Sunday, February 10, 2008

காகிதத்தின் பக்திப் பரவசம்

இறந்துபோன கவிஞன்
என்னுள் உயிர்த்தெழுகிறான்.
நெடுநாளாய்த்
துறந்திருந்த சொற்கள்
உறவாடத் திரும்ப
ஒவ்வொன்றிலும்
மறுபடியும்
என்னை நான் மறக்கிறேன்.
அம்மறத்தலால்
சொற்கள் சொல்ல வந்த
நற்கவிதை
திடீரென
ஞாபகம் வருகிறது.
சொற்களுக்கு
எப்போதும் திறந்திருக்கும்
ஓர் வழியாய்
நான் சும்மா இருக்க
சொற்கள் தாமே
உருவாக்கும் நற்கவிதையை
வாசிக்கும்
காகிதத்தின் வெள்ளை நெற்றி.
வாசித்து
பக்திப் பரவசத்தில்
அச்சொற்களையே
திருநீறாய்ப் பூசும்
தன் நெற்றியில்
யாவரும் வாசிக்க.

No comments: