Sunday, August 10, 2008

சுவாசம் 1

உன்னுள்ளே வந்து
அன்பொளியாம் உயிர் தந்து
வெளியே போய்
உன்னை மெய் வெளியில்
சேர்க்கும் மூச்சுக் காற்று

நாயகனின் பேருபதேசம் 6

திரிந்து தெரியும்
தோற்றப் பிழையாய்
உன் உள்ளத்தை அரிக்கும்
உள்ளதைக் கடந்து
உன் உள்ளத்துட் கடந்து
தோற்றப் பிழைகளின் மூல காரணமான
மாயத் திரையெலாங் கடந்து
உன் உள்ளே கடந்து
உள்ளுள்ளே கடந்து
மெய்க் கடத்துள்ளே
ஆனந்த நடம் ஆடும்
நடராச வள்ளல் எனைக் காணும்
மெய் வழி ஒன்றை
நீ உய்வதற்கென்றே
என் ஏழாந்திருமுறை உறுதியாய்
உன் செவிப்பரைகள் அதிர
உன் இருதய விழி திறக்கப்
பர விந்தாய் மின்னும்
குரு மந்திர நாதமாய்
இடை விடாது அறைகின்றேன்
"இரு தயவாய்"
என் மகனே(ளே)!
தயை கூர்ந்து
செவி மடுப்பாய்
என் பேருபதேசத்தின்
இரத்தினச் சுருக்கம்!
மற்றபடி இருமை இருளில்
மதி மருண்டு
நீ செய்யும்
ஆறறிவுத் தந்திரங்கள்
சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்
என்னும் என் மெய் வழியில்
உன்னை ஒரு காலும் சேர்க்கா!
அன்பின் மிகுதியால்
அறைந்து சொன்னேன்
சுளீரென்றும்
பளாரென்றும்
சுடச் சுடச் சுடரும்
இரு வார்த்தைகளால்!
தயை கூர்ந்து
செவி மடுத்து
"இரு தயவாய்"
அன்பெனும் ஒருமை அருளில்
மதி தெருண்டு
என் மெய் வழி சேர
நீ
"இரு தயவாய்"
அரிய மனிதம்
அரிந்து போகாமல் பிழைக்க
எளிய வழி ஒன்றை
உனக்குச் சொன்னேன்!
காலமில்லை மகனே!
இருக்குங் கணங்களை
இனியும் விரயம் செய்யாது
நீ விரைந்துணர்வாய்!
பொய்ச் சாக்காட்டுப் படுகுழி தாண்டி
மெய்யின்பப் பெருவாழ்வு ஜோதிமாமலை ஏற
நீ
கணப்போதும் மறவாமல்
அதி கவனமுடன்
எல்லாந் தழுவிய
முழுமையாம் அன்பெனும்
ஒருமையில் ஊன்றி நின்று
எப்போதும்
"இரு தயவாய்"
நீ கேட்டவாறே
ஊற்றுகிறேன் என் கருணையுடன்
ஆசி!
என் அன்பு மகனே(ளே)!
நீ இதை ஆழ
யோசி!
உன் நாசியில் வாசியாய்ப் பாய்ந்து
உன் இருதய ஊசி விழி திறக்க
இடைவிடாது
பர விந்தாய் மின்னும்
குரு மந்திர நாதம்
வாசி!
வீணே பேசி
வாணாளை விரயமாக்காமல்
என் ஆசி ஏற்றே
நீ
"இரு தயவாய்"!
தெரிய வேண்டியதைப்
பகிரங்கமாய்த் தெரியச் சொன்னேன்!
புரிய வேண்டியதை
அறைந்தறைந்து புரியச் சொன்னேன்!
இருதயத்தில் மனமடங்கி
இகவுலகில் நீ
"இரு தயவாய்!"
உறுதியுடன் என் மெய் வழி
உரைக்கின்றேன்
உன் அம்மையப்பன்
நானே!
என் மெய்யுரை விளங்கியே
என் மெய்ப்பொருள் விளக்கமாய்
இம்மருட்பொய்யுலகில்
உறுதியுடன் நீ
"இரு தயவாய்!"

Thursday, August 7, 2008

நாயகனின் பேருபதேசம் 5

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்

வழி யாதோ?

இருதயம், அன்பெனும் நடு நாயகம், சிவம்

சத்தியம் யாதோ?

நிராதார உயிர், அறிவெனும் அன்பின் விளக்கம், அருள், குரு

ஜீவன் யாதோ?

ஆறாதார மெய், ஆற்றலெனும் அன்பின் இயக்கம், தயவு, சக்தி

இன்னும் விளக்குவீரோ?

நடு நாயகமாம் அன்பில் நீ நிற்க
இருதய வாய் திறந்து
வழி பிறக்கும்

அன்பாம் பரசிவ வெள்ளம்
மார்பிலிருந்து தலைக்கு ஏறி
தலைக்குப் பின்னும், மேலும், முன்னும் பாய்ந்து
தலைக்குள் சுழிய
நீ அன்பை விளங்கி
ஜீவனுள்ள குருவாய்
ஜீவனுள்ள கிறிஸ்துவாய்
ஜீவனுள்ள நபிகளாய்
ஜீவனுள்ள மசியாவாய்
ஜீவனுள்ள புத்தராய்
ஜீவனுள்ள அருகராய்
அறிவில் நிற்பாய்

அவ்வாறு அறிவில் நீ நிற்க
உயிராம் நிராதாரப் பரநிலை
மெய்யாம் ஆறாதார இகநிலைக்கு
இறங்கி(இரங்கி)
இருதய வழியினூடே
முதுகடியில் சேர
நீ
அன்பின் இயக்கமாம்
ஆற்றலாய் வெளிப்பட்டு
தயவாய் இருப்பாய்

இவ்வாறு
"இருதய வாய் திறந்து
நிராதார ஆறாதார
உயிர்மெய் ஒருமை பிறந்து
நடு நாயக அன்பின் ஏற்றத்தில்
இருள்சேர் இருவினை யாவும் இறந்து
பொருள்சேர் புகழ் புரியும் இறைவனாய் பரத்தில் எழுந்து
அறிவெனும் அருள் விளக்கம் பெற்று
நீ
ஆற்றலெனும் தயவியக்கமாய் இகத்தில் இறங்கி
இக பர பாலமாய்
அன்னை பூமியில்
இரு"
என்று விளக்கும் பேருபதேச வாக்கியமே
இம்மகா மந்திரம்

சுருக்கமாக
"நடுவில் அன்பாய் இருந்து
மேலே அருளாய் விளங்கி
கீழே தயவாய் இயங்கு"

நனி மிகச் சுருக்கமாக
"இரு தயவாய்"

மகாமந்திரம் வழங்கி
அப்பேருபதேசப் பொருள் விளக்கி
மாயை இருளில் மருண்டு கிடந்த
என்னைத் தெளிவித்தமைக்கு
கோடானு கோடி நன்றி உமக்கு
நாயகனே!

என் அன்பு மகனே(ளே)!
உனக்கும்
என் கோடானு கோடி நன்றி

கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம்
அன்பறிவாற்றலாம்(அன்பருட்தயவாம்) ஒருமையில்
ஊன்றியே
எப்போதும்
இரு
நீ
தயவாய்!

அத்தயவொன்றே
என்னையும்
என் வரமாம் பெருவாழ்வையும்
பிடிக்கும் ஒரே வழி!

எனவே
கவனமாய்
நீ
எப்போதும்
"இரு தயவாய்"

Tuesday, August 5, 2008

உயிர் போகும் கேள்வி?

இருதயத்தின் உள்ளேயிருந்து
மனக் கதவைக்
கிறிஸ்து
ஓயாமல் தட்டிக் கொண்டேயிருக்கிறார்.
மனிதம்
அதைத் திறந்து
உள்ளே போக மனமின்றி
வெளியே வீணே திரிகிறது.
வாழ்வின் கணங்கள்
கழிந்து கொண்டிருக்கிறது.
கிறிஸ்துவின் தட்டலுக்கு
செவி மடுத்து
மனக் கதவைத் திறந்து
இருதய வீட்டில்
அவரோடு கூட
மனிதம் மனந்திரும்ப
இன்னும் மிச்சமிருப்பவை
சில கணங்களே!
வன்பின் ஆர்ப்பாட்டம்
மனித வீடுகளை
மொத்தமாய்ச் சீரழிக்குமுன்
அன்பின் எளிமைக்கு
மனந்திரும்பி
இருதயத்தில் மனமடங்கிக்
கிறிஸ்துவோடு மன்னா உண்ண
மிச்சமிருக்கும் சில கணங்கள்
பயன்படுமா?
மனிதம் உய்யுமா?


தமிழ் மன்றத்தில் ஷிப்லி அவர்களின் "கதவு தட்டப்படும் சப்தம்..." என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

ஞானயுக ஆத்திச்சூடி???!!!

அன்பு அறிவில் விளங்க
ஆற்றலாய் அறிவு இயங்க
இறைவனாய் நீயே எழுக!
ஈட்டும் பொருள் எல்லாம்
உருவிலா அருளாளன் தயவேயென
ஊரார்க்கு உதவ ஓடுக!
எல்லோரும் ஓர் குலம் என்றே
ஏற்றமிகு அன்பெனும்
"ஐ யாம்"(I AM) சங்க
ஒருமையில் நீ
ஓங்குக! ஓங்குக! ஓங்குக!
ஔடதம் அன்பேயாதலால் நீ "இரு தயவாய்"
அஃதே மரணப்பிணி தீர்க்கும் மாமருந்து

நாயகனின் பேருபதேசம் 4

என் அன்பு மகனே(ளே)!
தலையுச்சியில் பதிந்து
உன் விழிகளில் அருள் விளக்கும்
அறிவாய்ச் சிவந்து
இருதயத்தில் பதிந்து
உன் கரங்களில் கருணைக் கனியாம்
அன்பாய்ச் சிவந்து
முதுகடியில் பதிந்து
உன் பாதங்களில் தயவு இயங்கும்
ஆற்றலாய்ச் சிவந்து
வாடாத செஞ்சுடர்ப்பூவாம்
பராபர வள்ளல் நான்
உன் மெய்க்குள் உயிராய்
வேறற ஒன்றி
இகத்தில் புகுந் தருணம்
இதுவே!


ஐயனே! வள்ளல் உமக்கு
எப்படி ஆற்றுவேன் கைம்மாறு?

என் அன்பு மகனே(ளே)!
எல்லாந் தழுவிய
முழுமையாம் அன்பெனும்
ஒருமையில்
எப்போதும் ஊன்றி நின்று
இரு நீ தயவாய்!
இதுவே
நீ எனக்கு
ஆற்றும் கைம்மாறு!
அன்பறிவாற்றலாம் உயிராய்
உன் மெய்க்குள்
வாடாது பூத்திருக்கும்
என்னை விளங்கி நேசித்து
என் போல் ஆகவும் இயங்கவும்
தயவொன்றே மெய் வழி!
ஐயமின்றி இதை அறி!
தயவெனும்
மெய்வழிச் சாலையாய்
பராபர நான்
இகத்தில் நீளும்
உண்மை தெளி!
பிறப்பிறப்புப் பொய்ம்மாயச் சுழல் தாண்டி
பேரின்பப் பெருவாழ்வில்
ஆனந்தமாய் ஆடிக் களி!
என் அன்பு மகனே(ளே)!
என்றும் நீ
இரு தயவாய்!
உன் செவிப்பறைகள் அதிர
உன் செவிகளில்
இனி எப்போதும்
தப்பாமல் ஒலிக்கும்
"இரு தயவாய்" என்ற
இருதய நாதம்,
மாயை நள்ளிரவைக் கீறும்
பரவிந்துப் பட்டப்பகல் வெளிச்சமாய்!

கவனம்!
அதி கவனம்!
அன்பெனும் தயவே பேரின்பப் பெருவாழ்வு
அவ்வொருமை நழுவிய கணமே
கடுந்துன்பச் சாக்காடு!
எனவே கவனமுடன்
எப்போதும் நீ
"இரு தயவாய்"

Monday, August 4, 2008

அருட்பதிவு

நாயகன் என் காதில்
அறைந்து அறைந்து
ஆழப் பதிந்து விட்டிருக்கிறது


இருதயத்தில்
அவர் அருண்வாசகம்


"இரு தயவாய்!"