Wednesday, October 22, 2008

நாயகனின் பேருபதேசம் 9

நித்திய இயற்கையுண்மையதாய்
எங்கும் இன்புற்று விளங்கும் அன்பொன்றே
ஒவ்வொன்றிலும்
கண்டு
கேட்டு
உண்டு
உயிர்த்து
உற்று
அறியும்
எழுமையாம்
என் பெருமை.

அன்பொன்றே
எல்லாந் தழுவிய
என் முழுமை.

அன்பொன்றே
என்றும் மாறா
என் பழமை.

அன்பொன்றே
அலகிலாப் பன்மையாய்
உலகில் பரவும்
என் ஒருமை.

அன்பொன்றே
சுடச் சுடச் சுடரும்
என் புதுமை.

அன்பொன்றே
அமுதாய் வழியும்
என் தண்மை.

அன்பொன்றே
பூரணமாய் நிறைந்த
என் தன்மை.

அன்பொன்றே
தயவாய்த் தழுவும்
என் தாய்மை.

அன்பொன்றே
அருட்பேராற்றலாய் எழும்
என் ஆண்மை.

அன்பொன்றே
அறிவாய் விளங்கும்
என் குரு மெய்.

அன்பொன்றே
இருள்சேர் இருவினை அறுக்கும்
பொருள்சேர் இறைமையாம்
என் கூர்மை.

அன்பொன்றே
எல்லாம் அசைவிக்கும்
அசையா என் நிலைமை.

அன்பொன்றே
சொல்லறச் சும்மா இருக்கும்
என் மேன்மை.

அன்பொன்றே
தங்கு தடையின்றிப் பாயும்
என் நீர்மை.

அன்பொன்றே
எப்போதும் வெல்லும்
என் வாய்மை.

அன்பொன்றே
எல்லாங் கடந்தும்
எதிலும் இறைந்த
என் உண்மை.

அன்பொன்றே உன் "ஐ"
உறுதியாய் உயிரதனைப் பற்றி
"ஐ" அறிவின் கண் ஆறறிவும் ஓடுங்கி
மன ஆரவாரம் அடங்கி இதமாய் ஆறு.
ஜீவ ஆறு சேரும் சிவ ஆழியாய் எழு.
ஆறு தாண்டிய ஏழு என்னை எட்டு.
என் வெள்ளங்கி உனக்குக் கிட்டும்.
பொன்னுடம்பாய் உன் மெய் மின்னும்.
"அன்பே யாம்" என்னும் ஓமயத்தில் நீ உய்வாய்.

சுத்த சிவ துரியாதீதத்தில்
என்றென்றும்
யாம் இருப்போம்
நானே நீயாக
நீயே நானாக
அன்பொன்றாய்.