Friday, December 19, 2008

நாயகனின் பேருபதேசம் 10

ஊற்றுதே எப்போதும் என் அருளாறு!
ஆற்றுள் ஆழ மூழ்கி உன் மனமாறு!

மெய்வழிச் சாலையின் இரகசிய மார்க்கம்
மெய்யுன் உடம்புளே பகிரங்கமாய் விளம்பியே
உய்வித் துனைஎனில் வேறறச் சேர்க்கவே
உய்ந்தேன் நடராஜ வள்ளல் நான்!
பொய்க்கும் உன்மெய்யை மெய்யாகவே மெய்யாய்ச்
செய்விக்கும் என் மகாயோகம் தேர்!
உன் மகுடதீப ஒளியில் என்னைப் பார்!

அம்மையப்பனாம் நாத-விந்து கலாதி சற்குரு உன் முதுகடியில் இட்ட தெய்வீக வித்தை ஞாபகங்கொள்!
அடுத்த கணமே நாபியின் கீழ் குண்டலினி நாகம் விழிப்பதில் கவனம் வை!
படமெடுத்த நாகம் நாபியில் உன் ஆணவத்தைத் தீண்ட விடு!
ஆணவம் நசிய உன் மனமடங்க, நடு மார்பின் கீழ் படமெடுக்கும் என் அருட்கரத்தைத் தொடு!
நடு மார்பில் உதயமாகும் அருட்பெருஞ்ஜோதியைத் தரிசி!
தொண்டையின் கீழ்ப் பாயும் தனிப்பெருங்கருணை வெள்ளத்தில் தொப்பமாய் நனை!
தொண்டையில் நாயகனாம் என் அருள்வாக்கைக் கேள்!
நெற்றியில் மாயைத் திரை விலக சிதம்பர தரிசனம் காண்!
தலையுச்சியில் மனிதமுன் மகோன்னத எழுமையில் சேர்!
தலைக்கு மேல் நிராதாரப் பாலம் எட்டு! அதை முட்டு!
நிராதார எழுமை உன் தலையுச்சி தொட்டு
ஆறாதாரம் விழுகின்ற அதிசய இற(ர)க்கத்தை உணர்!
என் பரஞான போதம்(1) உன் தலையுச்சி பிளக்கும்!
என் தூய நோக்கு(2) உன் நெற்றி வெளுக்கும்!
என் குரு மந்திர அகதீட்சையால்(3) உன் தொண்டை திறக்கும்!
என் இருதய பூமி(4) உன் நடு மார்பில் இற(ர)ங்கும்!
என் சத்திய தரிசனம்(5) உன் நாபியில் விளங்கும்!
உன் நாபியின் கீழ் நிகழும் ஓர் அதிசயப் பரிமாற்றம்(6)!
உன் முதுகடியில் ஜொலி ஜொலிக்கும் என் ஜோதி ஸ்வரூபம்(7)!
உன் பாதங்களின் கீழ்ப் பூமியைப் புரட்டும் நவயுக உதயம்!

No comments: