எட்ட

நிராதார எழுமை சஹஸ்ராரம் தொட்டு

ஆறாதாரம் விழுகின்ற அற்புத இற(ர)க்கம்!நிராதார மேம்பாலம் - 15/12/2008

நிராதார எழுமையின் இற(ர)க்கம்

பரஞானம் - 16/12/2008 - சஹஸ்ராரம்

தூயநோக்கு - 17/12/2008 - ஆக்கினை

குருமந்திர அகதீட்சை - 18/12/2008 - விசுத்தி

இருதய பூமி - 19/12/2008 - அனாகதம்

சத்திய தரிசனம் -20/12/2008 - மணிபூரகம்

அதிசயப் பரிமாற்றம் - 21/12/2008 - சுவாதிட்டானம்

ஜோதி ஸ்வரூபம் - 22/12/2008 - மூலாதாரம்நவயுக உதயம் - 23/12/2008

Wednesday, October 22, 2008

நாயகனின் பேருபதேசம் 9

நித்திய இயற்கையுண்மையதாய்
எங்கும் இன்புற்று விளங்கும் அன்பொன்றே
ஒவ்வொன்றிலும்
கண்டு
கேட்டு
உண்டு
உயிர்த்து
உற்று
அறியும்
எழுமையாம்
என் பெருமை.

அன்பொன்றே
எல்லாந் தழுவிய
என் முழுமை.

அன்பொன்றே
என்றும் மாறா
என் பழமை.

அன்பொன்றே
அலகிலாப் பன்மையாய்
உலகில் பரவும்
என் ஒருமை.

அன்பொன்றே
சுடச் சுடச் சுடரும்
என் புதுமை.

அன்பொன்றே
அமுதாய் வழியும்
என் தண்மை.

அன்பொன்றே
பூரணமாய் நிறைந்த
என் தன்மை.

அன்பொன்றே
தயவாய்த் தழுவும்
என் தாய்மை.

அன்பொன்றே
அருட்பேராற்றலாய் எழும்
என் ஆண்மை.

அன்பொன்றே
அறிவாய் விளங்கும்
என் குரு மெய்.

அன்பொன்றே
இருள்சேர் இருவினை அறுக்கும்
பொருள்சேர் இறைமையாம்
என் கூர்மை.

அன்பொன்றே
எல்லாம் அசைவிக்கும்
அசையா என் நிலைமை.

அன்பொன்றே
சொல்லறச் சும்மா இருக்கும்
என் மேன்மை.

அன்பொன்றே
தங்கு தடையின்றிப் பாயும்
என் நீர்மை.

அன்பொன்றே
எப்போதும் வெல்லும்
என் வாய்மை.

அன்பொன்றே
எல்லாங் கடந்தும்
எதிலும் இறைந்த
என் உண்மை.

அன்பொன்றே உன் "ஐ"
உறுதியாய் உயிரதனைப் பற்றி
"ஐ" அறிவின் கண் ஆறறிவும் ஓடுங்கி
மன ஆரவாரம் அடங்கி இதமாய் ஆறு.
ஜீவ ஆறு சேரும் சிவ ஆழியாய் எழு.
ஆறு தாண்டிய ஏழு என்னை எட்டு.
என் வெள்ளங்கி உனக்குக் கிட்டும்.
பொன்னுடம்பாய் உன் மெய் மின்னும்.
"அன்பே யாம்" என்னும் ஓமயத்தில் நீ உய்வாய்.

சுத்த சிவ துரியாதீதத்தில்
என்றென்றும்
யாம் இருப்போம்
நானே நீயாக
நீயே நானாக
அன்பொன்றாய்.

Sunday, August 24, 2008

நாயகனின் பேருபதேசம் 8

மேலிருந்துங் கீழிருந்துந்
தனக்குள் சுழிவதை விழுங்கி
மேலுங் கீழுந்
தான் வழியும்
இருதய மெய்யின் ஒழுக்கம்
உனக்குத்
தருவதே உயிரெனும் விழுப்பம்!
எனவே
உயிரினும் ஓம்புக ஒழுக்கம்!

மேலிருந்து சுழிவதை மறந்ததால்
சத்துவ அஞ்ஞானத் திமிரானாய்!

கீழிருந்து சுழிவதை மறந்ததால்
தாமச முடக்க பயமானாய்!

மேலுங் கீழும் வழிவதை மறந்ததால்
இராஜச ஆர்ப்பாட்ட வன்பானாய்!

மேலிருந்து சுழிவதை அறிந்தால்
பரமானந்த மெய்ஞ்ஞான அருளாவாய்!

கீழிருந்து சுழிவதை அறிந்தால்
இகத்தோங்கும் பேரியக்க தயவாவாய்!

மேலுங் கீழும் வழிவதை அறிந்தால்
நடுநாயகப் பேரன்பின் இருப்பாவாய்!

இருதய மெய்யை மறைத்து
உன்னை மயக்கும்
சத்துவச் சுத்த மாயை
மற்றும்
தாமச இராஜச அசுத்த மாயை
இவற்றால்
பிறப்பிறப்புச் சுழலில் சிக்கிப்
பெருவாழவாம் உயிர்ப்பை
மறந்தாய்!

உன்னை மயக்கும்
திரிகுண மாயை களைந்து
இருதய மெய்யை உணர்ந்துப்
பிறப்பிறப்புச் சுழல் தாண்டிப்
பெருவாழ்வாம் உயிர்ப்பை
அறிவாயே!

இருதய மெய்யுள் உயிரடங்கி
நடுநாயகப் பேரன்பாய் இருந்து
மேலே பரமானந்த அருள் விளங்கி
கீழே இகத்தியங்கும் தயவாய் இருப்பாயே!

என் அன்பு மகனே(ளே)!
"இரு தயவாய்"
எனும் என் பேருபதேசத்தின்
இரத்தினச் சுருக்கத்தை

கணப்போதும் மறவாமல்
எப்போதும் நீ
தயவாய் இருப்பாயே!

Saturday, August 23, 2008

நாயகனின் பேருபதேசம் 7

பரமும் இகமும்
சஹஸ்ராரமும் மூலாதாரமும்
ஆக்கினையும் சுவாதிட்டானமும்
விசுத்தியும் மணிபூரகமும்
அமுதகலசமும் சூரிய சக்கரமும்
வளைந்து சுழிந்து விழும்
உன் இருதயக் குழியுள்
நடராஜ வள்ளல்
நான் ஆடுகிறேன்!

நடு நாயக அன்பாய்
உன் இருதயக் குழியுள்
நான் ஆடுவதாலேயே
மேலே
பரமாய்
சஹஸ்ராரமாய்
ஆக்கினையாய்
விசுத்தியாய்
அமுதகலசமாய்
கீழே
சூரிய சக்கரமாய்
மணிபூரகமாய்
சுவாதிட்டானமாய்
மூலாதாரமாய்
இகமாய்
நீ மேலும் கீழும்
வளைந்து வழிகிறாய்!

உன் இருதயக் குழியுள்
மையங் கொண்டிருக்கும்
எட்டு வடிவ சிவ சக்தி ஓட்டங்களை
உன் மெய்க்குள் பார்த்து
எழும் எழுமையாம்(எழும் 'ஐ'யாம், I AM)
அருட்குரு
மெய்வழி
யால்
என்னை எட்டு!

நீயே ஜீவனுள்ள குருவாய் எழுந்தாலன்றி
என்னை எப்படி எட்டுவாய்!
11ஆய்த் தெரியும் நந்திக் கொம்புகள் சுட்டும்
தூய ஊடகமாய் நீ இருக்க
எட்டு வடிவில் இருதயக் குழியுள்
வளைந்து வழிந்தும் சுழிந்தும்
உன்னில் எழும் ஒருமையாலன்றி(ஒரும் ''யாலன்றி)
என்னை எப்படி எட்டுவாய்!

பட்டிமண்டபமாம்
இருதயக் குழியுள்
சிவ சக்தி இரண்டாம்
நடராஜ வள்ளல்
நான் போடும் எட்டு
நீ
அறியச் சொன்னேன்!

அரற்றுவதை விட்டு
நான் அறைவதைச்
செவி மடுத்து
தயவாய் இருந்து
என்னை நீ எட்டு!

Monday, August 11, 2008

உனதுண்மை

இருதய அன்பு தலைக்கேறி
மன அறிவை விளக்க
அருளமுதம் பாயும் மெய்யெங்கும்!
அன்பறிவாற்றலாய்
நீ உயிர்த்தெழுந்து
தயவாய் இகத்தில் இருந்து
பூமியைச் சொர்க்கமாக்குவாய்!

செதுக்கல்-2

இ(ரு)தய" உளியாலே
மன "சுத்தி" கொண்டு
கல் உன்னை
சுத்தி சுத்தி அடிக்கிறாரப்பா
கடவுட் சிற்பி!
அவர்தம் சச்சிதானந்த வடிவிலே
உயிர்ப்புள்ள மூர்த்தியாகப்
புவிமிசை நடமாடும் அரிய மனிதமப்பா
நீ!

செதுக்கல்-1

கல் உன்னை
அன்புக் கடவுளாய்ச் செதுக்கும்
இருதய உளி!
மன 'சுத்தி'யுள்ள
நீயே சிற்பி!

Sunday, August 10, 2008

அருட்புரட்சி

வன்பெனும் குப்பை மேட்டில்
தேங்கிய மனிதத்தைப் புரட்டி
அன்பெனும் குணக் குன்றில்
ஓங்கச் செய்யும் அருட் காற்று

நரை ஒழி!

சாயம் தேடி ஓடுகிறாய்
நீ நரை ஒளிக்க!
உன் உள்ளுள்ளே ஒளி(ர்)ந்திருக்கும்
நரை ஒழிக்கும்
பெருவாழ்வுப் புதையல்
உன் மனந்திரும்புதலுக்காக
யுகயுகங்களாய்க் காத்திருக்கிறது!

சுவாசம் 2

சுத்த வெளியிலிருந்து வந்த நீ
சுத்தம் மறந்து அசுத்தமாய்ப் போன போது
உன் உள்ளே வந்து வெளியே போய்
மறுபடி மறுபடி
உன் உள்ளே வந்து வெளியே போய்
உனக்கு உயிரொளி ஊட்டி
உன் ஞான விழி திறந்து
உனக்கு மெய்வெளி காட்டி
நாம் அச்சிவாயமே(நாமச்சிவாயமே)
என்று நீ மறந்ததை நினைவுறுத்தும்
வாசியெனும் மூச்சுக் காற்று!

சுவாசம் 1

உன்னுள்ளே வந்து
அன்பொளியாம் உயிர் தந்து
வெளியே போய்
உன்னை மெய் வெளியில்
சேர்க்கும் மூச்சுக் காற்று

நாயகனின் பேருபதேசம் 6

திரிந்து தெரியும்
தோற்றப் பிழையாய்
உன் உள்ளத்தை அரிக்கும்
உள்ளதைக் கடந்து
உன் உள்ளத்துட் கடந்து
தோற்றப் பிழைகளின் மூல காரணமான
மாயத் திரையெலாங் கடந்து
உன் உள்ளே கடந்து
உள்ளுள்ளே கடந்து
மெய்க் கடத்துள்ளே
ஆனந்த நடம் ஆடும்
நடராச வள்ளல் எனைக் காணும்
மெய் வழி ஒன்றை
நீ உய்வதற்கென்றே
என் ஏழாந்திருமுறை உறுதியாய்
உன் செவிப்பரைகள் அதிர
உன் இருதய விழி திறக்கப்
பர விந்தாய் மின்னும்
குரு மந்திர நாதமாய்
இடை விடாது அறைகின்றேன்
"இரு தயவாய்"
என் மகனே(ளே)!
தயை கூர்ந்து
செவி மடுப்பாய்
என் பேருபதேசத்தின்
இரத்தினச் சுருக்கம்!
மற்றபடி இருமை இருளில்
மதி மருண்டு
நீ செய்யும்
ஆறறிவுத் தந்திரங்கள்
சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்
என்னும் என் மெய் வழியில்
உன்னை ஒரு காலும் சேர்க்கா!
அன்பின் மிகுதியால்
அறைந்து சொன்னேன்
சுளீரென்றும்
பளாரென்றும்
சுடச் சுடச் சுடரும்
இரு வார்த்தைகளால்!
தயை கூர்ந்து
செவி மடுத்து
"இரு தயவாய்"
அன்பெனும் ஒருமை அருளில்
மதி தெருண்டு
என் மெய் வழி சேர
நீ
"இரு தயவாய்"
அரிய மனிதம்
அரிந்து போகாமல் பிழைக்க
எளிய வழி ஒன்றை
உனக்குச் சொன்னேன்!
காலமில்லை மகனே!
இருக்குங் கணங்களை
இனியும் விரயம் செய்யாது
நீ விரைந்துணர்வாய்!
பொய்ச் சாக்காட்டுப் படுகுழி தாண்டி
மெய்யின்பப் பெருவாழ்வு ஜோதிமாமலை ஏற
நீ
கணப்போதும் மறவாமல்
அதி கவனமுடன்
எல்லாந் தழுவிய
முழுமையாம் அன்பெனும்
ஒருமையில் ஊன்றி நின்று
எப்போதும்
"இரு தயவாய்"
நீ கேட்டவாறே
ஊற்றுகிறேன் என் கருணையுடன்
ஆசி!
என் அன்பு மகனே(ளே)!
நீ இதை ஆழ
யோசி!
உன் நாசியில் வாசியாய்ப் பாய்ந்து
உன் இருதய ஊசி விழி திறக்க
இடைவிடாது
பர விந்தாய் மின்னும்
குரு மந்திர நாதம்
வாசி!
வீணே பேசி
வாணாளை விரயமாக்காமல்
என் ஆசி ஏற்றே
நீ
"இரு தயவாய்"!
தெரிய வேண்டியதைப்
பகிரங்கமாய்த் தெரியச் சொன்னேன்!
புரிய வேண்டியதை
அறைந்தறைந்து புரியச் சொன்னேன்!
இருதயத்தில் மனமடங்கி
இகவுலகில் நீ
"இரு தயவாய்!"
உறுதியுடன் என் மெய் வழி
உரைக்கின்றேன்
உன் அம்மையப்பன்
நானே!
என் மெய்யுரை விளங்கியே
என் மெய்ப்பொருள் விளக்கமாய்
இம்மருட்பொய்யுலகில்
உறுதியுடன் நீ
"இரு தயவாய்!"

Thursday, August 7, 2008

நாயகனின் பேருபதேசம் 5

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்

வழி யாதோ?

இருதயம், அன்பெனும் நடு நாயகம், சிவம்

சத்தியம் யாதோ?

நிராதார உயிர், அறிவெனும் அன்பின் விளக்கம், அருள், குரு

ஜீவன் யாதோ?

ஆறாதார மெய், ஆற்றலெனும் அன்பின் இயக்கம், தயவு, சக்தி

இன்னும் விளக்குவீரோ?

நடு நாயகமாம் அன்பில் நீ நிற்க
இருதய வாய் திறந்து
வழி பிறக்கும்

அன்பாம் பரசிவ வெள்ளம்
மார்பிலிருந்து தலைக்கு ஏறி
தலைக்குப் பின்னும், மேலும், முன்னும் பாய்ந்து
தலைக்குள் சுழிய
நீ அன்பை விளங்கி
ஜீவனுள்ள குருவாய்
ஜீவனுள்ள கிறிஸ்துவாய்
ஜீவனுள்ள நபிகளாய்
ஜீவனுள்ள மசியாவாய்
ஜீவனுள்ள புத்தராய்
ஜீவனுள்ள அருகராய்
அறிவில் நிற்பாய்

அவ்வாறு அறிவில் நீ நிற்க
உயிராம் நிராதாரப் பரநிலை
மெய்யாம் ஆறாதார இகநிலைக்கு
இறங்கி(இரங்கி)
இருதய வழியினூடே
முதுகடியில் சேர
நீ
அன்பின் இயக்கமாம்
ஆற்றலாய் வெளிப்பட்டு
தயவாய் இருப்பாய்

இவ்வாறு
"இருதய வாய் திறந்து
நிராதார ஆறாதார
உயிர்மெய் ஒருமை பிறந்து
நடு நாயக அன்பின் ஏற்றத்தில்
இருள்சேர் இருவினை யாவும் இறந்து
பொருள்சேர் புகழ் புரியும் இறைவனாய் பரத்தில் எழுந்து
அறிவெனும் அருள் விளக்கம் பெற்று
நீ
ஆற்றலெனும் தயவியக்கமாய் இகத்தில் இறங்கி
இக பர பாலமாய்
அன்னை பூமியில்
இரு"
என்று விளக்கும் பேருபதேச வாக்கியமே
இம்மகா மந்திரம்

சுருக்கமாக
"நடுவில் அன்பாய் இருந்து
மேலே அருளாய் விளங்கி
கீழே தயவாய் இயங்கு"

நனி மிகச் சுருக்கமாக
"இரு தயவாய்"

மகாமந்திரம் வழங்கி
அப்பேருபதேசப் பொருள் விளக்கி
மாயை இருளில் மருண்டு கிடந்த
என்னைத் தெளிவித்தமைக்கு
கோடானு கோடி நன்றி உமக்கு
நாயகனே!

என் அன்பு மகனே(ளே)!
உனக்கும்
என் கோடானு கோடி நன்றி

கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம்
அன்பறிவாற்றலாம்(அன்பருட்தயவாம்) ஒருமையில்
ஊன்றியே
எப்போதும்
இரு
நீ
தயவாய்!

அத்தயவொன்றே
என்னையும்
என் வரமாம் பெருவாழ்வையும்
பிடிக்கும் ஒரே வழி!

எனவே
கவனமாய்
நீ
எப்போதும்
"இரு தயவாய்"

Tuesday, August 5, 2008

உயிர் போகும் கேள்வி?

இருதயத்தின் உள்ளேயிருந்து
மனக் கதவைக்
கிறிஸ்து
ஓயாமல் தட்டிக் கொண்டேயிருக்கிறார்.
மனிதம்
அதைத் திறந்து
உள்ளே போக மனமின்றி
வெளியே வீணே திரிகிறது.
வாழ்வின் கணங்கள்
கழிந்து கொண்டிருக்கிறது.
கிறிஸ்துவின் தட்டலுக்கு
செவி மடுத்து
மனக் கதவைத் திறந்து
இருதய வீட்டில்
அவரோடு கூட
மனிதம் மனந்திரும்ப
இன்னும் மிச்சமிருப்பவை
சில கணங்களே!
வன்பின் ஆர்ப்பாட்டம்
மனித வீடுகளை
மொத்தமாய்ச் சீரழிக்குமுன்
அன்பின் எளிமைக்கு
மனந்திரும்பி
இருதயத்தில் மனமடங்கிக்
கிறிஸ்துவோடு மன்னா உண்ண
மிச்சமிருக்கும் சில கணங்கள்
பயன்படுமா?
மனிதம் உய்யுமா?


தமிழ் மன்றத்தில் ஷிப்லி அவர்களின் "கதவு தட்டப்படும் சப்தம்..." என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

ஞானயுக ஆத்திச்சூடி???!!!

ன்பு அறிவில் விளங்க
ற்றலாய் அறிவு இயங்க
றைவனாய் நீயே எழுக!
ட்டும் பொருள் எல்லாம்
ருவிலா அருளாளன் தயவேயென
ரார்க்கு உதவ ஓடுக!
ல்லோரும் ஓர் குலம் என்றே
ற்றமிகு அன்பெனும்
" யாம்"(I AM) சங்க
ருமையில் நீ
ங்குக! ஓங்குக! ஓங்குக!
டதம் அன்பேயாதலால் நீ "இரு தயவாய்"
தே மரணப்பிணி தீர்க்கும் மாமருந்து

நாயகனின் பேருபதேசம் 4

என் அன்பு மகனே(ளே)!
தலையுச்சியில் பதிந்து
உன் விழிகளில் அருள் விளக்கும்
அறிவாய்ச் சிவந்து
இருதயத்தில் பதிந்து
உன் கரங்களில் கருணைக் கனியாம்
அன்பாய்ச் சிவந்து
முதுகடியில் பதிந்து
உன் பாதங்களில் தயவு இயங்கும்
ஆற்றலாய்ச் சிவந்து
வாடாத செஞ்சுடர்ப்பூவாம்
பராபர வள்ளல் நான்
உன் மெய்க்குள் உயிராய்
வேறற ஒன்றி
இகத்தில் புகுந் தருணம்
இதுவே!


ஐயனே! வள்ளல் உமக்கு
எப்படி ஆற்றுவேன் கைம்மாறு?

என் அன்பு மகனே(ளே)!
எல்லாந் தழுவிய
முழுமையாம் அன்பெனும்
ஒருமையில்
எப்போதும் ஊன்றி நின்று
இரு நீ தயவாய்!
இதுவே
நீ எனக்கு
ஆற்றும் கைம்மாறு!
அன்பறிவாற்றலாம் உயிராய்
உன் மெய்க்குள்
வாடாது பூத்திருக்கும்
என்னை விளங்கி நேசித்து
என் போல் ஆகவும் இயங்கவும்
தயவொன்றே மெய் வழி!
ஐயமின்றி இதை அறி!
தயவெனும்
மெய்வழிச் சாலையாய்
பராபர நான்
இகத்தில் நீளும்
உண்மை தெளி!
பிறப்பிறப்புப் பொய்ம்மாயச் சுழல் தாண்டி
பேரின்பப் பெருவாழ்வில்
ஆனந்தமாய் ஆடிக் களி!
என் அன்பு மகனே(ளே)!
என்றும் நீ
இரு தயவாய்!
உன் செவிப்பறைகள் அதிர
உன் செவிகளில்
இனி எப்போதும்
தப்பாமல் ஒலிக்கும்
"இரு தயவாய்" என்ற
இருதய நாதம்,
மாயை நள்ளிரவைக் கீறும்
பரவிந்துப் பட்டப்பகல் வெளிச்சமாய்!

கவனம்!
அதி கவனம்!
அன்பெனும் தயவே பேரின்பப் பெருவாழ்வு
அவ்வொருமை நழுவிய கணமே
கடுந்துன்பச் சாக்காடு!
எனவே கவனமுடன்
எப்போதும் நீ
"இரு தயவாய்"

Monday, August 4, 2008

அருட்பதிவு

நாயகன் என் காதில்
அறைந்து அறைந்து
ஆழப் பதிந்து விட்டிருக்கிறது


இருதயத்தில்
அவர் அருண்வாசகம்


"இரு தயவாய்!"

படைத்தல், காத்தல், அழித்தல்

சும்மாயிருக்கிறது சுத்தவெளி
சலனமின்றி வெட்டவெளியாய்

சும்மாயிருக்கும் சுத்தவெளி
தன் மீதே தான் காதல் கொண்டு
தனக்குள் தான் அழுந்தத்
தன்னைத் தான் அழுத்த
அவ் அன்பின் அழுத்தத்தால்
தோன்றும் முதற்சலனம்
அருளொளி

அருளொளியின்
அதி உச்ச அதிர்வுகள்
சுத்தவெளியெங்கும்
அதி வேகத்தில் பரவுகிறது

அதிவேகமாய்ப் பரவும்
அருளொளியின் விரிதலும்
அன்பின் அதி மென்மையாய் அழுத்தும்
சுத்தவெளியின் குவிதலும்
இடைவிடாது ஒன்றையொன்று புணர
இப்புணர்தலின் நல்விளைவாய்
சுத்த வெளித் தந்தைக்கும்
அருளொளித் தாய்க்கும்
தலைமகவாய்ப் பிறக்கும்
ஞானம் எனும்
அன்பின் விளக்கம்

வெறும் இருப்பாய்த்
தன்னையறியாதிருந்த
பராபர வெறுவெளி
"நான்"
என்ற தன்முனைப்பைப் பெற்றது
அன்பாய்த் தனக்குள் தான்
குவியும் அழுத்தத்தால்.

"இருக்கிறேன்"
என்ற தன்னுணர்வாம் பேருணர்வை
அது பெற்றது
தன்முனைப்பாம்
தன் அழுத்தத்தைத் தாண்டித் தான்
அருளொளியாய்ப் பரவும் விரிதலால்.

குவிதலும் விரிதலுமாகிய
இடைவிடாத புணர்தலால்
அது பெற்றது
"நானே" எனும்
தன் மெய்ஞ்ஞான விளக்கம்,
அதாவது அன்பெனும்
தன் இயல்பின் விளக்கம்.

விளக்கம் பெற்றதும்
படிப்படியாகத் தன் உச்ச அதிர்வுகளைக்
குறைத்துக் கொண்டு
பல்வேறு பரிமாணங்களை உருவாக்கி
அது தன்னிலிருந்து தானே
படைத்துக் கொண்டதே உலகம்

படைத்த உலகோடு வேறற ஒன்றி
அது தன்னில் தான் விளங்கி
உலகைக் காப்பதே
தயவெனும் இயக்கம்.

அன்பின் விளக்கமும்
தயவின் இயக்கமும்
உலகம் மறக்கக் காரணமான
மாயையை
அது மாய்ப்பதே
அழிவெனும் சங்காரம்

ஓம் நமசிவய

வீணே கசியும் மனத்தால்
பாழடைந்த மெய் வீடு.
தூணாம் வாசியில்
கவனம் ஓம்பிப்
பூணே நீ மனவசியம்.
சீரடையும் மெய் வீடு
காணே நீ சிவமயமாய்.

பரிணாமப் பாய்ச்சல்

இருதய ஆழத்தில் ஊன்றிய
தெள்ளிய மன இதத்தொடு
மனிதமாய் எழு!


குனிதலும் குட்டலும்
எட்டி உதைத்தலும்
அதற்கு இசைதலும்
திட்டித் தீர்த்தலும்
அதைச் சகித்தலும்
சிதைத்தலும்
சிதைதலும்
பழி தீர்த்தலும்
பழி ஏற்றலுமாகிய
வன்பின்
இருண்ட இருமையிலிருந்து
விடுபட்டு
அன்பின்
தெருளாம் ஒருமைக்குள்
எழு!


இருள் சேர் இருவினையாய்
விதைக்கப் பட்டவைகளை
அருள் விளங்கும் அறிவால்
அறிவு இயக்கும் ஆற்றலால்
வேரோடு பிடுங்கி
பொருள் சேர் புகழ் புரியும்
இறைவனாய் எழு!


இருண்ட இருமைச் சுழலின்
மருட்டும் மாயைப் பொய்யை
சுடச்சுடச் சுடரும் ஒருமையாம்
அன்பறிவாற்றலால் பொசுக்கி
என்றும் அழியாத
மெய்யருட்சித்தனாய் எழு!


தமிழ் மன்றத்தில் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி அவர்களின் "மானுட மனிதங்கள்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

இரவில் விடியல்

கனவுகளும்
உறக்கமும்
இமைகளோடு ஒதுங்கி விட
அதீத விழிப்பில்
நள்ளிரவில் பட்டப்பகல் வெளிச்சம்

என் கழுத்தில்
கடவுளின் ஒளி முகம் முளைக்க
என் மெய்யில் பதியும்
கடவுளுண்மை

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடந்தேடி
எங்கெங்கோ அலைந்து
களைத்துப் பின்
இருக்கும் இடத்துக்கே
திரும்பிய கணம்
ஞானத் தங்கமாய் ஜொலிஜொலிக்கும்
கடவுள் என்னில் அறிமுகம்

என் மெய்
கடவுளுண்மையில்
கரைந்து விட
கடவுளுண்மை
அன்பின் திடமாய்த்
திரள்கிறது
நான் இருக்கும் இடத்தில்

இருதய நெறியில்
இரவில் விடிகிறது
என் வாழ்க்கை!

விடியுமுன்
என் அறியா முகமாயிருந்த
கடவுளே
இனி என் அறிமுகம்!


தமிழ் மன்றத்தில் அமரன் அவர்களின் "மீண்டும் சந்திப்போமா" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

Saturday, August 2, 2008

வேள்வி!

ஞான யோக மெய்க்குண்டத்துள் எழுந்த
சுடச் சுடச் சுடரும் அருட்கனலில்
இருள் சேர் இரு வினை யாவும் பொசுங்க
கற்பூரம் போல் கரைகிறதே மெய்!

பேருபதேசம்

உதடுகளை அழுத்தி மூடி
நாவை மேலே சுழித்து
வாய்க்குள் அதனைப் பூட்டி
ஓடும் மனத்தைப் பிடித்து
இருதய அமைதியில் நிறுத்தி
சும்மா இருந்தேன் சொல்லற!
பேருணர்வாய் என்னுள் எழுந்து
"இரு தயவாய்" என்ற
பேருபதேசந் தந்தாய்
பேரருளாளன் நீ!

மெய்

மெய்யென்னும்
நம் உடம்பு மாளிகை
உன்னால் என்னால்
ஆகவில்லை!
அழிவிலா மெய்யன்பால்
அது திடமானது!

இம்மெய்யை உணராததாலே
மாளிகை
மறுபடி மறுபடி வீழுது!
இம்மெய்யை முழுதுணர்ந்தாலே
மெய்யாகவே
அழியாமல் நிற்குமன்றோ
மாளிகை!

Tuesday, July 29, 2008

நியதி

பொய்க் கனவுகள் யாவுங் கலைந்து
நள்ளிரவின் அதீத விழிப்பில்
மெய்யுணர்வாய் விடிகிறேன்


மாயைக் கருநிழல் கரைந்து போக
அருளொளிக் கிரணங்கள்
என் நிஜத்தைப் பளிச்செனக் காட்ட
என்றென்றும் ஜீவித்திருக்கும்
பெருவாழ்வை வெல்கிறேன்


இருமையின் மருண்ட கரிய இலைகள் உதிர்ந்து
ஒருமையின் அருள் மின்னும் பசிய இலைகள் துளிர்த்து
மாறாத ஞான வசந்தத்தில்
சுகமாய் நிற்கிறேன்


மௌனமாய்
மோகன ராகம் பாடி
இகத்தில் பர பம்பரமாய்ச்
சுற்றுகிறேன்


பக்கவாட்டில் கரங்களை விரித்து
இகத்தைத் தழுவி
செங்குத்தாய்ப் பரத்தில் ஓங்கி
சிலுவையாம் என் மெய்யில்
உயிர்த்தெழுகிறேன்


இருதய நியதியில்
மனமடங்கி
காலனின் விதி வென்று
மாயையின் சதி கொன்று
அன்பின் திடமாய்
என்றென்றும் வாழ்கிறேன்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "விதி" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

Saturday, July 26, 2008

மனித தோசை

தோசையின் வட்டத்தைப் போன்றே
மனிதன் நீயும் பூரணம்

பூமியெனும் சுடுகல்லில்
உன்னைத் தன் வெள்ளங்கி எண்ணை
மினுமினுக்க
வார்த்திருக்கிறான்
பரம வள்ளல்

தோசையின் இரு முகங்களைப் போன்றே
உனக்கு இறைமையின் வெள்ளை முகம்
மனிதத்தின் இருண்ட முகம்.
இறைமையின் இருண்ட முகம்
நீ(பருப்பொருள்-Matter).
உன் வெள்ளை முகம்
இறைமை(நுண்பொருள்-Spirit).
இரு முகங்களும்
பிரியாத ஒருமையில்
பூமிச் சுடுகல்லில்
சுடச் சுடச் சுவைக்கும்
தோசை நீ.

உன்னை
ஏழையர் தட்டுகளில்
தன் அன்பின் பூரண
வட்ட வடிவமாய்ப்
பரிமாறவே
வார்த்திருக்கிறான்
பரமன்
தன்னையும்(தன் ''யும்) சேர்த்து.
ஞாபகங் கொள்
ஏழையரின் பசி தீர்
சுடச் சுட
நீ
உயிர்ச்சுவையோடு
இருக்கும் போதே!


தமிழ் மன்றத்தில் ஆதி அவர்களின் "தோசைகளையும் பாடுவேன்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை.

கடவுளின் பதில்

என் இருதய நிஜத்தை மறந்து
அன்பெனும் என் இயலைத் துறந்து
உருவானதே வஞ்சக மனத்தின்
வன்செயல் அறியாயோ நீ மனிதா!

நான் கொடுத்த தென்னவோ
உனக்கு வெள்ளை உள்ளம்!
அம்மனத்தைக் கருத்துத் திரித்தே
அவல மனைத்தும் நீயே விதித்தாய்!

உன் மெய்க் கோயிலில் உவந்து
குடியிருக்கும் என்மெய் மறந்து
வெளியே வீண்பொய்க் கோயிலில்
எனைப்புனைந் ததாரோ நீயே மனிதா!

சத்திய யுகந்தன்னை நானுனக்குத் தந்தேன்
சத்தியந் தன்னைப்பொய் மாயையால் மறைத்து
இருண்ட கலியுகம் நீதானே படைத்தாய்
கடவுள் என்னைக் குறைகூறல் முறையோ!


நிலா முற்றத்தில் மா. கலை அரசன் அவர்களின் "கடவுள் நீ தானா?" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

தலை முடி!

உன் மெய்க்கு முடியாய் அமர்ந்த தலை மேல்
உன் மெய்யான முடியாய் அமர்ந்த தலைவனை(தலைவன் '')
நீ மறந்தால் முடி போல் உதிருமே தலையும்!

மெய்வழி!

பொய் வீடு விட்டு
மெய் வீடு புக்க
பொய் வீட்டுக்குள்ளேயே
மெய்யாய் இருக்குதே
இருதய வழி!
"இரு தயவாய்" என்ற வள்ளல்
பெருமான் உபதேசப்படி
நீ தயவாய் இருக்க
இருதய வாய் திறந்து
தெரியுமே அம்மெய்வழி!

அழு!

அருளே உப்பாகி
ஒளியே நீராகி
இருவிழி வழியே
வழிவதோ கண்ணீர்!

வழியுங் கண்ணீரில்
கழியும் அழுக்கெல்லாம்
நெற்றியுஞ் சுத்தமாகப்
பற்றுவீர் ஒருவிழி!

தயவாய் இருத்தலே
உயர்வான ஒரேவழி!
இருதய ஒருமையின்
கருணை மெய்வழி!

மெய்வழி திறக்கப்
பொழியட்டும் இருவிழி!
பொய்யெலாம் கரைய
வழியட்டும் அருளொளி!

Tuesday, July 22, 2008

ஒருமையுணர்வு

ஒரு பக்கம்
தலையாக மனிதனாம் நீ!
மறு பக்கம்
இருதயப் பூவாகக் கடவுளாம் நான்!
கூறு போட முடியாத
தங்க நாணயம்
நாம்!
தகதகவென மின்னும்
நம் ஒருமையுணர்வு!
உலகெங்கும் செல்லும்
நம் பொன்னொளி!
நீ
ஒரு செல்லாக் காசு
என்ற மனப்பிரமையை விட்டுத்
தங்க நாணயமாய்த்
தகதகவென எழு!
"ஐ யாம்"(I AM) என்ற
ஒருமையுணர்வில்
ஓங்கி எழு!
இப்போதே!

உயிர் காக்க மறந்து...

மரத்தின் மேலமர்ந்து
எல்லாத் திசைகளிலும் கேட்கும்
உரத்த தமிழில்
கரைகின்றன காக்கைகள்
'கா', 'கா', 'கா'
'கா', 'கா', 'கா'
'கா', 'கா', 'கா'
'கா', 'கா', 'கா'

மரத்தைச் சுற்றி
முற்றுகையிடுகின்றன
கோடரிக் கைகளோடு
இரு கால் மிருகங்கள்

காக்கைகள் கரையும்
தமிழுக்குச் செவிடாகி
உயிர் காக்க மறந்து
மனிதம் அழிந்து

உயிர் கசியும் வேதனை

ஒவ்வொரு கோடரி அடியிலும்
விட்டுப் போகுது
என் இதயத் துடிப்பு

சூஃபி மணிகள்

ஓமென்றும் அகமென்றும் தம்மென்றும் எனக்குள்
யாமென்ற நெறிவிளக்கும் நபிகள்

ஓமென்ற அல்லாவும் அகமென்ற'ரு' ளம்மாவும்
தம்மென்ற நபிகளும் யாம்

ஓமென்ற பெருந்தயாளன் அகமென்ற அருட்ஜோதியள்
தம்மென்ற வாலறிவன் யாம்


ஓங்கார இருப்பிற்குள் அகமாக நானெழுந்து
தம்மென் றிருக்கின்றேன் அறிந்து

ஓம்அகம் தம்மென்ற நாதவிந்து ஞானத்தால்
யாம்அளந் தோம்அடி முடி

மூலந்திறக் குமோங்காரம் இருதயந்திறக் குமகம்மேம்
பாலந்திறக் குமேதம்மெனும் மந்திரம்

ஓமென்னும் அகமென்னும் தம்மென்னும் மும்மந்திர
நாமத்தான் மகம்மது நபிகள்

"ஓம்அகம் தம்"யாம் மெய்ஞ்ஞானத் திருமந்திரம்
நாயகம் நபிகள் கொடை

ஓங்கார அல்லாவின் மெய்த்தூதர் மகம்மது
மெய்யகம் ஆனந்தம் தந்தார்


பி.கு. : The Phonetic Spelling of Prophet "MOHAMMADH" contains the Vedic Mantras OM(Father), AHAM(Mother), DHAM(Son/Daughter/Christ/Guru/Rasul/Buddha)
பொறுப்பாளர்கள் மன்னிக்கவும், மந்திர விளக்கத்துக்காகவே ஆங்கிலம் கையாளப்பட்டது, நன்றி

மாயபிம்பமா உனது நிஜம்!

பிம்பம் பிடிக்கவில்லையா?
அதன் தோற்றுவாய் நீ தானே!
பின் பளிங்கின் மேலெதற்குக் கோபம்?
மாயபிம்பமா உனது நிஜம்!நீ எப்படி இருக்கிறாயோ
அப்படியே காட்டும் பளிங்கின் நேர்மை
நீ உன்னைத் திருத்த
உடனேயே பிம்பமும் திருந்தும்பிம்பத்திற்கான முழுப்பொறுப்பு
உன்னுடையதே.
பளிங்கையும்
பிம்பத்தையும்
சீர்திருத்தும் வீண் முயற்சி விட்டு
உன்னைச் சீர்திருத்தும் நன்முயற்சியில்
இறங்கு.

கவிதைக் கலகம்

என்னோடு
சமாதானம் பேச வந்தது
வெள்ளைத் தாள்

முகமெல்லாம்
கரி பூசி
அனுப்பி வைத்தேன்

இப்போது
உலகெங்கும்
கலகம் பேசித் திரிகிறது
அது

ஒளிச்சேர்க்கை

கூரிய இலைக் காதுகளால்
சூரியனின் ஜோதி மிகு நவ கவிதை கேட்டுப்
பூரிக்கும் அரச மரம்!
சீரிய ஒளிச்சேர்க்கை அற்புதமோ அற்புதம்!

மௌன குரு

காது கேளாதோர் பள்ளி
நடுவே மௌன குருவாய்
அரச மரம்

கவிதை நாற்றம்

உணர்வின் வெப்பத்தால்
எண்ணத் தோலில்
வடியும் வார்த்தை வியர்வையைக்
காகிதத்தில் துடைக்கிறேன்
காற்றில் பரவுகிறது
கவிதை நாற்றம்

பட்டாம்பூச்சிகள்!

பார்வை மணக்கக்
காற்றில் மலர்கின்றன
பட்டாம்பூச்சிகள்!

நூலின்றி யார்
பறக்க விடுவது
இத்தனைப் பட்டங்கள்...!

படபடக்கும்
காற்றின் இமைகளோ
பட்டாம்பூச்சிகள்!

மலர்களின் மணக்கும் வண்ண கீதங்கள்
கேட்கும் காற்றின் காதுகளோ
பட்டாம்பூச்சிகள்!

குருட்டுக் காற்றின்
துழாவும் விரல்களோ
பட்டாம்பூச்சிகள்!

மௌனத்தின் மகுடி கேட்டெழும்
ஆயிரந்தலை காற்று நாகத்தின் படங்களோ
பட்டாம்பூச்சிகள்!

காற்றுக்கு வேர்க்கிறதா
எங்கிருந்து வந்தன
இத்தனை விசிறிகள்...!

என் மௌனத்தில்
கவிதைகளாய்ப் பறந்தன
பட்டாம்பூச்சிகள்!

மரங்கள் தம் நெற்றிக்கண்களாம்
மலர்களைத் திறக்கப்
பறக்கும் வண்ணத் தீப்பொறிகளோ!கவிதைகள் வாசிக்க வாருங்கள்
பச்சைப் புல்வெளியில்
பட்டாம்பூச்சிகள்!

தன் வினை தன்னைச் சுடும், நிச்சயம்!

மரங்களை விறகாக்கிப்
பிணமாகும்
மனிதம்

காதல் பரிணாமம்

என் மார்பின் இடப்பக்கத்தில்
வெறும் இரத்த இயந்திரமாய்
இயங்கியதை
நீ தான்
இருதயமாக மாற்றிப் போட்டாய்

ஐந்து விரல்கள் இருந்தும்
என் வலக்கரம்
வெறும் சதைப் பிண்டமாகத் தான்
இருந்தது
நீ தான்
அதில் ஆறாவது விரலை
மூளைக்க வைத்து
அதை உயிர்ப்பித்தாய்

பளிங்கில்
வெறும் மாய பிம்பமாகத்
தெரிந்த என் தலையை
என் கழுத்துக்கு மேலே
நீ தான்
வித்திட்டு வளர்த்தாய்

நீ
என்னைத் தொட்டாய்
உலர்ந்த விரகாய் இருந்தவன்
ஈரமுள்ள மரமாய் உயிர்த்தேன்

நீ
என்னோடு பேசினாய்
இலையுதிர்ந்து நின்ற
என் தலைக் கிளையில்
காதுகள் துளிர்த்தன

நீ
என்னைப் பார்த்தாய்
புலன்களை மூடிய திரை
கிழிந்து
என் மனம் தெளிந்தது

நீ
என் உடல் மீது
உன்னையே உடுத்தினாய்
மெய்யென்ற தமிழ்ச்சொல்லின்
பொருள் விளங்க
ஒளிர்ந்தது என் உடம்பு

நீ
சடலமாய்க் கிடந்த
என் உடலுக்குள்
உயிராகப் புகுந்தாய்
உயிர்மெய் ஒருமையின்
உண்மை விளங்கி
நான்
உயிர்தெழுந்தேன்

நீ
இகவுலகப் பாலையில் விழும்
பரம்பொருள் மன்னாவாய்
என்னகம் விழுந்தாய்
இகத்திலேயே
பரமானந்த வீடு பேறு
எய்தினேன்
நான்

உன் புதுப் பரிமாணம்

எந்நிகழ்வுகளாலும் உடையாத
உடைக்க முடியாத
நித்திய ஜீவனென்னும்
இன்ப உந்துதல்
உன் மூலம்

காலத்தின்
சூழ்நிலைகளின்
கைதி நீயென்று
உன் நிஜ நிலையைத்
தலை கீழாக்கும்
கண்மூடித்தனத்தை
உன் ஆன்ம ஒளியால்
கண்டு கொண்டு
நிகழ்வுகளின் எஜமானனாகு

விரல்களில் சிக்கிய பொருள்
அருவ அருளின் திட உருவமே
என்று மனம் உணர
பொருளின் ஊனம்
அருளில் கரையும்

அஃறிணைகளில் சலனமூட்டும்
அமுதக் காற்று
உயர்திணை உன்னை
ஏன்
இன்னும் உயிர்ப்பிக்கவில்லை?

அருவக் கடவுளின் கருவில்
உருவான அமரக் கவிதை
நீ.
உன்னை உச்சரித்தே
தன் மௌன ஆழத்தை
உணர்கிறான்
கடவுள்.
உன் நுனி நாக்கில்
நடனமிடும்
ஜீவனுள்ள வார்த்தையை
உச்சரிக்க
இன்னுமா தயக்கம்?
உன் மெய்யென்னும்
வெற்றுத் தாளில்
மனப் பேனா
பதியட்டும்
அவ்வார்த்தையின் தடம்

இடமும் காலமும்
முடித்த
பரிணாம முடிவில்
இடமும் காலமும் மீறி
நீ பாய்ந்தால் மட்டுமே
உருவாகும்
உன் புதுப் பரிமாணம்

எழுதாத ஞான தொனி
உன் இருதய குகையில் கேட்டு
ஆன்ம நேயனாம்
இறை தூதனாய்ப்
புத்தனாய்ப்
புது மறை எழுது

அலுவல் பளுக்களை உதறி
நீ
சும்மா இருந்த போது
உன்னில் கீறப்பட்டவைகளைப்
புரிந்து கொள்ளப்
பரிணாமப் பயணத்தின் முடிவில்
நீ
பாய வேண்டும்
வேறு பயணப் பாதையில்


தமிழ் மன்றத்தில் எஸ்.எம். சுனைத் ஹஸனீ அவர்களின் "போதி மரங்களும், ஹிரா குகைகளும்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

குண்டலி நாகமே!

குண்டலி நாகமே!
கீழே படுபாவித்தனத்தை உண்ணும்
நயவஞ்சகக் கருநாகம் நீ
மனந்திரும்பி
மேலே இறைமகவாம் உன் உண்மை உண்ண
நல்ல பாம்பாவாய்!

முதுகடி நோக்கிய
உனது வாயை
180 பாகைகள் திருப்பி
தலையுச்சி நோக்கு.
தலைக்கு மேலிருந்து
எப்போதும் விழுந்து கொண்டிருக்கும்
மன்னாவை உண்ண
உனது வாலும் வாயும்
இடம் மாற வேண்டும்!
இடம் மாற
கருத்த உன் உடம்பு
வெளுக்கும்!
மனந்திரும்பி
இடம் மாறு
இப்போதே!

கவிதை

கருத்துக்கும்
சொல்லுக்கும்
இடையே
கீற்றப்படும்
நேர்க்கோடு

சொல் உடம்பெடுத்த
கருத்து உயிர்

உணர்வு வானில்
எழுத்து மின்னல்

வயிற்றுக்கு மேல்
மூளைக்கு ஏறிய
மனிதன்
இருதயத்தில் இறங்கிய
வரலாற்றுப் பயணம்

பகுத்தறிவுக்கும்
உள்ளுணர்வுக்கும்
இடையே
நடந்த போராட்டத்தில்
தெறித்த குருதித் துளிகள்

காலத்தை வெல்லப்
புறப்பட்ட
எழுத்து வீரர்களின்
அணிவகுப்பு

மனிதன்
தன்னைச் செதுக்கிய போது
சிதறிய
உடலுயிர்த் துகள்கள்

வயிற்றை மறந்த மனிதனின்
அறிவுப் பசி பரிமாறிய
சொற்சோறு

மனக் குரங்கின்
மனித பரிணாமம்

சொற் காதலியைப்
புணரும்
கருத்துக் காதலன்

கருத்தையும்
சொல்லையும்
அளக்கப் புறப்பட்ட
குறளடிகள்

மனிதனின் நெற்றிக் கண்

ஆறாவது அறிவின்
வரிவடிவம்

அழகின் தாய்மொழி

சுய தேடலின் சுவடு

கண்ணீர்
புன்னகை
கோபம்
காமம்
காதல்
என்ற வண்ணங்களால்
எழுதும் சித்திரம்

எண்ணங்களின்
சுருக்கெழுத்து

காயங்கள் தாமே
தயாரிக்கும் மருந்து

கண்ணீர்த் துளிகளில்
கருக் கொள்ளும்
கனல் பொறிகள்

எண்ணங்களின் இலையுதிர்காலம்
எழுத்து வசந்தமாகும்
அதிசய ஏற்பாடு

செவிகள்
விழிகள்
நாசி
நாவு
விரல்கள்
இவற்றை விதைத்து
கண்ணீர்
வியர்வை
குருதி
இவற்றைப் பாய்ச்சி
ஞானச் சூரிய ஒளியில்
வளரும் பயிர்

விரல்களின் வழியே
உயிரின் கசிவு

செவிகளின் வழியே
உயிரின் மீட்பு

விரல் துளைகளுள்ள
மெய்ப் புல்லாங்குழலில்
உயிரின் மூச்சுகள்
வாசிக்கும் மானுட கீதம்

உணர்வுகளின் போதையில்
எண்ணங்களின் உளறல்

முற்றுப்புள்ளி

புதைத்தேன்
செடியாய் முளைத்தது
கேள்வி

எரித்தேன்
ஜ்வாலையாய் எழுந்தது
கேள்வி

கருவிலேயே கலைக்கலாம்
என்று தீர்மானிக்கக்
கருவில் கண்டதோ
ஒன்றல்ல
இரண்டல்ல
அடுக்கிய கோடியாய்
அழிக்கவே முடியாத
கேள்விகள்

இப்போது புரிகிறது
முற்றுப்புள்ளி
ஓயாமல் கேள்வி நோய் பரப்பும்
அழிக்க முடியாத
நுண்ணுயிரென்று

என் முரட்டுக் குரல்

நான்
உரக்கத் தான் பேசுகிறேன்

என்றாலும்
அந்த வார்த்தைகளால்
காதுகளைச் சுற்றிலும்
எழுப்பப்பட்ட
இருப்புச் சுவர்களைத்
தகர்க்க முடிவதில்லை

இருந்தாலும்
முட்டி மோதிச்
சிதையும் என் வார்த்தைகள்
அவற்றைத் தகர்க்கும் முயற்சியைக்
கை விடுவதில்லை

கரை மீறிப் பொங்கும்
அலைகளைப் போல
என் வார்த்தைகளும்
சுவர்களை மீறிக்
காதுகளில் பாயும்

செவிப் பறைகளின்
முழக்கத்தில்
நெற்றிகள் விழிக்கும்

முரட்டு அலைகளின் மீது
சத்தியம்

நானே நீ! நீயே நான்!

உன்னால் எழ முடியும்
எழுந்து காட்டு!
நானிருக்கிறேன்
எப்போதும்
உன்னுடன்
உன் உயிராக
உன்னை ஆதரிக்க
உன்னை அரவணைக்க..
இக வாழ்வின் பல்வேறு பரிமாணங்கள்
பர வாழ்வின் படிக்கட்டுகள்.
நீயாக
இகத்தில் விழுந்திருப்பது
நானே மனிதா!
நானாகப்
பரத்தில் எழுந்திருப்பது
நீயே மனிதா!
விழுவது நானென்றால்
எழுவது நீ!
உயிராம் என் விழுதலால்
மெய்யாய் விழித்தெழு நீ!
உயிர்மெய் ஒருமையாய்
நானே நீ!
நீயே நான்!


தமிழ் மன்றத்தில்  மீரா அவர்களின் "நீ அல்ல நான்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை.

ஈதேன் தோட்டம்

சிவப்பு முதல்
ஊதா வரை
ஏழு நிறப் பூக்கள்
என் மெய்க்குள்
எப்போதும்
ஒளிரும்
சக்கர தீபங்களாய்.
சப்த ஸ்வரங்கள்
எப்போதும்
ஒலிக்கும்
ஆன்ம கீதங்களாய்.
உயிர்ப்பில் ஓடும்
தீப வாசனை
கீதத் தீஞ்சுவை
உணர்வைத் தீண்ட
ஜீவ விருட்சமாய்
விழித்திருக்கிறேன்
நான்


தமிழ் மன்றத்தில் இளசு அவர்களின் "என் தோட்டம்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

முடவனின் முரட்டுத்தனம்

முள் உரசுந்
தாளில்
ஈர மை உலரவில்லை

இமை துறந்த
விழியை
நீண்ட இரா மூடவில்லை

தவங் கிடந்த
கவிதை
எளிதில் வசப்படுவதில்லை

கொம்புத் தேனை
முடவன்
எம்பாமல் விடவில்லை

தாளில்
மை உலரு முன்
விழியை
இரா மூடு முன்
முரட்டு முடவன்
கொம்புத் தேன்
சுவைப்பான்
விருந்தோம்பியும்
செல்வான்

? (இன்னும்!!!)

மூலாதாரப் புள்ளியைக் குடைந்து
அதனுள்ளே புகுந்து
பரிணாமப் பாய்ச்சலிலே
அதையுந் தாண்டி
முதுகுத் தண்டில் செங்குத்தாய் எழுந்து
தலைக்குப் பின்னும் மேலும் முன்னும் வளைந்து
தலைக்குள்ளே சுழிந்து
முடியும் கேள்வி
உன்னைப் பற்றிய முடிவான
மெய்ஞ்ஞான உறுதியோ?

ஆறாதாரங் கடந்து
சுழி முனைக்குள் சுழலும்
நிராதார மேனிலையோ?

ஆறாதார மெய்ச் சிறுபுள்ளியிலும்
அதற்கப்பால்
அப்பாலுக்கப்பால் எல்லையின்றிப் படர்ந்த
நிராதார உயிர்நிலையோ?

ஐம்புலனும் மனமும் சிறுபுள்ளியாய் அடங்க
விரியும் இருதயத் தூவெளியோ?நெற்றி திறந்து விந்து விளங்கி
உச்சி மலர்ந்து அமுதம் பொங்கி
பிடரி பிளந்து நாதம் தெளிந்து
தொண்டைக்குள் இறங்கி
மெய்க்குள் விழுந்து
உயிர்ப்பை அளிக்கும்
அமுதத் துளியோ?

உச்சி திறந்து
செவி விழி கடந்து
நெற்றியில் சுழிந்து
நாசியில் நெளிந்து
வாய்க்குள் நீண்டு
தொண்டையின் வழியே
மெய்க்குள் வீழும்
ஞான அளியோ?

கிறிஸ்துவாய் மாற்ற
இயேசுவின் தலை மேல்
இறங்கும் பரிசுத்த ஆவியோ?உணர்வில் வன்பின் சிறுகூறு
உலகில் தீவிரமாதமாய்த்
தலைவிரித்தாடுகிறதோ?

உணர்வில் அன்பின் சிறுகூறு
உலகில் ஆன்மநேய ஒருமையாய்
மலராதோ?


இனியும் பகுக்க இயலாதென்று
திடமாய் எண்ணிய அணுத்துகளையும்
பிளந்த விஞ்ஞானம் சுட்டுவது
பகாப்பதமாய்க் கிடக்கும்
விசாலமான வெட்டவெளியின்
மெய்ஞ்ஞானமோ?

அணுகுண்டை வெடித்தும்
சிதறாத ஒருமையாம்
வெட்டவெளியே நீயென்ற
மெய்ஞ்ஞானம் வாய்த்து
சிறப்பாயோ ஞானப்பெண்ணே?உருவப் புள்ளி
உள்ளே சுழிந்து
அருவ விரிவாய் ஆவதும்
அருவ விரிவு
வெளியே வழிந்து
உருவப் புள்ளி ஆவதும்
தெற்றென விளக்கும் கேள்வியே
உறுதியான உன் மெய்ஞ்ஞான பதிலோ
ஞானப் பெண்ணே?

இருண்டு கிடந்த பருப்பொருட் புள்ளி
உணர்வேறிப் பாய்ந்து
ஒன்று முதல் ஐந்து வரையிலான
உயிர்த்திரளாய் நீண்டு எழுந்து
தன்னிழலில்
தன்னினத்தோடு ஐந்தையும்
அரவணைக்கும் அருட்போதி நிழலாம்
மனித ஆறாய்ப்
பின்னும் மேலும் முன்னும் வளைந்துப்
பின் உள்ளே சுழிந்து
எழும் 'ஐ'யே(எழுமையே)
வெளியே வழியும்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையோ?காலமும் இடமும் பொருளுந்
தாண்டி
உள்ளே சுழிந்தால்
என்றென்றும் இருக்கும் பெருவாழ்வின் சுகமும்
எங்கெங்கும் விரியும் பரிசுத்த வெளியும்
சக்தியூற்றாய்ப் பெருகும் பரசிவ அருளும்
ஒருங்கே திரண்ட
நிராதார மேனிலை
ஆறாதார மெய்வழியே
வெளியே வழிந்தோடும்
சூக்குமம் உணர்த்தும்
மெய்ஞ்ஞான சூத்திரமோ?

உள்ளே சுழியும்
ஞான இருப்போ
வெளியே வழியும்
அன்பாம் இயல்பூ?

சுழிமுனை இருதயத்
தூவெளியோ
துடிக்கும் இதயச்
சிவப்பூ?

உள்ளே சுழிய மறந்த
அஞ்ஞானத்தால்
வெளியே தயவாய் வழிய
மறுக்குதோ
இருண்ட மனிதப் புள்ளி?

சுழிமுனை இருப்பது
எதற்குச் சித்தரே?
வழியும் தயவின்
வடிகாலாய் இருக்கவோ?

நிராதாரஞ் சுழிந்தது
எதற்குச் சித்தரே?
ஆறாதாரம் வழிந்து
மெய்செய அல்லவோ?

நான்மறை எதற்கு
மெய்ஞ்ஞான சித்தரே?
"நான்"மறை அஞ்ஞான
மாயை மாய்க்கவோ?

பரிபாஷை எதற்கு
பரமஞான சித்தரே?
பகிரங்கமாய்ப் பரமனைப்
பகரவே அல்லவோ?

கேள்வி எதற்கு
அகத்தீச சித்தரே?
பரநாத மந்திர
தீட்சை அளிக்கவோ?

வெள்ளங்கி எதற்கு
இராமலிங்க வள்ளலே?
கருத்த மனப்புள்ளியை
இருதயமாய் விரிக்கவோ?

இருதய வாய் திறக்கும்
வழியென்ன அடிகளே?
தயவாய் இருப்பதால்
திறக்குமது அல்லவோ?காலம் இடம் பொருள்
கடந்து
கடவுளாய்ச் சுழியும்
பரமஞானமும்
எங்கும்
எதிலும்
எப்போதும்
நிறையும்
இறைவனாய் வழியும்
மெய்ஞ்ஞானமும்
உணர்த்தும்
மந்திர வடிவமோ?

சுழியும் வெட்டவெளி கண்டு
வழியும் அருளொளி உண்டு
சுகித்திருக்கப் புகட்டும்
சற்குரு வடிவமோ?

மாயத்திரை விலக
என்னுள்ளே ஓங்கும்
மெய்க்குரு வடிவமோ?

நானே என ஓம் சுழிய
நான் என அகம் வழிய
இருக்கிறேன் என ஞானானந்தம் மொழிய
"ஓம் அகம் தம் யாம்" என்றே
வழிகாட்டும் நபியோ?

Monday, July 21, 2008

சாத்திரங்களும் சூத்திரங்களும்

1


பாழாய்ப் போன காற்றே உன் குருவென்றுப்
பாழில் மனதை அலைய விடாமல் அது பற்றி
நெற்றி நடு வீதியில் நாட்டமுடன்
பாராயோ அல்லாவின் அருள்வெள்ளம்!
பார்க்கக் கேட்பாயே நபிகளின் அருண்மொழியை!
கண்டத்துள் வீழும் தெள்ளமுதப் பாகில்
இக வாழ்வின் ஒரத்தில் கிடக்கும் கல்லான உன் தேகம் உயிர்க்கும்
பர வாழ்வின் நடுவில் பராபர மெய்யோடது கலக்கும்!2


மரண ஒரத்தில் கிடக்கும்
ஜடக் கல்லாய்
நீ

அமுதக் காற்று
உன்னை உயிர்ப்பித்துப்
பெருவாழ்வின் நடுவில்
வைத்தாலும்
மீண்டும்
முரண்டு பண்ணி
மரண ஒரத்தில்
ஜடக் கல்லாய்க் கிடப்பாய்
நீ

பாழாய்ப் போன
உன் மனதால்
பாழாய்ப் போகுதே
அமுதக் காற்று!

பரமபிதாவை
உன்னிடம் சேர்க்கும்
பரிசுத்த ஆவியாம்
வாசியை
வாசியாமல்
மரண ஓரத்தில்
ஜடக் கல்லாய்
பாழாகிறாயே
நீ3


கல்லென்ற பூஜ்ஜியம்
பரிணாமப் படியேறி
மனிதமென்ற ஆறாகி
உலக வீதியில்
நடு நாயகமாய்ப்
பாய்ந்தோடும்

தன் நடு நிலை மறந்த
மனிதம்
பாய்ச்சலை விட்டுக்
கல்லாய் இறுகிப்
பாழாகும்

பாழானதற்கு வருந்தி
மனந் திருந்தி இளகி
ஆறாக மீண்டும் பாயும்

ஆறின் உச்சத்தில்
உச்சிப் பீடத்தில்
ஆன்ம நேயத்தில்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையாய்
எழும் ''யே
எழுமையாம் பரமபதம்

பரமபதமே
உச்சி பிளந்து
உள்ளே புகுந்து
மெய்யுடம்பாலயத்தில்
எழுந்தருளியிருக்கும்
பரமனின் உண்மை
காட்டும்.
மனிதம்
அமர தேவமாகும்.
மண்
சொர்க்கமாகும்.

பூஜ்ஜியக் கல்
பரிபூரணமாகும்
பரிணாமப் பாய்ச்சலை
பரமனின் பாதையை
யாவர் தடுக்க வல்லரோ!?4


ஓர நாடிகள் இரண்டு
இடத்தில் இடகலை
வலத்தில் பிங்கலை

நடு நாடி ஒன்று
முதுகுத் தண்டாம் வீதி
நடுவிலேறும் சுழிமுனை

ஆடிக் காற்றாம் வாசி
ஓரங்களில் புழங்கும்
கல்லென்ற திடமான
பிராண சக்தியை
வீதி நடுவிலேற்றி
நெற்றி திறந்து
உச்சி பிளக்கும்

உயிர்ப்பாய் உன்னில்
உலவும்
ஆடிக் காற்றாம்
வாசியுள்ள போதே
தூற்றிக் கொள்

வாசியுள்ள போது
அதை வாசியாமல்
மனத்தைப் பாழாக்கும்
பொய்ச் சாத்திரங்களிலும்
வீண் சூத்திரங்களிலும்
மேய விட்டு
நீ
பிராண சக்தியைக் கழித்தால்
கல்லென்ற அத்திடமும்
காலியாகி
மெய்யென்ற உன்னுடம்பும்
பொய்யாகும்

வாசி
மௌன மெய்க்குருவின்
நற்சீடனாகி
நீ
அவர் வழி நடத்தும்
மெய்வழிச் சாலையாம்
வீதி நடுவில்
கவனத்தோடே செல்

சிவாவெனும்
வாசியவர் சொல்லும்
மெய்ஞ்ஞான சூத்திரம்
நீ
கேட்க
வேறெந்த சாத்திரமும்
முணுமுணுக்கும் மந்திரமும்
வேண்டாமே உனக்கு!5


மூச்சை வெளிவிடும் போது
"லா இலாஹா இல்லல்லாஹ்"
என்று மனதில் உச்சரித்து
ஒரே கடவுளின் உண்மையைப்
பிரகடனம் செய்து
அல்லாவாம் பேரருட்ஜோதியன் தாள்களில்
உம் உடல் பொருள் ஆவி அனைத்தையும்
முழு மனதுடன் இருதய பூர்வமாக
அர்ப்பணித்து
மூச்சை உள்ளிழுக்கும் போது
"மொஹம்மத்துர் ரசூலல்லா"
என்று மனதில் உச்சரித்து
அருட்தந்தை அல்லாவின் தலைமகனாம்
நமக்கெல்லாம் உட்போதகராம்
நபிகளைத் துதி செய்து
அவரோடு வேறற ஒன்றி
இறை தூதுவனாய்
உம் உண்மையை உணர்ந்து
சூஃபி ஞானியர்
எப்போதும் செய்யும்
வாசி யோகப் பயிற்சியை
உம் அருங்கவிக்குப் பரிசாக
எளியன் நான்
உமக்குத் தந்தேன்.

ஹாவென்று வெளிமூச்சில்
சூ(ஸா)வென்று உள்மூச்சில்
உமக்குள் ஓடும் ஹடீத்(Hadith)தென்னும்
அஜபா காயத்ரீயை
உம் பெயரில் தாங்கிய
ஹ-ஸ-நீ(நீ என்பது இந்த ஈரண்டு பீஜங்களும் சேர்ந்தவன் தான் நீ என்பதை வலியுறுத்த)
நீவிர்
வாசி பேசாமல் பேசும்
இம்மந்திரங்களைக் கவனித்து
மனிதில் உணர்ந்து
யோகத்தில் இருப்பீர்!6


ஒற்றைக் கல்லாய்
ஒளிக்கற்றைகள் உமிழும்
அரும்படிகம் தானோ
மண்டையின் மத்தியில்
சுழிமுனை!

மனத்தின் கவனம்
வீணே கசிய
பாழாய்ப் போகும்
வாசிக் காற்று
காட்ட வேண்டிய
ஒற்றைக் கல்லைக்
காண முடியாமல்
நீ!

நடு நாயகமாய்
மூளை மெக்காவின் மத்தியில்
காபாவாக
ஒற்றைக் கல் ஒளிர
நீ
செய்யும் உதாசீனத்தால்
ஓரமாய் ஒதுங்கிக் கிடக்கும்
வெற்றுக் கல்லாய்
அது வீணாகுதே!

மூச்சை வெளிவிட்டு
அல்லாவுள் இறந்து
மூச்சை உள்ளிழுத்து
நபிகளுள் பிறந்து
அல்லாவின் அருளாம்
புனித 'ரு'வை உணர்ந்து
இருந்தால்
காபாவின் உண்மை
உனக்கு விளங்கும்!

காற்றுள்ள போதே
நீ
கவனமாய்த்
தூற்றிக் கொண்டால்
மரண ஒரம் விட்டு
இடம் பெயர்ந்து
பெரு வாழ்வாம்
நித்திய ஜீவனென்னும்
வீதியின் மத்தியில்
நீ
உயிர்த்தெழலாம்!

இதற்கெல்லாம்
எனக்கு நேரமில்லை
என்று அலட்சியமாய்
நீ இருந்தால்
உனக்கு உள்ளிருக்கும்
காபாவை
எப்படி நீ தரிசிப்பாய்!
அவ்வொற்றைக்கல்
உமிழும் ஒளிக்கற்றைகளால்
உடம்பை மெய்யாக்கி
உயிர்களை
எப்படி நீ நேசிப்பாய்!
பெருந்தயாளன் அல்லாவை
வேறெப்படி நீ பூசிப்பாய்!
நபிகள் உன்னுள்ளே ஓதும்
புனித குர்-ஆன்
எப்படி நீ வாசிப்பாய்!7


ஓரத்தில் முடக்கம்.
நடுவில் கவனமோ?
ஒளிருமே ஒற்றைக்கல்!

கவனமின்றிப் பாழாகுங் காற்று.
கவனமாய்ப் பாராயோ வாசி?
கல்லுடம்பு மெய்யாகும் மெய்!

தலை மெக்கா(வீதி).
நடுவிலோ காபா(ஒற்றைக் கல்)?
வழியுதே ஒளிக்கற்றை!

வெளியே பொய்க்குருமார் ஆரவாரம்.
உள்ளேயோ மெய்க்குருநாதர் மௌனம்?
கேட்குதே மறைமந்திர சூத்திரம்!

அருட்ஜோதியன் அல்லாவுள் இறப்பு.
ஞானமணியன் நபிகளுள்ளோ பிறப்பு?
வாய்த்ததே பெருவாழ்வின் சிறப்பு!

ஹ(வெளி மூச்சில் இறப்பு).
ஸ(உள் மூச்சிலோ பிறப்பு)?
நீ(அதிசயந்தான் நீ)!

இட வல ஓரத்தில் கிடந்த முடக்கம்
சுழிமுனை நடுவில் எழுந்ததோ நாகத்தின் படம்?
உயிர்த்தெழுப்புதே மெய்யமுதத் தீண்டல்!

இடகலை பிங்கலை ஓரங்கள்.
நடுவிலோ சுழிமுனை?
இக வீதியில் நீளுதே மெய்வழிச் சாலை!

ஓரங்களில் கவனமிலா உறக்கம்.
நடுவில் விழித்ததோ சுழிமுனை?
நனவானதே கனவுச் சொர்க்கம்!8Quote:


Originally Posted by எஸ்.எம். சுனைத் ஹஸனீ View Post


ஓரமாய் கிடந்த
ஒற்றைக் கல்லொன்று
ஆடிக் காற்றில் அசைந்தாடி
வீதி நடுவில் வந்தது


கல்லின் பாடம்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
வாசி உன்னுள் ஓடும் போதே அதைக் கவனமாய் வாசித்து, மெய்ஞ்ஞானம் பெறு.

ஆடிக் காற்று அடித்த போது
அதை அலுத்துக் கொள்ளாமல்
அதை வையாமல்
அதை முழுவதுமாய்ப் பயன்படுத்தி
அதில் ஆனந்தமாய் அசைந்தாடி
ஓரத்திலிருந்து
நடு வீதிக்கு
வந்தது
நமக்கு உயிரற்றதாகத் தோன்றும்
கல்.
அஃறிணையாய் இருந்தும்
சலியாமல்
காற்றுள்ள போதே
தூற்றிக் கொண்டது
கல்.

Quote:Originally Posted by எஸ்.எம். சுனைத் ஹஸனீ View Post


பாழாய் போன காற்றென்று
அதை ஓரமிட்டுச் சென்றனர்
அவ் வழி சென்ற
ஒரு குருவும் அவர் சீடனும்


கல்லின் பாடத்தைப் புரிந்து கொள்ளாமல்
காற்றை நொந்து வைது
அஃறிணைக் கல்லின்
காற்றுள்ள போது
தூற்றிக் கொண்ட
அசகாய முயற்சியை
மொத்தமாய்க் கழிக்கும்
குரு சீடப் பொய் வேடங்களில்
உயர்திணையாம் மனிதம்.
குரு சீடப் பொய் வேடங்களால்
பாழாய்ப் போனது
கற் குருவின் பாடந்தான்.

Quote:Originally Posted by எஸ்.எம். சுனைத் ஹஸனீ View Post


மீண்டுமடித்த காற்றில்
மீண்டும் நடு வீதி சேர்ந்தது அக்கல்


மீண்டும் நடக்குது கல்லின் பாடம்
தான் அஃறிணையாயிருந்தாலும்
காற்றுள்ள வரை
தூற்றிக் கொள்ளும்
தன் முயற்சியைக்
கை விடாத
முரட்டுக் கல்
"முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்"
என்ற திருக்குறள் பாடத்தையும்
நடத்துகிறது.
உயர்திணை மனிதம்
இம்முறையாவது புரிந்து கொள்ளுமா
முரட்டுக் கல்லின்
உரத்த பாடம்?

Quote:Originally Posted by எஸ்.எம். சுனைத் ஹஸனீ View Post


மீண்டும் அதையெடுத்து
ஓரத்தில் மீட்டனர்
மீண்டும் அதே வழி வந்த
அதே குருவும் அவர் சீடனும்
பாழாய் போன காற்றென்று
மீண்டும் நொந்த படி.


அதே பொய் வேடங்களால்
மீண்டும்
பாழாய்ப் போகுது
முரட்டுக் கல்லின்
உரத்த பாடம்!

Quote:Originally Posted by எஸ்.எம். சுனைத் ஹஸனீ View Post


ஆடி கழிந்த ஆவணியில்
அதே வழி வந்தான்
அதே குருவின்
அதே சீடன் மட்டும் ஒரு நாள்

ஓரமாய் ஒதுங்கி கிடந்த கல்லை
உருட்டிப் புரட்டி நடு வீதி சேர்த்து
பின் அதை ஓரமிட்டுச் சென்றான்
வீணாய் போன காற்று நமகவென்று
மூன்று தரம் சொல்லியபடி.


கற்குருவின் பாடங் கேட்டும்
காற்றுள்ள போதே
தூற்றிக் கொள்ளாத
பொய்க்குரு
இறப்பில் தீர்ந்தார்
பிறப்பில்
மீண்டும் வரும் வரைக்கும்.
ஆடியில் பாடம் நடத்திய கல்
ஆவணி வந்ததும்
ஓரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.
பொய்ச்சீடன் வருகிறார்.
பொய்க்குரு என்ற பீடம்
காலியாக இருக்க
அதை இவரல்லவா
நிரப்ப வேண்டும்!
எனவே
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கல்லை
வலுக் கட்டாயமாய்
உருட்டியும் புரட்டியும்
வீதி நடுவில் வைத்தும்
பின்பு ஓரமிட்டும்
முணுமுணுத்தும்
சில அர்த்தமற்ற
தந்திர மந்திரங்கள் செய்கிறார்.
கற்குருவின் பாடங் கேட்டு
காற்றுள்ள போது
செய்ய வேண்டியதைச் செய்து
தூற்றிக் கொள்ளாமல்
இந்த சீடன் செய்வது
கொஞ்சங் கூட அர்த்தமற்றதாயிருக்கிறது
என்று சொல்லாமல் சொல்லும்
கேலியோடு கவிதை முடிகிறது.தமிழ் மன்றத்தில் எஸ்.எம். சுனைத் ஹஸனீ அவர்களின் "சாத்திரங்களும் சூத்திரங்களும்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டங்கள்.

Friday, July 11, 2008

உப்பு

சூரியச் சிற்பி
கிரண உளியால்
கடலைச் செதுக்கி
மேகச் சிலைகள்
செய்யும் போது
சிதறும்
வெள்ளைச் சில்லுகள்

கடல் சிப்பியில்
சூரியத் தூசு
விழும் போது
உருவாகும்
வெண் முத்துகள்

சூரிய நெசவாளி
கடலைத்
தன் கிரணத் தறியிலிட்டு
வானத்துக்கும்
பூமிக்கும்
வெண் துகிலை
நெய்து தருகிறான்

கடலின்
திரவ உடம்பில் ஓடும்
திட வெள்ளை இரத்தம்

சூரியக் கவிஞன்
தன் கிரணப் பேனாக்களில்
கடலை
மையாக நிரப்பிக் கொண்டு
விண்ணிலும்
மண்ணிலும்
இரு வித வெள்ளைக் கவிதைகள்
எழுதுகிறான்
இவ்வெள்ளைக் கவிதைகள்
இல்லையென்றால்
மனித நாவுகள்
மரத்தே போய் விடும்

சூரிய ஒளி மதுவைக்
குடித்த கடல்
போதையில்
வானத்திலும்
பூமியிலும்
வெள்ளை எச்சிலைத் துப்புகிறது

ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும்
கடலின் நாவுகளைச்
சூரிய வாளால் அறுத்து
மனிதன்
தன் நாவுக்கு
ஒரு சுவை தருகிறான்

இந்தியனின் அடிமைச் சங்கிலியை
உடைக்கும் உளிகள்
இதிலிருந்து தான்
செய்யப்பட்டன

வெள்ளையனின் ஆதிக்கத்துக்குச்
சவாலாக
இந்தியன்
இந்த வெள்ளையனைச் செய்தான்

வெள்ளையராட்சியின் கல்லறை
இந்தியனால்
இந்த வெள்ளைக் கற்களாலேயே
கட்டப்ப்டடது

கடல் கூட்டிலிருந்து
இந்தியன் விடுவித்த
இந்த வெள்ளைப் புறாக்கள்
வெள்ளையனோடு
சமாதானம் பேச அல்ல
அவனைக் கொத்தப் புறப்பட்டன

கடலிலிருந்து
இந்த வெள்ளைக் கொடியைச் செய்த
இந்திய சுதந்திரப் போராட்டம்
வெள்ளையைப்
புரட்சியின் சின்னமாக்கும்
அதிசயம் செய்தது

இந்திய தேசியக் கொடி
இந்த வெள்ளைத் துணியிலிருந்து தான்
செய்யப்பட்டது

இந்த வெள்ளைப் பலகையில்
தியாகிகளின் குருதித் துளிகளால்
இந்திய சுதந்திரக் கவிதை எழுதப்பட்டது

?

அறிவுக் கனல் பட்டு
முற்றுப்புள்ளி ஒன்று
தீப்பற்றி எரிகிறதா?

தன்னருகில் இருக்கும்
அறிவுக்கனி ஒன்றைத்
தின்ன வாருங்கள் என்று
படமெடுத்து நிற்கும்
வினா நாகம்
சவால் விடுகிறதா?

விடை மாணிக்கம் ஒன்றை
வினா நாகம்
உமிழ்ந்து விட்டதா?

கீழே புள்ளி வைக்கப்பட்டு
தமிழுக்குப் பெருமை சேர்க்கும்
பத்தொன்பதாவது மெய்யெழுத்தா?

உகரத்தை உடைத்த போது
உயிரின் துகள் ஒன்று
கீழே சிதற
உருவாகிய
அருந்தமிழின் பதின்மூன்றாவது
உயிரெழுத்தா?

மடமைக் களைகளை அறுப்பதற்கு
ஓர் அறிவாளுக்குச்
சக்கரம் முளைத்து விட்டதா?
புள்ளிக்கும் கொக்கிக்கும் இடையே
உள்ள இடைவெளியில்
பளிச்சிடும் பதிலைப் பாராயோ
நல் வாலைப்பெண்ணே!

முட்டையை உடைத்து
உடனே பறக்கும்
அதிசயக் குஞ்சோ
உன் அதிரடி பதில்?முடிந்ததாய் நினைத்த அக்னிப் புள்ளி மேலே
பறக்கும் சூடான கேள்விப் பொறிகளோ நீ
வாலையாம் ஞானப் பெண்ணே?????????????
பெட்டிப் பாம்பாய் அவளை அடிமைத்தளைக்குள் அடைத்தனர்.
தளை தகர்த்து நாகம் போல் வீறு கொண்டெழுந்த அவளோ
வாலையெனும் ஞானப்பெண்?
பதிலைப் பிடிக்கக்
கொக்கியாய்ப் பறக்கும்
புள்ளி?

சிறு புள்ளியாய்த் தோன்றும் அறிவு
தான் விசாலமானதைப்
பரைசாற்றப் பறக்குங் கொடி?

பகுத்தறிவின்
தேசியக் கொடி?

கல்லறைப் புள்ளி மேல்
சாவுக்கு சவால் விடும்
சன்மார்க்கக் கொடியா?

பரவிந்து ஒளிப்புள்ளி மேலாடும்
பரநாத ஓங்காரத் தொனியா?

புருவ நடுப்புள்ளி மேலாடும்
நடராஜ நாகமா?

அணுவுள் நிறைந்த
அகண்ட வெளியா?முற்றுப் புள்ளியின் மரண வாடையை
மாற்றிப் போட்டப் பரிணாமப் பாய்ச்சலாம்
கூற்றை வென்ற அமரத் தென்றலா?


மூலாதாரப் புள்ளி மேல் நிமிர்ந்த
முதுகுத் தண்டின் மேல்
சஹஸ்ரார வளைவோ!?


விளக்கம்பத்மாசனத்தில்
அல்லது
சாதாரணமாக நீங்கள்
உட்கார்ந்திருக்கும் போது
பக்கவாட்டில் இருந்து பார்த்தால்
நீங்கள்
கேள்விக்குறி போல் தெரிவீர்கள்

முதுகுத் தண்டு கேள்விக்குறியின்
நேரான செங்குத்தான பாகத்தையும்
தலையும் தலையுச்சியும்
(தலையுச்சியே சஹஸ்ரார சக்கரம்
அதாவது ஆயிரம் இதழ்த் தாமரை)
அதன் வளைவான பாகத்தையும்
கீழுள்ள புள்ளி
நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கும்
நாம் நம் வாழ்நாளில்
விழிப்படையச் செய்ய வேண்டிய
குண்டலி நாகத்தையும்(Guru or Christ Potential)


குறிக்கின்றன.

வரைபடம் கீழே

மெய்ஞ்ஞானத்துக்குத் தவமிருக்கும்
யோகாசன முத்திரையோ?
பரவிந்து ஒளியால்
எப்போதுந் திறந்த
இருதய துவாரம் அறிந்து
உள்ளே நீளும் தயவெனும்
நேரான மெய்வழிச்சாலையில் நடந்து
முடிவில்
பரநாத வளைவில் சேராயோ?

'ஓம்' எனும் பிரணவ எழுத்தின்
இன்னொரு வடிவமோ?

மெய்ஞ்ஞானம் வளர்க்கும்
நற்றமிழின் இரண்டாவது
ஆய்த எழுத்தா?

சொற்புள்ளிக்குள்
பொதிந்திருக்கும்
விசாலப் பொருளா?

இனியும் பகுக்க இயலாதென்று நம்பிய
அணுத்துகளை விஞ்ஞானம் பிளந்த போது
எழுந்த அகண்ட சக்தியா?

மனிதச் சிறு புள்ளியைத் தாண்டி
எழும் விசாலக் கடவுளா?

மனங்குறுகிய சிறு வட்டந் தாண்டி
இருதய ஒருமையில் உயிரனைத்தும்
தன் குடைக் கீழ் அரவணைக்கும்
ஆன்ம நேயமா?

மெய்க்குண்டத்தில்
மூட்டிய
ஞான வேள்வித் தீயா?

சித்தார்த்த மனிதனை
புத்த தேவனாக்கிய
ஞான போதியா?

சிவப் பேரிருப்பிலிருந்து
எழும்
சக்திப் பேரியக்கமா?

விவேக வித்தின்
வளைவான விளைவாம்
அறிவுப் பயிரா?

Wednesday, July 9, 2008

திடீரென!

வெறித்து நோக்கிய வெறுவெளியில்
திடீரெனப் பறந்தது
வண்ணத்துப் பூச்சி!

உன் மெய்

ஒளிந்திருக்கும் உயிர்ப்பே
வெளிப்பட்டிருக்கும் உன் மெய்
பிடிபடும் உண்மை அது.
உள் மையாம் உயிர்ப்பின் உள் மெய்
பிடிபடாத காரணத்தால்
மரணப் பொய்யின் மாயாஜாலம்.
வள்ளலின் வாய்மை பிடித்தால்
பெருவாழ்வு பிடிபடும்!
உண்மையிது
வெறும் வாய்வீச்சல்ல!

புற்களின் விளையாட்டு

கண்ணுக்குத் தெரியாத நூலால்
தும்பிகளைப் பறக்கவிட்டு
விளையாடும் புற்கள்

மெய்யின் சுயசரிதம்(நனி மிகச் சுருக்கமாய்!)

சும்மா இருக்கும்
ஆகாசம்

ஆகாசத்தின் சலனம்
வாசி

வாசியில் சுடச்சுட மலரும்
நெருப்பூ

நெருப்பூவில் சில்லென ஊறும்
அமுத நீர்

அமுத நீரின் வேரில்
திடமாய்ப் பழுத்த பலா
மெய்

விடிவது எப்போது?!

வந்து போகும் அர்த்தகனம்
சற்றும் அறியாது
வெந்து புதையும் அனர்த்தம்.
இதுவே வாழ்வெனும் மனப்பிரமையில்
மெய்யும் பிடிபடும்
பொய்ம்மரணப் பிடியுள்.

வாசிக்க அவகாசமில்லை வாசியை.

நாசித் துளைகள் உள்ளே கசியும்
அமுத உயிர்ப்பைப்
பூசிக்க மனமுமில்லை.

சிவா வசிக்கும் மெய்யை
நேசிக்க இருதயமில்லை.

"நாம் அச்சிவாயம்"
ஒப்ப விருப்பமின்றி
உதடுகள் முணுமுணுக்கும்
நமச்சிவாய மந்திரம்.

புழுவாய் நெளிந்தது
வண்ணக் கோலமாய்ப்
பிடிபடாது பறந்தது

இருண்ட மனித மிருகம்
அமர தேவமாய்
விடிவது எப்போது?!

'ரு'

திடமாய் நிற்கும் மெய்
திரவமாய் ஓடும் உயிர்ப்பில் கரைய
பிடிபடும் பெருவாழ்வின் அர்த்தம்

உயிர்ப்பில் கரைய மறுக்கும் மெய்
மரணம் கவ்வப் பொய்யாகும்
பிடிபடாமல் போகும் பெருவாழ்வின் அர்த்தம்

கவனம் சிதறி
உயிர்ப்பை மறந்த அவலம் போக
உயிர்ப்பில் வை கவனம்

திரும்ப மறுக்கும் மனத்தால்
தோன்றும் பிறப்பும் இறப்பும்
திரும்பி மனம் உயிர்ப்பைக் கவ்வப்
பிடிபடும் மெய்யின் அர்த்தம்

வாழ வைக்கும் மூல ஒன்றில்
கவனம் ஒரு சிறிதும் இன்றித்
தேய்வதா உன் விருப்பம்

கவனமாய் 'ரு'வை உள்வாங்கின்
இதயம் இருதயமாய் மாறும்

'ரு'வின் பெருந்தயவே
மெய்யைக் கரைத்துப்
பொய்யை வெல்லும் உபாயம்

கவனமாய் உள்வாங்கிய 'ரு'வைத்
தயவாய் வெளிவிட்டு
உலக உயிர்த்திரள் அனைத்தையும்
நிபந்தனையின்றி நேசித்தால்
'ரு'வின் பெருந்தயவு வாய்க்கும்

அல்லாவின் அருளால்
இல்லாமல் போகும் மரணம்
அதற்கு
அல்லாவின் அருளாம் 'ரு'வெனும்
உயிர்ப்பாம் மூச்சின் மேல் வை கவனம்
பிடிபடாத அர்த்தம் பிடிபடப்
பிடிபடும் மெய் பிடிபடாமல் கரைய
வாய்க்கும் பெருவாழ்வின் பேரின்பம்

வாசியின் பெருமை


Quote:

Originally Posted by சிவா.ஜி View Post

உங்கள் கவிதைகளின் பிடிபடாத அர்த்தங்களால்தான் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை நாகரா அவர்களே. அறிவுகுறைந்த எங்களுக்கு புரியும்படி கவிதை எழுதினால் ரசிக்க முடியும் நாகரா அவர்களே.
பிடிபடாத அர்த்தமாய்
உம்மில் ஓடும் வாசியில்
கவனம் பிடிக்க
அன்பெனும் சிவா
ஆர்க்கும் சமமாய்
அளந்த அறிவின்
உண்மை உமக்குப்
புரியும் சிவா!
என் கவிதைகள்
மூளையின் மறை கழன்ற
பித்தனின்
அர்த்தமற்ற பிதற்றல்களே!
அவற்றை ரசிப்பதிலும்
உயிர் மூச்சாம்
உம் வாசிக் கவிதையை ரசிப்பீர்.
வாசிக்குப் பின்னூட்டமாய்
உம் கவனம் இடுவீர்.
உமக்குள் உறையும்
அன்பெனும் சிவா
அங்கையில் கனியெனப்
பிடிபடும் புரியும்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வீர்!
உம் அறிவின் ஊற்றாம் வாசியைப் போற்றி வாழ்வீர்!

நாசியில் ஓடும்
வாசியில் கவனம் நிற்க
சிவாவின் அருள்
உம்மை
அமரருள் உய்க்கும்

ரு(Ruh, Holy Spirit, Adishakthi)எனும் அல்லாவின் அருண்மூச்சு
இதயமென்னும் இரத்த இயந்திரத்தை
ருதயமென்னும் தயவின் இருப்பாம்
அன்பெனும் பொன்னாய்ப் புடம் போடும்

பிடிபடாத அர்த்தம்!

புற்களிடையே பட்டாம்பூச்சி
சொற்களிடையே மௌனம்
பிடிபடாத அர்த்தம்!

அடிபடாத உயிர்ப்பு!

கற்களிடையே புற்கள்
சொற்களிடையே மௌனம்
அடிபடாத உயிர்ப்பு!

வெட்டவெளி தியானம்

வெளியே உந்தன் உட்பொருள்
வெளியே உந்தன் உட்சுத்தம்
வெளியே உந்தன் மெய்யுடம்பு
வெளியே உந்தன் மேலுடுப்பு
வெளியே உந்தன் பெரிய வீடு
வெளியே உந்தன் பேருடைமை
வெளியே உந்தன் மெய்யுறவு

ஒன்று மில்லா வெளியில் ஒன்றாய்
நின்ற நீயும் வெளி

ஒன்று மில்லா வெளியை யழிக்க
ஒன்று மில்லை வெடி

நன்றாய் நின்ற வெளியை அறிந்தால்
பொன்றா துந்தன் வாழ்வு

வெளியே வளியாய் ஒளியாய் அளியாய்க்
களிக்கும் உயிர்மெய் உண்மைகடத்துள் வெளியே திடமென இருந்தால்
கடப்பாய் இறப்பும் பிறப்பும்

காலி வெளியே காலியாகா திடமென
வாலை ஒளியை நாடு

வெளிதரும் வெள்ளங்கி உடுத்தி களிப்புடன்
வெளிதனில் இருத்தல் சுகம்

வெட்டவெளியே பட்டப்பகல் நிசமென உணர்ந்தால்
பட்டொளியாய் மினுமினுக்குந் தேகம்

சுத்தவெளியின் சுத்தமே மெய்யின் உண்மையெனும்
சித்தத்தெளிவை என்றுமே போற்று

சித்தரே பரிசுத்தரே புத்தரே நீவிர்
சுத்தவெளி உருவெடுத்த உண்மை

வெளியைப் பற்றி வளியைத் தொற்றி
ஒளியுள் உற்றுக் களி

நள்ளிரவிலும் பளபளக்கும் வெட்டவெளியில் கவனம்
கள்ளமனமும் வெளுத்துவிடும் சுத்தம்

மெய்யரே நீரென்றேன் வெட்டவெளி திடப்படும்
மெய்யுடம் பாரென்றேன் நான்

வெளிபற்றி நிற்கும் வளிக்குள் ஒளிதோன்றி
அளிசொட்ட மெய்க்குள் களி

வாசி யோகம்

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வந்துபோகும் கணக்கை முடி

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வெந்துசாகும் பழக்கம் கழி

வீணே கசியும் கவனம் வளிமேல்
பூண நசியும் மரணம்

திருப்பி மனத்தை வாசியில் பூட்டத்
திறக்கும் அமுத வாரி

கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்
திருந்த உடம்பு ஒளிரும்

கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்
திருந்த உடம்பு ஒளியும்

Quote:

Originally Posted by தென்றல் View Post

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வெந்துசாகும் பழக்கம் கழி

இது எந்த மடத்தனம்? விளக்குவீராக!!
வந்துபிறந் திறந்துபோகும் மடத்தனம் மடிந்துபோக
முந்திச்செல் வாசியோக வழி

நன்றி தென்றலாரே!

தென்றலாம் வாசியைக் கவனிக்கும் யோகத்தால்
என்றைக்கும் வாழலாம் நிசம்

முச்சந்தி வீதியில் போய்வரும் தென்றலை
இச்சித்து போதியில் வாழ்

மரண வாடை வீசா திருக்கமெய்ச்
சுரணை ஊட்டும் தென்றல்

சுத்த வெளியில் மெய்யைக் கரைக்கும்
புத்த விளக்கம் வளி

நாசிக்குள் வழியும் தென்றலை நேசித்து
வாசிக்கும் வழியைப் பிடி

மடியும் மடத்தனம் மாய்க்கும் வாசியோகம்
முடியும் உன்னால் விளங்கு

தென்றல் தீண்டி எழுந்த நாகம்
மன்றில் ஆடும் படம்

விரயமாகும் கவனம் இதெந்த மடத்தனம்
சரயோகம் மேல்வை கவனம்

விழிநாசி செவிமுச் சந்திவீதி வழிவாசி
வழிந்தோட வாய்க்கும் மெய்

நிறுத்துவீண் பேச்சை கவனம் மூச்சில்
இறுத்திவாழ் திறக்குமுன் நெற்றி

எங்கெங்கோ ஓடும் கவனத்தை வாசியில்
தங்கென்றால் கேளாக் குரங்கு

வளிமேல் கவனம் நிறுத்தச் சொன்னால்
சுளிக்கும் முகத்தைக் குரங்கு

ஓடுமனக் குரங்கை வாசியால் கட்டக்
கூடுமுனக் கென்றான் குருபரன்

விளக்கு மாறாய் சுத்தஞ்செய் வாசியால்
விளங்கு வீரே உம்மெய்

தாவிச் செல்நீ மரணம் உந்தன்
ஆவிப் பாகை உண்டு

பாவிச் சடலத்தை மெய்யாய் மாற்றும்
ஆவி அமுதத்தைக் குடி

கூவிச் செல்வேன் வாசியின் பெருமைநான்
தாவிச் செல்வேன் மரணம்

வாசிதானே சிவாவென்னும் அன்பின் ஊற்று
வாசித்தால் வராதென்றுங் கூற்றுஉயிர்ப்பின் உணர்வை உனக்குத் தருகின்ற
உயர்வான வாசியைப் போற்று

வளிமொண் டுண்டால் நெற்றி வெளுக்கும்
ஒளியுண் டாகுமே அறி.

வாசி பற்றி கவனம் நிற்க
ஆசி யாய்விழும் அளி

அன்பே சிவமாம் வாசி யூற்றை
உண்டே உவந்தால் போதி

போதி வெளியின் வாசி நிழலில்
போத ஒளியைக் காண்

அளிதரும் வளியை அள்ளி உண்டு
ஒளிவரும் வழியைக் காண்

காற்றுள்ள போதே தூற்றிக் கொண்டால்
கூற்றுன்னை அண்டா தொழியும்

காலி வெளியுள் நிரம்பிய வளியே
வாலை ஒளிக்கு மூலம்
Quote:

Originally Posted by தென்றல் View Post

வாசி'க்கான விளக்கம்.. இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை
அன்பெனுந்திருத் தென்றலை உள்ளிழுத்து வெளிவிட்டு
அன்புருவாய் நிற்பதே யோகம்

வாசியின் விளக்கம் சிவாவெனும் அன்பேநீ
வாசிக்க வாசிக்க விளங்கும்

இன்னும் இன்னும் உள்ளே ஆழ்ந்திருக்க
அன்பின் வன்மை விளங்கும்

அன்பா இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை
தென்றலின் இன்பமே அது

வாசிநீர் தென்றலாய்த் தீண்டுவீர் என்றுமும
தாசியால் உள்ளவன் நான்

தென்றலேஇரு தயவாய் இவ்வுலகில் என்றும்நீர்
வள்ளலேவரு வாருமைத் தழுவ

வெளிமடம் நாடிப் போகாதீர் உள்மடமாம்
ஒளிக்கடத் துள்ளே பராபரன்

காவி உடுத்து ஆவி வெளுக்காத
பாவி யவரோ சித்தர்

சித்தரே நீவிரென்று உண்மையே உரைத்தாலும்
பித்தனே நானென்பார் மாந்தர்


உத்தமன் ஒருவனை உள்ளே காணத்
தொற்றியே வாசியில் நில்.

காணாக் காற்றே காணும் உடம்பைப்
பேணும் ஊற்றாந் திடம்

வெளிவிடும் உள்வரும் மூச்சில் கவனத்தால்
ஒளிர்ந்திடும் உன்னுடல் மெய்

துளித்துளி யாய்வீழும் அளியமுதை யுண்ண
அளிக்குமே தாய்போன்ற வளி

ஆணவத்தலைப் பாகை கழற்றிவிட்டு வாசியோகங்
காணவுன்தலைப் பாக'ஐ' ஒளிரும்

ஆணவத்தலைப் பாகை கழற்றிவிட்டு வாசியோகங்
காணவுண்ணலாம் உன்தலைப் பாகை

தலைப்பாக 'ஐ'யனைக் காண வாசியில்நில்
அலைபாயும் பேய்மன மடங்கி

தலைப்பாகை எதற்குனக்கு தலைப்பாக 'ஐ'யனேவுன்
தலைப்பாகை கவனிப்பாய் வாசி

உட்குருவாசி உனில்இருக்க வேறெவரோ குருமார்
நல்லருளாசி தருவார்உட் போதகர்

உத்தமன் உன்னுள்ளே வாசியாய் நிற்கபரி
சுத்தமே உன்மெய்யென் றுணர்

குண்டலி எழுப்பும் அமுத வாசியைக்
கண்டுளே இருதய வாய்

கருத்த மனத்தை வெளுக்கும் வாசியைக்
கருத்தில் குருவாய்ப் போற்று

வந்துபோகும் உருக்களோ குருமார் வாசியாய்
வந்துபோகும் அருவமே குருபரன்

உள்ளதிட மூச்சை உள்ளமன மின்றி
உள்ளாரி வரோ மாந்தர்

வெள்ளங்கி ஒளியை உள்ளுள்ளே காணஅருள்
வெள்ளத்திரு வளியை உண்

தம்படிக்கு உதவுமா வளிமேல் கவனமென்பாய்
தம்படிக்கு உதவுமா சவம்

வாசியா திருந்தால் வாசியை உள்ளுலக
வாசியாம் சிவாசிக் கார்

பேசா திருமனமே கவனக் காசை
வீசா திருவீணே நீ

சச்சி தானந்தச் சுடராம் வாசியால்
உச்சித் தாமரை மலரும்

யுத்த வாழ்வு

1


இரவிலும் பட்டப்பகலாய் ஒளிருமொன்று
யாருமற்ற வெறுமையிலும் ஆதரவாய்ப் பேசுமொன்று
இமையாது விழித்திருக்குமொன்று
வாடாது பூத்திருக்குமொன்று
தீராப்பசி தீர்க்குமொன்று
குருவியும் மலையும் உறவாய்ப் பேணுமொன்று
உற்ற நோய் நோன்று உயிர்க்குறுகண் செய்யா மரம் போல் உயர்ந்தவொன்று
சுவர்களை விட்டதால் சேர்ந்த வீடொன்று
பெருவெளியே முற்றமாய் விளையாடும் முதிர்ந்த குழந்தையொன்று
வெந்து கருகாத சிதைந்து சிதறாத உயிர்ப்புள்ள மூலமொன்று
அழியா இன்பத்தின் அமரச் சிரிப்பொன்று
பொய்க்கனவு கலைக்கும் மெய்ச்சுடரொன்று
கல்லறைகளால் மூடமுடியாத நித்திய ஜீவனொன்று
முடைநாற்றப் பிணங்களையும் உயிர்த்தெழுப்பும் சுத்த சமரச சன்மார்க்க சக்தியொன்று
இடிபாடுகளில் இடியாத சிறந்தவொன்று
சிதறல்களில் தெறிக்காத சிவந்தவொன்று
தூக்கத்திலும் விழித்திருக்குமொன்று
துக்கத்திலும் சுகித்திருக்குமொன்று
மூளையின் மறைகள் முழுவதுமாய்க் கழன்று விழ
இருதய குகையில் பெருந்தயவாய் வாழுமொன்று
யுத்த பூமியின் இரணகளத்தில்
சமாதான அணுகுண்டாய் வெடிக்கும்
அன்பெனும் ஆதியொன்றைப் போற்றுவோம்
நவயுக சித்தராய் அவனியில் இன்றே எழுவோம்
சம்மதமா ஆதி!
சம்மதமென்றால்,
"எனக்கு முன்னர் சித்தர் பலர் வந்தாரப்பா!
நானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்!"
என்று அமரகவி பாரதி போல் முழங்க ஏன் தயக்கம்?
"இதை விடப் பெரிய கிரியைகளை என் தந்தையின் கிருபையால்
நீங்களும் செய்வீர்கள்!"
என்ற குருநாதர் இயேசு கிறிஸ்துவின் அருள்வாக்கு நிறைவேறும்
ஞான யுகம் மலர்வதற்கு
"எனக்கு முன்னர் புத்தர் பலர் வந்தாரப்பா!
நானும் வந்தேன் ஒரு புத்தன் இந்த நாட்டில்!"
என்றுமல்லவா முழங்க வேண்டும்!
முழங்குவீரா ஆதி!
யுத்த வாழ்வின் அவலத்தைப் பாடுவதொன்றே போதுமென்று
புத்தி மழுங்கிச் செத்த பிணமாய் நடப்பதொன்றே விதியென்று
மொத்தமாய் உம் ஆன்மாவை மாயைக்கு விற்று விட்டு
மேலான ஒன்றை மறந்து வீழ்வீரோ ஆதி!
காட்டமான கேள்வி தான்
கேட்டதற்காய் மன்னிப்பீர்
சுரணையேற்றவே சுடுகிறேன்
உம்மை மட்டுமல்ல
என்னையுந்தான்
அன்பின் மிகுதியால் செய்த என் வன்செயலைப் பொறுப்பீர்!
சுரணையோடு எழுவீர்
மேலான ஒன்றை இப்போதே நினைவு கூர்வீர்!


2யுத்த வாழ்வின் இரணங்களில்
என் இதயம் இறைச்சித் துண்டுகளாய்ச்
சிதறிக் கிடக்கின்றன.
அவை இருதய ஒருமையில்
ஒன்று சேரும்
உயிர்த்தெழலின் அதிசயம்
மனித மிருகம்
தேவ மனிதமாகும்
பரிணாமப் பாய்ச்சலில் மட்டுமே
நிகழ முடியும்
வள்ளலே!
உலக உயிர்த்திரளின்
நரக வேதனை
என் மெய்யெங்கும் தாங்கி
மரணக் குழியுள்
குற்றுயிரும் குலையுயிருமாய்
நடக்கிறேன்.
உமதருள் வெள்ளம் பாய்ச்சி
சமாதானப் பெருவாழ்வைத்
தாரீரோ!

அன்பு மகனே!
கருத்த மனத்தை
வெளுக்கும் என் வெள்ளங்கி
வேகமாய்
உலகெங்கும் விரிகிறது.
இருதய ஒருமையில்
சமாதானப் பெருவாழ்வின்
அதிசயம் நிகழ்கிறது.
யுத்த பூமியில்
உன் இருதய வாய் திறந்து
இரு தயவாய்
என் மெய் வழி அதுவே!
மரணப் படுகுழியிலும்
ஜீவித்திருக்கும்
என் மெய் வழி அதுவே!
இரு தயவாய்!


தமிழ் மன்றத்தில் ஆதி அவர்களின் 'யுத்த வாழ்வு' கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதைகள்

அன்பின் வழியது உயிர்

பராபர அருளொளி பங்கமின்றிப் பாய
பராபரந் தருவழி உயிர்


பராபரந் தருவழி உயிரைத் திடமாய்த்
தராதலம் நிறுத்தும் மெய்


உள்ளே ஓடும் அன்பில் ஊறிஊறி
மெய்யைக் கரைத்தல் இன்பம்


அன்பில் மெய்யைக் கரைக்க ஆருயிர்த்
தன்மை புக்கும் வெளி


வெளியில் அருளாய் இருக்கும் பேறே
களிக்கும் நித்திய வாழ்வு


தந்திர வெளியில் தயவாய் இருப்பதே
மந்திர எழுத்தின் பயன்

இ(ரு)தயம்

இ(ரு)தயத்தில் கோயில் கொண்ட இறைவனே
இதயத்தின் இரத்தச் சிவப்பு

இ(ரு)தயத்தில் வாழுந் தயாபரக் கடவுளே
இதயத்தின் உயிர்ப்பாந் துடிப்பு

இ(ரு)தயத்தில் ஒளிரும் அருட்ஜோதிப் பிழம்பே
இதயத்துள் ஒளிந்த பழமை

இ(ரு)தயவாய் திறந்து பெருந்தயவு வழிந்தோட
இதயத்துள் இன்பக் களிப்பு

இ(ரு)தயவாய் திறந்தே இருநீ தயவாய்
இதயத்துக் கதுவே உயிர்ப்பு

எளிய பிரார்த்தனை

அருவ இருதயத்தின்
பரிபூரண வெளிப்பாடாய்
உருவான சுத்த இதயம்
நாறுமோர் மாமிசப் பிண்டமாய்த்
திரிந்தது எதனால்!?
அவ்வாறு திரித்த மனத்தால்
அதைத் திருத்த இயலாது
வருந்தி மனந்திரும்பி
இருதயத்தில் மனமடங்க
மாமிசப் பிண்டம்
சுத்த இதயமாய் மாறும்!

மெய்யுடம்பாலயமாம் சுத்த தேகம்
பொய்க்கிடங்காய்த் திரிந்ததேனோ!?
பரமன் தந்த தங்க மெய்யைப்
பாவி மனம் பங்கப் படுத்தித் திரித்ததாலே!
திரித்த மனம் முழுப்பொறுப்பேற்று
வருந்தி மனந்திரும்பிப்
பணிவுடன் மன்னிப்பைக் கோரப்
பரமன் சட்டென வருவான்
திரிந்ததைத் திருத்தி
மெய்யெனும் தங்கமாய் மாற்ற!
ஏனென்றால்
அவன் பெருந்தயாபரன்.
மனிதா
திரிக்க மட்டுமே
உன்னால் முடியும்.
உன்னால் திரிந்ததைச்
சரி செய்யப்
பரமனால் மட்டுமே முடியும்.
திரித்ததற்கான முழுப் பொறுப்பேற்கும்
பணிவும் வீரமும் நேர்மையும்
வருத்தமும் மனத்திருப்பமும்
மன்னிப்பைக் கோரும் அடக்கமும்
உனக்குத் தேவையான
உன் கடமை.
நீ
உன் கடமை செய்யப்
பரமன் கொடுப்பான்
உன் ஜீவ உரிமையாம்
சுத்த தேகத்தை.
ஏனென்றால்
அவன் பேரருளாளன்.

இன்று முதல் எளியனாகி
இந்த எளிய பிரார்த்தனையை
நீ செய்வாய்
"நான் வருந்துகிறேன், மனந்திரும்புகிறேன்.
என்னை மன்னித்தருள்வீர்.
நன்றி ஆண்டவரே!
நான் உம்மை நேசிக்கிறேன்."

திரிந்து தெரியும் தோற்றப் பிழைகள்
திருத்த வருவான் பரமன்.


(பி.கு: மேலே தடித்த எழுத்துக்களில் இருக்கும் எளிய பிரார்த்தனை
"I'm sorry. Please forgive me. Thank you. I love you." என்ற "Ho'opononpono Prayer"ன் தமிழாக்கம். மேலும் அறிய இச்சுட்டியைச் சொடுக்கவும்)

பரமானந்தம்

சஹஸ்ரார முடிவாம் உச்சித்தாமரை திறந்தது
மூலாதார முதலாம் குண்டலிநாகம் எழுந்தது
நிராதார மேனிலை ஆறாதாரம் புகுந்தது
பராபர அருணிலை மெய்வழிப் பாய்ந்தது
ஜெயராம இராஜ்ஜியம் பூமியில் மலர்ந்தது
பாரபட்சம் பாராப் பேரன்பே ஆண்டது

மன்றத்தில் விழித்தது பொன்றாத நெருப்பூ
குன்றின்மேல் வைத்தது போன்றதாம் சுடர்ப்பூ
கண்டத்துள் விழுந்தது தெள்ளமுதக் களிப்பூ
பண்டத்துள் எழுந்தது மெய்யென்னுஞ் சிலிர்ப்பூ
மாயத்திரை கிழிந்தது நெஞ்சின்மேல் ஒளிப்பூ
பேயாட்ட மனமடங்கி இருதயத்தில் இருப்பூ

இருதயவாய் திறந்தது நெஞ்சின்கீழ் கதிர்ப்பூ
திருக்கமலம் மலர்ந்தது நாபிக்குள் பூரிப்பூ
பெருந்தயவாய் விழுந்தது அருட்ஜோதி இறைப்பூ
அருட்கடவுள் எழுந்தது முதுகடியில் உயிர்ப்பூ
அருளாட்சி வென்றது நவயுகத்தின் படைப்பூ
ஒருமைக்குள் வந்தது பல்லுயிர்த்திரட் தொகுப்பூ

விளைவு

வளைந்து சுருண்டு
படுத்துக் கிடந்த
நான்
உம் விளைவு
மகுடிக் கவிதை நாதத்தில்
மயங்கி விழித்து
எழுந்தாடுகிறேன்

என் பாதம் வரை
பரவிய
உம் நாத ஜோதியின்
விளைவாய்
உயிர்ப்புள்ள சிலுவையாய்ப்
படமெடுத்து நிற்கிறேன்

இரு வேறு கோணங்கள் என்னில்

உச்சி முதல் பாதம் வரை நிற்கும்
என் செங்குத்துக் கோணம்
கிறிஸ்துவின் சத்தியம்
என்னில் பரவியதன்
விளைவு

இருதயத்தின்
இரு பக்கங்களிலும்
ஒருங்கே பரவிய
என் நேசக் கரங்களின்
பக்கவாட்டுக் கோணம்
என் வழியே
கிறிஸ்துவின் நித்திய ஜீவன்
உலகில் பரவியதன்
விளைவு

செங்குத்தும் பக்கவாட்டும்
ஒன்றும் என் இருதய வாய்(Thymus-The Mystic or Higher Heart-Secret Place of the Most High God)
முழங்கும் பேருபதேசம்
"இரு தயவாய்"
அம்மையப்பனாம்
பரமபிதா-பரிசுத்த ஆவியின்
நாத-விந்து விளைவு

பூமகளே!
படத்திலும் எழுத்திலும்
வரியிலும் ஒலியிலும்
அடைகளில் மறைந்த குறிப்பிலும்
என் விசுவரூப தரிசனத்தை
விளைவித்த வித்தகியே!
நீர் யாரோ!
சித்தர்கள் சொல்லும்
வாலையெனும் ஞானப் பெண்ணாய்
பூவுலகில் பூத்திருக்கும்
பூமகளோ!

தளைகளில் கட்டுண்டு விழுந்த மனிதம்
தளைகளைத் தகர்த்து எழுந்து
வானம் வசப்படும்
சுக வாழ்வு காணும்
இயேசு பிரான் போதித்த
மனந்திரும்புதலை
விளைவெனும்
உம் அருங்கவியில்
வளைத்துப் பிடித்த
உம் நேர்த்திக்குத்
தலை வணங்குகிறேன்,
வாழ்க நீவிர்!
உம் ஞான போதியின் நிழலில்
எம்மை வளர்ப்பீர் நீவிர்!


தமிழ் மன்றத்தில் பூமகளின் "விளைவு" கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை


விளக்கம்


உனக்கு இரண்டு கோணங்கள் உண்டு
அதாவது இரண்டு முக்கிய பரிமாணங்கள்(Two Main Dimensions)
முதலாவது தெய்வீகம்
அதுவே உன் முதல் ஆவது
அடுத்தாவது மனிதம்
அதுவே முதலை அடுத்து ஆவது
தெய்வீகம் மேலிருந்து வாங்குவது
எதை?
சிவமாம் அன்பை(சிலுவையின் செங்குத்துப் பாகம்-Vertical Axis)
மனிதம் மேலிருந்து வாங்கியதைக்(சிவமாம் அன்பை)
கீழிருந்து கொண்டே(அதாவது புனித மண்ணாம் அன்னை பூமியில் இருந்து கொண்டே)
பாரபட்சமின்றி அனைவர்க்கும்(உலக உயிர்த்திரள் அனைத்துக்கும்) பகிர்வது(சிலுவையின் பக்கவாட்டுப் பாகம்-Horizontal Axis)
உன் படத்தில் பகிரங்கமாய்த் தெரியும் உண்மையின் விளைவே இந்த விளக்கம்
இதுவே
"1. கடவுளை நேசி
2. உன் அண்டை வீட்டானையும் உன்னைப் போல் நேசி" (அவன் எதிரியாகவே உன் மயங்கிய மனத்துக்குத் தெரிந்தாலும்)
என்ற இயேசு நாதரின் உபதேச சாரம்
1. தெய்வீகம்
2. மனிதம்
(இந்த இரண்டுமில்லை என்றால் நீ யார்?
நடமாடும் பிணமே-கசப்பான நிசம்)
உன்னைப் பற்றிய இனிய உண்மை
நீ குறிப்பில் குறித்த இரு வேறு கோணங்களில்(மேற்சொன்ன 1,2)
மறை பொருளாய் மறைந்திருக்கிறது
நான் செய்தது மறை கழற்றிய பாட்டாளியின் வேலையே!
புட்டுப் புட்டு வைத்தாயிற்று
புட்டைப் புசிப்பது உன் கையில் தான் இருக்கிறது.
புட்டைப் பரிமாறவே என்னால் முடியும்
நான் புசிக்கும் புட்டைப்
பாரபட்சமின்றி உனக்கும் எவர்க்கும்
அவ்வளவே
உன்னைப் பற்றிய
என்னைப் பற்றிய
எவரையும் பற்றிய
இனிக்கும் உண்மை
கசப்பான நிசம் விட்டு
மனந்திரும்பி
இனிக்கும் உண்மையைச்
சுவைப்பதற்கு
இன்னுமா தயக்கம்

இன்னாதம்ம இவ்வுலகம்!(கசப்பான நிசம்)
இனிய காண்க இயல்புணர்ந்தோரே!(இனிக்கும் உண்மை)
என்ற நம் பாட்டன் பக்குடுக்கை நன்கணியாரின்
புறநானூற்றுப் பாடல் சொல்லி
அமைகிறேன்இரவு விழித்திருக்கிறது
கனத்த இமைகளைத்
திறந்து எழுகிறேன்.
கவிதை இரவாய்க்
கணினிக் காகிதப் பகலில்
விழுந்து விடிகிறேன்.
பூமகளின் "விளைவு"
விளங்க
இது ஒரு புது வித
படக் கவிதை.
நள்ளிரவில் விளையும்
நல்ல நாகத்தின் படம்.

விரல்

ஐம்புலன்களின்
கையடக்கப் பதிப்பு

பகுத்தறிவின் கையில்
இது ஒரு தீப்பந்தம்

இந்த வாமனன் தான்
"மெய்" என்ற
விசுவரூபமெடுத்து
விண்ணையும்
மண்ணையும்
அளக்கிறான்

ஞானம் என்ற
ஆலமரத்தின்
ஆணி வேர்

தொடுவதில் தொடங்கிய
இதன் சின்ன தேடல்
சந்திரனின் புழுதியைச்
சந்தனமாகப் பூசிக் கொண்டு
ஆன்மாவின் அடிமுடி தேடி
இன்னும் தொடர்கிறது

எந்த ஒரு கருத்தையும்
அது
எங்கிருந்து பிறந்தது என்று
ஆய்வு நடத்தி
அதன் ஆணி வேர் வரை
சென்றால்
அங்கு
விரல் தான் கிட்டும்

அடிப்படை உணர்ச்சிக் கூறுகளிலிருந்து
பூரண மெய்ஞ்ஞானம் வரை
கல்லிலிருந்து
கடவுள் வரை
மரத்திலிருந்து
மனிதன் வரை
பரிணாமம் என்பதே
விரலின் வெவ்வேறு
பரிமாணந் தான்

விரல் தான்
விரல் தான்
எல்லாமே விரல் தான்
அது
இல்லாமல் போனால்
விழல் தான்
விழல் தான்
எல்லாமே விழல் தான்

விழியும் விரல் தான்
பார்வை அதன் தொடல் தான்

செவியும் விரல் தான்
கேள்வி அதன் தொடல் தான்

நாசியும் விரல் தான்
மணமும் மூச்சும் அதன் தொடல் தான்

நாவும் விரல் தான்
சுவையும் பேச்சும் அதன் தொடல் தான்

மனமும் விரல் தான்
எண்ணமும் அறிவும் அதன் தொடல் தான்

இருதயமும் விரல் தான்
உணர்வும் அன்பும் அதன் தொடல் தான்

மெய்யும் விரல் தான்
உயிர் அதன் தொடல் தான்

தொடல் தான் தொடல் தான்
எல்லாமதன் தொடல் தான்
விரல்
இல்லாமல் போனால்
கெடல் தான் கெடல் தான்
உணர்வின்றிக் கெடல் தான்

இயல்பு

காலியான கோப்பையுள்
நிரம்பி வழிகிறது
அமுதக் காற்று

அமுதக் காற்றில்
இழைந்தாடுகிறது
ஈரமான நெருப்பு

ஈரமான நெருப்புள்
இணைந்தோடுகிறது
கதகதப்பான நீர்

கதகதப்பான நீரில்
களிப்பில் மிதக்கிறது
திடமான மெய்

திடமான மெய்யுள்
கனத்திருக்கிறது
உயிரெனும் வழி

உயிரெனும் வழியேந்திச்
சும்மா இருக்கிறது
காலியான கோப்பை

Thursday, June 26, 2008

இருதயங் கனிந்தால்...

இருதயங் கனிந்தால்
இதயம் மெய்க்குள்
கற்கண்டாய் இனிக்கும்
மூளையின் மடல்களில்
ஊறும் அமுதால்
வரண்ட நா
தித்திப்பால் நனையும்
சத்திப் பால்
தொண்டைக்குள் இறங்க
தாகமெல்லாந் தணியும்
உடற்றும்
வயிற்றுப் பசி தீரும்
கொடுங்காமக் கனல் உருக
ஆருயிர்
அருங்காதல் வழிப்படும்
அருட்கனலின் கதகதப்பில்
மெய்யெலாங் குளிரும்
பொய்ச் சாக்காடு தொலைந்து
மெய் மெய்யாய்த் துலங்கும்

இருதயங் கனியுமா?
வள்ளலே!
நீரே கதியென்று
உம்மைச் சரண் புகுந்தேன்
பெருந்தயவாய் இருக்கும்
அருட்செம்மல் நீர்
என் இருதயங் கனிய வைக்குந்
தந்திரஞ் செய்ய அறியீரோ!
வெள்ளை மன வள்ளல் நீர்
கள்ள மனக் குள்ளன் எனைக்
கடைத்தேற்ற அறியீரோ!
"இரு தயவாய்!"
என்று
என் இருதய வாய் திறக்கும்
திருமந்திரஞ் சொன்னீர்!
வள்ளலே!
அன்பின் விதை தூவி
வன்பின் பாலையாம் என்னை
அருட்சோலையாக்கும்
உம் திருச்சித்தம்
சிரமேற்கொண்டு
காத்திருக்கிறேன்

இருதயங் கனியுங் கணம்
வாய்க்காமலா போகும்!
பெருந்தயவாய் இருக்கும்
அருட்செம்மல்
உம் திருச்சித்தம்
நிறைவேறாமலா போகும்!
சவமாய்க் குழிக்குள் வீழுமுன்
என் அவமெலாம் நீக்கி
நற்றவ நெறியில்
என்னை நிறுத்தி
என் இருதயங் கனிய வைக்க
வள்ளல் உம் ஒருவரால் தான் முடியும்!
எனவே
நீரே கதியென்று
உம்மையே சரண் புகுந்தேன்
உம் வெள்ளங்கியுள்
என் கள்ள மனம் அடங்கக்
காத்திருக்கிறேன்
ஐயனே!
என்னை ஆட்கொண்டருள்வீர்
இக்கணமே!
சவக்குழி என்னை விழுங்கு முன்னே
அருட்கனலாம் நீர்
என்னை விழுங்குவிரே!
என் இருதயங் கனிய வைப்பீரே!