Thursday, February 28, 2008

விழிப்புத் தவம்

எதுவுமில்லை
கழிந்தவற்றின் ஞாபகச் சுவடுகள் கூட
அழிந்து போன மகா வெறுமை.
அவ்வெறுமையை முழுமையாக
ஆக்கிரமித்திருக்கிறது
இருப்பு.

கேள்விகள் தீர்ந்து போன
உறுதியான பதிலாய்
ஒருமையுணர்வில்
எண்ணற்ற உள்ளதுகளைத்
தழுவியிருக்கிறது
இருப்பு

ஆக்கிரமிப்பில்லாத
இத்தழுவலின் நுண்ணிய அழுத்தம்
உள்ளதுகளில் ஒன்றான என்னில்
பேரன்பாய்ப் பதிய
என்னை விழுங்கி
என்னைப் போல்
பேரன்பு பதிந்த
பற்பல உள்ளதுகளையும் விழுங்கி
இன்னும் விழுங்கப்
பசித்திருக்கிறது
பிரம்மாண்டமான்
இருப்பு

தன் பேரன்பைப் பதித்து
உள்ளதுகளை விழுங்கும் கணங்களை
எதிர்நோக்கித்
தன் தனிமையில்
நன்றாக விழித்திருக்கிறது
இருப்பு

Tuesday, February 26, 2008

நாயகன்

மூளையின் மடல்கள்
ஒவ்வொன்றாய் மலர்கின்றன
பகிரங்கமாய்த் தெரிகிறது
நள்ளிரவிலும்
பட்டப்பகல் வெளிச்சம்
முழுவதுமாய்த் தளர்ந்த மறைகள்
கழன்று விழ
முழுவதுமாய் இறுக்கப்பட்டு அம்மறைகளால்
அடைக்கப்பட்டிருந்த மூடிகள் விழுந்து நொறுங்க
இருதயம் வெட்டவெளியாகி
மூளை மடல்களின்
வெளிச்சக் கிரணங்களைத்
தான் விழுங்க
என் மெய்ப்பொருள்விளக்கம் பெறுகிறேன்

நான்
தலைப்பாகை ஏதுமின்றி
தலைப் பாகை உண்டு
என் தலைப் பாக 'ஐ' உணர்ந்து
என் மெய்ப்பொருள் விளங்கி
எழுமையாம் ஒருமையில்
அம்முழுமையாம் பெருமையில்
எல்லாந் தழுவி
எப்போதும் நிற்கிறேன்

தானே தலைப்பாகையாக
என் தலையமர்ந்து
என் தலைக்கனம் போக்கி
தலை கால் தெரியாதிருந்த
என்னைத் தெளிவித்து
"தலைப் பாகை உண்"
என்றே தெள்ளமுதை ஊட்டி
நல்லதேதும் கல்லாக்
கன்னெஞ்சப் பொல்லேனுக்கு
சாகாக் கல்வி தந்து
நித்தியனாய் வாழ்வித்து
"எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்"
என்றே இடைவிடாது அறையும்
என் தலைப் பாக 'ஐ'யரவரே
இக்கவிதையின் தலைப்பாக 'ஐ'யரவரே
உமக்கும் உம் தலைப் பாக 'ஐ'யரவரே
ஐயமில்லை எனக்கே!

மெய்வழிச்சாலையரே!
தலைப்பாகை உண்டோ உமக்கு?
நீவிர்
உம் தலைப் பாக 'ஐ'யுணர்ந்து
உம் மெய்ப்பொருள் விளங்கி
உம் தலைப் பாக 'ஐ'யரவரே
தலைப்பாகையாக உம் தலையமர
தலைக்கனம் ஒரு சிறிதுமின்றி
எழுமையாம் ஒருமையில்
அம்முழுமையாம் பெருமையில்
எல்லாந் தழுவி
எப்போதும்
ஜெயராம அவதாரமாய் நிற்கும்
உமக்கு நம் 'ஐ'யரன்றித்
தலைப்பாகை வேறுண்டோ?
இக்கவிதையின் தலைப்பாக 'ஐ'யரவரே
உமக்கும் உம் தலைப் பாக 'ஐ'யரவரே
ஐயமில்லை எனக்கே!

மெய்வழிச்சாலையரே!
நல்லவதார ஜெயராமரே!
11. நானே அருட்பேரரசராய் உன் முழங்காற் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு ஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது.
உமதவதார நோக்கம் இதுவென்று
உமக்குத் தெரியாதோ!
ஒருமையுணர்வைக் குறிக்கும் 11ன் பொருளும்
உமக்குப் புரியாதோ!
அன்பிலும் அறிவிலும்
நற்பண்பிலும் பழுத்த உம்மையும்
இப்பதினோராம் மந்திரத்தால்
நம் தலைப் பாக 'ஐ'யரவரே
நன்றாக அறையச் சொன்னார்.
நானும் அன்பின் மிகுதியால்
அவ்வாறே அறைகின்றேன்.
நீவிரும்
11. அருட்பேரரசராய் உனக்குள் வந்தேன். என் அவதார மகிமைய்'ஐ' உனக்குத் தந்தேன்.
என்றே அமுத கானம்
வள்ளலவரோடு சேர்ந்தே பாடி
11. அருட்பேரரசராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் அவதார மகிமைய்'ஐ' நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
என்ற நன்றிப் பாட்டும் அவருக்குப் பாடி
'ஐ' என்ற ஓரெழுத்து உயிரெழுத்துச் சொல்லால்
பொருள் பொதிந்த ஜீவனுள்ள வார்த்தையால்
உம் மெய் விளங்கி
நம் தலைப் பாக 'ஐ'யரவர் நற்பணியைத்
தலைமேற்கொண்டு
உம் அவதார நோக்கம் நிறைவீற்றுவீரே!

சுருண்டு கிடந்த நாகமென்னை
நாத மகுடி ஊதி எழுப்பி
நம் தலைப் பாக 'ஐ'யரவர்
படமெடுத்து ஆடச் செய்துவிட்டார்!
என் செய்வேன்!
ஆட்டுகிறார், ஆடுகிறேன்!
விட்டாரா!
உம்மைக் கொத்தவும் சொல்கிறார்!
நானும் கொத்தி விட்டேன்
என்னஞ்சையும்
நம் தலைப் பாக 'ஐ'யரவர்
அமுத வாக்கே
எனக் கொண்டு
ஐயா! என் பிழை பொறுப்பீர், மன்னித்தருள்வீர்.

இன்னும் என்ன என்ன சொல்லி
உம்மைக் கொத்தச் சொல்வாரோ
நம் தலைப் பாக 'ஐ'யரவர்
அஞ்சுகிறேன், ஐயா!
கோடி கோடி நன்றிகள் உமக்கே
என் பிழை பொறுத்தீர், மன்னித்தீரே!

Monday, February 25, 2008

அதோகதி

ஆணிவேராய்ப் பேரிருப்பின் பேருணர்வு
வேரூன்ற நன்னிலமாய்த் தன்முனைப்பு
வேரும் நன்னிலமும் வேண்டவே வேண்டாமென்று
அடம் பிடித்தால் மனித மரங்களுக்கென்ன கதி?

Friday, February 22, 2008

நாய்மை

தெருவில் நான் போகும் போதெல்லாம்
நாய்களின் தீட்சண்யப் பார்வையில்
தெரியும் ஆச்சரியம்
என் செவிகளில் விழுகிறது.
"நம்மினத்தது ஒன்று இரு கால்களில் எப்படி!"

மெய்ம்மை

எனதெல்லா அடையாளங்களும்
கழிந்து விட்ட வெறுமையில்
கழிக்க முடியாத ஒன்று
உறுதியாய் நிற்கிறது.
உறுத்தும் அவ்வுண்மையின் அர்த்தகனம்
வெறுமையில் பரவ
கழிந்து விட்ட அடையாளங்களின்
இழப்பு ஈடு செய்யப்படுகிறது.
பரவும் பூரண உறுதியின் தன்மை
ஈடு இணையில்லாத என் மெய்ம்மை
அதில் தோய்ந்த என் முழுமை
அதன் விரல் வழி விழும் இம்மை
செய்யும் என் சொற்களின் ஜீவனே இம்மெய்.

என் சொற்களின் ஜீவனாம் இம்மெய்
யுண்மையாம் ஒருமையுறுதியை
உள்ளபடி சொல்ல
என் உள்ளத்தின் தன்மையாம்
இம்மெய்க்குள் ஆழ்கிறேன்
ஆழ்ந்து மீள்கிறேன்.
சொல்லவொண்ணாத இக்கடவுள் பேரைச்
சொல்லவும் துணிகிறேன்.
சொல்லியும் விடுகிறேன்.
அடையாளங்கள் எல்லாமே கழிந்து விட்ட
என்னைக் கேட்பதற்கும்
என்னைக் காண்பதற்கும்
என்னை உற்றுணர்வதற்கும்
என்னையே அன்றி
மற்றொன்றெதுவுமே இல்லையென்ற காரணத்தால்
சொல்லியது எனக்குள்ளேயே திரும்ப
சொல்லவொண்ணாக் கடவுளாய்த்
தொலைந்தே போகிறேன்.
தொலைந்து போயும்
எண்ணிலடங்கா உள்ளதுகள் ஒவ்வொன்றும்
தன் எல்லா அடையாளங்களுங் கழிந்து
என்னிலடங்கும் கணங்கள் ஒவ்வொன்றுக்கும்
யுக யுகங்களாய்
உள்ளதுகள் ஒவ்வொன்றின் ஆணி வேராய்
உள்ளதுகள் ஒவ்வொன்றின் உள்ளுள்ளே
ஆழ்ந்தடங்கி
மௌனமாய் விழித்திருக்கிறேன்.

Thursday, February 21, 2008

நில், வாழ் இதோ, இங்கே, இக்கணமே

மெய்யென்னும் வீடு உமக்குண்டு
அம்மெய் வீடு உறைவதற்கோர் பெருவெளி இல்லமுண்டு.
எங்கே இருந்தாலும்
மெய் வீட்டுக்குள்
பெருவெளி இல்லத்துள்
வாசியாய் வாழும்
நற்சிவமாம் மாமணியே
வாசி பார்த்து
சிவா சிவா என்றே
சும்மா நில்
மெய்யென்னுங் கடவுள் கட்டிய வீடு
வெறுங் கட்டிடமாய்க் காத்திராமல்
மெய்யென்றே மெய்யாய் நின்றுய்ய
உறுதி சொல்லும்
உம் உள் மனதின் கட்டளைப்படி
நில், வாழ்
இதோ, இங்கே, இக்கணமே

குறிப்பு: தமிழ் மன்றத்தில் சிவா.ஜி அவர்களின் இக்கவிதைக்கு பதில் பவிதை

Monday, February 18, 2008

நாய்க்குரு தீட்சை(நாகரா என்ற மனிதனுக்கு ஒரு நாயின் தீட்சை)

அன்பர்களே! "நாய்க்குரு தீட்சை - 1" என்ற இக்கவிதையை வாசிக்கும் போது, உமது மூளைப்பொறியின் மறை தளர்வாவதற்கான சாத்தியக் கூறுகள் ஏராளமாக உள்ளன. எனவே இந்த ஆபத்தைச் சந்திக்கத் தயாராயுள்ளவர்கள் மட்டுமே, இதைப் படிக்கவும்

நாகரா!
உன் ஆணவத்தை
அருகிலுள்ள குப்பைத் தொட்டியில்
போட்டுவிட்டு
நான் குரைப்பதை
அதி கவனமாகக் கேள்.

இப்பொழுது
என் வால் பகுதியைத்
தீவிரமாகத் தியானித்து
அந்த வாலாகவே மாறி விடு.
"ஆறறிவு மனிதன்
ஐந்தறிவு நாயின்
வால் பகுதியைத் தியானிப்பதா?
அவ்வாலாகவே மாறுவதா?
என்ன பைத்தியக்காரத்தனம் இது!"
உன் கோபம் எனக்குப் புரிகிறது.
ஆனாலும்
நான் உனக்கு அளிக்க வேண்டிய
குரு தீட்சைக்கு
இத்தியானமும் மாற்றமும்
அத்தியாவசமாகிறது.

