Sunday, August 24, 2008

நாயகனின் பேருபதேசம் 8

மேலிருந்துங் கீழிருந்துந்
தனக்குள் சுழிவதை விழுங்கி
மேலுங் கீழுந்
தான் வழியும்
இருதய மெய்யின் ஒழுக்கம்
உனக்குத்
தருவதே உயிரெனும் விழுப்பம்!
எனவே
உயிரினும் ஓம்புக ஒழுக்கம்!

மேலிருந்து சுழிவதை மறந்ததால்
சத்துவ அஞ்ஞானத் திமிரானாய்!

கீழிருந்து சுழிவதை மறந்ததால்
தாமச முடக்க பயமானாய்!

மேலுங் கீழும் வழிவதை மறந்ததால்
இராஜச ஆர்ப்பாட்ட வன்பானாய்!

மேலிருந்து சுழிவதை அறிந்தால்
பரமானந்த மெய்ஞ்ஞான அருளாவாய்!

கீழிருந்து சுழிவதை அறிந்தால்
இகத்தோங்கும் பேரியக்க தயவாவாய்!

மேலுங் கீழும் வழிவதை அறிந்தால்
நடுநாயகப் பேரன்பின் இருப்பாவாய்!

இருதய மெய்யை மறைத்து
உன்னை மயக்கும்
சத்துவச் சுத்த மாயை
மற்றும்
தாமச இராஜச அசுத்த மாயை
இவற்றால்
பிறப்பிறப்புச் சுழலில் சிக்கிப்
பெருவாழவாம் உயிர்ப்பை
மறந்தாய்!

உன்னை மயக்கும்
திரிகுண மாயை களைந்து
இருதய மெய்யை உணர்ந்துப்
பிறப்பிறப்புச் சுழல் தாண்டிப்
பெருவாழ்வாம் உயிர்ப்பை
அறிவாயே!

இருதய மெய்யுள் உயிரடங்கி
நடுநாயகப் பேரன்பாய் இருந்து
மேலே பரமானந்த அருள் விளங்கி
கீழே இகத்தியங்கும் தயவாய் இருப்பாயே!

என் அன்பு மகனே(ளே)!
"இரு தயவாய்"
எனும் என் பேருபதேசத்தின்
இரத்தினச் சுருக்கத்தை

கணப்போதும் மறவாமல்
எப்போதும் நீ
தயவாய் இருப்பாயே!

Saturday, August 23, 2008

நாயகனின் பேருபதேசம் 7

பரமும் இகமும்
சஹஸ்ராரமும் மூலாதாரமும்
ஆக்கினையும் சுவாதிட்டானமும்
விசுத்தியும் மணிபூரகமும்
அமுதகலசமும் சூரிய சக்கரமும்
வளைந்து சுழிந்து விழும்
உன் இருதயக் குழியுள்
நடராஜ வள்ளல்
நான் ஆடுகிறேன்!

நடு நாயக அன்பாய்
உன் இருதயக் குழியுள்
நான் ஆடுவதாலேயே
மேலே
பரமாய்
சஹஸ்ராரமாய்
ஆக்கினையாய்
விசுத்தியாய்
அமுதகலசமாய்
கீழே
சூரிய சக்கரமாய்
மணிபூரகமாய்
சுவாதிட்டானமாய்
மூலாதாரமாய்
இகமாய்
நீ மேலும் கீழும்
வளைந்து வழிகிறாய்!

உன் இருதயக் குழியுள்
மையங் கொண்டிருக்கும்
எட்டு வடிவ சிவ சக்தி ஓட்டங்களை
உன் மெய்க்குள் பார்த்து
எழும் எழுமையாம்(எழும் 'ஐ'யாம், I AM)
அருட்குரு
மெய்வழி
யால்
என்னை எட்டு!

நீயே ஜீவனுள்ள குருவாய் எழுந்தாலன்றி
என்னை எப்படி எட்டுவாய்!
11ஆய்த் தெரியும் நந்திக் கொம்புகள் சுட்டும்
தூய ஊடகமாய் நீ இருக்க
எட்டு வடிவில் இருதயக் குழியுள்
வளைந்து வழிந்தும் சுழிந்தும்
உன்னில் எழும் ஒருமையாலன்றி(ஒரும் ''யாலன்றி)
என்னை எப்படி எட்டுவாய்!

பட்டிமண்டபமாம்
இருதயக் குழியுள்
சிவ சக்தி இரண்டாம்
நடராஜ வள்ளல்
நான் போடும் எட்டு
நீ
அறியச் சொன்னேன்!

அரற்றுவதை விட்டு
நான் அறைவதைச்
செவி மடுத்து
தயவாய் இருந்து
என்னை நீ எட்டு!

Monday, August 11, 2008

உனதுண்மை

இருதய அன்பு தலைக்கேறி
மன அறிவை விளக்க
அருளமுதம் பாயும் மெய்யெங்கும்!
அன்பறிவாற்றலாய்
நீ உயிர்த்தெழுந்து
தயவாய் இகத்தில் இருந்து
பூமியைச் சொர்க்கமாக்குவாய்!

செதுக்கல்-2

இ(ரு)தய" உளியாலே
மன "சுத்தி" கொண்டு
கல் உன்னை
சுத்தி சுத்தி அடிக்கிறாரப்பா
கடவுட் சிற்பி!
அவர்தம் சச்சிதானந்த வடிவிலே
உயிர்ப்புள்ள மூர்த்தியாகப்
புவிமிசை நடமாடும் அரிய மனிதமப்பா
நீ!

செதுக்கல்-1

கல் உன்னை
அன்புக் கடவுளாய்ச் செதுக்கும்
இருதய உளி!
மன 'சுத்தி'யுள்ள
நீயே சிற்பி!

Sunday, August 10, 2008

அருட்புரட்சி

வன்பெனும் குப்பை மேட்டில்
தேங்கிய மனிதத்தைப் புரட்டி
அன்பெனும் குணக் குன்றில்
ஓங்கச் செய்யும் அருட் காற்று

நரை ஒழி!

சாயம் தேடி ஓடுகிறாய்
நீ நரை ஒளிக்க!
உன் உள்ளுள்ளே ஒளி(ர்)ந்திருக்கும்
நரை ஒழிக்கும்
பெருவாழ்வுப் புதையல்
உன் மனந்திரும்புதலுக்காக
யுகயுகங்களாய்க் காத்திருக்கிறது!

சுவாசம் 2

சுத்த வெளியிலிருந்து வந்த நீ
சுத்தம் மறந்து அசுத்தமாய்ப் போன போது
உன் உள்ளே வந்து வெளியே போய்
மறுபடி மறுபடி
உன் உள்ளே வந்து வெளியே போய்
உனக்கு உயிரொளி ஊட்டி
உன் ஞான விழி திறந்து
உனக்கு மெய்வெளி காட்டி
நாம் அச்சிவாயமே(நாமச்சிவாயமே)
என்று நீ மறந்ததை நினைவுறுத்தும்
வாசியெனும் மூச்சுக் காற்று!

சுவாசம் 1

உன்னுள்ளே வந்து
அன்பொளியாம் உயிர் தந்து
வெளியே போய்
உன்னை மெய் வெளியில்
சேர்க்கும் மூச்சுக் காற்று

நாயகனின் பேருபதேசம் 6

திரிந்து தெரியும்
தோற்றப் பிழையாய்
உன் உள்ளத்தை அரிக்கும்
உள்ளதைக் கடந்து
உன் உள்ளத்துட் கடந்து
தோற்றப் பிழைகளின் மூல காரணமான
மாயத் திரையெலாங் கடந்து
உன் உள்ளே கடந்து
உள்ளுள்ளே கடந்து
மெய்க் கடத்துள்ளே
ஆனந்த நடம் ஆடும்
நடராச வள்ளல் எனைக் காணும்
மெய் வழி ஒன்றை
நீ உய்வதற்கென்றே
என் ஏழாந்திருமுறை உறுதியாய்
உன் செவிப்பரைகள் அதிர
உன் இருதய விழி திறக்கப்
பர விந்தாய் மின்னும்
குரு மந்திர நாதமாய்
இடை விடாது அறைகின்றேன்
"இரு தயவாய்"
என் மகனே(ளே)!
தயை கூர்ந்து
செவி மடுப்பாய்
என் பேருபதேசத்தின்
இரத்தினச் சுருக்கம்!
மற்றபடி இருமை இருளில்
மதி மருண்டு
நீ செய்யும்
ஆறறிவுத் தந்திரங்கள்
சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்
என்னும் என் மெய் வழியில்
உன்னை ஒரு காலும் சேர்க்கா!
அன்பின் மிகுதியால்
அறைந்து சொன்னேன்
சுளீரென்றும்
பளாரென்றும்
சுடச் சுடச் சுடரும்
இரு வார்த்தைகளால்!
தயை கூர்ந்து
செவி மடுத்து
"இரு தயவாய்"
அன்பெனும் ஒருமை அருளில்
மதி தெருண்டு
என் மெய் வழி சேர
நீ
"இரு தயவாய்"
அரிய மனிதம்
அரிந்து போகாமல் பிழைக்க
எளிய வழி ஒன்றை
உனக்குச் சொன்னேன்!
காலமில்லை மகனே!
இருக்குங் கணங்களை
இனியும் விரயம் செய்யாது
நீ விரைந்துணர்வாய்!
பொய்ச் சாக்காட்டுப் படுகுழி தாண்டி
மெய்யின்பப் பெருவாழ்வு ஜோதிமாமலை ஏற
நீ
கணப்போதும் மறவாமல்
அதி கவனமுடன்
எல்லாந் தழுவிய
முழுமையாம் அன்பெனும்
ஒருமையில் ஊன்றி நின்று
எப்போதும்
"இரு தயவாய்"
நீ கேட்டவாறே
ஊற்றுகிறேன் என் கருணையுடன்
ஆசி!
என் அன்பு மகனே(ளே)!
நீ இதை ஆழ
யோசி!
உன் நாசியில் வாசியாய்ப் பாய்ந்து
உன் இருதய ஊசி விழி திறக்க
இடைவிடாது
பர விந்தாய் மின்னும்
குரு மந்திர நாதம்
வாசி!
வீணே பேசி
வாணாளை விரயமாக்காமல்
என் ஆசி ஏற்றே
நீ
"இரு தயவாய்"!
தெரிய வேண்டியதைப்
பகிரங்கமாய்த் தெரியச் சொன்னேன்!
புரிய வேண்டியதை
அறைந்தறைந்து புரியச் சொன்னேன்!
இருதயத்தில் மனமடங்கி
இகவுலகில் நீ
"இரு தயவாய்!"
உறுதியுடன் என் மெய் வழி
உரைக்கின்றேன்
உன் அம்மையப்பன்
நானே!
என் மெய்யுரை விளங்கியே
என் மெய்ப்பொருள் விளக்கமாய்
இம்மருட்பொய்யுலகில்
உறுதியுடன் நீ
"இரு தயவாய்!"

Thursday, August 7, 2008

நாயகனின் பேருபதேசம் 5

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்

வழி யாதோ?

இருதயம், அன்பெனும் நடு நாயகம், சிவம்

சத்தியம் யாதோ?

நிராதார உயிர், அறிவெனும் அன்பின் விளக்கம், அருள், குரு

ஜீவன் யாதோ?

ஆறாதார மெய், ஆற்றலெனும் அன்பின் இயக்கம், தயவு, சக்தி

இன்னும் விளக்குவீரோ?

நடு நாயகமாம் அன்பில் நீ நிற்க
இருதய வாய் திறந்து
வழி பிறக்கும்

அன்பாம் பரசிவ வெள்ளம்
மார்பிலிருந்து தலைக்கு ஏறி
தலைக்குப் பின்னும், மேலும், முன்னும் பாய்ந்து
தலைக்குள் சுழிய
நீ அன்பை விளங்கி
ஜீவனுள்ள குருவாய்
ஜீவனுள்ள கிறிஸ்துவாய்
ஜீவனுள்ள நபிகளாய்
ஜீவனுள்ள மசியாவாய்
ஜீவனுள்ள புத்தராய்
ஜீவனுள்ள அருகராய்
அறிவில் நிற்பாய்

அவ்வாறு அறிவில் நீ நிற்க
உயிராம் நிராதாரப் பரநிலை
மெய்யாம் ஆறாதார இகநிலைக்கு
இறங்கி(இரங்கி)
இருதய வழியினூடே
முதுகடியில் சேர
நீ
அன்பின் இயக்கமாம்
ஆற்றலாய் வெளிப்பட்டு
தயவாய் இருப்பாய்

இவ்வாறு
"இருதய வாய் திறந்து
நிராதார ஆறாதார
உயிர்மெய் ஒருமை பிறந்து
நடு நாயக அன்பின் ஏற்றத்தில்
இருள்சேர் இருவினை யாவும் இறந்து
பொருள்சேர் புகழ் புரியும் இறைவனாய் பரத்தில் எழுந்து
அறிவெனும் அருள் விளக்கம் பெற்று
நீ
ஆற்றலெனும் தயவியக்கமாய் இகத்தில் இறங்கி
இக பர பாலமாய்
அன்னை பூமியில்
இரு"
என்று விளக்கும் பேருபதேச வாக்கியமே
இம்மகா மந்திரம்

சுருக்கமாக
"நடுவில் அன்பாய் இருந்து
மேலே அருளாய் விளங்கி
கீழே தயவாய் இயங்கு"

நனி மிகச் சுருக்கமாக
"இரு தயவாய்"

மகாமந்திரம் வழங்கி
அப்பேருபதேசப் பொருள் விளக்கி
மாயை இருளில் மருண்டு கிடந்த
என்னைத் தெளிவித்தமைக்கு
கோடானு கோடி நன்றி உமக்கு
நாயகனே!

என் அன்பு மகனே(ளே)!
உனக்கும்
என் கோடானு கோடி நன்றி

கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம்
அன்பறிவாற்றலாம்(அன்பருட்தயவாம்) ஒருமையில்
ஊன்றியே
எப்போதும்
இரு
நீ
தயவாய்!

அத்தயவொன்றே
என்னையும்
என் வரமாம் பெருவாழ்வையும்
பிடிக்கும் ஒரே வழி!

எனவே
கவனமாய்
நீ
எப்போதும்
"இரு தயவாய்"

Tuesday, August 5, 2008

உயிர் போகும் கேள்வி?

இருதயத்தின் உள்ளேயிருந்து
மனக் கதவைக்
கிறிஸ்து
ஓயாமல் தட்டிக் கொண்டேயிருக்கிறார்.
மனிதம்
அதைத் திறந்து
உள்ளே போக மனமின்றி
வெளியே வீணே திரிகிறது.
வாழ்வின் கணங்கள்
கழிந்து கொண்டிருக்கிறது.
கிறிஸ்துவின் தட்டலுக்கு
செவி மடுத்து
மனக் கதவைத் திறந்து
இருதய வீட்டில்
அவரோடு கூட
மனிதம் மனந்திரும்ப
இன்னும் மிச்சமிருப்பவை
சில கணங்களே!
வன்பின் ஆர்ப்பாட்டம்
மனித வீடுகளை
மொத்தமாய்ச் சீரழிக்குமுன்
அன்பின் எளிமைக்கு
மனந்திரும்பி
இருதயத்தில் மனமடங்கிக்
கிறிஸ்துவோடு மன்னா உண்ண
மிச்சமிருக்கும் சில கணங்கள்
பயன்படுமா?
மனிதம் உய்யுமா?


தமிழ் மன்றத்தில் ஷிப்லி அவர்களின் "கதவு தட்டப்படும் சப்தம்..." என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

ஞானயுக ஆத்திச்சூடி???!!!

ன்பு அறிவில் விளங்க
ற்றலாய் அறிவு இயங்க
றைவனாய் நீயே எழுக!
ட்டும் பொருள் எல்லாம்
ருவிலா அருளாளன் தயவேயென
ரார்க்கு உதவ ஓடுக!
ல்லோரும் ஓர் குலம் என்றே
ற்றமிகு அன்பெனும்
" யாம்"(I AM) சங்க
ருமையில் நீ
ங்குக! ஓங்குக! ஓங்குக!
டதம் அன்பேயாதலால் நீ "இரு தயவாய்"
தே மரணப்பிணி தீர்க்கும் மாமருந்து

நாயகனின் பேருபதேசம் 4

என் அன்பு மகனே(ளே)!
தலையுச்சியில் பதிந்து
உன் விழிகளில் அருள் விளக்கும்
அறிவாய்ச் சிவந்து
இருதயத்தில் பதிந்து
உன் கரங்களில் கருணைக் கனியாம்
அன்பாய்ச் சிவந்து
முதுகடியில் பதிந்து
உன் பாதங்களில் தயவு இயங்கும்
ஆற்றலாய்ச் சிவந்து
வாடாத செஞ்சுடர்ப்பூவாம்
பராபர வள்ளல் நான்
உன் மெய்க்குள் உயிராய்
வேறற ஒன்றி
இகத்தில் புகுந் தருணம்
இதுவே!


ஐயனே! வள்ளல் உமக்கு
எப்படி ஆற்றுவேன் கைம்மாறு?

என் அன்பு மகனே(ளே)!
எல்லாந் தழுவிய
முழுமையாம் அன்பெனும்
ஒருமையில்
எப்போதும் ஊன்றி நின்று
இரு நீ தயவாய்!
இதுவே
நீ எனக்கு
ஆற்றும் கைம்மாறு!
அன்பறிவாற்றலாம் உயிராய்
உன் மெய்க்குள்
வாடாது பூத்திருக்கும்
என்னை விளங்கி நேசித்து
என் போல் ஆகவும் இயங்கவும்
தயவொன்றே மெய் வழி!
ஐயமின்றி இதை அறி!
தயவெனும்
மெய்வழிச் சாலையாய்
பராபர நான்
இகத்தில் நீளும்
உண்மை தெளி!
பிறப்பிறப்புப் பொய்ம்மாயச் சுழல் தாண்டி
பேரின்பப் பெருவாழ்வில்
ஆனந்தமாய் ஆடிக் களி!
என் அன்பு மகனே(ளே)!
என்றும் நீ
இரு தயவாய்!
உன் செவிப்பறைகள் அதிர
உன் செவிகளில்
இனி எப்போதும்
தப்பாமல் ஒலிக்கும்
"இரு தயவாய்" என்ற
இருதய நாதம்,
மாயை நள்ளிரவைக் கீறும்
பரவிந்துப் பட்டப்பகல் வெளிச்சமாய்!

கவனம்!
அதி கவனம்!
அன்பெனும் தயவே பேரின்பப் பெருவாழ்வு
அவ்வொருமை நழுவிய கணமே
கடுந்துன்பச் சாக்காடு!
எனவே கவனமுடன்
எப்போதும் நீ
"இரு தயவாய்"

Monday, August 4, 2008

அருட்பதிவு

நாயகன் என் காதில்
அறைந்து அறைந்து
ஆழப் பதிந்து விட்டிருக்கிறது


இருதயத்தில்
அவர் அருண்வாசகம்


"இரு தயவாய்!"

படைத்தல், காத்தல், அழித்தல்

சும்மாயிருக்கிறது சுத்தவெளி
சலனமின்றி வெட்டவெளியாய்

சும்மாயிருக்கும் சுத்தவெளி
தன் மீதே தான் காதல் கொண்டு
தனக்குள் தான் அழுந்தத்
தன்னைத் தான் அழுத்த
அவ் அன்பின் அழுத்தத்தால்
தோன்றும் முதற்சலனம்
அருளொளி

அருளொளியின்
அதி உச்ச அதிர்வுகள்
சுத்தவெளியெங்கும்
அதி வேகத்தில் பரவுகிறது

அதிவேகமாய்ப் பரவும்
அருளொளியின் விரிதலும்
அன்பின் அதி மென்மையாய் அழுத்தும்
சுத்தவெளியின் குவிதலும்
இடைவிடாது ஒன்றையொன்று புணர
இப்புணர்தலின் நல்விளைவாய்
சுத்த வெளித் தந்தைக்கும்
அருளொளித் தாய்க்கும்
தலைமகவாய்ப் பிறக்கும்
ஞானம் எனும்
அன்பின் விளக்கம்

வெறும் இருப்பாய்த்
தன்னையறியாதிருந்த
பராபர வெறுவெளி
"நான்"
என்ற தன்முனைப்பைப் பெற்றது
அன்பாய்த் தனக்குள் தான்
குவியும் அழுத்தத்தால்.

"இருக்கிறேன்"
என்ற தன்னுணர்வாம் பேருணர்வை
அது பெற்றது
தன்முனைப்பாம்
தன் அழுத்தத்தைத் தாண்டித் தான்
அருளொளியாய்ப் பரவும் விரிதலால்.

குவிதலும் விரிதலுமாகிய
இடைவிடாத புணர்தலால்
அது பெற்றது
"நானே" எனும்
தன் மெய்ஞ்ஞான விளக்கம்,
அதாவது அன்பெனும்
தன் இயல்பின் விளக்கம்.

விளக்கம் பெற்றதும்
படிப்படியாகத் தன் உச்ச அதிர்வுகளைக்
குறைத்துக் கொண்டு
பல்வேறு பரிமாணங்களை உருவாக்கி
அது தன்னிலிருந்து தானே
படைத்துக் கொண்டதே உலகம்

படைத்த உலகோடு வேறற ஒன்றி
அது தன்னில் தான் விளங்கி
உலகைக் காப்பதே
தயவெனும் இயக்கம்.

அன்பின் விளக்கமும்
தயவின் இயக்கமும்
உலகம் மறக்கக் காரணமான
மாயையை
அது மாய்ப்பதே
அழிவெனும் சங்காரம்

ஓம் நமசிவய

வீணே கசியும் மனத்தால்
பாழடைந்த மெய் வீடு.
தூணாம் வாசியில்
கவனம் ஓம்பிப்
பூணே நீ மனவசியம்.
சீரடையும் மெய் வீடு
காணே நீ சிவமயமாய்.

பரிணாமப் பாய்ச்சல்

இருதய ஆழத்தில் ஊன்றிய
தெள்ளிய மன இதத்தொடு
மனிதமாய் எழு!


குனிதலும் குட்டலும்
எட்டி உதைத்தலும்
அதற்கு இசைதலும்
திட்டித் தீர்த்தலும்
அதைச் சகித்தலும்
சிதைத்தலும்
சிதைதலும்
பழி தீர்த்தலும்
பழி ஏற்றலுமாகிய
வன்பின்
இருண்ட இருமையிலிருந்து
விடுபட்டு
அன்பின்
தெருளாம் ஒருமைக்குள்
எழு!


இருள் சேர் இருவினையாய்
விதைக்கப் பட்டவைகளை
அருள் விளங்கும் அறிவால்
அறிவு இயக்கும் ஆற்றலால்
வேரோடு பிடுங்கி
பொருள் சேர் புகழ் புரியும்
இறைவனாய் எழு!


இருண்ட இருமைச் சுழலின்
மருட்டும் மாயைப் பொய்யை
சுடச்சுடச் சுடரும் ஒருமையாம்
அன்பறிவாற்றலால் பொசுக்கி
என்றும் அழியாத
மெய்யருட்சித்தனாய் எழு!


தமிழ் மன்றத்தில் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி அவர்களின் "மானுட மனிதங்கள்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

இரவில் விடியல்

கனவுகளும்
உறக்கமும்
இமைகளோடு ஒதுங்கி விட
அதீத விழிப்பில்
நள்ளிரவில் பட்டப்பகல் வெளிச்சம்

என் கழுத்தில்
கடவுளின் ஒளி முகம் முளைக்க
என் மெய்யில் பதியும்
கடவுளுண்மை

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடந்தேடி
எங்கெங்கோ அலைந்து
களைத்துப் பின்
இருக்கும் இடத்துக்கே
திரும்பிய கணம்
ஞானத் தங்கமாய் ஜொலிஜொலிக்கும்
கடவுள் என்னில் அறிமுகம்

என் மெய்
கடவுளுண்மையில்
கரைந்து விட
கடவுளுண்மை
அன்பின் திடமாய்த்
திரள்கிறது
நான் இருக்கும் இடத்தில்

இருதய நெறியில்
இரவில் விடிகிறது
என் வாழ்க்கை!

விடியுமுன்
என் அறியா முகமாயிருந்த
கடவுளே
இனி என் அறிமுகம்!


தமிழ் மன்றத்தில் அமரன் அவர்களின் "மீண்டும் சந்திப்போமா" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

Saturday, August 2, 2008

வேள்வி!

ஞான யோக மெய்க்குண்டத்துள் எழுந்த
சுடச் சுடச் சுடரும் அருட்கனலில்
இருள் சேர் இரு வினை யாவும் பொசுங்க
கற்பூரம் போல் கரைகிறதே மெய்!

பேருபதேசம்

உதடுகளை அழுத்தி மூடி
நாவை மேலே சுழித்து
வாய்க்குள் அதனைப் பூட்டி
ஓடும் மனத்தைப் பிடித்து
இருதய அமைதியில் நிறுத்தி
சும்மா இருந்தேன் சொல்லற!
பேருணர்வாய் என்னுள் எழுந்து
"இரு தயவாய்" என்ற
பேருபதேசந் தந்தாய்
பேரருளாளன் நீ!

மெய்

மெய்யென்னும்
நம் உடம்பு மாளிகை
உன்னால் என்னால்
ஆகவில்லை!
அழிவிலா மெய்யன்பால்
அது திடமானது!

இம்மெய்யை உணராததாலே
மாளிகை
மறுபடி மறுபடி வீழுது!
இம்மெய்யை முழுதுணர்ந்தாலே
மெய்யாகவே
அழியாமல் நிற்குமன்றோ
மாளிகை!