Thursday, June 19, 2008

தேடல்

வெட்டவெளி
தான் உடுத்திய
அருளொளி ஆடையை
பாரபட்சமின்றி
எல்லாவற்றுக்கும் அளித்தது
"உலகத்துக்கு
நீ
வெளிச்சமாய் இருக்கிறாய்
"
என்று
தன்னைத் தான் விளங்கிய
உண்மையையும்
பகிர்ந்தது

பெற்றதை உடுத்து
பகிர்ந்ததை உண்டு
வெட்டவெளியில் வாழ்ந்தால்
தேட வேண்டாம்
எதையும்
ஆதியாம் நீ
ஆதி யாரென்று
கேட்கவும் வேண்டாம்

தேவையற்றதுகள் யாவையுங் களைந்து
உடுத்த வேண்டிய ஒன்றை
உவந்தே உடுத்து
நலங்கெடுக்கும் யாவையுங் கழிந்து
உண்ண வேண்டிய ஒன்றை
ருசித்து உண்
சுவர்களைக் கடந்த
சுதந்திர வீட்டில்
சுயமாய் வாழ்
ஆதியுன் மெய்ப்பொருள் விளங்கி
அந்தமின்றி இனிதே வளர்வாய்
ஆதி நீயே!

தேடல் அருமை
தேடியது கிடைத்த பின்
வேறெது வேண்டும்

என்ன தேடுகிறாய்
கிடைக்குமா அது
தேடும் நீயே புதையல்

என்ன கேட்கிறாய்
கிடைக்குமா பதில்
கேட்கும் நீயே பதில்

அணைத்து விடு விளக்கை
அஞ்சாதே இருளுக்கு
நீ தான் ஒளி

என்ன வேண்டும்
இன்னும்
நீ தான் பூரணம்

வேறெதற்குக் கோயில்
வேறெதற்குச் சடங்கு
நீ தான் கடவுள்

சும்மா இரு சொல்லற
மௌனம் பேசும் மெய்யின்
தெற்றென விளங்கும் பொருளே நீ தான்

நான் என்ற தன்மையாம்
தன் மெய்யாம் தன் ஐ தன்னை
நன்றே உணர்ந்தால்
உண்டே உனக்கு ஏகார உறுதி

ஆதியந்தமில்லா ஆதியை
ஆதிக்கு உணர்த்தும் மந்திரம்
"நானே ஆதி"

அந்தமின்றி என்றும் எங்கும் வளரும் ஆதியின் பாதியை
ஆதிக்கு உணர்த்தும் மந்திரம்
"பகவன் நான்"

தமிழ் மன்றத்தில் ஆதி அவர்களின் "தேடல்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

No comments: