Showing posts with label கரும்பா. Show all posts
Showing posts with label கரும்பா. Show all posts

Saturday, January 29, 2011

வயல்வெளி வட்டங்கள் - 15

முதுகுத் தண்டில் இறங்கும் அருளால்
மனிதத் தும்பி பறக்கும்

Friday, January 28, 2011

வயல்வெளி வட்டங்கள் - 14

முன்பின் இடவலம் மேல்கீழ் வழியும்
அன்பின் சுழியே நெஞ்சம்

Wednesday, January 26, 2011

வயல்வெளி வட்டங்கள் - 13

அருட்கோப்பை கவிழப் பொருட்கோப்பை நிரம்ப
மருள்மாயை கழியும் நவயுகம்

வயல்வெளி வட்டங்கள் - 12

வானம் பூமி நடுவே மனிதம்
பாலம் ஆகும் உயிர்மெய்

வயல்வெளி வட்டங்கள் - 11

ஈரேழு உலகங்கள் ஓரேழில் அடங்கும்
ஓரேழும் இருதயத்துள் அடங்கும்

ஈரேழு உலகங்கள் = வெளியிருக்கும் 14 வட்டங்கள்
ஓரேழு = மெய்யுடம்பு = அடுத்து உள்ளிருக்கும் 7 வட்டம், ஏழு சக்கரங்களைக் குறிக்கும்
இருதயம் = உள் வட்டம்

வயல்வெளி வட்டங்கள் - 10

எட்டுமடல் அமுத கலசந் திறந்து
கொட்டிவிடு தயவை இகத்தில்

வயல்வெளி வட்டங்கள் - 9

உயிர்மெய் மனமெனும் மூன்றின் திடத்துள்
உறையும் சிவசத்தி குரு

வயல்வெளி வட்டங்கள் - 8

பேரன்பே அண்டமாய் அணுவாய் உருவான
பேருண்மை பிண்டத்தில் காண்

வயல்வெளி வட்டங்கள் - 7

அகம்"நான்" அருவே நான்முக உருவாம்
அகழ்ந்தால் அருளே பொருளாம்

வயல்வெளி வட்டங்கள் - 6

உள்ளே சுழிந்து அன்பை விளங்கி
உலகில் தயவாய் வழி

வயல்வெளி வட்டங்கள் - 5

ஆறுமுகந் தாண்டி ஏழாம் அதோமுகம்
காணுமகத் தூன்றி இரு

வயல்வெளி வட்டங்கள் - 4

பரத்தையும் இகத்தையும் இணைத்து மெய்க்குள்
பரவும்நல் உயிர்ப்பையே எட்டு

Tuesday, January 25, 2011

வயல்வெளி வட்டங்கள் - 3

இருவிழி நடுவே திருவிழி திறக்கும்மெய்க்
குருவழிப் படவே தவம்

வயல்வெளி வட்டங்கள் - 2

சுழிந்துள்ளே இருதயச் சுழியுள்ளே ஆழியாய்ச்
சுழல்கின்ற அறுமுக தரிசனம்

வயல்வெளி வட்டங்கள் - 1

இகபர வட்டங்கட் கிடையே திருநில
இருதய வட்டத்துள் மெய்வழி

Sunday, January 23, 2011

கட!உள் - 4

சடங்குத் தடபுடல் தவிர்த்து உள்ளே
கடக்கும் அகத்தவம் செய்

செய்யது தவத்தால் அகமது திறக்கப்
பொன்னுரு முகமது நூர்
(நூர் = ஒளி என்று பொருள் படும் அரபு மொழிச் சொல்)

நூரதைக் காணாய் வேரதைச் சேராய்
தூலமே காண்பாய் நீ

தூலமே காணும் ஊனப் புலனால்
ஞானமோ காண்பாய் நீ

தூலஞ் சூக்குமந் தாண்டிய அதிசூக்கும
நூரே ஞால வேராம்

ஞால வேரைக் காட்டும் ஞானம்
நேசா தார மோனம்

நேசா தார மோனம் புரியா
நாகப் பிதற்றல் அஞ்ஞானம்

நேசா தாரஞ் சேரு நீயே
பேசா தாகுஞ் ஞானம்
(நேசாதாரம் = இருதயம், அனாகத சக்கரத்து மேலுள்ள அமுத கலசமாம் தைமஸ் சக்கரம்)

Friday, January 21, 2011

கட!உள் - 3

பழம்பெருங் கடவுளே நவமான புதியவன்
பழமென இனிப்பான் கட!உள்

கட!உள் மந்திர ஆணை ஏற்றே
கடவுளும் கடக்கிறான் உள்ளுள்

இதுவல அதுவல கடவுள் உதுபல
இதுக்களின் அதுக்களின் ஆதி
(உது = தமிழுக்கே உரித்தான மெய்ஞ்ஞானச் சுட்டு)

இதுவென அதுவென இறுகும் ஆணவம்
உதுவெனும் நடுநிலை ஆண்டவம்

நாகக் கண்ணாடியால் நானது பார்த்தால்
நாக வண்ணத்ததாய்த் தெரியும்
(நாகம் என்ற ஒரு வித வண்ண மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு, நான் என்பதைப் பார்த்தால், நாக வண்ணத்ததாகவே "நான்" உனக்குப் புலப்படும்)

நாகக் கண்ணாடி கழற்றிப் பார்த்தால்
நானார் தூய படிகம்

அஞ்ஞானத் திருக்கும் நாகம் பேசும்
மெய்ஞ்ஞானம் எதற்கு நினக்கு

நெஞ்சுள் ளிருக்கும் நாதன் பேசும்
மெய்ஞ்ஞா னங்கேள்! கட!உள்

இங்குளான் அங்குளான் என்றே ஏய்ப்பார்
உங்குளான் நெஞ்சுளே கடவுள்(கட!உள்)

கடந்தால் உள்ளே நானார் யாமென
விரியும் ஒப்பில் அனகம்
(ஒப்பில் அனகம் = ஒப்பிட முடியாத அகம் புறம் என்று பிரித்திட முடியா அனகம் என்னும் அத்துவிதம், அத்வைதம்)

Thursday, January 20, 2011

கட!உள் - 2

கடக்காமல் உள்ளே இல்லை கடவுள்
கட!உள் கடந்தால் உண்டு!

பொய்ம்மடம் கற்கோயில் வீண்சடங்கு எதற்கு
மெய்க்கடத் துள்மார்புள் கடவுள்

குருவென்னும் உருபின்னே உருண்டோடுங் கூட்டம்
குருவென்பார் இருதயத்தே ஒளிந்தார்

காலில் விழத்தான் சொல்லுமோ தலைகை
காலில் அருவாங் கடவுள்
(இரண்டாவது காலில் = கால் இல் = கால் இல்லாத)

உருவத்தில் உள்ளான் அருவத்தில் அடங்கான்
கருமத்தில் உழல்வான் தான்

கல்லில் வடிக்க லாகாக் கடவுள்
சொல்லி லும்பிடி படான்

ஆத்திக ஆடம்பரம் நாத்திக வீண்வாதம்
தாண்டிடு தேகம்நடு கட!உள்

சுருண்ட நாகம் விழித்து மேலேற
தெருண்ட நல்ல பாம்பு
(தெருண்ட = தெளிவுற்ற)

முதுகுத் தண்டும் மூளையும் போதிமரம்
இ(ரு)தயம் ஞானப் பழம்

கட!உள் - 1

வாதம் விவாதம் விட்டுக் கட!உள்
நேசம் விட்டேது கடவுள்?

தன்னை நம்பித் தன்கைப் பற்றத்
தன்னைக் காட்டுங் கடவுள்

அன்பை உணர அவகாச மின்றேல்
இல்லை நமக்குக் கடவுள்

பேரிலா அன்புக்கு பேர்பல சூட்டிப்
பேதமாய்ச் செய்வாயேன் கடவுள்

கட!உள் அன்புணர்! அதுவரை நினக்குக்
கடவுள் என்பது வெறுஞ்சொல்

வறுமையும் பசியும் உயிரை வாட்ட
வெறுஞ்சடங்கால் வசியுமோ கடவுள்

ஒருகல் மதிப்பாய் மறுகல் மிதிப்பாய்
ஒருமை சிறிதும் இல்லாய்

கல்லுக்குஞ் செம்புக்குங் காசுமேல் காசுமெய்
இல்லில்வாழ் ஏழைக்கில் சோறு

கேள்விகள் அற்று ஏகாரம் பெற்றால்
நானெனும் ஒன்றே கடவுள்

அஞ்ஞான நாகம் மெய்ஞ்ஞானம் பிதற்றும்
அன்பான நானோ மன்னித்தேன்