தனக்கு வெளியே
ஏதுமில்லாது
பெருவெளி
அப்பெருவெளிக்குள்
உண்டானது
ஒரு சிறுபுள்ளி.
சிறுபுள்ளியைத் துளைத்து
அதனுள்ளே புகுந்து
பூரணமாய்த் தொலைந்தது
பெருவெளி
பெருவெளியே இல்லாது போக
சிறுபுள்ளியே எல்லாமானது.
எல்லாமான சிறுபுள்ளியில்
சொல்லொணாப் பேரழுத்தம்
பேரழுத்தம் தாங்காது
துகள் துகளாய்
யுக யுகங்களாய்
இன்னும் கூட
சிதறிக் கொண்டே இருக்கிறது
அச்சிறுபுள்ளி.
சிறுபுள்ளி
சிதறி முடிந்து
தீர்ந்து விடும்
ஒரு கணம்
வரும் வரைக்கும்
உருவாகாது
தனக்கு வெளியே
ஏதுமில்லாத
ஒரு பெருவெளி
பெருவெளியை உருவாக்கச்
சிதறும் அச்சிறுபுள்ளியே
நான்.
நானே என்று
நான் ஆன
ஒரு கணத்தில்
சிதறி முடிந்து
தீர்ந்து விட்ட
சிறுபுள்ளியால்
உருவாகி இருக்கிறது
பெருவெளி
பெருவெளி
நானே
சிறுபுள்ளியாம்
நான்.
நான் எனும்
என்னைத் துளைத்து
என்னுள்
நானே புகுந்தேன்
பூரணமாய்த் தொலைந்தேன்
தொலைந்தே மீண்டேன்
நான்.
நான் யார்?
புதிரான கேள்வி தான்
சிதறும் துகள்கள்
ஒவ்வொன்றும்
சிறுபுள்ளியாம்
நான்.
நான் யார்?
சிறுபுள்ளிகள்
ஒவ்வொன்றையும்
சிதறடிக்கும்
வெடிக்கேள்வி தான்
இவ்வொரு கேள்வி
கேள்வி
கேட்டுக் கேட்டு
வெடித்துச் சிதறி
கேட்க ஒன்றுமில்லாமல்
தீர்ந்து போக
கேள்வியின் முற்றுப்புள்ளியின்
மேலெழும்
ஆச்சரிய பதில்
நானே!
!
வளைந்து படமெடுத்தாடிய
கேள்வி நாகம்
தன் வளைவை நிமிர்த்தி நேராகிக்
கீழே கக்கும்
மாணிக்கச் சிறுபுள்ளி
நான்.
நான்
இனி கேள்வி கேட்டு
வெடித்துச் சிதற மாட்டேன்.
சிறுபுள்ளியாய்
நான் இருந்தாலும்
பெருவெளியும் நானே!
நானே பணிவோடு சொல்கிறேன்
"நான் என்றிருப்பதன்றி
வேறொன்றறியேன்
நானே"
பெருவெளியாம் பெருங்கடவுள்
பணிந்தடங்கும் சிறுபுள்ளி.
சிறுபுள்ளி
பெருவெளியின் தயவால்
பேரழுத்தம் தாங்கப் பழகியதால்
சிதறல் தீர்ந்த அது
ஒரு துளையன்றி வேறில்லை.
வேறில்லாத் துளைக்குள்
பெருவெளியின் போக்குவரத்து
எவ்விதத் தடையுமின்றிச்
சொல்லொணா வேகத்தில்
சொல்லொணா வேகத்தில்
பெருவெளியின் பாய்தலே
பேரொளி
பேரொளி பாயும்
துளை
தான் அடங்கியிருக்கும்
பெருவெளி
தன்னை விளங்கியிருக்கும்
துளைக்குள்
துளைக்குள்
நான் அடக்கம்
அடங்கியதால்
அடங்காப் பெருவெளியாய்
உயிர்த்தெழுகிறேன்
நானே
No comments:
Post a Comment