Friday, December 19, 2008

1. பரஞான போதம்

1
பழுதான உடம்பும் மனமும்

பழுதனைத்தும் நீங்கிப் பழுக்கப்

பரமனின் அருளாய் விழும்

பரஞான போதம் விழுஙக

சிர உச்சி மீதில் வீறுடன் எழு!


2
அருந்தரமான பரம்பொருள்

தருஞ்சுகமான வரங்கொள

சிர உச்சி மீதில் தவமிரு!

பரஞான போதம் விழும்! விழும்!

பரமதயாள வள்ளல் மீதாணை!


3
கள்ள மனந் தாண்டி

வெள்ளங்கி வள்ளல்

அள்ளி வீசும் அருளைத்

துள்ளிப் பருக வருமே

உள்ளத்தே பரஞானம்!


4
பட்டுப் போங்கடம்

பட்டுப் போல் மினுக்கக்

கொட்டு வார் வள்ளல்

எட்டலாகா போதமாம்

விட்டகலாப் பரஞானம்!


5
எட்டு! மேம்பாலம்

முட்டு! சிர உச்சியில்

கொட்டும் அருளால்

கிட்டும் பரஞானம்!

நட்டமா கும்மரணம்!


6
வெள்ளங்கி ஒளியருள்

வெள்ளத்தில் மூழ்கி

உள்ளத்தே ஒளிந்திரு

வள்ளலார் வருவார்

நள்ளிரவில் பரஞான விடியல்!


7
ஆறு வழி தாண்டி

ஏறு! எழும் உச்சியை

மீறு! எட்டு மேம்பாலம்!

ஊறு அருளாறு உள்ளே!

ஆறும் மனத்துள்ளே பரஞானம்!


8
சிற்சபையாம் உளத்திற்தன்

பொற்சபையைப் பதித்தாரே

வள்ளலார்திரு அருட்பிரகாசர்!

கொள்ளவாரீர் பெருவாழ்வை

அள்ளித்தரும் பரஞானபோதம்!


9
பிரதான சிரந்தாண்டு!

நிராதார வரங்கொண்டு

சிரமிறங்கு! அருட்தரத்தை

ஆறாதாரத்தின் ஆழத்தேயிறக்கு!

பரஞானந்தந் தாரேவள்ளல் இன்று!


10
மெய்யேதான் உரைக்கின்றேன்!

உய்யும்வழியாய் எழுநிலையில்

பெய்யுமேமெய்யுள் நிராதார

மெய்யருட்தாரை இன்றுமுதல்!

மெய்யுரைத்தார் வள்ளலாரே!


11
பொய்ப்போக இருள்நீக்கி

மெய்ஞ்ஞான அருள்விளக்கி

உய்விக்க உச்சிபிளக்க

உய்ந்தாரே வள்ளலார்

மெய்யுணர்ந்து உய்வீரே!


12
முடியும் மரணம்!

விடியும் பெருவாழ்வு!

வடியும் அருள் எழு

படிகளில்! வள்ளலார்

அடிகள் மீதாணை!


13
புணரத் தானே வந்துமெய்

யுணர்ச்சி தன்னைத் தந்துபொய்ப்

புணர்ச்சி போகம் அறுத்துநசியும்

கணக்கை முடித்து மெய்யருட்

பணத்தைத் தந்தாரே வள்ளலார்!

No comments: