Wednesday, January 7, 2009

7. ஜோதி ஸ்வரூபம்

மேலான உண்மை தேற மேலேறு!

பாலான உள்மை ஊறும் ஊர்சேரு!

மாயப் பொய்ம்மை யாவும் தாண்டி

மாயா மெய்ந்நிலை பாரில் நீபாரு!நடவா வெறுங்கல் சடமா யிருந்தாய்!

நடந்த பரிணா மத்தால் மனிதனாய்

எழுந்தாய்! பரிணா மப்பாய்ச் சலில்பார்

எழுகிறாய் மாயா மெய்யாய் விரைந்து!மாயா மெய்ந்நிலையே நின்பேரா இயற்கை!

மாயப் பொய்ச்சுழலில் சிக்கிநீமெய் மறந்தாய்!

மாயுஞ் சாக்காடு மாமாயச் செயற்கை!

மாயான் வாக்காடும் நின்இருதய வாய்மை(மெய்)!நேற்று நடந்ததுன் அதிசயப் பரிமாற்றம்!

இன்று பிறக்குதுன் ஜோதி ஸ்வரூபம்!

கண்டிப்பாய்க் கிடையா தென்ற மாயா

மெய்ந்நிலைநின் கையகம் இன்று ஆஹா!ஆஹா! உம்மெய் மெய்யாகவே மெய்யானதே!

மாயா இயற்கை யாம்பேராப் பெருநிலைஎன்

றாகுமென் இறைவா என்றேங்கிய நம்மனத்தின்

தாகந் தீர்த்தே உய்ந்தார்அருள் வள்ளலின்றே!நினைக்க பயமா யிருக்குஞ் சாவை

நிர்மூ லமாக்குங் கலையால் மாயா

நிலையை
நினக்குக் கற்பித் தாஹா

நினைமே லேற்றினார் வள்ளல் இன்றே!நிராதார ரத்தினகிரி யாம்மாயா மெய்ந்நிலைதான்

ஆறாதாரம் உய்யும்சுப நாள்இன்று பொய்ம்மரணப்

பேயொழியும்! பெய்யும்அருட் தேன்உண்டு நம்சற்குரு

நாயகனார் வெள்ளங்கியுள் நீர்அடங்கி வாழ்வீரே!மரணமுள்ள சிறுவாழ்வை வேரோடு பிடுங்கி

மரணமிலாப் பெருவாழ்வை பூமியிலே நாட்டி

ஆன்மநேய உரிமையால் மாந்தரையே கூட்டித்

தேன்மொழிமந் திரங்கூறி ஜோதியுள்நமைச் சேர்த்தான்!


சுற்றும் பன்னிரண்டும் பதின்மூன்றாம் மையத்துள்

உற்றுப் பராபரமாம் பதிக்குள்தாம் சுழிந்துப்பின்

வழியும் அருண்மெய்வழி பற்றிநின்றால் சாக்காடு

ஒழியும்! மாயாநிலை பெற்றுவாழ்வாய் நீடூழி!பரஞான உச்சி! தூயநோக்க நெற்றி!

குருமந்திரம் முழங்கும் தொண்டைக்குழி! இருதயத்

திருபூமி! சத்திய தரிசனம்உறும் நாபி!

பரிமாறும் அற்புத நாபியடி! ஜோதி

உருவம்பெறும் முதுகடி! நிராதார ஏழ்நிலை

ஆறாதாரம் இறங்கும் குருநாதர் மெய்வழி!சிவமலைச் சிகரத்தே சுடர்விடும் ஜோதி

சிரமேல் தொட்டுப்பின் மெய்க்குள் போந்து

முதுகடி இறங்கிமெய்யை சுடச்சுடச் சுடரும்

புதுவடி வாய்மாற்றி பூமியைப் புரட்டுதே!அருள்வழியும் பால்வீதி மெய்க்குள் உற்றே

மருள்ஒழியத் தேன்வாக்கு வள்ளல் வந்தார்!

முதுகடியில் ஆ!ஜோதி உருவம் தந்தார்!

புதுவடிவ மாயாப்பொன் மெய்யை ஈந்தார்!வன்பின் பள்ளத்தில் கிடந்தகரு மனத்தை

அன்பின் வெள்ளத்தில் அடித்துநன்றே வெளுத்துக்

கற்பூர மாய்இருதய தீபத்துள் கரைத்துயிர்

வற்றாத மாயாஅருட் ஜோதிஉருவந் தந்தான்!உச்சி பிளந்து நெற்றி வெளுத்துத்

தொண்டைத் தேன்வழி திறந்து இருதயத்

திருபூமி உய்த்து நாபியுள் சத்திய

தரிசனங் காட்டி யதன்கீழ் அதிசயப்

பரிமாற்றஞ் செய்து முடிவில் ஜோதி

அருள்வடிவந் தந்தார் சற்குரு வள்ளல்!ஞானக் கூர்வாள் வீசி"மாயை" யைஅறு!

தேனாம் தாரைவிழ "ஐ யாம்"குரு மொழியாய்

"மாயை" கரையும்!நின் எழுபடிமெய் இனிக்க

மாயாப் பெருநிலையில் எழுவாய்நீ உயிர்த்து!

(மாயை=ம்+ஆ+ய்+ஐ=ஐ+ய்+ஆ+ம்=ஐ யாம்=I AM)மேலிருந்து கீழ்வரை நீளும் அருட்பால்வீதி

நீயிருக்கும் மெய்க்குள் காட்டுங் குருவள்ளல்

வாக்குள்ளே ஆழ்ந்து நாளும் தவத்தில்நில்!

சாக்காட்டுப் பொய்த்திரை வீழ ஜோதியுரு!

No comments: