Monday, August 4, 2008
படைத்தல், காத்தல், அழித்தல்
சலனமின்றி வெட்டவெளியாய்
சும்மாயிருக்கும் சுத்தவெளி
தன் மீதே தான் காதல் கொண்டு
தனக்குள் தான் அழுந்தத்
தன்னைத் தான் அழுத்த
அவ் அன்பின் அழுத்தத்தால்
தோன்றும் முதற்சலனம்
அருளொளி
அருளொளியின்
அதி உச்ச அதிர்வுகள்
சுத்தவெளியெங்கும்
அதி வேகத்தில் பரவுகிறது
அதிவேகமாய்ப் பரவும்
அருளொளியின் விரிதலும்
அன்பின் அதி மென்மையாய் அழுத்தும்
சுத்தவெளியின் குவிதலும்
இடைவிடாது ஒன்றையொன்று புணர
இப்புணர்தலின் நல்விளைவாய்
சுத்த வெளித் தந்தைக்கும்
அருளொளித் தாய்க்கும்
தலைமகவாய்ப் பிறக்கும்
ஞானம் எனும்
அன்பின் விளக்கம்
வெறும் இருப்பாய்த்
தன்னையறியாதிருந்த
பராபர வெறுவெளி
"நான்"
என்ற தன்முனைப்பைப் பெற்றது
அன்பாய்த் தனக்குள் தான்
குவியும் அழுத்தத்தால்.
"இருக்கிறேன்"
என்ற தன்னுணர்வாம் பேருணர்வை
அது பெற்றது
தன்முனைப்பாம்
தன் அழுத்தத்தைத் தாண்டித் தான்
அருளொளியாய்ப் பரவும் விரிதலால்.
குவிதலும் விரிதலுமாகிய
இடைவிடாத புணர்தலால்
அது பெற்றது
"நானே" எனும்
தன் மெய்ஞ்ஞான விளக்கம்,
அதாவது அன்பெனும்
தன் இயல்பின் விளக்கம்.
விளக்கம் பெற்றதும்
படிப்படியாகத் தன் உச்ச அதிர்வுகளைக்
குறைத்துக் கொண்டு
பல்வேறு பரிமாணங்களை உருவாக்கி
அது தன்னிலிருந்து தானே
படைத்துக் கொண்டதே உலகம்
படைத்த உலகோடு வேறற ஒன்றி
அது தன்னில் தான் விளங்கி
உலகைக் காப்பதே
தயவெனும் இயக்கம்.
அன்பின் விளக்கமும்
தயவின் இயக்கமும்
உலகம் மறக்கக் காரணமான
மாயையை
அது மாய்ப்பதே
அழிவெனும் சங்காரம்
ஓம் நமசிவய
பாழடைந்த மெய் வீடு.
தூணாம் வாசியில்
கவனம் ஓம்பிப்
பூணே நீ மனவசியம்.
சீரடையும் மெய் வீடு
காணே நீ சிவமயமாய்.
பரிணாமப் பாய்ச்சல்
இருதய ஆழத்தில் ஊன்றிய
தெள்ளிய மன இதத்தொடு
மனிதமாய் எழு!
குனிதலும் குட்டலும்
எட்டி உதைத்தலும்
அதற்கு இசைதலும்
திட்டித் தீர்த்தலும்
அதைச் சகித்தலும்
சிதைத்தலும்
சிதைதலும்
பழி தீர்த்தலும்
பழி ஏற்றலுமாகிய
வன்பின்
இருண்ட இருமையிலிருந்து
விடுபட்டு
அன்பின்
தெருளாம் ஒருமைக்குள்
எழு!
இருள் சேர் இருவினையாய்
விதைக்கப் பட்டவைகளை
அருள் விளங்கும் அறிவால்
அறிவு இயக்கும் ஆற்றலால்
வேரோடு பிடுங்கி
பொருள் சேர் புகழ் புரியும்
இறைவனாய் எழு!
இருண்ட இருமைச் சுழலின்
மருட்டும் மாயைப் பொய்யை
சுடச்சுடச் சுடரும் ஒருமையாம்
அன்பறிவாற்றலால் பொசுக்கி
என்றும் அழியாத
மெய்யருட்சித்தனாய் எழு!
தமிழ் மன்றத்தில் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி அவர்களின் "மானுட மனிதங்கள்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை
இரவில் விடியல்
கனவுகளும்
உறக்கமும்
இமைகளோடு ஒதுங்கி விட
அதீத விழிப்பில்
நள்ளிரவில் பட்டப்பகல் வெளிச்சம்
என் கழுத்தில்
கடவுளின் ஒளி முகம் முளைக்க
என் மெய்யில் பதியும்
கடவுளுண்மை
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடந்தேடி
எங்கெங்கோ அலைந்து
களைத்துப் பின்
இருக்கும் இடத்துக்கே
திரும்பிய கணம்
ஞானத் தங்கமாய் ஜொலிஜொலிக்கும்
கடவுள் என்னில் அறிமுகம்
என் மெய்
கடவுளுண்மையில்
கரைந்து விட
கடவுளுண்மை
அன்பின் திடமாய்த்
திரள்கிறது
நான் இருக்கும் இடத்தில்
இருதய நெறியில்
இரவில் விடிகிறது
என் வாழ்க்கை!
விடியுமுன்
என் அறியா முகமாயிருந்த
கடவுளே
இனி என் அறிமுகம்!
தமிழ் மன்றத்தில் அமரன் அவர்களின் "மீண்டும் சந்திப்போமா" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை
Saturday, August 2, 2008
வேள்வி!
சுடச் சுடச் சுடரும் அருட்கனலில்
இருள் சேர் இரு வினை யாவும் பொசுங்க
கற்பூரம் போல் கரைகிறதே மெய்!
பேருபதேசம்
நாவை மேலே சுழித்து
வாய்க்குள் அதனைப் பூட்டி
ஓடும் மனத்தைப் பிடித்து
இருதய அமைதியில் நிறுத்தி
சும்மா இருந்தேன் சொல்லற!
பேருணர்வாய் என்னுள் எழுந்து
"இரு தயவாய்" என்ற
பேருபதேசந் தந்தாய்
பேரருளாளன் நீ!
மெய்
நம் உடம்பு மாளிகை
உன்னால் என்னால்
ஆகவில்லை!
அழிவிலா மெய்யன்பால்
அது திடமானது!
இம்மெய்யை உணராததாலே
மாளிகை
மறுபடி மறுபடி வீழுது!
இம்மெய்யை முழுதுணர்ந்தாலே
மெய்யாகவே
அழியாமல் நிற்குமன்றோ
மாளிகை!