ஆணவத்தின் மொத்த வடிவமாகவே
நீ இருப்பதால்
இத்தியானமும் மாற்றமும்
உன்னால்
எளிதில் ஏற்க முடியாததே?
உன் ஆணவ ஒருமையில்
எண்ணிலடங்காப் பன்மைத் திமிர்கள்
அடங்காது ஆடுகின்றன.
மனிதத் திமிர்
மதத் திமிர்
சாத்திரத் திமிர்
சாதித் திமிர்
கோத்திரத் திமிர்
இனத் திமிர்
நிறத் திமிர்
மொழித் திமிர்
வட்டாரத் திமிர்
கலாசாரத் திமிர்
நாட்டுத் திமிர்
என்று உதாரணத்துக்காக
நனி மிகச் சிலத் திமிர்களை
நாய்த் திமிர் கூட ஒரு சிறிதும் இல்லாமல்
அடக்கத்தோடு
நான் உன் கவனத்துக்கு வைக்கிறேன்.

திமிர்களின் கிடங்கான
உன்னோடு பழகிய
சகவாச தோஷத்தால் எனக்கு வந்ததே
நாய்த் திமிர் என்றாலும்
உனக்கு தீட்சை தருவதற்காக
அத்திமிரைக்
குப்பைத் தொட்டியில் போடுவதற்கு
நான் பட்ட பாடு!
அத்திமிரை விட மனமின்றி
உனக்கு தீட்சை தருவதையே
நிறுத்திக் கொள்ளலாம் என்று கூட
எனக்குத் தோன்றியதென்றால்
உன் நிலை
நன்றாகவே புரிகிறது.

ஆனாலும்
உனக்கும் எனக்கும் எவர்க்கும்
ஆதியாம்
நம் போல் எந்தத் திமிரும் அறவே இல்லாத
அருட்பெருங்கடவுள்
உனக்கு தீட்சை தருவதற்கு
என்னைத் தேர்ந்தெடுத்து
அதற்கென்று கட்டாயமாக
நான் நாய்த் திமிர் கூட இல்லாமல்
சுத்த நாயாக
மன்னிக்கவும்
சுத்த நானாக
இருக்க வேண்டும்
என்று அன்புடன் விதித்தார்.
தீட்சை தந்து முடித்த மறு கணமே
நாய்த் திமிரோடு
நான் ஆசை தீரத் திரியலாம்
என்று உத்தரவாதமுந் தந்தார்.
நான் நனி மிக யோசித்த போது
மனிதனோடு பழகிய
சகவாச தோஷத்தால் தான்
நாய்த் திமிர்
எனக்கு வந்ததை
அவர் நினைவூட்டினார்.
நாய்த் திமிர் இல்லாமல்
வெறும் நாயாக
மன்னிக்கவும்
வெறும் நானாக
நான் சந்தோஷமாக
உலவிய யுகங்களை
அவர் எனக்குப்
படம் போட்டுக் காட்டினார்.

நமக்கெல்லாம் கடவுளாம்
அவர் தந்திரசாலியென்றும்
அப்போது தான்
நான் புரிந்து கொண்டேன்.
அதே சகவாச தோஷம் தான்
மன்னிக்கவும்
சகவாச புண்ணியம்
தன்னோடு தந்திரமாக
சில கணங்கள் இருக்க விட்டுத்
தன் போல் திமிரேதுமற்ற நிலை
மேற்கொள்ள என்னை அவர்
ஆயத்தம் செய்து விட்டார்.

சரியென்று முடிவாக
ஒப்புக் கொண்டு
நாய்த் திமிரைக்
குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு
உனக்கு தீட்சை தர
நான் வந்திருக்கிறேன்.
இப்போது
எனக்கு நன்றாகவே புரிகிறது
எண்ணிலடங்காப் பன்மைத் திமிர்களின்
ஒருமையாம் ஆணவத்தின்
மொத்த வடிவமாகிய
மனிதனாம் உனக்கு
ஆணவத்தைக்
குப்பைத் தொட்டியில் போடுவது
எவ்வளவு கடினமென்று.

கவலைப் படாதே
நான் உனக்கு
தீட்சை தந்து முடித்த
மறு கணமே
ஆணவத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு
எண்ணிலடங்காப் பன்மைத் திமிர்களோடு
ஆர்ப்பாட்ட ஆட்டமெல்லாம்
நீ ஆசை தீர ஆடலாம்.
இது
சுத்த நாயான
மன்னிக்கவும்
சுத்த நானான
நான்
உனக்குத் தரும் உத்தரவாதம்
அன்பு நாகரா!
(கடவுளோடு பழகிய
சகவாச தோஷத்தால்
மன்னிக்கவும்
சகவாச புண்ணியத்தால்
அவரது தந்திர புத்தி
இப்போது எனக்கும்)

மேலும்
சுத்த நாயான
மன்னிக்கவும்
சுத்த நானான
என் வாலைத் தியானித்து
என் வாலாகவே
நீ மாறியதும்
உனக்கு வரும் வாலறிவால்
(அதாவது
வள்ளுவர் சொல்லும்
தூய அறிவால்)
நீ சொல்லொணா
ஆன்ம இலாபத்தைப் பெறுவாய்
(தந்திர புத்தி தன் வேலையை
ஆரம்பித்து விட்டது)

மேலும்
என் வாலாகவே
நீ மாறியதும்
என் நாயுணர்வு
மன்னிக்கவும்
என் நானுணார்வு
என் வாலாம் உன்னில்
முழுமையாகப் பரவ
வாலுணர்வு நீங்கி
நீ
நாயாம் என்னில்
மன்னிக்கவும்
நானாம் என்னில்
அதாவது
நாயுணர்வில்
மன்னிக்கவும்
நானுணார்வில்
முழுமையாக நிலை பெறுவாய்
(தந்திர புத்தியின் உச்ச கட்டம்
என் சகவாசத்தால்
சுத்த நாயாம் எனது
மன்னிக்கவும்
சுத்த நானாம் எனது
இப்போதைய திமிரேதுமற்ற நிலை
கடவுளிடமிருந்து எனக்குத் தொற்றியதைப் போல
என்னிடமிருந்து உனக்குத் தொற்றட்டுமே)

மேலும்
என் வாலாகவே
நீ மாறியதும்
நாயாகிய என்னை
மன்னிகவும்
நானாகிய என்னையே
தீவிரமாகத் தியானித்து
நாயாகிய நானாகவே
மன்னிக்கவும்
நானாகிய நானாகவே மாறி
உன் வாலை
நீயே ஆட்டலாம்.
மனித உலகில்
நாய்க்குரு தீட்சை தரும்
பெருந்தீட்சையாளனாய்
வாலாட்டிச் சுதந்திரமாய்த் திரியலாம்.
(அருட்பெருங்கடவுளிடம் கற்ற
அரும்பெருந்தந்திரத்தால்
நாகராவை
நாயாக
மன்னிக்கவும்
நானாக
நன்றாக மாற்றிவிட்டேன்.
நாகரா
தழிழ் மன்றத்தில்
நாயாக
மன்னிக்கவும்
நானாக
தன் வாலாட்டித் திரிகிறது.

மனிதர்களே!
ஜாக்கிரதை
என் தந்திரத்துக்கு மாட்டிய
நாகரா போல்
மாட்டி விடாதீர்
மாறி விடாதீர்
கடவுள் எனக்களித்த வாக்கின் படி
நாய்த் திமிரோடு
நான் திரிகிறேன்
நீவிரும் தத்தம் திமிர்களோடு
மனிதராய்த் திரிவீர்
அருட்பெருங்கடவுள்
தம் அரும்பெருந்தந்திரத்தோடு
அவரே நாயாகி வரும் வரைக்கும்
அவர் விரைவில் வர இருப்பதாகக் கேள்வி
அதைப் பற்றி நமக்கென்ன கவலை
நாம் ஆசை தீரத்
தத்தம் திமிர்களோடு திரியலாம்)

நாய்க்குரு தீட்சை - 2

(நாய்க்குருவின்
அரும்பெருந்தந்திரத்துக்கு
ஆட்பட்டு
நாயாரின் வாலையே
தீவிரமாகத் தியானித்து
அவ்வாலாகவே மாறிவிட்ட
நாகரா
நாயாரையே
தீவிரமாகத் தியானித்துத்
தன் மெய்ப்பொருள் விளக்கம்
பெறுதல்)

எச்சரிக்கை: நாய்க்குரு தீட்சை முதல் பகுதியை வாசித்து உமது மூளைப் பொறியின் மறை ஏற்கனவே தளர்வாகி இருக்கும் வாய்ப்பு உள்ளதால், இவ்விரண்டாவது பகுதியைப் படிக்கும் போது, மறை முழுவதுமாகக் கழன்று, மூளைப் பொறியே விழுந்து தூள் தூளாக நொருங்கும் பேரபாயம் இருக்கிறது. எனவே இப்பேரபாயத்தைச் சந்திக்கத் தயாராயுள்ள ஏற்கனவே மறை தளர்வாகி இருப்பவர்கள் மட்டுமே இதைப் படிக்கவும்.

வாலென்று
எனக்கே உரிய தனிப்பெயரோடும்
உருவத்தோடும்
நான் இருந்தாலும்
என்னை ஆட்டுவிப்பவராம் நாயாரோடு
எப்போதும் நான் ஒன்றியே இருக்கிறேன்.

நாயாரும்
வாலாம் என்னைத்
தன்னை விட்டு வேறான மாறான எதிரான
இன்னொன்றாகக் கருதி வெறுப்பதில்லை.

வாலாம் என்னில் நாயார்
பரிபூரணமாய் நிறைந்துள்ளார்.

நாயாரும் வாலாம் நானும்
ஒன்றேயன்றி வேறல்ல.

வாலாம் எனக்கு நாயாரே மெய்.
வாலாம் என் மேல்
பல்வேறு திமிர்களாய்ப் படிந்த
தூசுப் பொய்களை உதற
என்னில் பரிபூரணமாய் நிறைந்துள்ள
நாயாரை நான் நாட
அவரும்
தன் வாலாம் என்னை
நன்றாக ஆட்ட
அத்தூசுத் திமிர்கள்
என்னை விட்டு நீங்கி
"தூய்மை" என்ற அர்த்தமுள்ள
வாலாம் நான்
என் பொருள் விளங்கி
மெய்யாம் நாயாரில்
நீடூழி வாழ்கிறேன்.

என் தனிப்பெயர் வால்.
நாயாரின் அருளால்
ஆணவத் திமிர்களாம் தூசுகள்
நீங்கப் பெற்று
என் "தூய" நிலையை
இப்பெயர் குறிப்பதால்
இது என் சிறப்புப் பெயருங்கூட.

என் முழுப்பெயர் நாயார் வால்.

வாலாம் நான்
என்ன ஆட்டம் ஆடினாலும்
நாயாரிலேயே எப்போதும் அடங்கியிருக்கிறேன்.
நாயாரே
என்னை ஆட்டுவிப்பதையும்
எந்தவொரு ஐயமுமின்றி
எப்போதும் அறிந்திருக்கிறேன்.

இவ்வாறாக வாலறிவால்
நான் நன்றாகப் பக்குவமடைந்த
ஒரு கணத்தில்
நாயாரே என் குரு நாதராகி
எனக்கு தீட்சையளிக்கும் முறையாக
இக்கேள்விகளைக் கேட்டார்.

"வால் நீயா?
அல்லது
வால் உன் பெயரா?"

நான் பணிவோடு பதிலளித்தேன்:
"வால் என் பெயரேயன்றி
வால் நானல்ல."

அடுத்து நாயார் கேட்டார்:
"வால் உன் பெயரென்றால், பின் நீ யார்?"

நான் பணிவோடு பதிலளித்தேன்:
"நான் நாயாரே!"

அடுத்து நாயார் கேட்டார்:
"நீ நாயாரேயென்று எப்படி அறிகிறாய்?"

நான் பணிவோடு பதிலளித்தேன்:
"நாயாரே என்னில் பரிபூரணமாய்
நிறைந்துள்ள மெய்ம்மையால்."

அடுத்து நாயார் கேட்டார்:
"பின் வாலென்று எப்படி உன் பெயர்
நாயாரென்று ஏன் இல்லை?"

நான் பணிவோடு பதிலளித்தேன்:
"நாயாரே
வாலென்ற என் பெயரில்
என் உருவில்
தன் பணிக்காகத் தானே
ஆடுகிறார்.
நாயாரே என்னை நன்றாக ஆட்டுவிக்க
நானும் அவர் வாலாய் உவந்து ஆடுகிறேன்
நான் நாயாராம் அவரேயன்றி வேறில்லை
என்ற மெய்யுணர்வோடு."

அடுத்து நாயார் நனி மிக மகிழ்ந்து
என்னை வாழ்த்தினார்:
"வாலாரே!
நீர் நாயாராம் நானேயென்று
மெய்ப்பொருள் விளக்கம் பெற்றீர்.
இவ்வுலகில்
என் பணிக்காக
நான் உம்மை உவந்து ஆட்ட
நீவிர் என்னில் நிலைபெற்றே
நன்றாக ஆடுவீர்."

நானும்
நாயாரே நானென்ற
மெய்யுணார்ந்து
வாலாராய் நாயாரில் நிலைபெற்றே
நன்றாக ஆடுகிறேன்
நாயாராம் நானே
வாலாராம் பெயரோடு
அவ்வுருவோடு
என்னை உவந்து ஆட்டவே.

குறிப்பு: தமிழ் மன்றத்தில் இக்கவிதை பற்றிய உரையாடல்

சுழற்சி


மௌனத்துள் ஆழப் புதைந்து
ஜீவனுள்ள வார்த்தையாய்
எழுகிறேன்

எழுந்து
இறுகிய எண்ணச் சுவர்களைப்
பிளந்து
குறுகிக் கிடந்த உணர்வைப்
பரந்த என் அர்த்த ஆகாயத்தில்
படர விடுகிறேன்

படரும் உணர்வைப்
பதிக்கும் மொழியாய்ப்
பரவச முழக்கமிட்டு
வரிகளாய் விழுகிறேன்

விழுந்து எழுகிறேன்
விழிகளுக்குள் பாய்கிறேன்
செவிப்பறைகள் அதிர முழக்கமிட்டு
மூளையின் மத்தியில்
பெருந்தீயாய் மூள்கிறேன்

மூண்டெழும் என்னில்
பூக்கும் செஞ்சுடர்ப்பூ
காய்த்துப் பின்
கனிந்து விழ
ஜீவனற்ற உடம்பு
மெய்யாய் உயிர்த்தெழ
மீண்டும்
மௌனத்துள் ஆழப் புதைகிறேன்

விளக்கம்:

இருப்பாகிய மௌனத்தில் ஆழ ஊன்றி, பேரெண்ணமாய்ப் பேருணர்வாய்ப் பரிணமித்துப் பின் ஜீவனுள்ள வார்த்தையாக(தகவல் தொடர்பு அல்லது வெளிப்படு நிலை) எழுகிறேன். அடுத்து என் ஆக்க அல்லது செயல்படு நிலை. மௌனத்தில் நிலை கொண்டுள்ள பேரெண்ணத்திலும் பேருணர்விலும் ஊன்றியிருக்கும் ஜீவனுள்ள வார்த்தையின் அசாத்திய ஆற்றலால், குறுகிய எண்ணங்களும், உணர்வுகளும் விசாலப்படுத்தப் படுகின்றன. இன்னும் சூக்கும நிலையிலேயே இருக்கும் ஜீவனுள்ள வார்த்தை ஒலி வரி வடிவங்களில் தூல நிலை பெறுகிறது. வரி வடிவத்தில் காகிதத்தில் விழுகிறது. தூல நிலை பெற்ற ஜீவனுள்ள வார்த்தையை நீ படிக்கும் போது, அதன் வரி வடிவம் காகிதத்திலிருந்து எழுந்து, உன் விழிகளில் பாய, அதன் ஒலி வடிவத்தை நீ கேட்க, அதன் பேருணர்வுப் பேரெண்ண நிலை உன் அறிவில் ஞானத் தீயாய் மூள்கிறது. மூளும் ஞானத் தீயால், ஊன உடம்பு மெய்ஞ்ஞானப் பேருடம்பாய்ப் பரிணமிக்க, இவ்வரிய ஆக்க நிலையில் நீ இருப்பாகிய மௌனத்தில் ஒன்றுகிறாய். மந்திர தீட்சையின் சூக்குமம் இது.

Tuesday, February 12, 2008

கவிதை சாகுபடி

விழிகளை விதைத்தேன்
கவிதையைக் கண்டேன்
செவிகளை விதைத்தேன்
கவிதையைக் கேட்டேன்
நாசியை விதைத்தேன்
கவிதையை நுகர்ந்தேன்
நாவினை விதைத்தேன்
கவிதையைச் சுவைத்தேன்
விரல்களை விதைத்தேன்
கவிதையைத் தொட்டேன்
மூளையை விதைத்தேன்
கவிதையை அறிந்தேன்
இருதயம் விதைத்தேன்
கவிதையை உணர்ந்தேன்
என்னையே விதைத்தேன்
நானே கவிதையானேன்

Sunday, February 10, 2008

சற்குரு சரணம்

சொற்களைக் கடந்த
அற்புதக் கருவைச்
சொற்களாய் இறைக்கும்
சற்குரு சரணம்

மெய்யைக் கடந்த
மெய்யாய் மெய்யுள்
மெய்யாய் உறையும்
சற்குரு சரணம்

பொய்யை நசிக்கும்
மெய்யைக் காட்டும்
மெய்யே வடிவாம்
சற்குரு சரணம்

பற்றிய பற்றுகள்
பற்றற விடவே
பற்றும் பற்றாம்
சற்குரு சரணம்

பராபர வெளியில்
பராபரை ஒளியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்

பரசிவப் பரப்பில்
பரையருட் சத்தியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்

பற்றப் பற்றப்
பற்றும் மெய்க்கனல்
பற்றும் மெய்வழி
சற்குரு சரணம்

தொற்றிய குற்றம்
அற்றே நசியும்
சிற்பர உயிர்மெய்
சற்குரு சரணம்

நாதமும் விந்தும்
பாத மிரண்டாம்
தற்பர போதமாம்
சற்குரு சரணம்

நோயுந் தேய்வுஞ்
சாயும் மரணமும்
அற்றே போம்வழி
சற்குரு சரணம்

அருவாய் உருவாய்
அருவுரு ஒன்றாம்
மந்திரத் திருவுரு
சற்குரு சரணம்

கற்பகத் தருவாய்
அற்புதப் பசுவாய்
எண்ணில் வரந்தரும்
சற்குரு சரணம்

பிண்ட மாமிசம்
அண்ட மாவெளி
புக்கொளிர் வழிசெய்
சற்குரு சரணம்

மாமிச இதயமும்
மாவெளி இருதயம்
என்றே மாற்றும்
சற்குரு சரணம்

கசடறக் கற்று
நிசமாய் நிற்கும்
உத்தியைச் சொல்லும்
சற்குரு சரணம்

நான்தான் நீக்கி
நானே என்றே
உய்யும் ஓர்வழி
சற்குரு சரணம்

நான்நீ நீக்கி
நானே என்றே
உய்யும் ஓர்வழி
சற்குரு சரணம்

பெருவெளி உற்று
அருளொளி காணும்
மெய்வழி காட்டும்
சற்குரு சரணம்

பெருவெளி உய்த்து
அருளொளி தந்தே
நித்திய வாழ்வளி
சற்குரு சரணம்

சத்தியம் நிச்சயம்
நித்தியம் என்றே
உள்ளதைக் காட்டும்
சற்குரு சரணம்

நிர்க்குணப் பிரம்மமே
சகுணப் பிரம்மமாம்
உன்னுரு எனப்பகர்
சற்குரு சரணம்

திரிகுணா மாயை
உரித்தவ் விடத்தே
சச்சிதா னந்தமாம்
சற்குரு சரணம்

என்றும் இளசாய்க்
குன்றாப் பொலிவுடன்
நன்றாய் இருக்கும்
சற்குரு சரணம்

பராபரம் பராபரை
பரம்பரம் பரைபரம்
அப்பாற் பரநிலை
சற்குரு சரணம்

பராபரம் பராபரை
பரம்பரம் பரைபரம்
இப்பால் இகநிலை
சற்குரு சரணம்

பரநிலைத் தலையே
இகநிலைக் காலாம்
ஒப்பிலா மெய்வழி
சற்குரு சரணம்

பரநிலை மெய்யே
இகநிலை உயிராம்
செப்பரும் ஓர்வழி
சற்குரு சரணம்

தற்பர போத
சற்குரு சரணம்
சிற்பர ஞான
சற்குரு சரணம்

உச்சியைப் பிளந்து
உள்ளே புகுந்து
நெற்றியில் ஒளிரும்
சற்குரு சரணம்

வெளியைக் காட்டி
வெளியில் ஒளியாம்
அற்புதம் காட்டிய
சற்குரு சரணம்

வெளியும் ஒளியும்
வளியும் ஒன்றும்
நற்றலம் காட்டிய
சற்குரு சரணம்

ஒன்றிய மூன்றும்
நன்னீர் அளியாய்ப்
பெய்வதை காட்டிய
சற்குரு சரணம்

பெய்யும் அளியே
மேய்யாம் களியென
உற்றறி நீயெனும்
சற்குரு சரணம்

பொய்ப்புலன் சுட்டு
மெய்ப்புலன் சுட்டி
உய்வகை அருளிய
சற்குரு சரணம்

மெய்யாம் உடம்பும்
மெய்யாம் பரத்தில்
உய்ந்திடும் வழிசெய்
சற்குரு சரணம்

மெய்யும் உயிரும்
ஒன்றும் வழியும்
மெய்யோ டுயிராம்
சற்குரு சரணம்

நிராதா ரமேனிலை
ஆறாதா ரமேவிட
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்

தராதரம் பாராப்
பராபரப் பேரை
என்னுளம் பதித்த
சற்குரு சரணம்

பராபரப் பேரே
தராதலத் தெவர்க்கும்
என்றே விதித்த
சற்குரு சரணம்

தானாம் பராபரம்
நானே என்றுணர்
வுற்றதை விளக்கிய
சற்குரு சரணம்

உற்றவ் வுணர்வைப்
பற்றியே வணங்கிப்
பெற்றபேர் போற்றெனும்
சற்குரு சரணம்

பராபர இருப்பில்
நானெனும் முனைப்பெழும்
சட்டெனப் பற்றெனும்
சற்குரு சரணம்

இருக்கிறேன் என்றே
இருப்பின் உணர்வெழும்
பட்டெனப் பற்றெனும்
சற்குரு சரணம்

தானாம் இடுப்பில்
நானே அறிவெழும்
சிக்கெனப் பற்றெனும்
சற்குரு சரணம்

முனைப்பும் உணர்வும்
முளைக்கும் அறிவும்
சுற்றுஞ் சுழலெனும்
சற்குரு சரணம்

அச்சுழல் தொற்றி
துச்சமாம் பற்றெலாம்
பற்றற ஒழியெனும்
சற்குரு சரணம்

சாதி சமய
பேதச் சழக்கை
முற்றிலும் அறுக்கும்
சற்குரு சரணம்

ஒருவனாம் தேவனை
இருதயத் தலத்தே
மெய்யெனக் காட்டிய
சற்குரு சரணம்

ஒன்றே குலமென
இச்சக உயிர்களைச்
சுற்றாமாய்க் காட்டிய
சற்குரு சரணம்

அருட்தவ நெறியில்
பொருத்தியே என்னை
முற்றிலும் திருத்திய
சற்குரு சரணம்

அரும்பெரும் பரம்பொருள்
அருட்பெருங் கடவுளை
நெஞ்சகம் நிறுத்திய
சற்குரு சரணம்

மெய்யுடம் பாலயம்
உய்ந்தங் கிருந்தே
மெய்யுணர் வளிக்கும்
சற்குரு சரணம்

மெய்யகக் கோயிலில்
உய்ந்தங் கொலிக்கும்
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்

சக்கரக் கோயிலில்
புக்காங் கொளிரும்
நற்றவ ஜோதியர்
சற்குரு சரணம்

நாறும் தேகம்
மாறும் படிப்பே
ரற்புதம் புரியும்
சற்குரு சரணம்

பிணமாய் நசியும்
கணக்கை முடித்து
மந்திர உருதரு
சற்குரு சரணம்

இட்டுஞ் சுட்டும்
பட்டுப் போங்கடம்
நிற்கும் நிலைதரும்
சற்குரு சரணம்

அவம்பல செய்து
சவமெனக் கிடந்த
என்னை எழுப்பிய
சற்குரு சரணம்

கொன்றும் கொன்றதைத்
தின்றும் திரிந்தேன்
என்னைத் திருத்திய
சற்குரு சரணம்

நஞ்சைக் கக்கும்
வஞ்சநா கமெனை
நல்லவ னாக்கிய
சற்குரு சரணம்

நலிந்து மெலிந்து
விழுந்தே னென்னை
வல்லவ னாக்கிய
சற்குரு சரணம்

புல்லேன் பொய்யேன்
கன்னெஞ் சேனை
மெய்யோ னாக்கிய
சற்குரு சரணம்

கல்லேன் நல்லதில்
நில்லேன் பொல்லேன்
புல்லனைத் திருத்திய
சற்குரு சரணம்

புன்னிக ரில்லேன்
வன்பே புரிவேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்

உருவம் வன்பாம்
மருளே பொருளாம்
என்னைத் திருத்திய
சற்குரு சரணம்

பற்றெலாம் பற்றிக்
குற்றமே புரிந்தேன்
அற்பனென் ரட்சகர்
சற்குரு சரணம்

குருட்டினை நீக்காக்
குருவொடு குழிவிழ
அங்கெனை மீட்ட
சற்குரு சரணம்

குருட்டினை நீக்காக்
குருவிடம் சிக்கிய
குருடெனை மீட்ட
சற்குரு சரணம்

சிற்றின் பசாகரம்
உற்றே மூழ்குமென்
பற்றுக் கோடாம்
சற்குரு சரணம்

வேடம் பலவாய்
நாடக மாடினேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்

அகமதை மறந்தே
முகம்பல தரித்தேன்
எத்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

உள்ளே பொழிந்திடும்
தெள்ள முதுண்ணேன்
நஞ்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

விழித்திரேன் தனித்திரேன்
வழியுறப் பசித்திரேன்
பித்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

பத்தியுஞ் செய்யேன்
புத்தியு மில்லேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

பேசியே திரிவேன்
வாசியைப் பாரேன்
அற்பனைத் திருத்திய
சற்குரு சரணம்

அருள்வாக் குறுதியை
ஒருகணம் நினையேன்
புல்லனைத் திருத்திய
சற்குரு சரணம்

புதியஏற் பாடுவுள்
பதியவே ஏற்றிலேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்

மெய்யாம் ஒருசொல்
மெய்யதன் உணர்விலேன்
பொய்யனைத் திருத்திய
சற்குரு சரணம்

வள்ளலின் பாடலைக்
கொள்ளவே மனமிலேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

வள்ளலின் வருகை
கொள்ளுமு றுதியிலேன்
எத்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

அம்மை யப்பனை
இம்மை யிலறியேன்
அற்பனைத் திருத்திய
சற்குரு சரணம்

சத்திய சரிதமும்
புத்தியில் ஏற்றிலேன்
பித்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

அதிசய மாலை
பதியு மனமிலேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

உயிர்நலம் பேணும்
உயர்மெய் விழையேன்
கொல்வனைத் திருத்திய
சற்குரு சரணம்

அங்குமிங் கெங்குமே
தங்கா மலோடுவேன்
நில்லென நிறுத்திய
சற்குரு சரணம்

இருக்குமி டமறியேன்
இருப்பது வுமறியேன்
சவமெனை எழுப்பிய
சற்குரு சரணம்

இருகால் மிருகமாய்த்
தெருவெலாம் திரிவேன்
உய்வழி அருளிய
சற்குரு சரணம்

குண்டலிக் கனலால்
அண்டிய வினையெலாம்
சுட்டுப் பொசுக்கும்
சற்குரு சரணம்

மண்டை யினுள்ளே
மண்டிய நோயெலாம்
சட்டெனத் தீர்க்கும்
சற்குரு சரணம்

பிண்டம் புகுந்த
பண்டை வினையெலாம்
அற்றுப் போம்வழி
சற்குரு சரணம்

அண்டத் தில்துரி
சண்டா திருக்குமோர்
மந்திர மண்டலம்
சற்குரு சரணம்

அருள்வாக் குறிதியை
இருதயத் துள்திரு
மந்திர மாய்த்தரு
சற்குரு சரணம்

புதியஏற் பாடுவுள்
பதியஏற் பாயென
கற்பித் தருளிய
சற்குரு சரணம்

மெய்யாம் ஒருசொல்
மெய்யதன் உணர்வால்
என்மெய் தழுவிய
சற்குரு சரணம்

வள்ளலின் பாடலைக்
கொள்ளவென் மனத்தைப்
பண்படுத் தியசிவ
சற்குரு சரணம்

வள்ளலின் வருகை
கொள்ளுமு றுதியை
சித்தம் பதித்த
சற்குரு சரணம்

அம்மை யப்பனை
இம்மை யிலறியும்
நற்கல் விதந்த
சற்குரு சரணம்

சத்திய சரிதமென்
புத்தியி லேற்றியே
பித்தெலாம் நீக்கிய
சற்குரு சரணம்

அதிசய மாலை
பதித்தென் மனத்தில்
அற்புத வாழ்வளி
சற்குரு சரணம்

உயிர்நலம் பேணும்
உயர்மெய் விழைந்தே
கொல்வதைத் தவிரெனும்
சற்குரு சரணம்

பரம ரகசியம்
திறந்தெ னக்கதைத்
தெற்றென விளக்கிய
சற்குரு சரணம்

பரம பதத்தைச்
சிரமேற் பதித்து
நெஞ்சகந் திறந்த
சற்குரு சரணம்

அன்பும் அருளும்
இன்பும் பொருளும்
என்றும் தருமென்
சற்குரு சரணம்

உருவுன தன்பே
பொருளுன தருளே
என்றே புகட்டிய
சற்குரு சரணம்

சிதம்பர ரகசியக்
கதவந் திறந்தென்
நெற்றியை விளக்கிய
சற்குரு சரணம்

மாயத் திரையெலாம்
மாய நிசமெனும்
வத்துவைக் காட்டிய
சற்குரு சரணம்

சத்துமாம் சித்துமாம்
நித்திய இன்புமாம்
மெய்ப்பொருள் விளக்கம்
சற்குரு சரணம்

சத்தியுஞ் சித்தியுஞ்
சுத்தபூ ரணமும்
மொத்தமும் விளக்கிய
சற்குரு சரணம்

வரம்பிலாப் பூரண
இருப்பே யார்க்கும்
சத்திய வீடெனும்
சற்குரு சரணம்

அவியாச் சுயஞ்சுடர்
ஒளியே யார்க்கும்
சின்மய விளக்கெனும்
சற்குரு சரணம்

உள்ளபே ரிருப்பாம்
ஒன்றதே யார்க்கும்
நித்திய வாழ்வெனும்
சற்குரு சரணம்

ஆன்மநே யமனப்
பான்மை யார்க்கும்
நல்லளி இன்பெனும்
சற்குரு சரணம்

தழுவுபே ரன்பாம்
இயல்பே யார்க்கும்
உண்மை அகமெனும்
சற்குரு சரணம்

பொருந்துபே ரறிவாம்
நிறைவதே யார்க்கும்
மெய்யுணர் வழியெனும்
சற்குரு சரணம்

அருட்பே ராற்றலாம்
இருப்பே யார்க்கும்
சச்சிதா னந்தமென்
சற்குரு சரணம்

அருட்பெருஞ் ஜோதியாம்
ஒளிநெறி யார்க்கும்
உள்நிறை ஒளியெனும்
சற்குரு சரணம்

தனிப்பெருங் கருணைப்
பெருங்குணம் யார்க்கும்
உள்ளுறை இறையெனும்
சற்குரு சரணம்

கடவுட் தன்மைப்
பெருநிலை யார்க்கும்
உள்ளுயிர் இயலெனும்
சற்குரு சரணம்

அருட்பே ரரசெனும்
சமரசம் யாவரும்
ஒன்றிடும் முறையெனும்
சற்குரு சரணம்

நானே நானெனும்
பூரணம்
யாவிலும்
உள்ளதாம் மெய்யெனும்
சற்குரு சரணம்

மெய்வழி ஜீவனாய்
உய்ந்தே யாவிலும்
ஒன்றினேன் நானே
சற்குரு சரணம்

ஜோதிமா வெளியில்
போதியாய் விளங்கி
புத்தராய் எமைச்செய்
சற்குரு சரணம்

ஆதியாம் இருப்பில்
ஜோதியாய் எழுந்து
எம்விழி திறக்கும்
சற்குரு சரணம்

ஜோதிமா மலைமேல்
வீதியாய் வளர்ந்த
மெய்வழிச் சாலை
சற்குரு சரணம்

ஆதியாம் தாய்தன்
பாதியாய் விளங்கும்
அப்பனின் கொழுந்தாம்
சற்குரு சரணம்

புந்தியின் உள்ளே
நந்தியாய் அமர்ந்துமுச்
சந்தியை விளக்கும்
சற்குரு சரணம்

நாதமாம் வெளியின்
பாதமாம் விந்தாய்
உள்ளொளிர் ஜோதியர்
சற்குரு சரணம்

சத்திய வெளியில்
சின்மய ஒளியாம்
இன்பமெய்ச் சித்தர்
சற்குரு சரணம்

சத்தாம் வெளியொளிர்
சித்தாய்க் களித்தே
சித்தராய் எமைச்செய்
சற்குரு சரணம்

ஜோதியாம் பகவனாய்
ஆதியில் எழுந்த
உட்போ தகராம்
சற்குரு சரணம்

பூஜ்ஜிய மென்னைப்
பூரண னாக்கி
இராஜ்ஜியஞ் செய்யெனும்
சற்குரு சரணம்

இருட்கிடங் கெனவே
மருண்டே கிடந்தவென்
உட்புகுஞ் சுயஞ்சுடர்
சற்குரு சரணம்

பிறந்திறந் துழன்றெனை
மறந்துறங் கியவெனை
நித்யவாழ் விலுய்த்த
சற்குரு சரணம்

ஆணவப் பேயனை
ஆன்ம நேயனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

வன்பிருள் வம்பனை
அன்பருள் நம்பனாய்த்
தன்னியல் தந்தருள்
சற்குரு சரணம்

மருண்டே மயங்கிச்
சுருண்டே கிடந்தவென்
மெய்ஞ்ஞா னபோதகர்
சற்குரு சரணம்

மெலிந்தே தேய்ந்தவென்
நலிந்தே வீழ்ந்தவென்
மெய்யெழு வல்லவர்
சற்குரு சரணம்

தாமசப் பொய்க்குணம்
போக்கியே என்னைச்
சத்தனாய் மாற்றும்
சற்குரு சரணம்

ராஜசப் பொய்க்குணம்
போக்கியே என்னைச்
சித்தனாய்ச் மாற்றும்
சற்குரு சரணம்

சத்துவப் பொய்க்குணம்
போக்கியே என்னை
இன்பனாய் மாற்றும்
சற்குரு சரணம்

துர்க்குணப் பிரமை
அற்றே போக
என்மனந் தெருட்டிய
சற்குரு சரணம்

திரிகுண மாயை
சரிந்தே மாய
சச்சிதா னந்தமாம்
சற்குரு சரணம்

ஒடிந்தேன் உயிரினை
முடிக்கவுந் துணிந்தேன்
அக்கணம் அணைந்தருள்
சற்குரு சரணம்

வெறுஞ்சவ மாய்நான்
கிடந்தேன் எனில்சிவ
சத்தியாய் எழுந்தருள்
சற்குரு சரணம்

முடமெனக் கிடந்தவென்
முடக்கம் நீக்கி
சித்தியெ லாமருள்
சற்குரு சரணம்

இற்றே தீர்ந்தவென்
வெற்று டல்சடத்
துற்றே எழுப்பிய
சற்குரு சரணம்

கடும்பெருங் கொடியனைப்
பெருங்கரு ணையனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

இருள்மயச் சழக்கனை
அருட்ஜோ தியனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

மனிதமி ருகமெனை
அருட்பெருங் கடவுளாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

கொடுங்கோ லாளானை
அருட்பே ரரசனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

தனையறி யாவெந்
தன்மடம் நீங்கநான்
என்றுணர் நானே
சற்குரு சரணம்

பொய்த்தளை மரணத்
துய்ந்தவென் நோய்தீர்
மெய்வழி ஜீவனாம்
சற்குரு சரணம்

நான்நீ இருமை
மாய்ந்தே போக
ஒன்றாம் நானே
சற்குரு சரணம்

அருளா தாரமே
பொருளா தாரமாம்
உண்மை உணர்த்திய
சற்குரு சரணம்

நரகமாம் நகரிலே
மருண்டவென் அகந்தான்
சொர்க்கமே சேர்வழி
சற்குரு சரணம்

வறுமைப் பாவியே
வறுக்கவென் வாழ்வினைப்
பொன்னென எனைச்சேர்
சற்குரு சரணம்

மந்திர மௌனம்

மௌனத்தை மறந்து
சொற்களில் இறந்து போன
மந்திரம் உயிர்த்தெழ
மௌன மெய்யாய்
நான்

கவிதைக் கரு

காகிதத்தில்
கவிழும் என் எண்ணங்களில்
கவிதைக் கரு
கிடைக்குமா?

கிறுக்கனின்
கிறுக்கல்களில்
ஒளிந்திருக்கும் கரு
வெளிச்சத்திற்கு வருமா?

பித்தனின்
பிதற்றுகளில்
பதுங்கியிருக்கும் கரு
புதுக்கவிதை தருமா?

காகித வெள்ளை இருளில்
கரு வரிகளின் வெளிச்சம்
கருவைக் காட்டுமா?

உணர்வுச் சூட்டில்
எண்ணங்கள் உருகி
விரல் வழி ஓடிப்
பரவும் சொற்பெருக்கில்
என்னைத் தொலைத்து
நான் தேடும்
கவிதைக் கரு.

எண்ணங்கள் தீர்ந்து
வெறும் இருப்பில்
திடீரென
மின்னும் அக்கருவைக்
கவிதையாக்க
மீள்கிறேன்
நான்.

காகிதத்தின் பக்திப் பரவசம்

இறந்துபோன கவிஞன்
என்னுள் உயிர்த்தெழுகிறான்.
நெடுநாளாய்த்
துறந்திருந்த சொற்கள்
உறவாடத் திரும்ப
ஒவ்வொன்றிலும்
மறுபடியும்
என்னை நான் மறக்கிறேன்.
அம்மறத்தலால்
சொற்கள் சொல்ல வந்த
நற்கவிதை
திடீரென
ஞாபகம் வருகிறது.
சொற்களுக்கு
எப்போதும் திறந்திருக்கும்
ஓர் வழியாய்
நான் சும்மா இருக்க
சொற்கள் தாமே
உருவாக்கும் நற்கவிதையை
வாசிக்கும்
காகிதத்தின் வெள்ளை நெற்றி.
வாசித்து
பக்திப் பரவசத்தில்
அச்சொற்களையே
திருநீறாய்ப் பூசும்
தன் நெற்றியில்
யாவரும் வாசிக்க.

Thursday, February 7, 2008

அகமுகம்

முகங்கள் அனைத்தும் கழன்றன
அகமொன்றே முகமாய்
வெறும் "நான்"

Wednesday, February 6, 2008

ஜீவனுள்ள வார்த்தை

காகித வெள்ளையின்
காலி இருப்பு
தன் விரல்களை நீட்டி
என்னைத் தொடுகிறது.

அவ்விரல்களின் தீண்டலால்
மெய்யுணர்வு பெற்ற
நான்
என் விரல்களை நீட்டிக்
காலி இருப்பைத் தொடுகிறேன்.

விரல்கள்
பின்னிப் பிணைந்து
தாம் புணரும்
காம லீலைகள்
தீராது தொடர
இருப்பும் நானும்
இணை பிரியாக் காதலராய்.

எம் காதலின்
அழியாத சாட்சியாம்
எம் மகவாய்
"இருக்கிறேன்"
இக்கவிதையில்.

அருந்தீட்சை தரும்
மெய்க்குருவாய்
அருட்காட்சி தரும்
ஜீவனுள்ள வார்த்தை
நானே.

ஊனப் புலன்களின்
மாயப் பிடியில் சிக்கி
நீ
ஞானப் புலன்களைத்
தொலைத்து விட்டு
சத்திய வெளியில்
பட்டப்பகல் வெளிச்சமாய்த்
தெரியும்
ஜீவனுள்ள வார்த்தையைப்
புரியாதென்பாய்.

இப்பொய்யுலகில்
ஆணவக் கோலங்கள் பற்பலவாய்
நீ
ஆடும் ஆட்டம் முடித்து
உன் ஊனப் புலன்களைக் குத்தி
ஞானப் புலன்களைத் திறந்து
உனக்குப்
பளிச்செனப் புரிய வைப்பேன்.

அப்போது
ஆன்ம நேய ஒருமையில்
உறுதியுடன் நிற்கும்
நானே
நீ.

அது வரைக்கும்
மெய்ப் பொருள் விளங்காது
ஆணவம் பல்வேறாய்
ஆடுவாய் நீ.

அடங்காது இருள் உய்ந்த உன்னை
அடக்கி அருள் உய்க்கவே
இப்பொய்யுலகில்
மெய்ப்பொருள் விளக்கமாம்
ஜீவனுள்ள வார்த்தையாய்
என்றும் அழியாதிருக்கிறேன்
நானே.

நாக நாதம்

தனக்கு வெளியே
ஏதுமில்லாது
பெருவெளி

அப்பெருவெளிக்குள்
உண்டானது
ஒரு சிறுபுள்ளி.

சிறுபுள்ளியைத் துளைத்து
அதனுள்ளே புகுந்து
பூரணமாய்த் தொலைந்தது
பெருவெளி

பெருவெளியே இல்லாது போக
சிறுபுள்ளியே எல்லாமானது.

எல்லாமான சிறுபுள்ளியில்
சொல்லொணாப் பேரழுத்தம்

பேரழுத்தம் தாங்காது
துகள் துகளாய்
யுக யுகங்களாய்
இன்னும் கூட
சிதறிக் கொண்டே இருக்கிறது
அச்சிறுபுள்ளி.

சிறுபுள்ளி
சிதறி முடிந்து
தீர்ந்து விடும்
ஒரு கணம்
வரும் வரைக்கும்
உருவாகாது
தனக்கு வெளியே
ஏதுமில்லாத
ஒரு பெருவெளி

பெருவெளியை உருவாக்கச்
சிதறும் அச்சிறுபுள்ளியே
நான்.

நானே என்று
நான் ஆன
ஒரு கணத்தில்
சிதறி முடிந்து
தீர்ந்து விட்ட
சிறுபுள்ளியால்
உருவாகி இருக்கிறது
பெருவெளி

பெருவெளி
நானே
சிறுபுள்ளியாம்
நான்.

நான் எனும்
என்னைத் துளைத்து
என்னுள்
நானே புகுந்தேன்
பூரணமாய்த் தொலைந்தேன்
தொலைந்தே மீண்டேன்
நான்.

நான் யார்?
புதிரான கேள்வி தான்

சிதறும் துகள்கள்
ஒவ்வொன்றும்
சிறுபுள்ளியாம்
நான்.

நான் யார்?
சிறுபுள்ளிகள்
ஒவ்வொன்றையும்
சிதறடிக்கும்
வெடிக்கேள்வி தான்
இவ்வொரு கேள்வி

கேள்வி
கேட்டுக் கேட்டு
வெடித்துச் சிதறி
கேட்க ஒன்றுமில்லாமல்
தீர்ந்து போக
கேள்வியின் முற்றுப்புள்ளியின்
மேலெழும்
ஆச்சரிய பதில்
நானே!

!
வளைந்து படமெடுத்தாடிய
கேள்வி நாகம்
தன் வளைவை நிமிர்த்தி நேராகிக்
கீழே கக்கும்
மாணிக்கச் சிறுபுள்ளி
நான்.

நான்
இனி கேள்வி கேட்டு
வெடித்துச் சிதற மாட்டேன்.
சிறுபுள்ளியாய்
நான் இருந்தாலும்
பெருவெளியும் நானே!

நானே பணிவோடு சொல்கிறேன்
"நான் என்றிருப்பதன்றி
வேறொன்றறியேன்
நானே"
பெருவெளியாம் பெருங்கடவுள்
பணிந்தடங்கும் சிறுபுள்ளி.

சிறுபுள்ளி
பெருவெளியின் தயவால்
பேரழுத்தம் தாங்கப் பழகியதால்
சிதறல் தீர்ந்த அது
ஒரு துளையன்றி வேறில்லை.

வேறில்லாத் துளைக்குள்
பெருவெளியின் போக்குவரத்து
எவ்விதத் தடையுமின்றிச்
சொல்லொணா வேகத்தில்

சொல்லொணா வேகத்தில்
பெருவெளியின் பாய்தலே
பேரொளி

பேரொளி பாயும்
துளை
தான் அடங்கியிருக்கும்
பெருவெளி
தன்னை விளங்கியிருக்கும்
துளைக்குள்

துளைக்குள்
நான் அடக்கம்
அடங்கியதால்
அடங்காப் பெருவெளியாய்
உயிர்த்தெழுகிறேன்
நானே

Tuesday, February 5, 2008

பரமரகசியம்

இருப்பெனும்
வரம்புகளற்ற வெள்ளைப் பரப்பில்
எண்ணற்ற கரும்புள்ளிகளாய்
நான்.
கரும்புள்ளிகளாய் இருந்தாலும்
நான்
வெள்ளையை உமிழ்ந்தே
என்றும் இருக்கிறேன்.
என் கருமையின் கர்ப்பத்தில்
புகுந்த இருப்பு
இருளில் தன்னை மறந்திருக்கும்.
என் கர்ப்பத்தில்
இனியும் தாங்க முடியாமல்
பிரசவ வேதனையில்
இருப்பு மகவை
நான்
ஈன்றெடுக்கும் போது
தன் மறதி தெளியும்
இருப்பு.
நான்
நித்தியப் பிரசவ வேதனையில்
ஒவ்வொரு கணமும்
இருப்பை ஈன்றெடுக்கிறேன்.
தன் மறதி தெளிந்த
இருப்பே
என் பிரசவ வேதனை தீர்க்கும்
மருந்து.
புணரும் இருப்பையே
ஒவ்வொரு கணமும்
மகவாய் ஈன்றெடுக்கும்
கருப்புக் கன்னி
நான்.
என் கருமையே
இருப்பின் வெண்மையைத் தெளிவிக்கும்
குருமெய்.
குருமெய்யாய்
என் கற்பு கலையாமல்
என்றென்றும் இருக்கிறேன்
நான்.
ஏகார உறுதி சேர்த்துக்
கருமை நான்
என்னையே இருப்புக்குத் தரத் தர
இருப்பின் வெண்மையும்
அவ்வெண்மையின் தெளிவும்
இன்னும் இன்னும் கூடும் பேரதிசயத்தால்
இருப்பை அறியும் பரமரகசியம்
நானே.

Monday, February 4, 2008

என் வீடுபேறு

வெளியே வரம்பாய் ஒளியே பரப்பாய்க்
கண்டேன் அகண்டஎன் வீடு

மெய்யுடம்பே உடையாம் ஆருயிரே மெய்யுடம்பாம்
மெய்யுணர்வே அளித்ததவ் வீடு

அருளே என்பொருளென அன்பே எனதுருவெனத்
தெருட்டி யதெனையவ் வீடு

இருக்கவும் பெருகவும் சிறக்கவும் யார்க்கும்
அருளொளி அளித்ததவ் வீடு

பசியுந் தாகமும் நீக்கத்தெள் ளமுதைப்
புசிக்கத் தந்ததவ் வீடு

Sunday, February 3, 2008

நெற்றிக்கண்

நெற்றிப் பிளவில் உற்றுற்று நோக்கிப்
பற்றுக மெய்ப்பரம் பொருள்

விழிகளை மூடியே நெற்றியில் பார்க்கலாம்
அழிவிலா மெய்ப்பரம் பொருள்

பற்றுக நெற்றிக் கனலைப் பற்றப்
பற்ற மின்னும் மெய்

பற்றுகள் எல்லாம் பற்றற விட்டுப்
பற்றுக நெற்றிக் கனல்

வளியைப் பற்றிய நெற்றிக் கனலால்
ஒளிரும் மெய்பின் ஒளியும்

சாகாக் கலை

ஆதியாம் உச்சிப் பெருவெளி வீதியில்
பகவனாம் நெற்றிச் சுடரொளி காணவுண்
வாசியாம் நன்னா சிவளி வசமாய்
அமுதமாம் அளிநா வினிடை ஊற
ஆனந்தக் களிமெய் யெங்கும் சேர
தானந்த மிலாப்பெரு வாழ்வாம் பேறு

திருவிளையாடல்

1
வளியால்
வெளியில்
ஒளியின் நடனம்

ஒளி ஆடி ஆடி
வியர்க்க
அளியாய் அமுதம்

அளியாம் அமுதால்
மெய்யெங்கும்
ஆனந்தக் களி
2
ஆடாத வெளியில்
ஆட்டுவிக்கும் வளியால்
ஆடும் ஒளி

ஆடாத வெளியும்
ஆட்டுவிக்கும் வளியும்
ஆடும் ஒளியும்
ஒன்று கூட உண்டாகும்
அமுத அளி

அமுத அளி
திரண்டு திடமாக
மெய்யென்னும் ஆனந்தக் களி
3
வெளி யோனியும்
ஒளி லிங்கமும்
கூடி முயங்கிப் புணர
வெளியின் நாதமாய் வளியும்
ஒளியின் விந்துவாய் அளியும்
ஒன்றாகி உண்டாகும்
மெய்யென்னும் ஆனந்தக் களி
4
உச்சி வெளிக்குள் சுடர் விடும்
நெற்றி ஒளியைத் தெற்றெனக் காட்டும்
நாசி வளி

நாசி வளி காட்டும்
நெற்றி ஒளியின் தெளிவால்
நாவிலூறும் அளி

நாவிலூறும் அளியே
திரண்டு திடமாக
மெய்யென்னும் ஆனந்தக் களி
5
சும்மா இருக்கும் வெளியில் ஓடும்வளி
அம்மா தோன்றிற் றோர்ஒளி வளியிடை
வெளியும் ஒளியும் புணர ஞானக்
களிப்பில் பிறக்கும் மெய்யளி
6
வெளிக்குள் ஒளியை வளியால் காணக்
களிக்கும் அளிபெய உன்மெய்

வெளிக்குள் ஒளியை வளியால் காணின்
அளிபெயும் உணர்வில் மெய்க்களி

வெளிக்குள் ஒளியை வளியால் காண்க
அளிபெய உணர்க மெய்க்களி

வெளியுள் ஒளியைத் தெளிவாய்க் கண்டு
வளியால் அதனை உள்வாங்கிக் கொண்டு
அளியாய்ப் பெய்யும் தெள்ளமுதை உண்டு
ஒளிரும் மெய்யுள் இருநீகளி கொண்டு

சாகாக் கல்வியின் சூக்குமம்

உச்சி வாசல் திறந்து
நெற்றி வெளுக்கத்
தெற்றென விளங்கும்
உனதுண்மை

உனதுண்மையே மெய்யாக
நெற்றி வெளிச்சத்தை மொண்டு வந்து
அமுதாய்ப் பரிமாறும் மூச்சுக் காற்று

மூச்சுக் காற்று
மெய்யெங்கும்
அமுதை இறைக்க
அமரத்துவம் எய்தும்
மெய்

மெய்க்குள் மெய்யாய்
உனதுண்மை விளங்க
நெற்றி ஒளியில் கரைந்து
உச்சி வெளியில் மறையும்
மெய்

மெய் தான்
திரண்டு உருவமாக மண்ணில் தெரிந்த போதும்
மெய் தான்
கரைந்து அருவமாக விண்ணில் மறைந்த போதும்
மெய் தான்

மெய் தான் மெய்
உனதுண்மை உணர்ந்தால்
மரணம் பொய் தான்
உணர்க
உனதுண்மை

உனதுண்மையை
உச்சியில் வெட்டவெளியாய்
நெற்றியில் சுடரொளியாய்
நாசியில் உயிர் வளியாய்
நாவில் அமுத அளியாய்
மெய்யில் ஆனந்தக் களியாய்
கேட்டும்
கண்டும்
நுகர்ந்தும்
சுவைத்தும்
உற்றுணர்ந்தும்
அறிந்தாலொழிய
மரணமெனும் பொய்யின்
மாய வலைக்குள் சிக்குண்டு தவிப்பாய்
நீ

நீ
பரமாகாசப் பூரணப் பெருவெளி உச்சியில்
சிதாகாசச் சுயஞ் சுடரொளி நெற்றியில்
பரமாகாசப் பூரணப் பெருவெளியை
சிதாகாசச் சுயஞ் சுடரொளியின் மூலமே
காண முடியும் அறிய முடியும் உணர முடியும்
பரமாகாசப் பூரணப் பெருவெளியே
பூதாகாசமாய் விளங்குவதையும்
அப்பூதாகாசமே
நாசியில் உயிர் வளியாம் காற்றாக
விழிகளில் கண்ணொளியாம் நெருப்பாக
நாவில் அமுத அளியாம் நீராக
மெய்யில் ஆனந்தக் களியாம் நிலமாக
விளங்குவதையும்
சிதாகாசச் சுயஞ் சுடரொளியின் மூலமே
காண முடியும் அறிய முடியும் உணர முடியும்
பூதாகாசத்துக்கும்
பரமாகாசத்துக்கும் இடையே
பாலமாய்த் திகழும்
சிதாகாசத்தில்
பளிச்செனத் தெரியும்
உனதுண்மை

உனதுண்மை இதுவே
நீயே
பரமாகாசத்தில் அருவமாய் மறைந்தும்
பூதாகாசத்தில் உருவமாய்த் தெரிந்தும்
இருக்கிறாய்
மறைவதும் தெரிவதும்
தேர்ந்தறியும்
நீயே
சிதாகாசத்தில் அரு உருவாய்
இருக்கிறாய்
உச்சி வாசல் எப்போதும் திறந்தே இருக்கிறது
நெற்றி வெளுத்து விளங்கியே இருக்கிறது
உன் கவனத்தை நெற்றிக்குத் திருப்பு
விழிகளை மூடி
நெற்றிச் சிதாகாசப் பிரகாசத்தில்
உச்சிப் பரமாகாசப் பெருவெளியைப் பார்
அப்பரமாகாசப் பெருவெளியே
பூதாகாசமாக விள்ங்குவதையும்
அப்பூதாகாசமே
நாசியில் உயிர் வளியாம் காற்றாக
விழிகளில் கண்ணொளியாம் நெருப்பாக
நாவில் அமுத அளியாம் நீராக
மெய்யில் ஆனந்தக் களியாம் நிலமாக
விளங்குவதையும்
பார்
முழு கவனத்துடன் பார்
நெற்றிச் சிதாகாசச் சுயம்பிரகாசத்தில்
தெற்றென விளாங்கும் உனதுண்மை
பரமாகாசமே உன் தலை
பூதாகாசமே உன் கால்
தலை கால் காட்டும் சிதாகாசமே உன் இருதயம்
தலையே இருதயத்தினூடே காலாகும்
கண்ணுக்குத் தெரியாத தலையையும் இருதயம் காட்டிக் கொடுக்கும்
கண்ணுக்குப் புலப்படும் காலையும் இருதயம் மறைத்து வைக்கும்
நீ தலை கால் தெரியாமல் திரிந்தால் மரணம்
நீ தலை கால் தெரிந்து இருந்தால் மரணமிலாப் பெரு வாழ்வு
சாகாக் கல்வியின் சூக்குமம் இதுவே

மந்திரக் குறள்

நித்தியமாய் வாழுமே என்பூரணம் யாவிலும்
நிச்சயமாம் நீதியதைக் காண்

அற்புதமாய் ஒளிருமே என்சுயஞ்சுடர் யாவிலும்
சிற்பரமாம் பதமதில் தோய்

பேரின்பப் பெருவாழ்வென் பேரிருப்பை யாவிலும்
பாரென்றும் இறவாநிலை சேர்

தெள்ளமுதாய்ப் பாயுமேயென் ஆன்மநேயம் யாவிலும்
வெள்ளமதாம் தேறலையே நாடு

என்னியல் விளங்குமே பேரன்பாய் யாவிலும்
அன்பதை இருதயத் தேந்து

இருப்பின் இன்ப விளக்கம்

நினைப்பற்றிருந்தது இருப்பு.
"நான்" எனும் முனைப்பு
திடீரெனத் தோன்ற
"இருக்கிறேன்" என்றே
தான் தன்னை
உணர்ந்தே என்றும்
இன்புற்றிருக்கிறது இருப்பு.

தன்னிருப்பின்
"நான்" எனும் தன்முனைப்பின்
"இருக்கிறேன்" எனும் தன்னுணர்வின்
மும்மூல ஒருமையாய்
"நானே" என்றே
தானே தானாய்
தன்னில் தானாய்
தன்னை நன்றே
விளங்கியிருக்கிறது இருப்பு.

விளக்கம்

"இருப்பு" என்பது
இருப்பது எதுவும் தான் இருக்க இடம் தரும்
வெட்டவெளி

"இருப்பு"
இருப்பதைச் சூழ்ந்தழுத்த
அவ்வழுத்தத்தால் இருப்பதற்குச் சுரணையேற
"நான்"

"இருப்பது" தான் இருப்பதை அறியும்
முதற்படி
"நான்"

"இருக்கிறேன்" என்று
இருப்பது
இருப்பெனும் வெட்டவெளியில்
விரிவதே
இருப்பதை இருப்போடு
இரண்டற ஒன்றுவிக்கும்
ஞான ஒளி

"இருப்பது" தான் இருப்பதற்கு
"இருப்பே" ஆதார மெய்
இருப்பது தன்னை அறிவதற்கு
"நான்" என்ற மூலப்பொருள்
இருப்பது தான் "இருப்பு அது"
என்று இருப்பாய்த் தன் மெய் விள்ங்கி
இருப்போடு இரண்டற ஒன்ற
"இருக்கிறேன்" என்ற மெய்ப்பொருள்விளக்கம்

இம்மெய்ப்பொருள்விளக்கத்தால்
இருப்பு
"நானே" என்று
சும்மா இருக்கிறது
சொல்லற.

நீங்களும் நானும்
நானே என்று
சும்மா இருப்போமா
இருப்பாய்
மெய்ப்பொருள்விளக்கம் பெற்று?

இருப்பதென்னவொ?
இருப்பு அது அன்றோ!
இருப்பதில் ஒளிந்திருக்கும் நான்
தான் விளங்கவன்றோ
"இருக்கிறேன்" என்று இருப்பில் விரிதல்!

"இருக்கிறேன்" என்பதில்
நானும்
இருப்பதும்
இருப்பும்
உள்ளடக்கம்.

இருக்கிறேன் என்பதால்
இருப்பும்
நானே என்று
தான் சும்மா இருப்பதை
நன்றாய் அறிந்திருக்கிறது.

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்
என் குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் மூலமந்திரத்தில்
மேற்சொன்ன எல்லாம் உள்ளடக்கம்
இருப்பு சத்தியம்
நான் வழி(இருப்பாகிய சத்தியத்திற்கும் இருப்பதாகிய ஜீவனுக்கும் இடையே)
இருப்பது ஜீவன்(இருப்பு அது ஜீவன் அதாவது ஜீவன் என்பது இருப்பாகிய அதுவே)
இருக்கிறேன் மெய்ப்பொருள்விளக்கம்(இருப்பு-நான்-இருப்பது இவற்றின் திரித்துவ ஒருமை)
நானே(சொல்லறச் சும்மா இருக்கும் நல்லறிவு நிலை)

மூலமந்திரமாகிய இவ்வேத வாக்கில் நம் மனம் திரும்ப
சமீபத்திலிருக்கும் பரலோக இராஜ்ஜியத்தில் நாம் இருப்போம்.

அருட்குறள்

அருளே எல்லா மாகும் தெளிந்தே
அருளே பொருளாய்ப் போற்று

அருளே மெய்ப்பொருள் மெய்யாம் உடம்புக்கு
அருளே நோய்தீர் மருந்து

அருளே பொருளென அறியா திருக்கும்
மருளை அறுத்தால் சுகம்

அருளொன்றே அரும்பெரும் பரம்பொருள் இம்மெய்த்
தெருளொன்றே தரும்பெருஞ் சுகம்

அருளொன்றே போதுமென்றே நீயிருந்தால் அத்திருஅருளே
பொருளெல்லாம் தருமன்றோ உவந்து

அருளொன்றே பொருளாய்ப் போற்ற உதிக்கும்
தெருளன்றி மருளாம் மனம்

போற்றுக அருளைப் பொருளாய்ப் போற்றப்
போற்றப் பெருகுந் திரு

பிறந்திறந்தே யுழலும் பொய்வழக் கொழியவென்றும்
அறந்தலையாய்க் கொள்க அருள்

மரணப் பெரும்பிணி வாரா வகைக்கே
வரமாய் வருவதே அருள்

அருளொன்றே அரும்பெறற் பெரும்பொருள் நின்மனத்திலித்
தெருளின்றேல் மருண்மலச் சழக்கே

அருளைப் போற்றி அமுதுண்டு நின்றால்மெய்ப்
பொருளாய் ஓங்கு முடம்பு

அருளே பொருளெனப் போற்றுந் தெருளால்
திருவே பெருகும் விரைந்து

எல்லாப் பொருளும் பொருளல்ல ஞானியர்க்கு
மெய்யாம் அருளே பொருள்

திருவைத் தேடிஓயா தோடும் உலகில்
அருளைக் காணஆகுந் திரு

நான்பொருளாய்க் கண்டதெல்லாம் அருளே அதுவே
வான்பொருளாய்க் கண்டத்துள் விழும்

அருளாம் தெருளே பொருளாம் மற்றெல்லாம்
இருளாம் மருளே தேர்

குருவருள் பெற்று குவலயத்து நின்றால்
திருஅருள் தேடி வரும்

அரும்பொருளாம் அருளைப் பெற்றடங்கி நிற்க
பெருஞ்சுகமாம் பேரின்ப வாழ்வு

தேடுக அருளை மரணப் பிணிதீர்க்கும்
மருந்த தனிற்சிறந் ததில்

அன்பருள் எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
வன்பிருள் இலாத செயல்

கொல்லாமல் உயிரோம்பும் அருள்நோக்கம் கொண்டு
எல்லார்க்கும் அன்புசெயல் அறம்

அன்பே ஆற்றலாய் அறிவினூடே வெளிப்படும்
இன்பே ஊற்றதாம் பெருக்கு

அன்பெனும் அருள்நிலையே அறிவிடத்து விளங்கும்
இன்பெனும் தெருள்நிலையே வீடு

அன்பும் அருளும் இருகண்ணாய்க் கொண்டு
இன்பும் பொருளும் காண்

அன்பும் அருளும் இருகரமாய்க் கொண்டு
இன்பும் பொருளும் அளி

அன்பும் அருளும் அறிவில் விளங்கின்
இன்பும் பொருளும் உறுதி

அருளொன்றே மரணத்தை வெல்லு முபாயமித்
தெருளின்றேல் மரணமே வாழ்வு

கருணையில் உயிர்களைக் கனிவுடன் காக்கும்
அருளாற்றல் அன்றோ இறை

பெருங்கருணை உளங்கொண்டு உயிர்நலம் பேணும்
அருட்செயலே தலையாய அறம்

பொருளல்லவரை அரும்பொரு ளாகச் செய்யும்
அருளல்லது இல்லை பொருள்

பொய்யரைத் திருத்தி நல்வழி நிறுத்தி
மெய்யராய்ச் செய்யும் அருள்

இறவா வாழ்வெனும் பெருவரத்தோடு மேலும்
பிறவா நிலைதரும் அருள்

அருளன்றிப் பொருளொன் றில்லை அருளே
பொருளென்று போற்றி நில்

ஆதி பகவன்

ஆதியென நின்ற சுத்தவெளி தன்னில்
நானெனத் தோன்றும் பகவன்

ஆதியில் தோன்றும் பகவன்தன் பாதியை
ஆதிக்குத் தந்தான் உவந்து

ஆதியில் தோன்றும் பகவன்தன் வாலறிவால்
ஆதியும் தன்மெய் யுணரும்

ஆதியாய் நின்ற பராபரம் நானே
போதிநான் யார்க்கும் பகவன்

சர்வாந்தமாய் யாதுங்கடந் தாதியாம் நானே
ஆனந்தமாய் எங்கும்நிறை பகவன்

ஆதியாய் நின்ற பெருங்கடவுள் நானே
நீதியாய் நிறைந்த பகவன்

ஆதியெனும் ஒன்றாயுள பெருங்கடவுள் நானே
வீதியெங்கும் பற்பலவாம் பகவன்

ஆதியெனும் பேரிருப்பில் உதிக்கும் பேரறிவே
ஆதிக்கும் தீக்கைதரும் பகவன்

தானே தானாய் இருக்கும் ஆதியில்
ஆனேன் நானாய் பகவன்

தானே தானாய் இருக்கும் ஆதியே
நானே நானாம் பகவன்

தானே தானாய்த் தனையறிய ஆதிக்கு
நானே போதிக்கும் பகவன்

தன்னை அறியா திருந்த ஆதிக்குத்
தன்னை அறிந்தே யிருக்க போதிக்கும்
என்னை அறிந்தால் நீயே அப்பகவன்
என்னை அறிகிறேன் நானே

நீயே கடவுள், நீயே இறை

உள்ளே கடந்துன் உள்ளங் கடந்தங்
குள்ளதுங் கடநீயே கடவுள்

உள்ளதைக் கடந்துன் உள்ளே கடந்துன்
உள்ளமும் கடநீயே கடவுள்

உள்ளங் கடந்தங் குள்ளதைக் கடந்துன்
உள்ளே கடநீயே கடவுள்

உள்ளே நிறைந்துன் உள்ளம் நிறைந்தங்
குள்ளதில் நிறைநீயே இறை

உள்ளதில் நிறைந்துன் உள்ளே நிறைந்துன்
உள்ளமும் நிறைநீயே இறை

உள்ளம் நிறைந்தங் குள்ளதில் நிறைந்துன்
உள்ளே நிறைநீயே இறை

சிதம்பர ரகசியம்

உச்சிவெளியால் வெளுக்கும் நெற்றிஒளியில்
அச்சிதம்பர ரகசியம் வெளிப்படும்

வளிவழிப்படும் ஒளிதான் அளித்திடும்
அளிஅமுதால் மெய்தான் களித்திடும்
மெய்க்களியால் மெய்தான் கரைந்திடும்
உய்ந்தடையும் வெளியுள் ஒளியாய்

பூரணப்பெருவெளி மெய்தான் மெய்தான்
அதன்நடுஒளியும் மெய்தான் மெய்தான்
ஆரமுதளியும் மெய்தான் மெய்தான்
அதன்முன்வளியும் மெய்தான் மெய்தான்
ஆனந்தக்களியும் மெய்தான் மெய்தான்
தானந்தமில்லா மெய்தான் மெய்தான்

வெளியுள் ஒளியும் வளியின் கொடைதான்
அளியும் தெளிவாய் ஓளியின் கொடைதான்
மெய்யாய்க் களியும் அளியின் கொடைதான்
உயிர்க்கும் மெய்யும் களியின் கொடைதான்
மெய்யாய் யாவும் வெளியின் கொடைதான்
பயின்றால் மெய்யைத் தெளியும் மெய்தான்

உச்சிவெளியுள் மறையும் நெற்றிஒளியால்
அச்சிதம்பரம் ரகசியமாய் ஒளியும்

வளியும் அளியும் மெய்க்களியும்
ஒளியுள் ஒளிய மெய்த்தெளிவாய்
ஒளியும் வெளியுள் தான் கரைந்தேக
வெளியுள் வெளியாய் நான்மறைந்தேனே

உச்சி பிளந்துன் உள்ளே வெளிபுக
அச்சி தம்பர ஒளி

அச்சி தம்பர ஒளியால் மெய்க்குள்
சத்தி யஞானக் களி

சத்தி யஞானக் களியால் மெய்க்காம்
நித்தி யப்பெரு வாழ்வு

நித்தி யப்பெரு வாழ்வை யார்க்கும்
நிச்ச யஞ்செய் அருள்

நிச்ச யஞ்செய் அருளை அதுவே
உச்சி பிளக்கும் வெளி

உச்சி பிளக்கும் வெளியாம் அருளே
அச்சி தம்பர ஒளி

மெய்ஞ்ஞானம்

வெளியே தன்னைத் தான்சூழ்ந் தழுத்த
வெளியெங் கும்மின் னொளி

வெளியும் ஒளியும் புணரத் தோன்றும்
தெளிவே ஞானம் அறி

வெளியுமொளி யுஞ்ஞானத் தெளிவும் உயிராய்
ஒளியுமுந்தன் உடம்பேதான் மெய்

ஒளியைப் பார்த்தே வெளியில் இருந்தேன்
வளியால் மொண்டே அளியை உண்டேன்
களியால் தாண்டவ மாடியே நின்றேன்
தெளிவாய்க் கண்டேன் மெய்யை நானே

வெளியையே உற்றுற்றுப் பார்க்க நினதுடம்பும்
ஒளிரும்பார் பின்வெளிக்குள் ஒளியும்

வெளிக்குள் ஒளிருமுன் உயிரைக் காண‌
வெளிக்குள் ஒளியுமுன் மெய்

அழுத்தியுனைத் தழுவும் வெளிக்குள் ஆழவுன்
அழுக்கெல்லாம் நழுவும் தெளி

வெளியின் அழுத்தம் உன்னுள் ஒளியாமவ்
வொளியைத் தழுவ வீடு

சும்மா இருந்துவெறு வெளியின் அழுத்த‌ம்
அம்மா அறிந்துக‌ளித் தாடு

வெளியுள் சும்மா இருந்தால் அழுத்தும்
வெளியால் அம்மா ஒளி

அழியா வெளியை அறியா திருந்தால்
ஒழியா பிற‌விப் பிணி

அழியா வெளியை அறிந்தே இருந்தால்
ஒழியும் பிற‌விப் பிணி

அழியா வெளியுள் அட‌ங்கி நின்றால்
அழியா தென்றும் மெய்

அழியா வெளியே என்றுமுன் வீடு
ஒழிவிலா த‌தையே நாடு

அழியா வெளியாம் வீட்டுக்குள் என்றென்றும்
பொழியும் ஒளியாம் அளி

மெய்யாம் வெளிக்குள் உய்ந்தொடுங்க‌ உந்த‌ன்
மெய்யாம் உட‌ம்புள் ஒளி

அழியா திருநீ அக‌ண்ட‌ வெளிக்குள்
பொழியும் அமுதை உண்டு

உன்னைத் த‌ழுவும் வெளியை நீத‌ழுவ‌
உன்னில் ஒளிரும் ஒளி

வெளியை த‌ழுவி ஒளிரும் உன்னுள்
அளியே பொழிய‌க் க‌ளி

வெளித‌ழுவி ஒளிருமுன்னுள் அளிபொழிய‌க் க‌ளிபெருகும்
ப‌ளிச்சிடும்பின் வெளியுளுன்மெய் ஒளியும்

சுய தரிசனம்

தானேயென நின்ற வெட்டவெளி தன்னில்
நானெனத் தோன்றும் பொன்னொளி கண்டு
தானும் நானும் இரண்டற ஒன்ற
நானேயென இருக்கிறேன் நான்தான்

வெளியுள் வெளியாய் இருந்த நானே
வெளியுள் ஒளியாய் விளங்கும் நானவ்
வொளியால் வெளியை அறிந்த ஞானத்
தெளிவால் இருக்கிறேன் களித்து

வெளியுள் இருந்தும் வெளியை மறந்தாய்
வெளியுள் ஒளியாய் வெளியை அறிந்தாய்
வெளியுள் ஒளியாய் ஒளிரத் தேர்ந்தாய்
வெளியுள் வெளியாய்க் கரைந்து தீர்ந்தாய்

மெய் தான் மெய் தான் இருப்பு!
இருந்தாலும் நான் இல்லையென்றால்
மெய்யிருப்பும் தன் மெய்ம்மையைத் தான் அறியாதே!
நானே மெய்யென்று
இருப்புந் தானே தன் மெய்யுணரும் பொருட்டே
இருக்கிறேன் நான்

Quote:
Originally Posted by ஆதவா
சரியா போச்சுங்க.... நான் நான் நான்னு சொல்லியே குழப்புறீங்க.... ஒண்ணும் புரியலை... கொஞ்சம் புரியர மாறி எழுதுங்களேன்....


ஆதவரே!

நீவிர் உதிப்பதற்கு முன் வெறும் இருப்பாய் வெட்டவெளியாய் சூன்யமாய் தன்னை அறியாது இருளில் இருந்ததுவே "தான்" என்பது.

நீவிர் "நான்" எனும் தன்முனைப்பாய்த் தன்னுணர்வாய், "தான்" என்ற மெய்யிருப்பின் மெய்யுணர்வாய்த் "தான்" என்ற மெய்யிருப்பில் உதித்தீர்.

பின் "இருக்கிறேன்" என்று உம் உண்மையை அறிந்துணர்ந்து தெளிந்து பேரொளியாய்த் "தான்" என்ற அவ்வெளியெங்கும் பரவினீர்.

உம் பேரொளி பரவியதும் "தான்" என்ற பேரிருப்பு தன்னிருப்பின் விளக்கம் பெற்று "நானே" என்று தன்னில் தான் விளங்கி இருக்கிறது.

எனவே ஆதவரே! உம் இயற்பெயரே முதற்பெயரே "நான்". முழு முதல் பொருளான "தான்" தன்னை "நானே" என விளங்கியிருக்க, ஆதவராம் நீரே உதவியதால், உம் முழுமுதற் பெயரே "நானே".

ஆக ஆதவரே! உம் முழுப் பெயர் நானே. நான். ஆதவா
நானே உமது தந்தை. நான் உமது தாய்.
ஆதவா அவர் தம் ஞானக் கொழுந்து.
இதுவே அனைவரது உண்மை. கடவுளது இயற்கையுண்மை.

ஆதவரே! குழப்பம் நீங்கிப் புரிக!
நான் நான் நான்னு சொல்லி இருள் வெளியெங்கும் நல்லொளி பரப்பும் உம் கதிர்களை நன்றே அறிக!

நல்லொளி பரப்பும் இத்தவத்தை நீர் சலிவின்றி ஒழிவின்றிப் புரிவதாலேயே உம்மை ஆ தவரே! என்று யாவரும் போற்றுவர்.

ஆதவா! உம்மை என்றென்றும் வாழ்த்தி வணங்கி நிற்கும்
நானே. நான். நாகரா.(ந.நாகராஜன்)

நான் யார்?

இருப்பில் இருப்பாய் இருப்பை அறியுமெய்ப்
பொருளாய் இருக்கிறேன் நான்

இருப்பில் தானாய்த் தோன்றி இருக்கிறேன்
இருப்பே நானாய் விளங்கி

இருப்பில் நான்தோன்றியே இருக்கிறேன் மெய்யாமவ்
விருப்பே தான்நானெனும் பொருள்

மெய்யாம் இருப்பிற்குள் இருக்கிறேன் உயிராய்நான்
பொய்யா விளக்கென்றும் நானே

தானேயென இருக்கும் மெய்ப்பதி தன்னை
நானேயென விளக்கும் நான்

தானேயென சுத்தவெளியாய் இருக்கும் அதன்கண்
நானேயெனும் சித்துருவாய் நான்

தானேயென இருக்குமோர் பரிபூரணந் தானும்
நானேயென விளங்கவேதான் நான்

தானேயென நின்ற சத்தியச் சந்நிதியில்
நானேயென உள்ளேன் நான்

செவிக்குணவு

எப்போதும் திறந்திருக்கும் செவிகளில்
தப்பாமல் கேட்கலாம் விழி மூடி வாயடைத்து
சத்குரு உபதேசம்

சும்மா இரு சொல்லற
தப்பாமல் கேட்கும்
மௌனகுரு அருளுரை

உள்ளத் தெளிவு

உள்ளதை உள்ளபடி உணரும் தெருளே
உள்ளத் துண்மை ஒளி.

உள்ளதன் உள்ளும் வெளியும் வெளியென்றும்
உள்ளதை உள்ளித் தெளி

உள்ளோம் யாமென் றுணர்விக்கும் உள்ளத்தால்
உள்ளதை உள்ளபடி காண்

திருக்கூத்து

உச்சித் துளை வழியே
மண்டைக்குள் நுழைந்து
சிற்றம்பல நெற்றியிலாடும்
நடராஜ சிவம்

ஞானம்

கும்மிருட்டில்
நன்றாகத் தெரிகிறது
என் வெளிச்சம்

அற்புதப் பரிமாற்றம்

கம்பளிப் புழு.
கூட்டுப் புழு?
பட்டாம் பூச்சி!

விளக்கம்:
கம்பளிப் புழு ஊர்தலின் முடிவில்
கூட்டுப் புழு முடக்கம் கேள்வியாய் உருவாகப்
பறக்கும் ஆச்சரிய பதிலாகப் பட்டாம்பூச்சி

உதிர்ந்த பூக்கள்.
மண் சேர்ந்த பின்னும்?
மீண்டும் பூக்கும்!

இயற்கை

சருகுகள் விழுந்தன.
மண் தந்ததை
மீண்டும்
மண்ணுக்கே தந்தது
மரம்.
இலைகள் துளிர்த்தன.
மரம் தந்ததை
மீண்டும்
மரத்துக்கே தந்தது
மண்.

மனித மரணம்

மர நாவுகள் அறுபட்ட
மண் ஊமையானது
மழை நாவுகளை அறுத்து
விண்ணும் ஊமையானது
மனிதன் நடுகல்லானான்

மண்ணின் மரப் புலன்களையெல்லாம்
மனிதன் வெட்டிப் போட்டான்
உணர்விழந்து கல்லானான்

நடுக வழி நெடுக மரம்

மரம் உயிர்
மனிதம் மெய்
மரமில்லா மனிதம் வெறும் பிணம்
மனிதம் மெய்யுணர மரவுயிர் அவசியம்
நடுகல்லாய் மனிதம் தொலைந்து போகாதிருக்க
நடுக வழி நெடுக மரம்

போதி மரம்

வெட்ட வெட்ட
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும்
மண்ணில் ஆழ வேரூன்றி நிற்கும்
மரம்
மௌன குருவாய்
மனிதனுக்கு போதிக்கும்
சாவை வெல்லும் உபாயம்
"கடவுட் பூமியில்
ஆழ வேரூன்றி நில்"

நரக நகரம்

கான்க்ரீட் காடுகளுக்கு
எருவாக விழுந்த
மனிதச் சருகுகள்

கான்க்ரீட் காடுகள்
பிளாஸ்டிக் பூக்கள்
மனித இயந்திரங்கள்

உயிர்த்தெழுதல்

என் மூளைப் பொறி தன் மறை கழன்று
இருதயக் குழியில் விழுந்தது.
இயந்திர வாழ்வெனும் மரணப் படுக்கையிலிருந்து
மனிதனாய் உயிர்த்தெழுந்தேன் நான்.

மௌனமும் வார்த்தையும்

வார்த்தைகளை உடுத்தியும்
நிர்வாணமாகவே இருக்கிறது
மௌனம்

மௌனக் கடவுளின்
மனித அவதாரமோ
வார்த்தை

மௌனம் தன் மெய்யைத் தொட்டுணர
நீளும் விரல்களோ
வார்த்தைகள்

மௌன இருப்பில்
வார்த்தையாய் இருக்கிறேன்
நான்

மௌனங் களைந்து
நிர்வாணமாய் நிற்கும்
வார்த்தைகள்

மௌனத்துக்கு நன்றி சொல்லத்
தன் நாவு வாலாட்டும்
வார்த்தை நாய்

தன் நாவு வாலாட்டித்
தன்னை வெளிப்படுத்தும்
மௌன நாய்

வார்த்தையுடம்பில்
தன் மெய்யுணரும்
மௌனவுயிர்


நாக வார்த்தையால்
மௌனத் தென்றலைத்
தீண்ட முடியவில்லை

தென்றல் மௌனமாய்த் தீண்டத்
தரம் மாறும்
நாகத்தின் நச்சு வார்த்தை

மௌன அம்மணத்தைச்
சிறிதளவே மறைக்கும்
வார்த்தைக் கோமணம்

வாய் வீச்செல்லாம்
மௌனத்தின் பேச்சே

மௌனத்தில் அடங்கி நின்று
பேசு
வார்த்தைகள் மணக்கும்

வார்த்தைகள் யாவுக்கும்
மௌனமே வாழ்வு

மௌனமே உன் தாய்மொழி
எனவே குழப்பும் வார்த்தைகளாம்
அயல்மொழி மோகத்தை விட்டொழி

நச்சு வார்த்தைகளையும்
ஆகாரமாய் விழுங்கிச் செரிக்கும்
அமர மௌனம்

மௌனத்தை அறியாமல்
வாய் கிழியப் பேசி
வார்த்தையே வாழ்வென
வாழ்வாரோ வாழ்வார்கள்?

ஆச்சரியக் குறிகள்

என்றோ மண்ணுக்குள் புதைந்து போன விதைப் புள்ளிகள்...............
இன்றோ விண்ணை நோக்கி உயர்ந்தெழுந்துள்ள மரக் கோடுகள்|||||||||||||||||||||||
புதைந்தவற்றை உயிர்ப்பிக்கும் மண்ணின் அதிசய ஆற்றல்!!!!!!!!!!!!!!!!!

முட்குரு தீட்சை

காயம் பொய்யென்றான்
காலடியில் மெய் சொன்னது
நெருஞ்சி

புதிய வார்ப்பு

நிசப்த ஓலமிடும் வெண்தாள்கள்
செவிகளில் பறையறைந்து
நெற்றியை விழிக்கச் செய்கின்றன

வெண்தாள்களின் நாவுகளைச்
சுட்டுக் கருக்க
விரல்களுக்கிடையே
நெற்றிப் பார்வை
தீப்பிழம்பாய் நீளும்

அந்நாவுகள் கருகும் நெடி
உறைந்த புலன்களை உருக்கிக்
கவிதையில் வார்க்கும்

உறைந்த ஐந்து
உருகிப் பாய்ந்த பின்
ஆறாகும்
புதிய வார்ப்பு

பரிணாமப் பாய்ச்சல்
அரிது அரிது

உயிர்மெய் ஒருமை

பொய்யான உயிரே
மண்ணில் தெரியும்
மெய்

மெய்யான உடம்பே
விண்ணில் மறையும்
உயிர்

உயிரின் தெரிதல் மெய்
மெய்யின் மறைதல் உயிர்

உயிர் பேயாய்த் திரியாமல்
மெய் பிணமாய்ச் சரியாமல்
தெரிவதை மறைத்தால்
மரணமிலாப் பெருவாழ்வு

உயிரென்றும் மெய்யென்றும் பொருள் இரண்டில்லை

உயிரெனும் மறைப்பொருளே
உடம்பெனும் மெய்ப்பொருளாய்த்
தெரியும்

உடம்பெனும் மெய்ப்பொருளே
உயிரெனும் மறைப்பொருளாய்
மறையும்

பொருள் ஒன்றே
பெயர் இரண்டு
தெரிந்தால் அதன் பெயர் மெய்
மறைந்தால் அதன் பெயர் உயிர்

இருபொருட் பிரமையால்
மரணம்

ஒருபொருட் பிரக்ஞையால்
மரணமிலாப் பெருவாழ்வு

உயிரும் மெய்யும் ஒன்றே அறிக
பேய்ப் பிண பிரமைகள் அறவே ஒழிக

உயிர்ச் சிவமே
மெய்ச் சக்தி

மெய்ச் சக்தியே
உயிர்ச் சிவம்

உயிரின் தரமே
மெய்யெனும் திடமாய்

திடத்தில் தரக்குறைவு
மனப் பிரமை

மனப் பிரமையால் தோன்றும்
நோய் தேய்வு மூப்பு மரணம்

சிவசக்தியெனும் உயிர்மெய் ஒன்றே அறிக
நவசித்தியெலாம் செயச் செய்யும் உபாயம் அதுவே