Tuesday, July 29, 2008

நியதி

பொய்க் கனவுகள் யாவுங் கலைந்து
நள்ளிரவின் அதீத விழிப்பில்
மெய்யுணர்வாய் விடிகிறேன்


மாயைக் கருநிழல் கரைந்து போக
அருளொளிக் கிரணங்கள்
என் நிஜத்தைப் பளிச்செனக் காட்ட
என்றென்றும் ஜீவித்திருக்கும்
பெருவாழ்வை வெல்கிறேன்


இருமையின் மருண்ட கரிய இலைகள் உதிர்ந்து
ஒருமையின் அருள் மின்னும் பசிய இலைகள் துளிர்த்து
மாறாத ஞான வசந்தத்தில்
சுகமாய் நிற்கிறேன்


மௌனமாய்
மோகன ராகம் பாடி
இகத்தில் பர பம்பரமாய்ச்
சுற்றுகிறேன்


பக்கவாட்டில் கரங்களை விரித்து
இகத்தைத் தழுவி
செங்குத்தாய்ப் பரத்தில் ஓங்கி
சிலுவையாம் என் மெய்யில்
உயிர்த்தெழுகிறேன்


இருதய நியதியில்
மனமடங்கி
காலனின் விதி வென்று
மாயையின் சதி கொன்று
அன்பின் திடமாய்
என்றென்றும் வாழ்கிறேன்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "விதி" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

Saturday, July 26, 2008

மனித தோசை

தோசையின் வட்டத்தைப் போன்றே
மனிதன் நீயும் பூரணம்

பூமியெனும் சுடுகல்லில்
உன்னைத் தன் வெள்ளங்கி எண்ணை
மினுமினுக்க
வார்த்திருக்கிறான்
பரம வள்ளல்

தோசையின் இரு முகங்களைப் போன்றே
உனக்கு இறைமையின் வெள்ளை முகம்
மனிதத்தின் இருண்ட முகம்.
இறைமையின் இருண்ட முகம்
நீ(பருப்பொருள்-Matter).
உன் வெள்ளை முகம்
இறைமை(நுண்பொருள்-Spirit).
இரு முகங்களும்
பிரியாத ஒருமையில்
பூமிச் சுடுகல்லில்
சுடச் சுடச் சுவைக்கும்
தோசை நீ.

உன்னை
ஏழையர் தட்டுகளில்
தன் அன்பின் பூரண
வட்ட வடிவமாய்ப்
பரிமாறவே
வார்த்திருக்கிறான்
பரமன்
தன்னையும்(தன் 'ஐ'யும்) சேர்த்து.
ஞாபகங் கொள்
ஏழையரின் பசி தீர்
சுடச் சுட
நீ
உயிர்ச்சுவையோடு
இருக்கும் போதே!


தமிழ் மன்றத்தில் ஆதி அவர்களின் "தோசைகளையும் பாடுவேன்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை.

கடவுளின் பதில்

என் இருதய நிஜத்தை மறந்து
அன்பெனும் என் இயலைத் துறந்து
உருவானதே வஞ்சக மனத்தின்
வன்செயல் அறியாயோ நீ மனிதா!

நான் கொடுத்த தென்னவோ
உனக்கு வெள்ளை உள்ளம்!
அம்மனத்தைக் கருத்துத் திரித்தே
அவல மனைத்தும் நீயே விதித்தாய்!

உன் மெய்க் கோயிலில் உவந்து
குடியிருக்கும் என்மெய் மறந்து
வெளியே வீண்பொய்க் கோயிலில்
எனைப்புனைந் ததாரோ நீயே மனிதா!

சத்திய யுகந்தன்னை நானுனக்குத் தந்தேன்
சத்தியந் தன்னைப்பொய் மாயையால் மறைத்து
இருண்ட கலியுகம் நீதானே படைத்தாய்
கடவுள் என்னைக் குறைகூறல் முறையோ!


நிலா முற்றத்தில் மா. கலை அரசன் அவர்களின் "கடவுள் நீ தானா?" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

தலை முடி!

உன் மெய்க்கு முடியாய் அமர்ந்த தலை மேல்
உன் மெய்யான முடியாய் அமர்ந்த தலைவனை(தலைவன் 'ஐ')
நீ மறந்தால் முடி போல் உதிருமே தலையும்!

மெய்வழி!

பொய் வீடு விட்டு
மெய் வீடு புக்க
பொய் வீட்டுக்குள்ளேயே
மெய்யாய் இருக்குதே
இருதய வழி!
"இரு தயவாய்" என்ற வள்ளல்
பெருமான் உபதேசப்படி
நீ தயவாய் இருக்க
இருதய வாய் திறந்து
தெரியுமே அம்மெய்வழி!

அழு!

அருளே உப்பாகி
ஒளியே நீராகி
இருவிழி வழியே
வழிவதோ கண்ணீர்!

வழியுங் கண்ணீரில்
கழியும் அழுக்கெல்லாம்
நெற்றியுஞ் சுத்தமாகப்
பற்றுவீர் ஒருவிழி!

தயவாய் இருத்தலே
உயர்வான ஒரேவழி!
இருதய ஒருமையின்
கருணை மெய்வழி!

மெய்வழி திறக்கப்
பொழியட்டும் இருவிழி!
பொய்யெலாம் கரைய
வழியட்டும் அருளொளி!

Tuesday, July 22, 2008

ஒருமையுணர்வு

ஒரு பக்கம்
தலையாக மனிதனாம் நீ!
மறு பக்கம்
இருதயப் பூவாகக் கடவுளாம் நான்!
கூறு போட முடியாத
தங்க நாணயம்
நாம்!
தகதகவென மின்னும்
நம் ஒருமையுணர்வு!
உலகெங்கும் செல்லும்
நம் பொன்னொளி!
நீ
ஒரு செல்லாக் காசு
என்ற மனப்பிரமையை விட்டுத்
தங்க நாணயமாய்த்
தகதகவென எழு!
"ஐ யாம்"(I AM) என்ற
ஒருமையுணர்வில்
ஓங்கி எழு!
இப்போதே!