Thursday, June 19, 2008

வண்ணத்துப் பூச்சி

1

அன்று
மண்ணில்
தொட முடிந்த
அருவருப்பென்று ஒதுக்கிய
கருமையின் நெளிவே
இன்று
விண்ணில்
தொட முடியாத
அழகின்
வண்ணச் சிரிப்பு

தன் மெய்யைக்
கருத்த தன் பரிமாணத்தில்
மறந்து
அன்று
அருவருப்பாய்
நெளிந்தது
நின்று
தன்னுள்ளே சென்று
செத்தது போல்
வெளியே கிடந்து
உள்ளே கடந்து
உள்ளுள்ளே
இன்னும் இன்னும் ஆழ்ந்து
தன் மெய் கண்டு
அதை நன்றாய் அறிந்துணர்ந்து
இன்று
பரிணாமப் பாய்ச்சலாய்ப்
பறந்து
அழகின் வண்ணக் கோலங்களைக்
கண் முன்னே காட்டி
போதிக்கிறது

"கருமையாய் மண்ணில் நெளிந்த
என் அருவருப்பை வெறுத்து
வெளி அழகில் அதை மறந்து
கால விரயம் செய்யாது
அவலமாய்த் தெரிந்த
என்னுள்ளே ஆழ்ந்து
அதில் புதைந்த
என் அழகை மீட்டு
விண்ணில் வண்ணக் கோலம் போட்டுப்
பறக்கிறேன்

மனிதா!
நீயும்
உள்ளதைக் கடந்து
உள்ளத்தைக் கடந்து
உள்ளே கட.
உனதுண்மை விளங்கி
உன்னை மீட்டு
என்னைப் போல்
பரிணாமப் பாய்ச்சலில்
நீயே
கடவுளாவாய்!
வெளி அழகில்
உன் உள் அழகைத் தொலைக்காமல்
கட உள்!
இன்றே
இப்போதே
இங்கேயே!"

கவிதை அருமை, வாழ்த்துக்கள் ஆதி.
வண்ணத்துப் பூச்சியின்
வண்ணங்கள்
உம் பார்வைகளில் ஒட்டியதைப் போலவே
அதன் போதனை
உம் மனத்தில் ஒட்டினால்
கவிதையில் குறையிருக்காது
இது நிச்சயம் ஆதி.

வண்ணத்துப் பூச்சியின்
வண்ணங்களாம்
வெளி அழகில் மயங்கி
உம் உள் அழகைத் தொலைக்காமல்
"கட உள்
இன்றே
இப்போதே
இங்கேயே!"

2

"ஆதி!
விரலுக்கு அகப்படும்
இப்போதிருக்கும்
மனிதமென்னும்
உம் அவல நிலையே
விரலுக்கு அகப்படாத
கடவுட் பெருநிலைக்கு
மூலப் பொருள்.
அவல நிலையாய்த் தெரியும்
அதனுள்ளே கடந்து
உம் உள்ளுள்ளே
இன்னும் இன்னும் ஆழ்வீர்
கடவுட் பெருநிலை
வெளிப்படும்"

நீவிர்
கவிதையில் பிடித்த
வண்ணத்துப் பூச்சிக்கு
உம் மீதுள்ள அக்கறையால்
தன் போதனையை
மீண்டும் வலியுறுத்துகிறது.

"என்னைப் பிடிக்கிறது
என் போதனை பிடிக்கிறதா
ஆதி"
கேட்கிறதோ வண்ணத்துப் பூச்சி!

"என் போதனை பிடித்தால்
என்னைப் பிடிக்கலாம்"
சொல்கிறதோ பட்டாம்பூச்சி!

3

"கருத்த
அருவருப்பாய்த் தெரியும்
என் அசுத்த தேகத்துக்காக
கடவுளையோ
வேறெவரையோ
நான் குறை கூறவில்லை.
மண்ணில் நெளிவதே என் விதி
என்று
உளம் நொந்து
உடல் நலிந்து
செத்து விடவும் இல்லை.
உள்ளதாய்த் தெரியும்
என் அசுத்த தேகத்தைக் கடந்து
உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாய்க் காட்டாத
மாயக் கள்ளனாம் உள்ளத்தைக் கடந்து
என் உள்ளே கடந்து
உள்ளுள்ளே ஆழ்ந்து
அங்கே
உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாய்க் காட்டும்
சற்குருவைக் கண்டு
என் மெய்
நன்றாய் அறிந்துணர்ந்து
என்னை மீட்டு
என் சுத்த தேகத்தை என் மேல் மாட்டிப்
பறக்கிறேன்
அழகின் சிரிப்பாய்
வண்ணக் கோலங்கள்
விண்ணில் போட்டு

உள்ளே கடந்து
உள்ளுள்ளே ஆழ ஆழ
வெளியில் மாற்றம்
வெளிப்படும் உண்மையை
உணர்த்தும் என் சரிதம்
உனக்குப் புரிகிறதா
ஆதி

கண்கூடாக
நான்
கம்பளிப் புழுவாய்
நெளிந்ததைக் கண்டாய்
கூட்டுப் புழுவாய்
என்னுள்ளே
நான்
ஆழ்ந்த தியான நிலை
கண்டாயோ
நீ
ஆதி
கண் கூடாக
நான்
வண்ணத்துப் பூச்சியாய்ப்
பறப்பதைக்
கவிதையில் வியக்கிறாய்

பிறந்திறந்து உழலும்
உன் சழக்குச் சரீரத்துக்ககாக
கடவுளையோ
வேறெவரையோ
நோகாமல்
அவ்வசுத்த தேகங் கடந்து
உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாய்க் காட்டாத
மாயக் கள்ளனாம் உன் உள்ளத்தைக் கடந்து
உன் உள்ளே கடந்து
உள்ளுள்ளே ஆழ்ந்து
அங்கே
உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாய்க் காட்டும்
சற்குருவைக் கண்டு
உன் மெய்
நன்றாய் அறிந்துணர்ந்து
உன்னை மீட்டு
உன் சுத்த தேகத்தை உன் மேல் மாட்டிப்
பேரின்பப் பெருவாழ்வில்
நீ
நிலைபெற
இன்னும் தயக்கமேன்
ஆதி

என் சிறந்த மாணவன்
இராமலிங்கன் செய்ததை
நீயும் செய்து
சிறக்க மாட்டாயோ
ஆதி"

4

வெள்ளைச் சுவர் மேல் உறங்கும் வண்ணத்துப் பூச்சி
உயிரோவியத்தைக் கவிதையில் பிடிக்க
விழித்திருக்கும் நான்

தமிழ் மன்றத்தில் ஆதி அவர்களின் "வண்ணத்துப்பூச்சி" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

No comments: