Sunday, February 3, 2008

மௌனமும் வார்த்தையும்

வார்த்தைகளை உடுத்தியும்
நிர்வாணமாகவே இருக்கிறது
மௌனம்

மௌனக் கடவுளின்
மனித அவதாரமோ
வார்த்தை

மௌனம் தன் மெய்யைத் தொட்டுணர
நீளும் விரல்களோ
வார்த்தைகள்

மௌன இருப்பில்
வார்த்தையாய் இருக்கிறேன்
நான்

மௌனங் களைந்து
நிர்வாணமாய் நிற்கும்
வார்த்தைகள்

மௌனத்துக்கு நன்றி சொல்லத்
தன் நாவு வாலாட்டும்
வார்த்தை நாய்

தன் நாவு வாலாட்டித்
தன்னை வெளிப்படுத்தும்
மௌன நாய்

வார்த்தையுடம்பில்
தன் மெய்யுணரும்
மௌனவுயிர்


நாக வார்த்தையால்
மௌனத் தென்றலைத்
தீண்ட முடியவில்லை

தென்றல் மௌனமாய்த் தீண்டத்
தரம் மாறும்
நாகத்தின் நச்சு வார்த்தை

மௌன அம்மணத்தைச்
சிறிதளவே மறைக்கும்
வார்த்தைக் கோமணம்

வாய் வீச்செல்லாம்
மௌனத்தின் பேச்சே

மௌனத்தில் அடங்கி நின்று
பேசு
வார்த்தைகள் மணக்கும்

வார்த்தைகள் யாவுக்கும்
மௌனமே வாழ்வு

மௌனமே உன் தாய்மொழி
எனவே குழப்பும் வார்த்தைகளாம்
அயல்மொழி மோகத்தை விட்டொழி

நச்சு வார்த்தைகளையும்
ஆகாரமாய் விழுங்கிச் செரிக்கும்
அமர மௌனம்

மௌனத்தை அறியாமல்
வாய் கிழியப் பேசி
வார்த்தையே வாழ்வென
வாழ்வாரோ வாழ்வார்கள்?

No comments: