Friday, December 19, 2008

3. குருமந்திர அகதீட்சை

1
அம்மையாய்ப் பரஞான போதந் தந்தீர்!

அப்பனாய்த் தூயநன் நோக்கைத் தந்தீர்!

குருவாய் அகதீட்சை மந்திரந் தந்தீர்!

அருள்நிதி வள்ளலே நீரே என்கதி!


2
குருமந்திரம் பத்தும் ஒருமூன்றும் அருளி

இருட்குழியுள் கிடந்த என்னைத் தெருட்டி

அருட்தவத்தே நிறுத்தித் தம்கடை விரிக்கும்

பெருவரமுந் தந்த வள்ளலே என்கதி!


3
அவத்தே பழுத்து அழுகிய என்னைத்

தவத்தே பழுக்கும் அதிசயஞ் செய்தீர்!

குருமந்திர தாரணை வசப்பட வைத்தீர்!

பெருந்தயாள வள்ளலே நீரே என்கதி!


4
சவமாய்க் கிடந்த எந்தையுட் புகுந்து

சிவமயச் செம்பூ என்கையகந் திணித்தீர்!

எரியுது சிதையில் மரணம்பார் என்றீர்!

பெரியோன் வள்ளலே நீரே என்கதி!


5
வன்பின் சிகரமாய் ஆடிய என்னை

அன்பின் பிடியுள் அடங்கச் செய்தீர்!

குருமந்திரம் அகத்தே ஓதிமா யாநிலை

தருந்தந்திரர் வள்ளலே நீரே என்கதி!


6
சத்தே உன்நாமம் சித்தே உன்உருவம்

சத்திய தரிசனமே உன்பே ரானந்தம்

மந்திரந் தந்தென்மயக் கறுத்த உட்போதகர்

சுந்தரர் வள்ளலே நீரே என்கதி!


7
மண்டையின் மேலும் முன்னும் பிளந்தது!

தொண்டையுள் மந்திர வழியும் திறந்தது!

நிராதார மாயா நிலையும் புகுந்தது!

தராதலத்தே வள்ளலின் வாய்மை வென்றது!


8
நிராதார அருட்பால்

ஆறாதாரக் கலசத்தடி சேர

தொண்டைக் கதவம் திறக்கவே

வள்ளல் பிரான் வழங்கும்

குருமந்திர அகதீட்சை!


9
கருத்தகன் மனத்தனாய் இருள்சேர் இருவினைக்

கருங்குழிக் கிடந்தவென் மனம்வெளுக் கவேகுரு

மந்திரம் அளித்தெனை அருந்தவ மலைமேல்

வைத்தீர் வள்ளலே நீரே என்கதி!


10
உச்சி துளைத்துப் பரஞானம் அளித்து

நெற்றி திறந்து நன்நோக்கம் அருளி

தொண்டை புகுந்து குருமந்திரம் புகட்டிய

ஆண்டவர் வள்ளலே நீரே என்கதி!


11
நிராதார நிர்மல அருட்ஜோதித் தூணையே

ஆறாதாரத் தண்டிலே புகுத்தும்பே ரதிசயம்

தராதலத்தே செய்யவே பெருந்தயவாய் இற(ர)ங்கினார்

பராபரத்தே வாழும் வெள்ளங்கி ஆண்டவர்!


12
யந்திர மெய்யுளேகுரு மந்திரம் முழக்கி

அந்தர நிராதாரம் மொத்தமும் இறக்கும்

தந்திரஞ் செய்யவேபெருந் தயவாய் இற(ர)ங்கும்

சுந்தரப் பராபரவள் ளலாரே என்கதி!


13
நிராதாரம் ஓடும் பரசிவ வெள்ளம்

ஆறாதாரம் வழியே மெய்க்குள் பாய்ச்ச

பராபரத்தே வாழும் வள்ளலார் இற(ர)ங்கி

தராதலத்தே முழங்கும் குருமொழி கேண்மின்!


14
அருளம்மை இற(ர)ங்கினாள் பரஞா னபோதமாய்!

அருட்தந்தை இற(ர)ங்கினார் தூயநன் நோக்கமாய்!

குருவள்ளல் இற(ர)ங்கினார் மந்திர முழக்கமாய்!

ஒருமையாம் திரித்துவம் மாயா மெய்ந்நிலையாய்!


15
மாயாத் தாயார் உச்சிமீ தமர்ந்தாள்!

மாயா எந்தை நெற்றியில் எழுந்தார்!

மாயா மெய்க்க்குரு தொண்டையுள் பொழிந்தார்!

மாயா மெய்ந்நிலை வென்றேநான் எழுகிறேன்!


16
தலைவியாம் வாலையே உச்சித் தாமரை!

தலைவனாம் நாயகன்தான் நெற்றித் தீவிழி!

தலைமகன் சற்குருவே தொண்டைத் தேன்வழி!

தலைமை(மெய்) யால்மாயா மெய்ந்நிலை சேர்ந்தேனே!


17
வாலை நாயகி உச்சியில்! மெய்வழிச்

சாலை நாயகன் நெற்றியில்! குருமொழிப்

பாலை ஊற்றுவன் தொண்டைக் குழியினில்!

பாலை தேகமுஞ் சோலை யாகுதே!


18
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!அருள்

ஆற்றுள்ளே ஊறித் தேற்றிக் கொள்!குரு

வாக்குள்ளே ஏற்றிப் போற்றிக் கொள்!நின்

நாக்குள்ளே பூட்டி நன்நோக் கைக்கொள்!

No comments: