Wednesday, July 9, 2008

அடிபடாத உயிர்ப்பு!

கற்களிடையே புற்கள்
சொற்களிடையே மௌனம்
அடிபடாத உயிர்ப்பு!

வெட்டவெளி தியானம்

வெளியே உந்தன் உட்பொருள்
வெளியே உந்தன் உட்சுத்தம்
வெளியே உந்தன் மெய்யுடம்பு
வெளியே உந்தன் மேலுடுப்பு
வெளியே உந்தன் பெரிய வீடு
வெளியே உந்தன் பேருடைமை
வெளியே உந்தன் மெய்யுறவு

ஒன்று மில்லா வெளியில் ஒன்றாய்
நின்ற நீயும் வெளி

ஒன்று மில்லா வெளியை யழிக்க
ஒன்று மில்லை வெடி

நன்றாய் நின்ற வெளியை அறிந்தால்
பொன்றா துந்தன் வாழ்வு

வெளியே வளியாய் ஒளியாய் அளியாய்க்
களிக்கும் உயிர்மெய் உண்மை



கடத்துள் வெளியே திடமென இருந்தால்
கடப்பாய் இறப்பும் பிறப்பும்

காலி வெளியே காலியாகா திடமென
வாலை ஒளியை நாடு

வெளிதரும் வெள்ளங்கி உடுத்தி களிப்புடன்
வெளிதனில் இருத்தல் சுகம்

வெட்டவெளியே பட்டப்பகல் நிசமென உணர்ந்தால்
பட்டொளியாய் மினுமினுக்குந் தேகம்

சுத்தவெளியின் சுத்தமே மெய்யின் உண்மையெனும்
சித்தத்தெளிவை என்றுமே போற்று

சித்தரே பரிசுத்தரே புத்தரே நீவிர்
சுத்தவெளி உருவெடுத்த உண்மை

வெளியைப் பற்றி வளியைத் தொற்றி
ஒளியுள் உற்றுக் களி

நள்ளிரவிலும் பளபளக்கும் வெட்டவெளியில் கவனம்
கள்ளமனமும் வெளுத்துவிடும் சுத்தம்

மெய்யரே நீரென்றேன் வெட்டவெளி திடப்படும்
மெய்யுடம் பாரென்றேன் நான்

வெளிபற்றி நிற்கும் வளிக்குள் ஒளிதோன்றி
அளிசொட்ட மெய்க்குள் களி

வாசி யோகம்

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வந்துபோகும் கணக்கை முடி

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வெந்துசாகும் பழக்கம் கழி

வீணே கசியும் கவனம் வளிமேல்
பூண நசியும் மரணம்

திருப்பி மனத்தை வாசியில் பூட்டத்
திறக்கும் அமுத வாரி

கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்
திருந்த உடம்பு ஒளிரும்

கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்
திருந்த உடம்பு ஒளியும்





Quote:





Originally Posted by தென்றல் View Post

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வெந்துசாகும் பழக்கம் கழி

இது எந்த மடத்தனம்? விளக்குவீராக!!
வந்துபிறந் திறந்துபோகும் மடத்தனம் மடிந்துபோக
முந்திச்செல் வாசியோக வழி

நன்றி தென்றலாரே!

தென்றலாம் வாசியைக் கவனிக்கும் யோகத்தால்
என்றைக்கும் வாழலாம் நிசம்

முச்சந்தி வீதியில் போய்வரும் தென்றலை
இச்சித்து போதியில் வாழ்

மரண வாடை வீசா திருக்கமெய்ச்
சுரணை ஊட்டும் தென்றல்

சுத்த வெளியில் மெய்யைக் கரைக்கும்
புத்த விளக்கம் வளி

நாசிக்குள் வழியும் தென்றலை நேசித்து
வாசிக்கும் வழியைப் பிடி

மடியும் மடத்தனம் மாய்க்கும் வாசியோகம்
முடியும் உன்னால் விளங்கு

தென்றல் தீண்டி எழுந்த நாகம்
மன்றில் ஆடும் படம்

விரயமாகும் கவனம் இதெந்த மடத்தனம்
சரயோகம் மேல்வை கவனம்

விழிநாசி செவிமுச் சந்திவீதி வழிவாசி
வழிந்தோட வாய்க்கும் மெய்

நிறுத்துவீண் பேச்சை கவனம் மூச்சில்
இறுத்திவாழ் திறக்குமுன் நெற்றி

எங்கெங்கோ ஓடும் கவனத்தை வாசியில்
தங்கென்றால் கேளாக் குரங்கு

வளிமேல் கவனம் நிறுத்தச் சொன்னால்
சுளிக்கும் முகத்தைக் குரங்கு

ஓடுமனக் குரங்கை வாசியால் கட்டக்
கூடுமுனக் கென்றான் குருபரன்

விளக்கு மாறாய் சுத்தஞ்செய் வாசியால்
விளங்கு வீரே உம்மெய்

தாவிச் செல்நீ மரணம் உந்தன்
ஆவிப் பாகை உண்டு

பாவிச் சடலத்தை மெய்யாய் மாற்றும்
ஆவி அமுதத்தைக் குடி

கூவிச் செல்வேன் வாசியின் பெருமைநான்
தாவிச் செல்வேன் மரணம்

வாசிதானே சிவாவென்னும் அன்பின் ஊற்று
வாசித்தால் வராதென்றுங் கூற்று



உயிர்ப்பின் உணர்வை உனக்குத் தருகின்ற
உயர்வான வாசியைப் போற்று

வளிமொண் டுண்டால் நெற்றி வெளுக்கும்
ஒளியுண் டாகுமே அறி.

வாசி பற்றி கவனம் நிற்க
ஆசி யாய்விழும் அளி

அன்பே சிவமாம் வாசி யூற்றை
உண்டே உவந்தால் போதி

போதி வெளியின் வாசி நிழலில்
போத ஒளியைக் காண்

அளிதரும் வளியை அள்ளி உண்டு
ஒளிவரும் வழியைக் காண்

காற்றுள்ள போதே தூற்றிக் கொண்டால்
கூற்றுன்னை அண்டா தொழியும்

காலி வெளியுள் நிரம்பிய வளியே
வாலை ஒளிக்கு மூலம்




Quote:





Originally Posted by தென்றல் View Post

வாசி'க்கான விளக்கம்.. இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை
அன்பெனுந்திருத் தென்றலை உள்ளிழுத்து வெளிவிட்டு
அன்புருவாய் நிற்பதே யோகம்

வாசியின் விளக்கம் சிவாவெனும் அன்பேநீ
வாசிக்க வாசிக்க விளங்கும்

இன்னும் இன்னும் உள்ளே ஆழ்ந்திருக்க
அன்பின் வன்மை விளங்கும்

அன்பா இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை
தென்றலின் இன்பமே அது

வாசிநீர் தென்றலாய்த் தீண்டுவீர் என்றுமும
தாசியால் உள்ளவன் நான்

தென்றலேஇரு தயவாய் இவ்வுலகில் என்றும்நீர்
வள்ளலேவரு வாருமைத் தழுவ

வெளிமடம் நாடிப் போகாதீர் உள்மடமாம்
ஒளிக்கடத் துள்ளே பராபரன்

காவி உடுத்து ஆவி வெளுக்காத
பாவி யவரோ சித்தர்

சித்தரே நீவிரென்று உண்மையே உரைத்தாலும்
பித்தனே நானென்பார் மாந்தர்


உத்தமன் ஒருவனை உள்ளே காணத்
தொற்றியே வாசியில் நில்.

காணாக் காற்றே காணும் உடம்பைப்
பேணும் ஊற்றாந் திடம்

வெளிவிடும் உள்வரும் மூச்சில் கவனத்தால்
ஒளிர்ந்திடும் உன்னுடல் மெய்

துளித்துளி யாய்வீழும் அளியமுதை யுண்ண
அளிக்குமே தாய்போன்ற வளி

ஆணவத்தலைப் பாகை கழற்றிவிட்டு வாசியோகங்
காணவுன்தலைப் பாக'ஐ' ஒளிரும்

ஆணவத்தலைப் பாகை கழற்றிவிட்டு வாசியோகங்
காணவுண்ணலாம் உன்தலைப் பாகை

தலைப்பாக 'ஐ'யனைக் காண வாசியில்நில்
அலைபாயும் பேய்மன மடங்கி

தலைப்பாகை எதற்குனக்கு தலைப்பாக 'ஐ'யனேவுன்
தலைப்பாகை கவனிப்பாய் வாசி

உட்குருவாசி உனில்இருக்க வேறெவரோ குருமார்
நல்லருளாசி தருவார்உட் போதகர்

உத்தமன் உன்னுள்ளே வாசியாய் நிற்கபரி
சுத்தமே உன்மெய்யென் றுணர்

குண்டலி எழுப்பும் அமுத வாசியைக்
கண்டுளே இருதய வாய்

கருத்த மனத்தை வெளுக்கும் வாசியைக்
கருத்தில் குருவாய்ப் போற்று

வந்துபோகும் உருக்களோ குருமார் வாசியாய்
வந்துபோகும் அருவமே குருபரன்

உள்ளதிட மூச்சை உள்ளமன மின்றி
உள்ளாரி வரோ மாந்தர்

வெள்ளங்கி ஒளியை உள்ளுள்ளே காணஅருள்
வெள்ளத்திரு வளியை உண்

தம்படிக்கு உதவுமா வளிமேல் கவனமென்பாய்
தம்படிக்கு உதவுமா சவம்

வாசியா திருந்தால் வாசியை உள்ளுலக
வாசியாம் சிவாசிக் கார்

பேசா திருமனமே கவனக் காசை
வீசா திருவீணே நீ

சச்சி தானந்தச் சுடராம் வாசியால்
உச்சித் தாமரை மலரும்

யுத்த வாழ்வு

1


இரவிலும் பட்டப்பகலாய் ஒளிருமொன்று
யாருமற்ற வெறுமையிலும் ஆதரவாய்ப் பேசுமொன்று
இமையாது விழித்திருக்குமொன்று
வாடாது பூத்திருக்குமொன்று
தீராப்பசி தீர்க்குமொன்று
குருவியும் மலையும் உறவாய்ப் பேணுமொன்று
உற்ற நோய் நோன்று உயிர்க்குறுகண் செய்யா மரம் போல் உயர்ந்தவொன்று
சுவர்களை விட்டதால் சேர்ந்த வீடொன்று
பெருவெளியே முற்றமாய் விளையாடும் முதிர்ந்த குழந்தையொன்று
வெந்து கருகாத சிதைந்து சிதறாத உயிர்ப்புள்ள மூலமொன்று
அழியா இன்பத்தின் அமரச் சிரிப்பொன்று
பொய்க்கனவு கலைக்கும் மெய்ச்சுடரொன்று
கல்லறைகளால் மூடமுடியாத நித்திய ஜீவனொன்று
முடைநாற்றப் பிணங்களையும் உயிர்த்தெழுப்பும் சுத்த சமரச சன்மார்க்க சக்தியொன்று
இடிபாடுகளில் இடியாத சிறந்தவொன்று
சிதறல்களில் தெறிக்காத சிவந்தவொன்று
