Monday, May 5, 2008

குளத்தில் கல்லெறிந்தேன்

குளத்தில் கல்லெறிந்தேன்
என் கைகளுக்கு விலங்குகளா
நீர் வளையங்கள்

குளத்தில் கல்லெறிந்தேன்
நீர்ப்பரப்பில் தெரிகிறது
கலங்கிய என் மனம்

குளத்தில் கல்லெறிந்தேன்
வரவிருக்கும் என் காதலிக்கு
இத்தனை வளையல்களா!

கல்லெறிந்த கணத்தில்
உயிர்தெழுந்தது
குளம்

கல்லெறிந்தேன்
கன்னமெங்கும் குழியக் குழியச் சிரித்தது
குளம்

குளத்தில் கல்லெறிந்தேன்
அணி வகுத்து நின்றன
சக்கரப் படைகள்

குளத்தில் கல்லெறிந்தேன்
அடுத்த கணமே
சக்கர வியூகம்

குளத்தில் கல்லெறிந்தேன்
இன்னா செய்தாரை ஒறுக்க
இத்தனைப் பெரிய பூவா!

கல்லெறிந்தேன்
சுரணையோடிருக்கிறேன் என்று
நரம்புகள் புடைத்து நின்றது குளம்

கல்லெறிந்தேன்
ஆறாத வடுக்களல்ல நீயேற்ற காயங்கள்
ஆறுதல் சொன்னது குளம்

குளத்தில் கல்லெறிந்தேன்
என் தலைக்குள் அலைபாயக்
கலங்கினேன் நான்

கடல்

மணலைக் குடித்துக் குடித்தும்
என்றுந் தன் தாகந் தணியாத
கடல்

கரையில் அலை வீசி
மணல் பிடிக்கும்
கடல்

உடுத்துவதாய் ஏமாற்றிக்
கரையின் தோலுரிக்கும்
கடல்

மணலைத் தின்று தின்று செரிக்காமல்
மீண்டும் மீண்டும் துப்பும்
கடல்

தான் துப்பிய எச்சிலைத்
தானே விழுங்கும்
கடல்

கரைச் செவிடன் காதில்
சங்கூதுகிறது
கடல்

கடற்கயவனின் தீராத காமப்பசி
காயப்பட்டும் கற்போடு தான் நிற்கிறாள்
கரைக்கன்னி

ஓய்வின்றி எப்போதும்
புணர்ந்து கொண்டிருக்கும் காமுகர்களோ
கடலுங் கரையும்!

கடலும் கரையும் புணர்கின்றன
வழியும் வியர்வையேந்தி வீசுகிறது
சில்லென்ற காற்று

உவர்மணலை உழுது உழுதும்
பயனின்றி வியர்க்கிறது
கடல்

தன் இருதய ஆழத்தில் கண்ணீர் முத்தை மறைத்து
அலை உதடுகளில் ஆரவாரச் சிரிப்போடு வருகிறது
கடல்

உள்ளே கண்ணீர் முத்து வெளியே சிரிக்கும் அலைகள்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
கடல்

மரங்களின்றி...

முண்டமாய் மண் நின்றதால்
தலை துவட்ட வரவில்லை
மழை

பச்சைக் கொடி ஒன்று கூடப் பறக்கவில்லையே
எப்படிக் கடக்கும்
மழை இரயில்!

Saturday, May 3, 2008

சிவ-சக்தி ஐக்கியம்

நான்
சிவமென்னும் அவனாய்
ஆதார இருப்பாய் அடங்கி
சக்தியென்னும் அவளாய்
ஆதாரத்தினின்று ஆரவாரமாய் எழுந்து

அடங்கியே இருந்தால்
சூன்யம்

ஆரவாரமாய் எழுந்தால்
பிரபஞ்சம்

சூன்யமாம் அவனே
எண்ணக் குமிழிகளாம்
எண்ணற்ற முட்டைகளிட்டு
ஓடுகளைப் பிளந்து
பிரபஞ்சமென்னும்
வண்ணக் குமிழ்களாய்
அவளாய்
ஆர்ப்பரித்து எழுகிறான்

சிவ அருவத்தின்
சக்தி உருவாக்கமே
பிரபஞ்ச வண்ணம்

அவனும் அவளும்
பின்னிப் பிணைந்து
ஒன்றிக் கிடக்கும்
காமப் புணர்ச்சியின்
காதல் கனியாய்
நான்

