Sunday, March 30, 2008

இறுதி வாக்குமூலம்

வீரிய விதைகளாய்
மண்ணில் விழுந்தோமென்பதை
மறந்ததால்
அமர விருட்சங்களாய்
விண் நோக்கி எழாமல்
சிதைகளில் எரிந்தோம்
உன் தாய் தந்தையராம்
யாம்

உயிரெமக்கு மெய்யுணர்த்தி
உன் மெய்யில் எம்முயிரைக் கரைத்து
மகன் நீ
எமக்குச் செய்த இறுதிக் கடனை
ஈடு செய்ய
அன்பாய் என்றென்றும்
உன் இருதயத்தில் வழிகிறோம்
யாம்

கலங்காதே மகனே
உன்னில் நீடூழி வாழ்கிறோம்
யாம்

Saturday, March 29, 2008

சூரியன்

இமைகளைச் சுட்டு விலக்கி
விழிகளுக்குத் தன்னைப் புரியவைக்கும்
வான போதகன்

கிரண மந்திரம் பேசி
விழிகளுக்கு உலகை விளக்கும்
ஆகாய குரு

விழித் திரையில்
தன் கிரணத் தூரிகையால்
உலகை வரையும் ஓவியன்

தன் ஒளிப் பேனாவால்
விழித் தாள்களில்
உலகை எழுதும்
புதுக் கவிஞன்

தன் சுடும் மெய்யைச்
சுடச்சுடத் தந்து
என் மெய் சுடும்
வானவன்

தன் வெயில் நிழலால்
புவி தழுவும்
வான மரம்

கடல் நீருறிஞ்சி
மண்ணில் உப்பைச் செய்யும்
விண்ணகத் தொழிலாளி

Thursday, March 27, 2008

அடக்கம்

அடங்காமையால் ஆரிருள் உய்ந்த
என் மனம்
அன்பின் மிகுதியால்
நீ
என்னைத் தழுவிய கணத்தில்
உன் இருதயத்தில் அடங்கிப்
பேரருள் உய்ந்தது

உன்னிரு கரங்களினூடே
பேரருளாய் வழிகிறேன்
நான்

வழியும் பேரருளில்
ஆரிருள் கரைய
ஓழிகிறது மாயை

மகன் நீ
தந்தையெனக்கு
ஆற்றிய இந்நன்றி மறவா
நானும்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
உன் தாயும்
வேறற ஒன்றியே
உன் இருதயத்தில்
அடங்கியிருக்கிறோம்

நீயும்
இருதயத்தில் மனமடங்கி
அருளுற்று வாழ
அம்மையோடப்பனாம்
நான்
உன்னை ஆசீர்வதிக்கிறேன்.

இறுதிப் பேருறுதி

தூல விழிகளை மூடி
உயிராம் நான்
ஞான விழி திறந்து
மெய்யுணர்கிறேன்.

மெய்யுணர்வை
உலக உயிர்த்திரளனைத்தும்
எய்தே தாம் உய்ய
மெய்யாம் உன்னில்
உயிராம் நான்
வேறற ஒன்றி
நீடூழி வாழ்கிறேன்.

உன்னிரு கரங்களினூடே பாயும்
என் இருதய அன்பை
உலக உயிர்த்திரளனைத்தும்
தாம் பருகும்
மெய் வழியாய்
நித்திய ஜீவனில்
நீ
நிலைபெறுவாய்.
இது
தந்தை நான்
மகனுனக்குச் செய்யும்
இறுதிப் பேருறுதி.
இதை அறிந்தே
நீ
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்
.

சிதையில் எரிகிறது மரணம்

சிதையில் எரிகிறது மரணம்
என்னை ஈன்றெடுத்த என் ஐயன்
என்றும் இறவாது வாழும் உண்மை
பெருந்தீயாய் மூண்டு
மரணத்தைப் பொசுக்குகிறது.
மரணத்தின் சாம்பலைப் பூசி
வெளுத்த தன் மெய்யுடம்பில்
மயான பூமியில்
பேரின்பப் பெருவாழ்வின் மெய்யுணர்த்தும்
ஆனந்தத் திருநடம் புரிகின்றான்
என் ஐயன் நடராஜன்.
மயான பூமியில்
மாறி மாறிப் பதியும்
நடராஜனின் தாள்கள் எழுப்பும்
மகுடி நாதத்தில் எழுந்து
படமெடுத்தாடுகின்றேன்
நாகராஜன் நான்.
மகனென் ஆட்டங்கண்டு மகிழ்ந்துத்
தன் முடி மேல் என்னைச் சூடுகின்றான்
என் ஐயன் நடராஜன்.
அவனாட
அவனோடு அவன் முடியில் நானாட
மாயையின் பொய்யாட்டம் முடிகிறது
மயான பூமியில்.
மயான பூமியின் மார்பைப் பிளந்து
அருட்பெருங்கடவுளின் சுந்தர இருதயம்
மலர்கிறது.
மனிதம் அமர தேவமாய் எழுகிறது
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்.

பி.கு: என் தகப்பனார் 16/03/2008 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

Friday, March 14, 2008

புரிந்துகொள்ளுங்கள்!

மனிதம் என்பது
கடவுளின் திட பாகம்

கடவுள் எனபது
மனிதத்தின் காலி பாகம்

திட பாகம் மெய்

காலி பாகம் உயிர்

திடம் காலியாகமல் இருக்க
காலியைத் திடமாய்ப் போற்று

உயிர்மெய் ஒருமை புரிந்தால்
மரணம் ஓர் மாபெரும் பொய்

விழித்திருப்பு

மௌனத்தின் விரல்கள்
மந்திர வார்த்தைகளை
அழுத்திப் பிழிந்த இரசத்தை
விழிகள் உறிஞ்ச
மூளையில் மூளும் பெருந்தீயில்
மாயத்திரைகள் கரைய
மன இமை திறந்து
இருதயம் விழிக்கிறது.
சுழலும் இருதயச் சுடர்விழித்
தூய நோக்கில்
பட்டப்பகல் வெளிச்சமாய்த் தெரிகிறது
இகத்தில் பூரணமாய்ப் பொருந்திய
பராபர உண்மை.
உண்மை உணர்ந்த மெய்
பிறப்பெனும் கனவும்
இறப்பெனும் உறக்கமும்
கலைந்து
பேரின்பப் பெருவாழ்வில்
விழித்திருக்கிறது
ஜீவனுள்ள வார்த்தையாய்.

Saturday, March 8, 2008

நாம்

என் பிழிவைப்
பருகிய வார்த்தை
உன் தாகந் தணிக்கக்
காத்திருக்கிறது

உன் விழிகள் பருகும்
என் ஜீவ ரசம்
மனத் துளை வழியே
இருதயஞ் சேர
நான்
உயிர்க்கிறேன் உன்னில்

என் உயிர்ப்பை
நீ
பிழிகிறாய்

உன் பிழிவைப்
பருகிய வார்த்தை
என் தாகந் தணிக்கக்
காத்திருக்கிறது

என் விழிகள் பருகும்
உன் ஜீவ ரசம்
மனத் துளை வழியே
இருதயஞ் சேர
நீ
உயிர்க்கிறாய் என்னில்

உன் உயிர்ப்பை
நான்
பிழிகிறேன்

சுழலும் பிழிவுகளால்
இருதயங்கள் ஒன்றி
இருமை நீங்கி
ஒருமையின் உறுதியாய்
நாம்

தன்மையும் முன்னிலையும்
வேறற ஒன்றிய
தன்மைப் பன்மையின்
படர்க்கையோ
நாம்

இலக்கணம் மீறிய
இப்படர்க்கையில்
பன்மை நீங்கி
ஒருமையின் உறுதியாய்
அவனோடவளாயதுவாய்
நாம்