Friday, October 19, 2012

மனச் சலனம் நீக்கும் இருதய சலம்!


நன்றி: கலைவேந்தரின் இக்கவிக்கு

மெய்யே சத்தியம் நிச்சயம் நித்தியம்
மெய்யைப் பொய்யாக்கி இடுவதும் சுடுவதும்
எல்லோர்க்கும் நியதி என்றே கற்பிக்கும்
பொல்லாப்பை நம்பி அல்லலுறும் நம்மனம்


கலை எழுதியது:நான் உங்களிடம் கேட்க நினைத்ததே இம்மரணம் என்னும் கொடுமையிலிருந்து மீள்வது எங்ஙனம் என்பதுதான். சமீப காலமாக மரணத்தின் பயம் என்னை அலைக்கழிக்கவைக்கிறது. :(
“அபயம் யாமுளோம்” இருதய நாதம்
அகர முதல்தரும் அமிழ்த போதம்
அகத்துள் கவனங் குவித்துக் கேட்பாய்
அலைக்கழி மரண‌ பயத்தை அவிப்பாய்

மெய்யென்றே உடம்புக்குப் பேரும் ஏனோஅது
பொய்க்கின்ற சடலமாய் வீழ்வ தேனோ
நெஞ்சுக்குள் பெய்கின்ற அன்பின் தேனை
உண்ணின்று உண்ணாமல் வீழ்கின் றாயே

அன்பின் தேனது ஏந்தி வரும்பார்
நின்றன் மூச்சு! கவனந் திருப்பி
ஊங்கே ஊன்று!! நாத ஜோதி
வாசி ஊற்று வாசி!!! சுவாசி!!!!

ஆசி அன்பின் ஊறும் மார்புள்
ஆசி ஏந்திப் பாயும் வாசி
நேசி பூசி சுவாசி வாசி
நோயுஞ் சாவுந் தீர யோசி

சலனஞ் செய்தல் மனத்தின் இயல்பு
சலனம் இன்மை இருதய இயற்கை
கவனம் எங்கே வைப்பாய் நீயும்
சயனம் விட்டே விசாரஞ் செய்யே

பொருளாய்க் காணுஞ் ஞாலம் முழுக்க‌
அருளின் தேக்கம்! மாயை மறைக்கும்!!
சுத்த ஆவியின் திரட்சி யாவும்!!!
சுத்த அசுத்த மாயை மருட்டும்(மயக்கும்)!!!!

சத்தி காண்பாய் பொருளின் மூலம்
சுத்த சிவமே சத்தி மூலம்
சத்தி சிவத்தின் பிள்ளை யாமே(நீயே, யாவும்)
சுத்த நெஞ்சில் உண்மை ஆமே

கவனங் கொள்வாய் நேசம் மீதே
கண்ணில் தோன்றுங் காட்சி யாவும்
நெஞ்சின் உள்ளே இருதயத் திட்டே
வஞ்ச மாயை உரியக் காண்பாய்

ஊனக் கண்ணோ மரணங் காட்டும்நின்
மார்புள் இமையா ஞானக் கண்ணோ
பேரா வாழ்வின் திரட்சி காட்டும்நின்
தேகக் கூட்டுள் மெய்ம்மை காட்டும்

மாயை யுள்ளே சுத்தம் வேறா
ஞானப் பிள்ளை நீயுங் கேட்பாய்
போலிச் சுத்தம் அதுவே மருட்டி(மயக்கி)
ஞாலம் முழுக்க அசுத்தம் அழுத்தும்

சுத்த மாயை என்னும் அச‌த்துவம்
பின்னும் பொல்லா அசுத்த மாயை
என்னுங் கல்லாம் இருமை பேதம்
வன்பாம் இராஜசம் முடக்கத் தாமசம்

குட்டும் எத்தன் என்றுங் குட்டக்
குட்டக் குனியும் பித்தன் என்றும்
நட்டு வைத்த சதியை முறிப்பாய்
குட்டு உடைக்குஞ் சித்தன் ஆவாய்

(மாயையிலே சுத்த மாயை அசுத்த மாயை என்று இரு வகை

சுத்த மாயை என்பது அஞ்ஞானத் திமிர், இதுவே அச‌த்துவம் என்னும் திரிகுணப் பிரதானம்

அந்தத் திமிரானது ஞானம் போல் தன்னைக் காட்டிக் கொண்டு
இந்த ஞாலம் முழுமையையும் அசுத்த மாயையில் அழுத்தும்

அசுத்த மாயை என்பது இரு வகை
ஒன்று இராஜசம் என்னும் அடங்கா இயக்கம், தீவிர வாதம், வன்பு
இன்னொன்று தாமசம் என்னும் இயங்கா முடக்கம், தீவிரத் தூக்கம், பூரண மயக்கம்

ஆக அசத்துவம் என்னும் சுத்த மாயையும் தாமசம் ராஜசம் என்னும் அசுத்த மாயையும் சேர்ந்ததே திரிகுண மாயை.

மொத்த மாயையையும் குழியாகக் கொண்டால்
அசத்துவம் குழியின் மேற்புறம், ஆனால் அது தன்னைக் குன்றின் உச்சமாக எண்ணிப் பெருமிதப்படும் அஞ்ஞானத் திமிர்

ராஜசம் குழியின் நடு பாகம்
தாமசம் குழியின் அடிவாரம்

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டம் போடக்
குருடுங் குருடும் குழிவிழுந் தனவே

இது திருமூலர் திருமந்திரம்

Blind will lead the blind and both will fall in the ditch

இது குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் வேத வாசகம், திருமந்திரத்தின் கடைசி இரு வரிகள் அப்படியே ஆங்கிலத்தில், சர்வ சமய சமரசம் என்பது இதுவே!

குட்டும் எத்தன் = இராஜசம்
குட்டக் குட்டக் குனியும் பித்தன் = தாமசம்
நட்டு வைத்த சதி = அசத்துவம்
குட்டு உடைத்தல் = திரிகுண மாயையை உரித்தல்)

No comments: