Wednesday, April 30, 2008

காக்கைகள்

மரத்தில் பூக்குமா
கருப்பு மலர்கள்
ஓ.... காக்கைகள்

மரத்தில் பூத்து
விண்ணில் உதிரும் மலர்களா
காக்கைகள்

ஒளியை ஊடுருவிப் பாயும்
இருளின் கீற்றுகளா
காக்கைகள்!!!

மர வானில் மின்னும்
கருப்பு நட்சத்திரங்களோ
காக்கைகள்

பட்டப்பகலிலும்
விடியாத இரவின் திட்டுகளோ
காக்கைகள்

எழுதா அதிசயம்

காற்று
என்னருகே
கொண்டு போட்டது
அழகிய
அச்செம்பூவின்
ஓரிதழை

நான்
கவிதை எழுதும்
நோட்டுப் புத்தகத்தின்
எழுதாத
இரு பக்கங்களுக்கிடையே
அவ்விதழைப்
பத்திரமாய்
வைத்தேன்

அதைப் பார்த்த
என் மனைவி
எதற்கென்று
கேட்டாள்

உலர
உலர
அழகு கூடும்
அதிசயங் காண
என்றேன்

அப்பக்கங்களில்
என் எழுத்து மழை
விழாதிருக்க
விரித்து வைத்த குடையாக
அவ்விதழ்
உலர்ந்து கொண்டிருக்கிறது
அழகு கூட
அழகு கூட

என் மனைவியிடம்
சொன்னேன்:
"நான்
எழுதிய
எந்தப் பக்கங்களையும்
நீ படிக்கா விட்டாலும்
எழுதாத
இவ்விரு பக்கங்களைக்
கண்டிப்பாகப்
படி
அடிக்கடி
அடிக்கடி.
அவ்விதழில் தான்
என் எல்லா வார்த்தைகளின்
அர்த்தமும்
புதைந்திருக்கிறது.
ஒரு பக்கம் நீ
மறு பக்கம் நான்
இடையே
நம் மகளுக்குள்
நம் அர்த்தங்களெல்லாம்
புதைந்திருப்பதைப்
போன்று."

Tuesday, April 29, 2008

அறுந்த மரத்தின் அடித்தண்டு

அங்கே அறுந்த மரத்தின் அடித்தண்டு
இங்கே இரத்தங் கசிகிறது
என்னெஞ்சு

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அறுந்து கிடப்பது
உன் உடம்பென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
மனிதம் மிருகமாகக்
கழிந்ததொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
திறந்தது மண்ணின்
நெற்றிக் கண்ணொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா நீ அறுத்தது
அன்னை பூமியின் முலையொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
ஈரம் போன மண்ணில்
நெருப்பைக் கக்கும் வாயொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
மனிதத்தின் சவப்பெட்டியில்
இறங்கும் ஆணியொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா சுற்றி முளைக்கும் செடிகள்
உன்னை நியாயங் கேட்குதென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அதுவுன்
உயிரைக் குடிக்கும் விஷ முள்ளென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
நன்றி கொன்றவன் நீயென்று
உன்னைச் சுட்டும் விரலொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அதுவுன்
நெஞ்சில் ஆறாத வடுவென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா நீ களைந்தது
பூமித் தாயின் சேலையென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா நீ சிதைத்தது
பூமித் தாயின் மடியென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அங்கே சிந்தியது
கழுவவே முடியாத இரத்தக் கரையென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
இரு கால் மிருகமே ஏன் விட்டுச் சென்றாய்
இங்கொரு மாமிசத் துண்டு

அறுந்த மரத்தின் அடித்தண்டு
ஈரமில்லா வன்னெஞ்சின்
வரண்ட துண்டு

அறுந்த மரத்தின் அடித்தண்டு
போதுமடா மனிதா நீ செய்த நாசம்
செய்வாய் இனி மரம் வளர்க்கும் தொண்டு

Monday, April 28, 2008

கலகம்

வெள்ளைச் சுவர்

உறிஞ்சிய இரத்தமெல்லாம்
உறைந்து
உள்ளே செங்கற்களாய்

எரிந்த எலும்புகளின்
சாம்பலையும்
புதைந்து மக்கிய உடம்புகளின்
மணலையும்
கண்ணீரிலும்
வியர்வையிலும்
கலந்து செய்த
சிமெண்டுக் கலவையில்
பிணைக்கப் பட்டு
வெளியே
பூசி மழுப்பப்பட்டு
அழகாகக் காட்சி தரும்
வெள்ளைச் சுவர்

சமாதானம்
சமாதானம்
சமாதானம்
என்று சதா போதிக்கிறது

இன்னொரு வெள்ளைச் சுவருக்குக்
கச்சாப் பொருளாகித்
தொலையுமுன்
இந்த வெள்ளைச் சுவரைத்
தகர்க்கப் போகிறேன்
நான்

இதன் பின்
ஏமாற்றும்
ஒவ்வொரு வெள்ளைச் சுவரையும்
தகர்ப்பேன்

சமாதானங் கற்றுப்
பிணமாவதிலுங்
கலகக்காரனாய்
வாழ்வதே மேல்

கலகம்
கலகம்
கலகம்
வாழ்வின் போர்ப்பறை
கேட்கிறது

வெள்ளைச் சுவர்கள்
அதிர

கோடுகளுக்குள்

சிற்றெறும்புகள் கூடக்
கோடுகளைத் தாண்டிக்
கோடுகளைத் தாண்டித்
தரையில்
ஊர்கின்றன

மனிதர்களோ
கோடுகளைத் தாண்டினால்
தீ மூளுமென்று
பயந்து
கோடுகளுக்குள்
குந்திக் கிடக்கிறார்கள்

யாரோ
எதற்கோ
என்றோ
கிழித்த கோடுகளை
ஏன் தாண்டக் கூடாது
என்ற விவேகக் கேள்வியையும்
சந்திக்க பயந்து

கோடுகளுக்கு வெளியே
புதியதோர் உலகம்
காத்துக் கிடக்கிறது

கண்டுபிடிக்க்கப் படாமல்

செவ்விதழின் அருங்கவிதை

எழுதப்படாத
அவ்விரு பக்கங்களுக்கிடையே
சில நாட்களுக்கு முன்பு
வைத்திருந்த
செம்பூவின் இதழைப்
பார்த்தேன்

அதன் பேரழகைப் பற்றிப்
பறைசாற்ற
அப்பக்கங்களுக்கு
என் வார்த்தைகளே
தேவைப்படவில்லை

என் வார்த்தைகளோ
அப்பேரழகின் போதையில்
மயங்கித்
தம் பேச்சிழந்தன

பேச்சிழந்ததால்
அவ்விதழ் சொன்ன
அருங்கவிதை
என் செவிகளில்
விழுந்தது

அதைக் கேட்டதும்
வேறெந்தக் கவிதையும்
எனக்குப்
பிடிக்காமல் போனது

அவ்விதழ் சொன்ன
அருங்கவிதை
எழுத
என் மூளையும்
இருதயமும்
எழுதப்படாத
அவ்விரு பக்கங்களாக
வேண்டும்

ஓர் அமைதியான இரவில்
என் எல்லாக் கவிதைகளையும்
கொளுத்தி
அந்த வெளிச்சத்தில்
அருங்கவிதை அதைப்
படிக்க வேண்டும்

அப்போது தெரிந்துவிடும்
என் வார்த்தைகளின்
வெறுமையும்
வார்த்தைகளை மீறிய
அச்செவ்விதழின்
முழுமையும்

காதல்.....

துயரங்களிலிருந்து நழுவிய கவனம்
காதலின் தூய்மையில் நிலை கொள்ள


சுமைகளிலிருந்து நழுவிய கவனம்
காதலின் சுகத்தில் நிலை கொள்ள


சலனங்களிலிருந்து நழுவிய கவனம்
காதலின் சந்தோசத்தில் நிலை கொள்ள


மனச் சோர்வுகளிலிருந்து நழுவிய கவனம்
காதலின் மகிழ்ச்சியில் நிலை கொள்ள


வசதிகளிலிருந்து நழுவிய கவனம்
காதலின் உயிர்மையில் நிலை கொள்ள


காமப் பிணைப்பிலிருந்து நழுவிய கவனம்
காதலின் நிலையான இன்பத்தில் நிலை கொள்ள


காதலின் விந்தையில்
காதலின் வியப்பில்

நீ
இலயித்திருக்கும்
ஒருமித்திருக்கும்
உன் புது அவதாரம்
நன்று தங்காய்!

கவனமாயிரு
கவனந்திரும்பி
உன் அவதார நோக்கம்
பங்கமாகாமலிருக்க
அதி கவனமாயிரு

கவனம்

எல்லாந் தழுவிய
காதலெனும் ஒருமையில்
முழுமையில்
ஊன்றியே
எப்போதும் நில்


அவ்வாறு நிற்றலே
உன் அவதார நோக்கம்

கவனம்

உன்னை இவ்வாறு
எச்சரித்து
அச்சுறுத்தி
நச்சரவு செய்வதே
நாகமென் அவதார நோக்கம்

கவனம்

காதலே வாழ்வு

காதலெனும் ஒருமை
நழுவிய கணமே
மரணம்

முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "காதல்..." கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை.