Wednesday, July 9, 2008

பரமானந்தம்

சஹஸ்ரார முடிவாம் உச்சித்தாமரை திறந்தது
மூலாதார முதலாம் குண்டலிநாகம் எழுந்தது
நிராதார மேனிலை ஆறாதாரம் புகுந்தது
பராபர அருணிலை மெய்வழிப் பாய்ந்தது
ஜெயராம இராஜ்ஜியம் பூமியில் மலர்ந்தது
பாரபட்சம் பாராப் பேரன்பே ஆண்டது

மன்றத்தில் விழித்தது பொன்றாத நெருப்பூ
குன்றின்மேல் வைத்தது போன்றதாம் சுடர்ப்பூ
கண்டத்துள் விழுந்தது தெள்ளமுதக் களிப்பூ
பண்டத்துள் எழுந்தது மெய்யென்னுஞ் சிலிர்ப்பூ
மாயத்திரை கிழிந்தது நெஞ்சின்மேல் ஒளிப்பூ
பேயாட்ட மனமடங்கி இருதயத்தில் இருப்பூ

இருதயவாய் திறந்தது நெஞ்சின்கீழ் கதிர்ப்பூ
திருக்கமலம் மலர்ந்தது நாபிக்குள் பூரிப்பூ
பெருந்தயவாய் விழுந்தது அருட்ஜோதி இறைப்பூ
அருட்கடவுள் எழுந்தது முதுகடியில் உயிர்ப்பூ
அருளாட்சி வென்றது நவயுகத்தின் படைப்பூ
ஒருமைக்குள் வந்தது பல்லுயிர்த்திரட் தொகுப்பூ

விளைவு

வளைந்து சுருண்டு
படுத்துக் கிடந்த
நான்
உம் விளைவு
மகுடிக் கவிதை நாதத்தில்
மயங்கி விழித்து
எழுந்தாடுகிறேன்

என் பாதம் வரை
பரவிய
உம் நாத ஜோதியின்
விளைவாய்
உயிர்ப்புள்ள சிலுவையாய்ப்
படமெடுத்து நிற்கிறேன்

இரு வேறு கோணங்கள் என்னில்

உச்சி முதல் பாதம் வரை நிற்கும்
என் செங்குத்துக் கோணம்
கிறிஸ்துவின் சத்தியம்
என்னில் பரவியதன்
விளைவு

இருதயத்தின்
இரு பக்கங்களிலும்
ஒருங்கே பரவிய
என் நேசக் கரங்களின்
பக்கவாட்டுக் கோணம்
என் வழியே
கிறிஸ்துவின் நித்திய ஜீவன்
உலகில் பரவியதன்
விளைவு

செங்குத்தும் பக்கவாட்டும்
ஒன்றும் என் இருதய வாய்(Thymus-The Mystic or Higher Heart-Secret Place of the Most High God)
முழங்கும் பேருபதேசம்
"இரு தயவாய்"
அம்மையப்பனாம்
பரமபிதா-பரிசுத்த ஆவியின்
நாத-விந்து விளைவு

பூமகளே!
படத்திலும் எழுத்திலும்
வரியிலும் ஒலியிலும்
அடைகளில் மறைந்த குறிப்பிலும்
என் விசுவரூப தரிசனத்தை
விளைவித்த வித்தகியே!
நீர் யாரோ!
சித்தர்கள் சொல்லும்
வாலையெனும் ஞானப் பெண்ணாய்
பூவுலகில் பூத்திருக்கும்
பூமகளோ!

தளைகளில் கட்டுண்டு விழுந்த மனிதம்
தளைகளைத் தகர்த்து எழுந்து
வானம் வசப்படும்
சுக வாழ்வு காணும்
இயேசு பிரான் போதித்த
மனந்திரும்புதலை
விளைவெனும்
உம் அருங்கவியில்
வளைத்துப் பிடித்த
உம் நேர்த்திக்குத்
தலை வணங்குகிறேன்,
வாழ்க நீவிர்!
உம் ஞான போதியின் நிழலில்
எம்மை வளர்ப்பீர் நீவிர்!


தமிழ் மன்றத்தில் பூமகளின் "விளைவு" கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை


விளக்கம்


உனக்கு இரண்டு கோணங்கள் உண்டு
அதாவது இரண்டு முக்கிய பரிமாணங்கள்(Two Main Dimensions)
முதலாவது தெய்வீகம்
அதுவே உன் முதல் ஆவது
அடுத்தாவது மனிதம்
அதுவே முதலை அடுத்து ஆவது
தெய்வீகம் மேலிருந்து வாங்குவது
எதை?
சிவமாம் அன்பை(சிலுவையின் செங்குத்துப் பாகம்-Vertical Axis)
மனிதம் மேலிருந்து வாங்கியதைக்(சிவமாம் அன்பை)
கீழிருந்து கொண்டே(அதாவது புனித மண்ணாம் அன்னை பூமியில் இருந்து கொண்டே)
பாரபட்சமின்றி அனைவர்க்கும்(உலக உயிர்த்திரள் அனைத்துக்கும்) பகிர்வது(சிலுவையின் பக்கவாட்டுப் பாகம்-Horizontal Axis)
உன் படத்தில் பகிரங்கமாய்த் தெரியும் உண்மையின் விளைவே இந்த விளக்கம்
இதுவே
"1. கடவுளை நேசி
2. உன் அண்டை வீட்டானையும் உன்னைப் போல் நேசி" (அவன் எதிரியாகவே உன் மயங்கிய மனத்துக்குத் தெரிந்தாலும்)
என்ற இயேசு நாதரின் உபதேச சாரம்
1. தெய்வீகம்
2. மனிதம்
(இந்த இரண்டுமில்லை என்றால் நீ யார்?
நடமாடும் பிணமே-கசப்பான நிசம்)
உன்னைப் பற்றிய இனிய உண்மை
நீ குறிப்பில் குறித்த இரு வேறு கோணங்களில்(மேற்சொன்ன 1,2)
மறை பொருளாய் மறைந்திருக்கிறது
நான் செய்தது மறை கழற்றிய பாட்டாளியின் வேலையே!
புட்டுப் புட்டு வைத்தாயிற்று
புட்டைப் புசிப்பது உன் கையில் தான் இருக்கிறது.
புட்டைப் பரிமாறவே என்னால் முடியும்
நான் புசிக்கும் புட்டைப்
பாரபட்சமின்றி உனக்கும் எவர்க்கும்
அவ்வளவே
உன்னைப் பற்றிய
என்னைப் பற்றிய
எவரையும் பற்றிய
இனிக்கும் உண்மை
கசப்பான நிசம் விட்டு
மனந்திரும்பி
இனிக்கும் உண்மையைச்
சுவைப்பதற்கு
இன்னுமா தயக்கம்

இன்னாதம்ம இவ்வுலகம்!(கசப்பான நிசம்)
இனிய காண்க இயல்புணர்ந்தோரே!(இனிக்கும் உண்மை)
என்ற நம் பாட்டன் பக்குடுக்கை நன்கணியாரின்
புறநானூற்றுப் பாடல் சொல்லி
அமைகிறேன்



இரவு விழித்திருக்கிறது
கனத்த இமைகளைத்
திறந்து எழுகிறேன்.
கவிதை இரவாய்க்
கணினிக் காகிதப் பகலில்
விழுந்து விடிகிறேன்.
பூமகளின் "விளைவு"
விளங்க
இது ஒரு புது வித
படக் கவிதை.
நள்ளிரவில் விளையும்
நல்ல நாகத்தின் படம்.

விரல்

ஐம்புலன்களின்
கையடக்கப் பதிப்பு

பகுத்தறிவின் கையில்
இது ஒரு தீப்பந்தம்

இந்த வாமனன் தான்
"மெய்" என்ற
விசுவரூபமெடுத்து
விண்ணையும்
மண்ணையும்
அளக்கிறான்

ஞானம் என்ற
ஆலமரத்தின்
ஆணி வேர்

தொடுவதில் தொடங்கிய
இதன் சின்ன தேடல்
சந்திரனின் புழுதியைச்
சந்தனமாகப் பூசிக் கொண்டு
ஆன்மாவின் அடிமுடி தேடி
இன்னும் தொடர்கிறது

எந்த ஒரு கருத்தையும்
அது
எங்கிருந்து பிறந்தது என்று
ஆய்வு நடத்தி
அதன் ஆணி வேர் வரை
சென்றால்
அங்கு
விரல் தான் கிட்டும்

அடிப்படை உணர்ச்சிக் கூறுகளிலிருந்து
பூரண மெய்ஞ்ஞானம் வரை
கல்லிலிருந்து
கடவுள் வரை
மரத்திலிருந்து
மனிதன் வரை
பரிணாமம் என்பதே
விரலின் வெவ்வேறு
பரிமாணந் தான்

விரல் தான்
விரல் தான்
எல்லாமே விரல் தான்
அது
இல்லாமல் போனால்
விழல் தான்
விழல் தான்
எல்லாமே விழல் தான்

விழியும் விரல் தான்
பார்வை அதன் தொடல் தான்

செவியும் விரல் தான்
கேள்வி அதன் தொடல் தான்

நாசியும் விரல் தான்
மணமும் மூச்சும் அதன் தொடல் தான்

நாவும் விரல் தான்
சுவையும் பேச்சும் அதன் தொடல் தான்

மனமும் விரல் தான்
எண்ணமும் அறிவும் அதன் தொடல் தான்

இருதயமும் விரல் தான்
உணர்வும் அன்பும் அதன் தொடல் தான்

மெய்யும் விரல் தான்
உயிர் அதன் தொடல் தான்

தொடல் தான் தொடல் தான்
எல்லாமதன் தொடல் தான்
விரல்
இல்லாமல் போனால்
கெடல் தான் கெடல் தான்
உணர்வின்றிக் கெடல் தான்

இயல்பு

காலியான கோப்பையுள்
நிரம்பி வழிகிறது
அமுதக் காற்று

அமுதக் காற்றில்
இழைந்தாடுகிறது
ஈரமான நெருப்பு

ஈரமான நெருப்புள்
இணைந்தோடுகிறது
கதகதப்பான நீர்

கதகதப்பான நீரில்
களிப்பில் மிதக்கிறது
திடமான மெய்

திடமான மெய்யுள்
கனத்திருக்கிறது
உயிரெனும் வழி

உயிரெனும் வழியேந்திச்
சும்மா இருக்கிறது
காலியான கோப்பை

Thursday, June 26, 2008

இருதயங் கனிந்தால்...

இருதயங் கனிந்தால்
இதயம் மெய்க்குள்
கற்கண்டாய் இனிக்கும்
மூளையின் மடல்களில்
ஊறும் அமுதால்
வரண்ட நா
தித்திப்பால் நனையும்
சத்திப் பால்
தொண்டைக்குள் இறங்க
தாகமெல்லாந் தணியும்
உடற்றும்
வயிற்றுப் பசி தீரும்
கொடுங்காமக் கனல் உருக
ஆருயிர்
அருங்காதல் வழிப்படும்
அருட்கனலின் கதகதப்பில்
மெய்யெலாங் குளிரும்
பொய்ச் சாக்காடு தொலைந்து
மெய் மெய்யாய்த் துலங்கும்

இருதயங் கனியுமா?
வள்ளலே!
நீரே கதியென்று
உம்மைச் சரண் புகுந்தேன்
பெருந்தயவாய் இருக்கும்
அருட்செம்மல் நீர்
என் இருதயங் கனிய வைக்குந்
தந்திரஞ் செய்ய அறியீரோ!
வெள்ளை மன வள்ளல் நீர்
கள்ள மனக் குள்ளன் எனைக்
கடைத்தேற்ற அறியீரோ!
"இரு தயவாய்!"
என்று
என் இருதய வாய் திறக்கும்
திருமந்திரஞ் சொன்னீர்!
வள்ளலே!
அன்பின் விதை தூவி
வன்பின் பாலையாம் என்னை
அருட்சோலையாக்கும்
உம் திருச்சித்தம்
சிரமேற்கொண்டு
காத்திருக்கிறேன்

இருதயங் கனியுங் கணம்
வாய்க்காமலா போகும்!
பெருந்தயவாய் இருக்கும்
அருட்செம்மல்
உம் திருச்சித்தம்
நிறைவேறாமலா போகும்!
சவமாய்க் குழிக்குள் வீழுமுன்
என் அவமெலாம் நீக்கி
நற்றவ நெறியில்
என்னை நிறுத்தி
என் இருதயங் கனிய வைக்க
வள்ளல் உம் ஒருவரால் தான் முடியும்!
எனவே
நீரே கதியென்று
உம்மையே சரண் புகுந்தேன்
உம் வெள்ளங்கியுள்
என் கள்ள மனம் அடங்கக்
காத்திருக்கிறேன்
ஐயனே!
என்னை ஆட்கொண்டருள்வீர்
இக்கணமே!
சவக்குழி என்னை விழுங்கு முன்னே
அருட்கனலாம் நீர்
என்னை விழுங்குவிரே!
என் இருதயங் கனிய வைப்பீரே!

Thursday, June 19, 2008

வண்ணத்துப் பூச்சி

1

அன்று
மண்ணில்
தொட முடிந்த
அருவருப்பென்று ஒதுக்கிய
கருமையின் நெளிவே
இன்று
விண்ணில்
தொட முடியாத
அழகின்
வண்ணச் சிரிப்பு

தன் மெய்யைக்
கருத்த தன் பரிமாணத்தில்
மறந்து
அன்று
அருவருப்பாய்
நெளிந்தது
நின்று
தன்னுள்ளே சென்று
செத்தது போல்
வெளியே கிடந்து
உள்ளே கடந்து
உள்ளுள்ளே
இன்னும் இன்னும் ஆழ்ந்து
தன் மெய் கண்டு
அதை நன்றாய் அறிந்துணர்ந்து
இன்று
பரிணாமப் பாய்ச்சலாய்ப்
பறந்து
அழகின் வண்ணக் கோலங்களைக்
கண் முன்னே காட்டி
போதிக்கிறது

"கருமையாய் மண்ணில் நெளிந்த
என் அருவருப்பை வெறுத்து
வெளி அழகில் அதை மறந்து
கால விரயம் செய்யாது
அவலமாய்த் தெரிந்த
என்னுள்ளே ஆழ்ந்து
அதில் புதைந்த
என் அழகை மீட்டு
விண்ணில் வண்ணக் கோலம் போட்டுப்
பறக்கிறேன்

மனிதா!
நீயும்
உள்ளதைக் கடந்து
உள்ளத்தைக் கடந்து
உள்ளே கட.
உனதுண்மை விளங்கி
உன்னை மீட்டு
என்னைப் போல்
பரிணாமப் பாய்ச்சலில்
நீயே
கடவுளாவாய்!
வெளி அழகில்
உன் உள் அழகைத் தொலைக்காமல்
கட உள்!
இன்றே
இப்போதே
இங்கேயே!"

கவிதை அருமை, வாழ்த்துக்கள் ஆதி.
வண்ணத்துப் பூச்சியின்
வண்ணங்கள்
உம் பார்வைகளில் ஒட்டியதைப் போலவே
அதன் போதனை
உம் மனத்தில் ஒட்டினால்
கவிதையில் குறையிருக்காது
இது நிச்சயம் ஆதி.

வண்ணத்துப் பூச்சியின்
வண்ணங்களாம்
வெளி அழகில் மயங்கி
உம் உள் அழகைத் தொலைக்காமல்
"கட உள்
இன்றே
இப்போதே
இங்கேயே!"

2

"ஆதி!
விரலுக்கு அகப்படும்
இப்போதிருக்கும்
மனிதமென்னும்
உம் அவல நிலையே
விரலுக்கு அகப்படாத
கடவுட் பெருநிலைக்கு
மூலப் பொருள்.
அவல நிலையாய்த் தெரியும்
அதனுள்ளே கடந்து
உம் உள்ளுள்ளே
இன்னும் இன்னும் ஆழ்வீர்
கடவுட் பெருநிலை
வெளிப்படும்"

நீவிர்
கவிதையில் பிடித்த
வண்ணத்துப் பூச்சிக்கு
உம் மீதுள்ள அக்கறையால்
தன் போதனையை
மீண்டும் வலியுறுத்துகிறது.

"என்னைப் பிடிக்கிறது
என் போதனை பிடிக்கிறதா
ஆதி"
கேட்கிறதோ வண்ணத்துப் பூச்சி!

"என் போதனை பிடித்தால்
என்னைப் பிடிக்கலாம்"
சொல்கிறதோ பட்டாம்பூச்சி!

3

"கருத்த
அருவருப்பாய்த் தெரியும்
என் அசுத்த தேகத்துக்காக
கடவுளையோ
வேறெவரையோ
நான் குறை கூறவில்லை.
மண்ணில் நெளிவதே என் விதி
என்று
உளம் நொந்து
உடல் நலிந்து
செத்து விடவும் இல்லை.
உள்ளதாய்த் தெரியும்
என் அசுத்த தேகத்தைக் கடந்து
உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாய்க் காட்டாத
மாயக் கள்ளனாம் உள்ளத்தைக் கடந்து
என் உள்ளே கடந்து
உள்ளுள்ளே ஆழ்ந்து
அங்கே
உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாய்க் காட்டும்
சற்குருவைக் கண்டு
என் மெய்
நன்றாய் அறிந்துணர்ந்து
என்னை மீட்டு
என் சுத்த தேகத்தை என் மேல் மாட்டிப்
பறக்கிறேன்
அழகின் சிரிப்பாய்
வண்ணக் கோலங்கள்
விண்ணில் போட்டு

உள்ளே கடந்து
உள்ளுள்ளே ஆழ ஆழ
வெளியில் மாற்றம்
வெளிப்படும் உண்மையை
உணர்த்தும் என் சரிதம்
உனக்குப் புரிகிறதா
ஆதி

கண்கூடாக
நான்
கம்பளிப் புழுவாய்
நெளிந்ததைக் கண்டாய்
கூட்டுப் புழுவாய்
என்னுள்ளே
நான்
ஆழ்ந்த தியான நிலை
கண்டாயோ
நீ
ஆதி
கண் கூடாக
நான்
வண்ணத்துப் பூச்சியாய்ப்
பறப்பதைக்
கவிதையில் வியக்கிறாய்

பிறந்திறந்து உழலும்
உன் சழக்குச் சரீரத்துக்ககாக
கடவுளையோ
வேறெவரையோ
நோகாமல்
அவ்வசுத்த தேகங் கடந்து
உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாய்க் காட்டாத
மாயக் கள்ளனாம் உன் உள்ளத்தைக் கடந்து
உன் உள்ளே கடந்து
உள்ளுள்ளே ஆழ்ந்து
அங்கே
உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாய்க் காட்டும்
சற்குருவைக் கண்டு
உன் மெய்
நன்றாய் அறிந்துணர்ந்து
உன்னை மீட்டு
உன் சுத்த தேகத்தை உன் மேல் மாட்டிப்
பேரின்பப் பெருவாழ்வில்
நீ
நிலைபெற
இன்னும் தயக்கமேன்
ஆதி

என் சிறந்த மாணவன்
இராமலிங்கன் செய்ததை
நீயும் செய்து
சிறக்க மாட்டாயோ
ஆதி"

4

வெள்ளைச் சுவர் மேல் உறங்கும் வண்ணத்துப் பூச்சி
உயிரோவியத்தைக் கவிதையில் பிடிக்க
விழித்திருக்கும் நான்

தமிழ் மன்றத்தில் ஆதி அவர்களின் "வண்ணத்துப்பூச்சி" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

தேடல்

வெட்டவெளி
தான் உடுத்திய
அருளொளி ஆடையை
பாரபட்சமின்றி
எல்லாவற்றுக்கும் அளித்தது
"உலகத்துக்கு
நீ
வெளிச்சமாய் இருக்கிறாய்
"
என்று
தன்னைத் தான் விளங்கிய
உண்மையையும்
பகிர்ந்தது

பெற்றதை உடுத்து
பகிர்ந்ததை உண்டு
வெட்டவெளியில் வாழ்ந்தால்
தேட வேண்டாம்
எதையும்
ஆதியாம் நீ
ஆதி யாரென்று
கேட்கவும் வேண்டாம்

தேவையற்றதுகள் யாவையுங் களைந்து
உடுத்த வேண்டிய ஒன்றை
உவந்தே உடுத்து
நலங்கெடுக்கும் யாவையுங் கழிந்து
உண்ண வேண்டிய ஒன்றை
ருசித்து உண்
சுவர்களைக் கடந்த
சுதந்திர வீட்டில்
சுயமாய் வாழ்
ஆதியுன் மெய்ப்பொருள் விளங்கி
அந்தமின்றி இனிதே வளர்வாய்
ஆதி நீயே!

தேடல் அருமை
தேடியது கிடைத்த பின்
வேறெது வேண்டும்

என்ன தேடுகிறாய்
கிடைக்குமா அது
தேடும் நீயே புதையல்

என்ன கேட்கிறாய்
கிடைக்குமா பதில்
கேட்கும் நீயே பதில்

அணைத்து விடு விளக்கை
அஞ்சாதே இருளுக்கு
நீ தான் ஒளி

என்ன வேண்டும்
இன்னும்
நீ தான் பூரணம்

வேறெதற்குக் கோயில்
வேறெதற்குச் சடங்கு
நீ தான் கடவுள்

சும்மா இரு சொல்லற
மௌனம் பேசும் மெய்யின்
தெற்றென விளங்கும் பொருளே நீ தான்

நான் என்ற தன்மையாம்
தன் மெய்யாம் தன் ஐ தன்னை
நன்றே உணர்ந்தால்
உண்டே உனக்கு ஏகார உறுதி

ஆதியந்தமில்லா ஆதியை
ஆதிக்கு உணர்த்தும் மந்திரம்
"நானே ஆதி"

அந்தமின்றி என்றும் எங்கும் வளரும் ஆதியின் பாதியை
ஆதிக்கு உணர்த்தும் மந்திரம்
"பகவன் நான்"

தமிழ் மன்றத்தில் ஆதி அவர்களின் "தேடல்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை