சிதறிய கூறில்
முழுமையின் ஞாபகம்
மூளும் போது
ஆனந்தக் கூத்தாடி
ஆதி முதலைச் சேரும்!
தலையில் உதயமாகும்
பிறை நிலவுக் கிண்ணத்தில்
இருதய அன்பின்
திரண்ட கவளம்
அள்ள அள்ளக்
குறையாது வளரும்!
மேலே பற்றிய பத்தில்(கை விரல்கள்)
ஆகாயம் கீழிறங்க
கீழே பற்றிய பத்தில்(கால் விரல்கள்)
பூமி மேலேற
தலை பற்றிய இருதயச் சுழியுள்
நிலை பெற்ற ஒன்றாய் நான்!
ஆதி முதலைச் சேருங் கனவு
உறக்கத்தில் சலனஞ் செய்ய
மெய்க்குள் விழிக்கிறது உயிர்!
சிறு துகள் என்னில் இறங்கும்
முழுமையின் இரக்கம்
ஏற்படுத்தும் அனுபவம்
பேச முடியாமல்
ஆனந்தக் கூத்தாடுகிறேன்!
சிதறிய கூறில்
விழுந்த முழுமை
எழுந்து ஆடுது!
சிதறிய கூறும்
விழித்தே தன்னை
முழுதாய் உணருது!
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்