அவனோடவளாய்
அவனில் ஓங்கியிருக்கும்
அவள்

அவளோடவனாய்
அவளில் அடங்கியிருக்கும்
அவன்

சரி நிகர் சமானமாய்
ஒத்தமர்ந்த
அவர்களின் இடைவெளியில்லா
ஒருமையின் உறுதியாய்
நான்

வண்ணக் குமிழ்களாய்
வெளிப்படும்
எண்ணக் குமிழிகளின்
யதார்த்தத்தில்
பொதிந்து கிடக்கிறேன்.

தமிழ் மன்றத்தில் ஆதவா அவர்களின் "அவளா? அவனா?" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

பாறை மேல் செடி

உடம்புக்கு வெளியே
துடிக்குமா
இருதயம்!

பிறந்த பின்னும்
முட்டையோடே ஒட்டியிருக்கும்
அதிசயக் குஞ்சு!

வழுக்குத் தலை மேல்
ஒரே ஒரு முடி!

புவி மிசை
இது வரை தோற்காத
உயிர்ப்பின் கட்சிக் கொடி!

பரிணாம மலையேற்றம்
வென்ற சிகரத்தில்
கொடியேற்றம்!

செடியின் வேரில்
பழுத்த பலா!

கல்லுக்குள் ஈரம்
சொல்ல நீளும்
நா!

உயிரற்ற பூஜ்ஜியம்
ஈன்ற
உயிருள்ள ஒன்று!

கல் நெஞ்சம் என்றால்
ஈரமுள்ள நெஞ்சம்!

மகாபலியின் தலை மீது
வாமனன் தாள்!

மண் மேல் மரம்
என்ற மரபைப்
புரட்டும் புதுக்கவிதை!

திறந்தது நெற்றிக் கண்
பறந்ததோ ஈரப் பொறி!

ஆணிலிருந்து
பெண்ணின்
ஜனனம்!

சூரியக் கதிரறுக்க
நீளும்
ஈர வாள்!

இயற்கை
எழுதிய
ஹைக்கூ!

ஜட மேற்கில்
உதித்த
உயிர்க் கிழக்கு!

இறுகிய மரபு இளகத்
தோன்றிய
புதுக்கவிதை!

இரத்த தானம்
மூளையிலிருந்து
இருதயத்துக்கு!

சூரியனைக்
குத்தும்
ஈர முள்!

மூளையின் மேலே
இருதயத்தின் ஆளுமை!

பாறைக்கும் இருதயமுண்டு
பாராங்கே
சிறு செடி!

ஒரே ஒரு மயிர்
பாறைக் கவரிக்கு
செடி தான் உயிர்

குருடென்றே நினைத்தேன்
செடியால் எனைப் பார்த்துக்
கண்ணடித்தது பாறை

செவிடென்றே நினைத்தேன்
செடியால் என் பேச்சை
செவி மடுத்தது பாறை

ஊமையென்றே நினைத்தேன்
செடியால் என்னோடு
நாவாடியது பாறை

முடமென்றே நினைத்தேன்
செடியால் எனை நோக்கிக்
கையசைத்தது பாறை

மூச்சற்றதென்றே நினைத்தேன்
செடியால் என் மூச்சுக்குக்
காற்றடித்தது பாறை

என்னிலிருந்து செடி உயிர்க்கிறது!
உன்னிலிருந்து கடவுள் ஏன் உயிர்க்கவில்லை?
மனிதனைக் கேட்கிறது பாறை.

வானைச் செதுக்கவா
செடி உளி நீட்டுகிறான்
பாறைச் சிற்பி!

பாறைக் கூடு விட்டு
செடிக் கூடு பாய்ந்ததோ
உயிர்!

ஜடப் பொருளென்றே நினைத்தேன்
தன் உச்சிப் பிளவில் செடி நீட்டி
என்னை மறுதலித்தது பாறை!

பாறை தானே உருவாக்கி
சூடிக் கொள்ளும் கிரீடமோ
செடி!

வான போதியின் கீழ்
பாறையின் ஞானோதயமோ
செடி!

என்னை மனிதனாய்ச் செதுக்க
செடி உளியோடு நீள்கிறதோ
பாறை!

சுரணையோடிருக்கிறேன்
பறைசாற்றுகிறதோ
செடி முளைத்த பாறை!

பொருள்முதல் வாதம்
நிரூபித்துக் காட்டுகிறதோ
செடி முளைத்த பாறை!

ஆண்மையே பெரிதென்று நினைத்தேன்
பெண்மையின் பெருமை சொன்னது
செடி முளைத்த பாறை!

மரணத்தைப் பொய்யாக்கி
வாழ்வை மெய்ப்பிக்கும்
செடி முளைத்த பாறை!

அருளற்றவனைக் கன்னெஞ்சனென்றேன்
தன்னெஞ்சைப் பிளந்துள்ளே ஈரங்காட்டி
என்னை மறுதலித்தது
செடி முளைத்த பாறை!

கொல்லும் ஆயுதமெடுத்தேன்
அகிம்சா மூர்த்தியாய்
என் முன்னெழுந்தது
செடி முளைத்த பாறை!

ஈரடித் திருக்குறளாய்க்
கண் கூடாக அறம் போதிக்கும்
செடி முளைத்த பாறை!

Friday, May 2, 2008

மலையுச்சி நோக்கி

என்னோடு
வருபவர்
எவருமில்லை

என்னை
வழியனுப்பவும்
எவருமில்லை

நான்
பயணப்பட்டுவிட்ட
பாதையின் பயங்கரம் பற்றி
எல்லோரும்
எவ்வளவோ
எடுத்துச் சொல்லியும்
துணிந்துவிட்ட என்னை
இனியும்
ஆதரிப்பாரும்
எவருமில்லை

கோடரிகளும்
கன்னெஞ்சங்களும்
மலிந்திருந்தும்
தன் விசுவரூபத்தோடு
தைரியமாக
எழுந்து நிற்கும்
அந்தப் பெரிய விருட்சத்தைத் தவிர
என் உணர்வுகளைப்
பகிர்ந்து கொள்ளவும்
எவருமில்லை

வீரிய மண்ணுக்குள்
விழுந்த சிறு விதை
தன்னந்தனியாக
எந்தத் துணையுமின்றி
இந்த பெரிய பூமியைப்
பிளந்து
முளை விடுவதைப் போல
என்னாலும் முடியுமா?!

பசிய இலைகளும்
சிவந்த மலர்களும்
பழுத்த கனிகளும்
சிறு விதையால்
சாதிக்க முடிந்ததை
வரி வடிவில்
விவரிக்கக்
கிளைகளில் பறவைகள்
என் மன இருள்
விடிய
சுப்ரபாதம் பாடுகின்றன

எல்லாக் கவலைகளையும்
அச்சங்களையும்
ஐயங்களையுந்
துறந்து
பயணப்பட்டு விட்ட
பாதையில்
புதுத் தெம்போடு
நான்
தொடர்கிறேன்

அதோ
அதோ
தூரத்தில்
மலையுச்சி
தெரிகிறது

நாசி நுனியை
அதன் வாசந்
தொடுகிறது

Thursday, May 1, 2008

நரக நகரத்தில்

என் வீட்டுக் கிணற்றருகில்
நீர் தேங்கிய
சிறு சிறு பள்ளங்களில்
குளித்துக் கும்மாளமடிக்கும்
சிட்டுக் குருவிகள்

என் மாணவப் பருவத்தின்
அந்த இனிய நாட்கள்
சிட்டுக் குருவிகளோடு
பறந்து விட்டன

இன்றோ
வற்றி விட்டது
கிணறு

வரண்டு கிடக்கின்றன
பள்ளங்கள்

உள்ளங்கைகளைக்
குழித்து
நீர் தேக்கிக்
கிணற்றருகே
சிட்டுக் குருவிகளுக்காகக்
காத்திருக்கிறேன்

விரல் இடைவெளிகளில்
நீர் வழிந்து கொண்டிருக்க
இனிய நாட்களின்
ஒரு கணங் கூடத்
திரும்பவே இல்லை

உள்ளங்கைகளும்
வற்றி உலர்ந்து விட
கான்க்ரீட் காடுகளுக்கு
எருவாகும் சருகாய்
நரக நகரத்தில்
விழுகிறேன்