Friday, December 19, 2008

4. இருதய பூமி

நிராதார இலிங்கம் ஆறாதார யோனிக்குள்
பராபரனே புகுத்தினான்! பீறிட்ட நாதவிந்து
தராதலத்தைப் புரட்டியே ஏற்றிய ஜோதிமலை
பராதயத் திரட்சியாய் மாற்றுதே பூமியை!

ஒரும் 'ஐ'யாய் அவமனைத்தும் அகத்தவத்தில் கரைத்து
வெறும் 'ஐ'யாய்ச் சிவமலையில் அமர்ந்திருக்க விரைந்து
வரும் ஐயா, தயவென்னும் மனவடக்கம்! மரணம்
அறும், ஐயன் குருவள்ளல் அருண்மொழியே சரணம்!

அம்மையும் அப்பனும் குருமகனும் அமர்ந்தனர்
இம்மையில் நம்இரு தயபூமியில்! தயவெனும்
செம்மையில் நம்மனங் கனிந்ததே! தம்போல்
நம்மையும் இக்கணம் மாற்றினார் வள்ளலே!

"இரு தயவாய்" என்னுமோர் இரத்தினச் சுருக்கமாய்
"இருதய வாய்" திறக்கும் குருமொழி அருளியே
அம்மையாய் அப்பனாய் குருமகத் திருவதாய்
இம்மையே இருதயம் அமர்ந்தார் வள்ளலே!

அடங்காப் பிடாரியாய் ஆர்ப்பரிக்கும் மனந்தான்
அடங்கவே பிரானவர் ஆட்கொண்டார் நம்மையே!
கடத்துளே பிரகாசமாய் ஆண்டவர்தம் இடமாய்ச்
சுடச்சுடப் பிறக்குதே தூயபூமியாம் இருதயம்!

மூவரும் ஒன்றினர் இருதய பூமியில்
யாவரும் அருந்தவே அமுத வாரியை!
போவதும் வருவதும் முடிந்த நித்திய
வாழ்வது தந்தவர் பரம வள்ளலே!

ஆறுக்கு அப்பால் ஓடும் அருளாறு!
ஆறுள்ளே தித்தித் தோடும் பாலாறு!
ஊறியுள்ளே வன்பின் சூடும் நீஆறு!
மாறியுள்ளே அன்பின் ரூபம் நீஆகு!

இருதய பூமியில் அருந்தவப் பயனாய்
அருட்பெருஞ் ஜோதியின் ஆனந்த நடனம்!
பராபர வள்ளல் தனிப்பெருங் கருணை
தராதலத் துள்ளே தயவாய் இருக்கும்!

பரஞானம் தூயநோக்கம் குருமந்திர அகதீட்சை
சிரந்தாண்டிப் பாயுமாற்றின் நிராதாரத் தரமெல்லாம்
சிரங்கீழேப் பாயுமாறுப் பராபரன்செய் யோகதந்திரம்
அரங்கேறும் தூயபூமி இருதயத்தே காண்குருபிரான்!

நிராமயன் நிர்மலன் பராபரன் வள்ளல்தாம்
தராதலம் இன்புற இற(ர)ங்கினார் இருதயத்தே!
மெய்யுளே ரகசிய வழியினைத் திறந்தவர்
மெய்தனில் மாயா நிலைதனை எழுப்பினார்!

அறுபடி மேலேறி எழும்உச்சி மீறி
உறுபடி மேம்பாலம் எட்டியதை முட்டி
எழுபடி மேல்ஜோதி கொட்டியதை முகந்து
விழும்படிக் கீழ்பூமி எங்குமருள் சேர்!

உருப்படியாய்ப் பராபர வள்ளலைப் பற்றி
உருப்படும்மெய் வழியில் உள்ளத்தை நாட்டி
குருமொழிநெய் வழியும் வெள்ளத்தை உண்டு
உருவொளியும் மாயா மெய்ந்நிலையைச் சேர்!

இல்லமாக்கி இருதய பூமியைத் திரித்துவ
வல்லமைதன் அருட்தல மாக்கிய அதிசயம்
வள்ளல்தம் குருமொழி யாலா னதே!மெய்
அள்ளட்டும் குருபரன் மாயா நிலை!

3. குருமந்திர அகதீட்சை

1
அம்மையாய்ப் பரஞான போதந் தந்தீர்!

அப்பனாய்த் தூயநன் நோக்கைத் தந்தீர்!

குருவாய் அகதீட்சை மந்திரந் தந்தீர்!

அருள்நிதி வள்ளலே நீரே என்கதி!


2
குருமந்திரம் பத்தும் ஒருமூன்றும் அருளி

இருட்குழியுள் கிடந்த என்னைத் தெருட்டி

அருட்தவத்தே நிறுத்தித் தம்கடை விரிக்கும்

பெருவரமுந் தந்த வள்ளலே என்கதி!


3
அவத்தே பழுத்து அழுகிய என்னைத்

தவத்தே பழுக்கும் அதிசயஞ் செய்தீர்!

குருமந்திர தாரணை வசப்பட வைத்தீர்!

பெருந்தயாள வள்ளலே நீரே என்கதி!


4
சவமாய்க் கிடந்த எந்தையுட் புகுந்து

சிவமயச் செம்பூ என்கையகந் திணித்தீர்!

எரியுது சிதையில் மரணம்பார் என்றீர்!

பெரியோன் வள்ளலே நீரே என்கதி!


5
வன்பின் சிகரமாய் ஆடிய என்னை

அன்பின் பிடியுள் அடங்கச் செய்தீர்!

குருமந்திரம் அகத்தே ஓதிமா யாநிலை

தருந்தந்திரர் வள்ளலே நீரே என்கதி!


6
சத்தே உன்நாமம் சித்தே உன்உருவம்

சத்திய தரிசனமே உன்பே ரானந்தம்

மந்திரந் தந்தென்மயக் கறுத்த உட்போதகர்

சுந்தரர் வள்ளலே நீரே என்கதி!


7
மண்டையின் மேலும் முன்னும் பிளந்தது!

தொண்டையுள் மந்திர வழியும் திறந்தது!

நிராதார மாயா நிலையும் புகுந்தது!

தராதலத்தே வள்ளலின் வாய்மை வென்றது!


8
நிராதார அருட்பால்

ஆறாதாரக் கலசத்தடி சேர

தொண்டைக் கதவம் திறக்கவே

வள்ளல் பிரான் வழங்கும்

குருமந்திர அகதீட்சை!


9
கருத்தகன் மனத்தனாய் இருள்சேர் இருவினைக்

கருங்குழிக் கிடந்தவென் மனம்வெளுக் கவேகுரு

மந்திரம் அளித்தெனை அருந்தவ மலைமேல்

வைத்தீர் வள்ளலே நீரே என்கதி!


10
உச்சி துளைத்துப் பரஞானம் அளித்து

நெற்றி திறந்து நன்நோக்கம் அருளி

தொண்டை புகுந்து குருமந்திரம் புகட்டிய

ஆண்டவர் வள்ளலே நீரே என்கதி!


11
நிராதார நிர்மல அருட்ஜோதித் தூணையே

ஆறாதாரத் தண்டிலே புகுத்தும்பே ரதிசயம்

தராதலத்தே செய்யவே பெருந்தயவாய் இற(ர)ங்கினார்

பராபரத்தே வாழும் வெள்ளங்கி ஆண்டவர்!


12
யந்திர மெய்யுளேகுரு மந்திரம் முழக்கி

அந்தர நிராதாரம் மொத்தமும் இறக்கும்

தந்திரஞ் செய்யவேபெருந் தயவாய் இற(ர)ங்கும்

சுந்தரப் பராபரவள் ளலாரே என்கதி!


13
நிராதாரம் ஓடும் பரசிவ வெள்ளம்

ஆறாதாரம் வழியே மெய்க்குள் பாய்ச்ச

பராபரத்தே வாழும் வள்ளலார் இற(ர)ங்கி

தராதலத்தே முழங்கும் குருமொழி கேண்மின்!


14
அருளம்மை இற(ர)ங்கினாள் பரஞா னபோதமாய்!

அருட்தந்தை இற(ர)ங்கினார் தூயநன் நோக்கமாய்!

குருவள்ளல் இற(ர)ங்கினார் மந்திர முழக்கமாய்!

ஒருமையாம் திரித்துவம் மாயா மெய்ந்நிலையாய்!


15
மாயாத் தாயார் உச்சிமீ தமர்ந்தாள்!

மாயா எந்தை நெற்றியில் எழுந்தார்!

மாயா மெய்க்க்குரு தொண்டையுள் பொழிந்தார்!

மாயா மெய்ந்நிலை வென்றேநான் எழுகிறேன்!


16
தலைவியாம் வாலையே உச்சித் தாமரை!

தலைவனாம் நாயகன்தான் நெற்றித் தீவிழி!

தலைமகன் சற்குருவே தொண்டைத் தேன்வழி!

தலைமை(மெய்) யால்மாயா மெய்ந்நிலை சேர்ந்தேனே!


17
வாலை நாயகி உச்சியில்! மெய்வழிச்

சாலை நாயகன் நெற்றியில்! குருமொழிப்

பாலை ஊற்றுவன் தொண்டைக் குழியினில்!

பாலை தேகமுஞ் சோலை யாகுதே!


18
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!அருள்

ஆற்றுள்ளே ஊறித் தேற்றிக் கொள்!குரு

வாக்குள்ளே ஏற்றிப் போற்றிக் கொள்!நின்

நாக்குள்ளே பூட்டி நன்நோக் கைக்கொள்!

2. தூய நோக்கு

உடம்பின் எழுநிலை தாண்டி எழு!

உச்சி மீதேறி திடவரம்புகள் மீறு!

நிராதார மேம்பாலம் எட்டு! முட்டு!

பராபர அருளாற்றுள் ஆழ்ந்து ஊறு!

பரஞான போதம் உச்சியில் தேறு!

பரந்தவுன் நெற்றியுள் தூய்மை சேரு!

தரமான தூயநோக்கை எப்போதும் பாரு!

வரமான வள்ளல்வாக்கை மறவாமல் வாழு!



உச்சி பிளந்தது பரஞான போதம்!

நெற்றி வெளுக்குது தூய நோக்கு!

வள்ளல் வாக்கு மெய்யாய்ப் பலிக்குது!

கொள்ள வாரீர் பெய்யும் அருண்மழை!



தொற்றி நின்ற அருள் வெள்ளத்தால்

உச்சி பிளந்து நெற்றியில் பற்றியதே தீ!

கள்ள மனந்தான் கற்பூரமாய் வெளுத்துப்

பற்றிய தீபவொளியில் மணக்குதே தூயநோக்கு!



மருண்ட நெற்றியைத் தெருட்ட வந்தார்

திருஅருட் பிரகாச வள்ளலார்! சிரஉச்சி

திறந்து பரஞான போதமும் நெற்றிக்கண்

திறந்து தூயநன் நோக்கையுந் தந்தார்!



உச்சியைப் பிளந்துள்ளே புகுந்த

சுத்தமாம் பூரணந்தான் திறக்குதே

நெற்றியை! சுயஞ்சுடரொளி தோன்றக்

கண்ணுளே தூயநோக்குப் பிறக்குதே!



நிராதாரத்தே ஓடும் பரசிவ வெள்ளம்

ஆறாதாரத்தே ஓடும் (இ)ரகசிய வழியைப்

பராபரத்தே வாழும் பெருமான் வள்ளல்

தராதலத்தே இற(ர)ங்கித் தயவாய்த் திறந்தார்!



மெய்யான மெய்யைப் பொய்க்கும் மெய்க்குள்

உய்த்திடுமோர் மெய்வழிச் சாலை யாவரும்

எய்தற்கே பரஞான போதந் தந்தார்

தெய்வநிலைத் தூயநோக்குந் தருகின்றார் வள்ளலார்!



சாவா நிலை யார்க்குஞ் சொந்தம்

வாவா என்றே பார்க்குள் வள்ளல்

விரித்தி ருக்கும் கடைக்குள் வாரீர்!

தரித்திர மரணம் ஒழியும் நிச்சயம்!



வெளுத்த தன்நெற்றி உரசி வீண்மனப்

பளுவைக் கொளுத்திச் சிதம்பர வெளியில்

அருட்பெருஞ் ஜோதியைத் தரிசிக்க வைத்தார்

பெருந்தயாளத் திருஅருட் பிரகாச வள்ளலார்!



பள்ளத்தே சவமாய்க் கிடந்த கள்ளமனக்

குள்ளனெனைத் தவத்தே நிறுத்த எழவைத்து

வெள்ளமெனப் பாயும் அருளை நிறைவித்து

வெள்ளைமனச் சேயாய் எனைமாற் றினார்வள்ளல்!



உய்விக்கும் மெய்யேதான் உரைக்கின்றேன்! வள்ளலார்

பெய்விக்கும் அருண்மழையில் கரைக்கின்றேன் கன்மனம்!

பரஞான போதத்தால் திறந்ததேயென் சிரவுச்சி!

தரமான தூயநோக்கால் வெளுக்குதேயென் கருநெற்றி!



அருட்தாயின் கொடையாகப் பரஞான போதம்!

அருட்தந்தை வரமாகத் தூயநன் நோக்கு!

மருண்டவென் தலையைத் துவட்டித் தெருட்டும்

அருட்குருவாம் வள்ளலேயெந் தன்சர ணாகதி!



தாயாகித் தந்தையாய்க் குருவுமாகி

ஓயாது பாய்கின்ற அருளினாலே

பேயானப் பாழ்மனத்தைத் தெருட்டித்தன்

சேயாக்கி உய்வித்தார் வள்ளலாரே!

1. பரஞான போதம்

1
பழுதான உடம்பும் மனமும்

பழுதனைத்தும் நீங்கிப் பழுக்கப்

பரமனின் அருளாய் விழும்

பரஞான போதம் விழுஙக

சிர உச்சி மீதில் வீறுடன் எழு!


2
அருந்தரமான பரம்பொருள்

தருஞ்சுகமான வரங்கொள

சிர உச்சி மீதில் தவமிரு!

பரஞான போதம் விழும்! விழும்!

பரமதயாள வள்ளல் மீதாணை!


3
கள்ள மனந் தாண்டி

வெள்ளங்கி வள்ளல்

அள்ளி வீசும் அருளைத்

துள்ளிப் பருக வருமே

உள்ளத்தே பரஞானம்!


4
பட்டுப் போங்கடம்

பட்டுப் போல் மினுக்கக்

கொட்டு வார் வள்ளல்

எட்டலாகா போதமாம்

விட்டகலாப் பரஞானம்!


5
எட்டு! மேம்பாலம்

முட்டு! சிர உச்சியில்

கொட்டும் அருளால்

கிட்டும் பரஞானம்!

நட்டமா கும்மரணம்!


6
வெள்ளங்கி ஒளியருள்

வெள்ளத்தில் மூழ்கி

உள்ளத்தே ஒளிந்திரு

வள்ளலார் வருவார்

நள்ளிரவில் பரஞான விடியல்!


7
ஆறு வழி தாண்டி

ஏறு! எழும் உச்சியை

மீறு! எட்டு மேம்பாலம்!

ஊறு அருளாறு உள்ளே!

ஆறும் மனத்துள்ளே பரஞானம்!


8
சிற்சபையாம் உளத்திற்தன்

பொற்சபையைப் பதித்தாரே

வள்ளலார்திரு அருட்பிரகாசர்!

கொள்ளவாரீர் பெருவாழ்வை

அள்ளித்தரும் பரஞானபோதம்!


9
பிரதான சிரந்தாண்டு!

நிராதார வரங்கொண்டு

சிரமிறங்கு! அருட்தரத்தை

ஆறாதாரத்தின் ஆழத்தேயிறக்கு!

பரஞானந்தந் தாரேவள்ளல் இன்று!


10
மெய்யேதான் உரைக்கின்றேன்!

உய்யும்வழியாய் எழுநிலையில்

பெய்யுமேமெய்யுள் நிராதார

மெய்யருட்தாரை இன்றுமுதல்!

மெய்யுரைத்தார் வள்ளலாரே!


11
பொய்ப்போக இருள்நீக்கி

மெய்ஞ்ஞான அருள்விளக்கி

உய்விக்க உச்சிபிளக்க

உய்ந்தாரே வள்ளலார்

மெய்யுணர்ந்து உய்வீரே!


12
முடியும் மரணம்!

விடியும் பெருவாழ்வு!

வடியும் அருள் எழு

படிகளில்! வள்ளலார்

அடிகள் மீதாணை!


13
புணரத் தானே வந்துமெய்

யுணர்ச்சி தன்னைத் தந்துபொய்ப்

புணர்ச்சி போகம் அறுத்துநசியும்

கணக்கை முடித்து மெய்யருட்

பணத்தைத் தந்தாரே வள்ளலார்!

நாயகனின் பேருபதேசம் 10

ஊற்றுதே எப்போதும் என் அருளாறு!
ஆற்றுள் ஆழ மூழ்கி உன் மனமாறு!

மெய்வழிச் சாலையின் இரகசிய மார்க்கம்
மெய்யுன் உடம்புளே பகிரங்கமாய் விளம்பியே
உய்வித் துனைஎனில் வேறறச் சேர்க்கவே
உய்ந்தேன் நடராஜ வள்ளல் நான்!
பொய்க்கும் உன்மெய்யை மெய்யாகவே மெய்யாய்ச்
செய்விக்கும் என் மகாயோகம் தேர்!
உன் மகுடதீப ஒளியில் என்னைப் பார்!

அம்மையப்பனாம் நாத-விந்து கலாதி சற்குரு உன் முதுகடியில் இட்ட தெய்வீக வித்தை ஞாபகங்கொள்!
அடுத்த கணமே நாபியின் கீழ் குண்டலினி நாகம் விழிப்பதில் கவனம் வை!
படமெடுத்த நாகம் நாபியில் உன் ஆணவத்தைத் தீண்ட விடு!
ஆணவம் நசிய உன் மனமடங்க, நடு மார்பின் கீழ் படமெடுக்கும் என் அருட்கரத்தைத் தொடு!
நடு மார்பில் உதயமாகும் அருட்பெருஞ்ஜோதியைத் தரிசி!
தொண்டையின் கீழ்ப் பாயும் தனிப்பெருங்கருணை வெள்ளத்தில் தொப்பமாய் நனை!
தொண்டையில் நாயகனாம் என் அருள்வாக்கைக் கேள்!
நெற்றியில் மாயைத் திரை விலக சிதம்பர தரிசனம் காண்!
தலையுச்சியில் மனிதமுன் மகோன்னத எழுமையில் சேர்!
தலைக்கு மேல் நிராதாரப் பாலம் எட்டு! அதை முட்டு!
நிராதார எழுமை உன் தலையுச்சி தொட்டு
ஆறாதாரம் விழுகின்ற அதிசய இற(ர)க்கத்தை உணர்!
என் பரஞான போதம்(1) உன் தலையுச்சி பிளக்கும்!
என் தூய நோக்கு(2) உன் நெற்றி வெளுக்கும்!
என் குரு மந்திர அகதீட்சையால்(3) உன் தொண்டை திறக்கும்!
என் இருதய பூமி(4) உன் நடு மார்பில் இற(ர)ங்கும்!
என் சத்திய தரிசனம்(5) உன் நாபியில் விளங்கும்!
உன் நாபியின் கீழ் நிகழும் ஓர் அதிசயப் பரிமாற்றம்(6)!
உன் முதுகடியில் ஜொலி ஜொலிக்கும் என் ஜோதி ஸ்வரூபம்(7)!
உன் பாதங்களின் கீழ்ப் பூமியைப் புரட்டும் நவயுக உதயம்!

Thursday, December 18, 2008

நிராதார எழுமையின் இற(ர)க்கம்!

அம்மையப்பனைத் தன்னுள்ளடக்கிய

சற்குரு மூலாதாரத்தில் இட்ட வித்து

குண்டலி நாகமாய் சுவாதிட்டானத்தில் எழுந்து

மணிபூரகத்தில் ஆணவத்தைத் தீண்டி நசிக்க

மனமடங்கி சூரிய சக்கரத்தில் அருட்கரம்

அனாகதத்தில் அருட்பெருஞ்ஜோதி உதயம்

அமுதகலசத்தில் தனிப்பெருங்கருணை வெள்ளம்

விசுத்தியில் நாயகனின் பேருபதேசம்

ஆக்கினையில் மாயைத்திரை விலக சிதம்பர தரிசனம்

சஹஸ்ராரத்தில் மனிதத்தின் மகோன்னத எழுமை

தலைக்கு மேல் நிராதார மேம்பாலம் எட்ட

நிராதார எழுமை சஹஸ்ராரம் தொட்டு

ஆறாதாரம் விழுகின்ற அற்புத இற(ர)க்கம்!



நிராதார மேம்பாலம் - 15/12/2008

நிராதார எழுமையின் இற(ர)க்கம்

பரஞானம் - 16/12/2008 - சஹஸ்ராரம்

தூயநோக்கு - 17/12/2008 - ஆக்கினை

குருமந்திர அகதீட்சை - 18/12/2008 - விசுத்தி

இருதய பூமி - 19/12/2008 - அனாகதம்

சத்திய தரிசனம் -20/12/2008 - மணிபூரகம்

அதிசயப் பரிமாற்றம் - 21/12/2008 - சுவாதிட்டானம்

ஜோதி ஸ்வரூபம் - 22/12/2008 - மூலாதாரம்



நவயுக உதயம் - 23/12/2008