Wednesday, January 7, 2009

5. சத்திய தரிசனம்

உந்திக்குள் இற(ர)ங்கினார் நாகை நாதர்!

பந்திக்கும் இருவினை அற்றுப் போயின!

சத்திய தரிசனம் பெற்றுக் கொண்டோம்!

வித்தக வள்ளலின் யோகம் தேர்ந்தோம்!



மூவரும் திரண்ட இருதய பூமியின்

தூய்மை இற(ர)ங்குது கமல நாபியுள்!

யாவருஞ் சத்திய தரிசனம் பெறவே

வாய்மை வள்ளலின் குருமொழிப் பெருக்கே!



தொந்திக்குள் குதித்தார் போக நாதர்!

வஞ்சிக்கும் வல்வினை விட்டுப் போயின!

என்றென்றும் விளங்கும் சத்திய தரிசனம்

சித்திக்கும் நல்வரம் ஈந்தார் குருபிரான்!



உந்திக்குள் போந்தார் வள்ளல் நந்தி!

வன்புக்குள் தோய்ந்த கன்மங் களோட

அன்புக்குள் ஆழ்ந்த சத்திய தரிசனம்!

புந்திக்குள் போதி மின்னலாய்க் குருபிரான்!



மூவரின் ஒருமையாம் அருண்மயத் திருமூலம்!

பூமியின் இருதயமாம் பரம்பொருட் கருவூலம்!

நாபியுள் இறங்குமோர் அருட்பெரு வல்லபம்!

பாவநோய் அறுக்குமோர் சத்திய தரிசனம்!



பொய்க்கும் கடந்தான் மெய்யாய் மினுக்க

மெய்யோன் கடந்தான் உந்தியில் இனிக்க!

குருமொழி மலைத்தேன் தொந்தியில் செரிக்க

மருண்மயக் கறுக்குஞ் சத்திய தரிசனம்!



மெய்வழி காட்டும் வள்ளலென் மந்திர

மெய்ம்மொழி
தேக்கிப் புந்தியில் பொய்ம்மருள்

நீக்கியுன் உந்தியுள் பஞ்சமா பாதகம்

போக்கியென் சத்திய தரிசனங் காண்!



மோனமாய்க் கேளு தயாபரத் தேன்மொழி!

ஞானவாள் நீட்டும் பராபர மேனிலை!

உந்திக்குள் போந்துபா சங்கள் வெட்டு!

சந்திப்பாய் நீயுன் சத்திய தரிசனம்!



தாமச முடக்கம் போய்சத்தின் இருப்பு!

ராஜச மூர்க்கம் போய்சித்தின் விளக்கம்!

சத்துவ ஆணவம் போய்ஆண்டவர் இன்பம்!

சச்சிதா னந்தம் ஆம்சத்திய தரிசனம்!



மெய்யோன் மாயான் நாபிக்குள் உய்ந்தே

பொய்யோன் ஆணவப் பேயனை மாய்த்தான்!

இருவினை தீர்த்தான் பாசமும் அறுத்தான்!

குருபிரான் ஈந்தான் சத்திய தரிசனம்!



அவத்தின் கிடங்காய்த் திரிந்த மனத்தைத்

தவத்தே கிடத்தி அடங்க வைத்தார்

வள்ளல் பெருமான்! உந்தித் தாமரை

உள்ளே அளித்தார் சத்திய தரிசனம்!

No comments: