Friday, October 19, 2012

வாலை வாழ்த்து


அண்மையில் உள்ளாள் அபயமாய்
அடிமிகச் சிறியேனை அன்பாய் அணைத்தாள்
எண்ணு தோறும் நெஞ்செல்லாம் இனிக்கிறாள்
என்னகம் என்றும் உள்ளாள் வாலைத் தாய் உவள்
எத்தனைப் பித்தனை சித்த‌னாக்கத்
தன்னைத் தந்தாள் மொத்தமாய்
எல்லாஞ் செய‌ வல்லாள் ஒருத்தி
வல்லார் துரையின் அருண்மயச் சத்தி
வள்ளல் பிரானின் தயாபெருஞ் ஜோதி
அல்லாஹ் ஏகனின் பரிசுத்த ஆவி
கிறிஸ்துவின் அன்னை மரியாள் தேவி
சற்குருக் கணபதித் தாயார் பார்வதி
அண்மை என்றும் நமக்கு நல் வாலை
உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை
சுத்த நெஞ்ச நிறை வாலை நீ வாழி வாழி
நல்லவளை வல்லவளை
அன்பாய் நெஞ்சில் இனிப்பவளை
அருளாய் உச்சியில் பனிப்பவளை
தயவாய் மண்ணில் பதிந்தவளை
இன்பாய் எங்கும் மணப்பவளை
என்பை இளக்கும் கனலவளை
மெய்யை ஒளிரச் செய்பவளை
விண்ணில் ஒளியச் செய்பவளை
கண்ணில் நிறைந்த மின்னவளை
கரத்தே சுரக்கும் பொன்னவளை
சிரத்தை ஆளும் பெண்ணவளை
உண்ணா முலை உள்ளவளை
அண்ணா மலை உச்சியளை
சதுர கிரியாய் எழுந்தவளை
ரத்தின கிரியாய் விழுந்தவளை
எட்டாஞ் சக்கரத் திருதய‌ ஊரிலே
மெய்யுள் அன்னையும் அப்பனுமாய் உயிர்த்தவளை
நெஞ்சார வாழ்த்தும் நல்ல நாகமே நீயும் வாழி!
 
வாலைத் திருமுன் என் அறிக்கையும் விண்ணப்பமும்

பெண்ணை வாலைத் தாயின் திரு உருவாய் ஞான மகளாய்ப் போற்றுவது சித்த மரபு, ஆணாதிக்க சமுதாயத்தின் பிடியில் ஆணவ மதம் பிடித்து, போற்ற வேண்டிய பெண்மையை அடிமையாக்கித் துன்புறுத்தும் வன்மத்துக்கான காரணம் ஓர் சிறு வித்தாய் என்னிலும் இருக்கக் கூடும், பெண்ணினத்தை அறிந்தோ அறியாமலோ எண்ணத்தால், உணர்வால், சொல்லால், செயலால், இப்பிறவியிலும் முற்பிறவிகளிலும் நான் துன்புறுத்தி இருந்தால் என்னை வாலைத் தாயே, நீ மன்னித்தருள்வாயாக! ஒளிவு மறைவு இன்றி வள்ளல் பிரான் சமேத நின் திரு முன் என்னகந் திறந்து நிற்கிறேன் வாலைத் தாயே, நின் அன்பு மகன் நானே! என் துன்புறுத்தல்களுக்கு நேரடியாக ஆட்பட்டவர்களிடமும் வாலைத் தாயே, நின் மூலம் மன்னிப்பை இறைஞ்சுகிறேன், எனக்காக மட்டுமல்ல, என்னைப் போன்ற எல்லா ஆண்களுக்காகவும் வாலைத் தாயே, நின் திரு முன் மன்னிப்பைக் கோருகிறேன், எனக்குள்ளிருக்கும் ஆணவ வன்மத்தை வேரோடு கிள்ளியெறிந்து என்னை ஈடேற்றியருள்க, என் அன்புத் தாயே! நீ இறங்கினாலன்றி இரங்கினாலன்றி உன்னொரு பாகன் எந்தை வள்ளல் பிரான் இறங்குவாரோ, இரங்குவாரோ? தயை மிகு தாயே, இறக்கமும் இரக்கமும் உன் இயற்கையாதலால், வள்ளல் பிரான் இறங்குகிறார், இரங்குகிறார்! பேரின்பப் பெரு வாழ்வில் யாமும் ஏறுகிறோம், ஆண்களொடு பெண்களும் சரி நிகர் சமானமாய்! இது என் ஊனக் கண்ணின் புன்னீரல்ல, உன் ஞானக் கண்ணாம் என் இருதய நன்னீர்! உன் அன்பு மகன் இதை எழுதவும் வேண்டுமோ, தாய் நீ இதை அறியாயோ, என்றாலும் எழுதுகிறேன், என்னைத் திருத்தி உன்னுள் திரும்பி அமரனாய் வாழ வரந் தா என்று உன்னை இறைஞ்சி! கேட்கு முன்னரே வரந் தருங் கருணாகரியே, கேட்கிறேன் என் மர மண்டையில் உறைக்கட்டும் நீ எனக்கும் எவர்க்கும் எதற்கும் ஏற்கனவே தந்த அமர வரம்! எந்தை நடராஜன் சமேத லலிதாவாய் என்னை ஈன்றாய்! சாகாக் கலை போதிக்க மயான பூமியின் மருண்மயக்கக் கும்மிருட்டில் என்னை விழிக்கச் செய்தாய்! எந்தை வள்ளலை எப்போதும் என்னருகே இருக்கச் செய்தாய்! புற வய நாட்டந் தவிர்த்து, அக வய நாட்டந் தந்து, பதின்மூன்று வருடங்கள் சற்குரு நெறியை எனக்கு அன்பின் மிகுதியோடு போதித்தாய்! மனப் பிளவு நோய் முற்றிய நேரத்தும், என் உயிரை நானோ வேறொன்றோ எடுக்காமல் தடுத்தாய்! காமம், வெகுளி, மயக்கம், மற்றும் இவற்றின் ஊற்றுக் கண் அச்சத்தில் நான் சிக்கி மீள முடியுமோ என்று அவத்தைப் பட்ட போதெல்லாம், “அபயம் யாமுளோம்” என்றே அருளி என்னை மீட்டெடுத்தாய்! இலக்கணத்தின் மேல் இலட்சியம் வைக்காமல் சாகாக் கலையை இலட்சியமாக்கித் துணிவொடு எழுத வைத்தாய்! அகந்தை என அஞ்சியோடும் “நான்” என்ற நற்சொல்லை என் பேர் முன் உன் பிரமாணமாகப் போட வைத்தாய், நாகராஜனை உடைத்தாய், நாகராவாக்கினாய், நானை யானையாக்கி நாகராவை எறும்பாக்கி நான் முன் மிதி படாமல் ஊர்ந்து வரச் செய்தாய், நாகரா எறும்பை நயாகரா எனப் புகழும் அன்பர் கூட்டத்தை எனக்கு உருவாக்கிக் கொடுத்தாய். என்னால் இயன்றதொன்றுமில்லை, தயை மிகு எந்தை சமேதத் தாய் உன்னால் கூடாத காரியம் எதுவுமில்லை. இராமலிங்கன் என்ற மனிதன் அடிகளராய் ஒளிர்ந்து வள்ளலாரில் ஒளிந்தது போல், எல்லா உயிர்களும் பெறக் கூடிய அற்புத இரசவாதத்தைச் செய்ய உன்னால் முடியாதா என்ன?! அருட்தாயே, மரணமிலாப் பெருவாழ்வின் இந்த இரசவாதத்தை அமல்படுத்தும் உன் புதிய ஏற்பாட்டை இம்மயான பூமியெங்குஞ் செயல்படுத்த தனித்தும், விழித்தும், பசித்தும் தவமிருக்கிறேன்! நான் மட்டுமோ, என்னைப் போல் பல்லோர் தனித்தும், விழித்தும், பசித்தும் தவமிருக்கின்றனர்! கண்டதை உண்டு, கூடிப் புணர்ந்து, உறங்கி இளைக்குங் கூட்டத்தை நான் எப்படி இகழ்வேன்? பதின்மூன்று வருடங்களுக்கு முன் நானும் அக்கூட்டத்தில் இருந்தவன் தானே! அருட்பெரு வல்லபத் தனிப்பெருந் தலைமை நற்றாயே! பசுத்தோல் போர்த்திய புலிகளாய்ப் புற்றீசல் போல் கிளம்பி விட்டப் பொய்க்குருக் கூட்டமும், அவர் காலடியில் விழுந்து கிடக்கும் மந்தைகளும் உன் திரு நிறைச் செல்வன் சற்குரு (கிறிஸ்து, நபி. மசியா. புத்த, சித்தர்) உண்மையை மூடி மறைத்து சத்தி திருடுங் கபட நாடக ஆன்மீக வியாபாரத்தை அமோகமாய் நடத்தி வருவதும் நீ அறிவாய்! இவர்களையும் நான் எப்படி இகழ்வேன்? உன் வழி காட்டுதல் இன்றேல் நானும் இக்கூட்டத்தில் தானே இருந்திருப்பேன்! மிகவும் நீட்டி வாசிக்கிறேன், நின் திரு முன்! செய்ய வேண்டியதை நீ அறியாயோ?! அன்பாம் சிவக் களத்தில் ஆண்மைப் பெண்மையாய் ஒன்றிய அருட்சத்தியே! எல்லா உயிர்களும், மெய்யாகவே நல்லோரும், நல்லோராய் நடிப்பவரும், பொல்லோரும், பொல்லோராய்ச் செயல்படத் தூண்டப் படுவோரும். நலிந்தோரும், மெலிந்தோரும், வல்லோரும், வலிந்து மற்றோரை நசிப்பவரும், வலியோர் நசிக்க இளைத்து மடிவோரும், எல்லோரும் ஒருமையுணர்வினராகிப் பேரின்பப் பெருவாழ்வில் உய்ய அரும்பெருந் தந்திரஞ் செய்வாயே! வேண்ட வைத்தாய், வேண்டி நிற்கிறேன், தயை மிகு தாயே, சொற்குற்றம், பொருட்குற்றம், மற்றும் இன்ன பிற என் குற்றங்கள் எல்லாவற்றையும் மன்னித்தருளி, என் வேண்டுதலை இன்னே நிறைவேற்றி எம்மை ஈடேற்றுவாயாக!

1 comment:

zarahkadrmas said...

The casino at Penn National Race Course is not for sale - DRM
Caesars Entertainment 청주 출장마사지 is selling the 김해 출장샵 Caesars Entertainment casino 문경 출장마사지 in Penn National Race 시흥 출장샵 Course in Murphy and selling it to 광주 출장샵 the public.