தூக்கத்திலும் விழித்திருக்குமொன்று
துக்கத்திலும் சுகித்திருக்குமொன்று
மூளையின் மறைகள் முழுவதுமாய்க் கழன்று விழ
இருதய குகையில் பெருந்தயவாய் வாழுமொன்று
யுத்த பூமியின் இரணகளத்தில்
சமாதான அணுகுண்டாய் வெடிக்கும்
அன்பெனும் ஆதியொன்றைப் போற்றுவோம்
நவயுக சித்தராய் அவனியில் இன்றே எழுவோம்
சம்மதமா ஆதி!
சம்மதமென்றால்,
"எனக்கு முன்னர் சித்தர் பலர் வந்தாரப்பா!
நானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்!"
என்று அமரகவி பாரதி போல் முழங்க ஏன் தயக்கம்?
"இதை விடப் பெரிய கிரியைகளை என் தந்தையின் கிருபையால்
நீங்களும் செய்வீர்கள்!"
என்ற குருநாதர் இயேசு கிறிஸ்துவின் அருள்வாக்கு நிறைவேறும்
ஞான யுகம் மலர்வதற்கு
"எனக்கு முன்னர் புத்தர் பலர் வந்தாரப்பா!
நானும் வந்தேன் ஒரு புத்தன் இந்த நாட்டில்!"
என்றுமல்லவா முழங்க வேண்டும்!
முழங்குவீரா ஆதி!
யுத்த வாழ்வின் அவலத்தைப் பாடுவதொன்றே போதுமென்று
புத்தி மழுங்கிச் செத்த பிணமாய் நடப்பதொன்றே விதியென்று
மொத்தமாய் உம் ஆன்மாவை மாயைக்கு விற்று விட்டு
மேலான ஒன்றை மறந்து வீழ்வீரோ ஆதி!
காட்டமான கேள்வி தான்
கேட்டதற்காய் மன்னிப்பீர்
சுரணையேற்றவே சுடுகிறேன்
உம்மை மட்டுமல்ல
என்னையுந்தான்
அன்பின் மிகுதியால் செய்த என் வன்செயலைப் பொறுப்பீர்!
சுரணையோடு எழுவீர்
மேலான ஒன்றை இப்போதே நினைவு கூர்வீர்!


2



யுத்த வாழ்வின் இரணங்களில்
என் இதயம் இறைச்சித் துண்டுகளாய்ச்
சிதறிக் கிடக்கின்றன.
அவை இருதய ஒருமையில்
ஒன்று சேரும்
உயிர்த்தெழலின் அதிசயம்
மனித மிருகம்
தேவ மனிதமாகும்
பரிணாமப் பாய்ச்சலில் மட்டுமே
நிகழ முடியும்
வள்ளலே!
உலக உயிர்த்திரளின்
நரக வேதனை
என் மெய்யெங்கும் தாங்கி
மரணக் குழியுள்
குற்றுயிரும் குலையுயிருமாய்
நடக்கிறேன்.
உமதருள் வெள்ளம் பாய்ச்சி
சமாதானப் பெருவாழ்வைத்
தாரீரோ!

அன்பு மகனே!
கருத்த மனத்தை
வெளுக்கும் என் வெள்ளங்கி
வேகமாய்
உலகெங்கும் விரிகிறது.
இருதய ஒருமையில்
சமாதானப் பெருவாழ்வின்
அதிசயம் நிகழ்கிறது.
யுத்த பூமியில்
உன் இருதய வாய் திறந்து
இரு தயவாய்
என் மெய் வழி அதுவே!
மரணப் படுகுழியிலும்
ஜீவித்திருக்கும்
என் மெய் வழி அதுவே!
இரு தயவாய்!


தமிழ் மன்றத்தில் ஆதி அவர்களின் 'யுத்த வாழ்வு' கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதைகள்

அன்பின் வழியது உயிர்

பராபர அருளொளி பங்கமின்றிப் பாய
பராபரந் தருவழி உயிர்


பராபரந் தருவழி உயிரைத் திடமாய்த்
தராதலம் நிறுத்தும் மெய்


உள்ளே ஓடும் அன்பில் ஊறிஊறி
மெய்யைக் கரைத்தல் இன்பம்


அன்பில் மெய்யைக் கரைக்க ஆருயிர்த்
தன்மை புக்கும் வெளி


வெளியில் அருளாய் இருக்கும் பேறே
களிக்கும் நித்திய வாழ்வு


தந்திர வெளியில் தயவாய் இருப்பதே
மந்திர எழுத்தின் பயன்

இ(ரு)தயம்

இ(ரு)தயத்தில் கோயில் கொண்ட இறைவனே
இதயத்தின் இரத்தச் சிவப்பு

இ(ரு)தயத்தில் வாழுந் தயாபரக் கடவுளே
இதயத்தின் உயிர்ப்பாந் துடிப்பு

இ(ரு)தயத்தில் ஒளிரும் அருட்ஜோதிப் பிழம்பே
இதயத்துள் ஒளிந்த பழமை

இ(ரு)தயவாய் திறந்து பெருந்தயவு வழிந்தோட
இதயத்துள் இன்பக் களிப்பு

இ(ரு)தயவாய் திறந்தே இருநீ தயவாய்
இதயத்துக் கதுவே உயிர்ப்பு

எளிய பிரார்த்தனை

அருவ இருதயத்தின்
பரிபூரண வெளிப்பாடாய்
உருவான சுத்த இதயம்
நாறுமோர் மாமிசப் பிண்டமாய்த்
திரிந்தது எதனால்!?
அவ்வாறு திரித்த மனத்தால்
அதைத் திருத்த இயலாது
வருந்தி மனந்திரும்பி
இருதயத்தில் மனமடங்க
மாமிசப் பிண்டம்
சுத்த இதயமாய் மாறும்!

மெய்யுடம்பாலயமாம் சுத்த தேகம்
பொய்க்கிடங்காய்த் திரிந்ததேனோ!?
பரமன் தந்த தங்க மெய்யைப்
பாவி மனம் பங்கப் படுத்தித் திரித்ததாலே!
திரித்த மனம் முழுப்பொறுப்பேற்று
வருந்தி மனந்திரும்பிப்
பணிவுடன் மன்னிப்பைக் கோரப்
பரமன் சட்டென வருவான்
திரிந்ததைத் திருத்தி
மெய்யெனும் தங்கமாய் மாற்ற!
ஏனென்றால்
அவன் பெருந்தயாபரன்.
மனிதா
திரிக்க மட்டுமே
உன்னால் முடியும்.
உன்னால் திரிந்ததைச்
சரி செய்யப்
பரமனால் மட்டுமே முடியும்.
திரித்ததற்கான முழுப் பொறுப்பேற்கும்
பணிவும் வீரமும் நேர்மையும்
வருத்தமும் மனத்திருப்பமும்
மன்னிப்பைக் கோரும் அடக்கமும்
உனக்குத் தேவையான
உன் கடமை.
நீ
உன் கடமை செய்யப்
பரமன் கொடுப்பான்
உன் ஜீவ உரிமையாம்
சுத்த தேகத்தை.
ஏனென்றால்
அவன் பேரருளாளன்.

இன்று முதல் எளியனாகி
இந்த எளிய பிரார்த்தனையை
நீ செய்வாய்
"நான் வருந்துகிறேன், மனந்திரும்புகிறேன்.
என்னை மன்னித்தருள்வீர்.
நன்றி ஆண்டவரே!
நான் உம்மை நேசிக்கிறேன்."

திரிந்து தெரியும் தோற்றப் பிழைகள்
திருத்த வருவான் பரமன்.


(பி.கு: மேலே தடித்த எழுத்துக்களில் இருக்கும் எளிய பிரார்த்தனை
"I'm sorry. Please forgive me. Thank you. I love you." என்ற "Ho'opononpono Prayer"ன் தமிழாக்கம். மேலும் அறிய இச்சுட்டியைச் சொடுக்கவும்)