Friday, May 9, 2008

ஆழ்ந்த மௌனம்

ஆழ்ந்த மௌனத்தை
நான்
இன்னும் கற்கவில்லை

என் வேர்களை
இறுகப் பிடித்து
என்னைத் தாங்கும்
ஆழ்ந்த மௌனத்தின் மீது
சருகுகளாய்
மலர்களாய்
உதிர்ந்து விழுகின்றன
அஞ்ஞான வார்த்தைகள்

மாறாத
இலையுதிர் கால
மெய்ஞ்ஞானம் வாய்க்க
ஆழ்ந்த மௌனத்தை
நான்
இன்னும் கற்கவில்லை

விழுவனவற்றின்
இடைவெளிகளில்
எட்டிப் பார்க்கும்
அழிக்க முடியாத
ஆழ்ந்த மௌனத்தின்
அர்த்தகனத்தை
அறியாமல்
விழுவனவற்றின்
அறுக்க வேண்டிய
மாய வலைக்குள்
சிக்கியவனாய்
நான்

பழையன களைந்து
புதியன உடுத்தி
புதியன பழையனவாக
மீண்டும்
பழையன களைந்து
புதியன உடுத்தி
மீண்டும்
மீண்டும்
களைதலும்
உடுத்தலும்
பழகிய
அஞ்ஞானச் சுழற்சியுள்
நான்

களைய ஏதுமற்ற
உடுத்த விருப்புமற்ற
என் நிர்வாணம்
ஆழ்ந்த மௌனத்தின்
அடி முடி அளந்தும்
அடங்கிக் கிடக்க
ஞானியென்ற மமதையில்
ஒவ்வொரு கணமும்
விதவிதமாய்
உடுத்தி நிற்கும்
நான்

ஆழ்ந்த மௌனத்தை
நான்
இன்னும் கற்கவில்லை
என்றாலும்
என் அஞ்ஞான வார்த்தைகளின்
இடைவெளிகளில்
அதன் மெய்ஞ்ஞானத்தை
உங்களால்
உணர முடியும்
ஆழ்ந்த மௌனத்தின்
அடி முடி அளந்து
அடங்கிக் கிடக்கும்
உம் நிர்வாணத்தையும்
தரிசிக்க முடியும்

உம் நிர்வாணத்தைத்
தரிசித்த பின்
எந்த வார்த்தைகளும்
உமக்குப்
பிடிக்காமல் போகும்

நிலையாத வசந்தத்தில்
சித்தார்த்தர்களாய் நிற்கும்
நீவிர்
மாறாத இலையுதிர் காலத்தில்
புத்தர்களானால்
என் அஞ்ஞான வார்த்தைகளும்
அர்த்தப்படும்

No comments: