Friday, December 19, 2008

2. தூய நோக்கு

உடம்பின் எழுநிலை தாண்டி எழு!

உச்சி மீதேறி திடவரம்புகள் மீறு!

நிராதார மேம்பாலம் எட்டு! முட்டு!

பராபர அருளாற்றுள் ஆழ்ந்து ஊறு!

பரஞான போதம் உச்சியில் தேறு!

பரந்தவுன் நெற்றியுள் தூய்மை சேரு!

தரமான தூயநோக்கை எப்போதும் பாரு!

வரமான வள்ளல்வாக்கை மறவாமல் வாழு!



உச்சி பிளந்தது பரஞான போதம்!

நெற்றி வெளுக்குது தூய நோக்கு!

வள்ளல் வாக்கு மெய்யாய்ப் பலிக்குது!

கொள்ள வாரீர் பெய்யும் அருண்மழை!



தொற்றி நின்ற அருள் வெள்ளத்தால்

உச்சி பிளந்து நெற்றியில் பற்றியதே தீ!

கள்ள மனந்தான் கற்பூரமாய் வெளுத்துப்

பற்றிய தீபவொளியில் மணக்குதே தூயநோக்கு!



மருண்ட நெற்றியைத் தெருட்ட வந்தார்

திருஅருட் பிரகாச வள்ளலார்! சிரஉச்சி

திறந்து பரஞான போதமும் நெற்றிக்கண்

திறந்து தூயநன் நோக்கையுந் தந்தார்!



உச்சியைப் பிளந்துள்ளே புகுந்த

சுத்தமாம் பூரணந்தான் திறக்குதே

நெற்றியை! சுயஞ்சுடரொளி தோன்றக்

கண்ணுளே தூயநோக்குப் பிறக்குதே!



நிராதாரத்தே ஓடும் பரசிவ வெள்ளம்

ஆறாதாரத்தே ஓடும் (இ)ரகசிய வழியைப்

பராபரத்தே வாழும் பெருமான் வள்ளல்

தராதலத்தே இற(ர)ங்கித் தயவாய்த் திறந்தார்!



மெய்யான மெய்யைப் பொய்க்கும் மெய்க்குள்

உய்த்திடுமோர் மெய்வழிச் சாலை யாவரும்

எய்தற்கே பரஞான போதந் தந்தார்

தெய்வநிலைத் தூயநோக்குந் தருகின்றார் வள்ளலார்!



சாவா நிலை யார்க்குஞ் சொந்தம்

வாவா என்றே பார்க்குள் வள்ளல்

விரித்தி ருக்கும் கடைக்குள் வாரீர்!

தரித்திர மரணம் ஒழியும் நிச்சயம்!



வெளுத்த தன்நெற்றி உரசி வீண்மனப்

பளுவைக் கொளுத்திச் சிதம்பர வெளியில்

அருட்பெருஞ் ஜோதியைத் தரிசிக்க வைத்தார்

பெருந்தயாளத் திருஅருட் பிரகாச வள்ளலார்!



பள்ளத்தே சவமாய்க் கிடந்த கள்ளமனக்

குள்ளனெனைத் தவத்தே நிறுத்த எழவைத்து

வெள்ளமெனப் பாயும் அருளை நிறைவித்து

வெள்ளைமனச் சேயாய் எனைமாற் றினார்வள்ளல்!



உய்விக்கும் மெய்யேதான் உரைக்கின்றேன்! வள்ளலார்

பெய்விக்கும் அருண்மழையில் கரைக்கின்றேன் கன்மனம்!

பரஞான போதத்தால் திறந்ததேயென் சிரவுச்சி!

தரமான தூயநோக்கால் வெளுக்குதேயென் கருநெற்றி!



அருட்தாயின் கொடையாகப் பரஞான போதம்!

அருட்தந்தை வரமாகத் தூயநன் நோக்கு!

மருண்டவென் தலையைத் துவட்டித் தெருட்டும்

அருட்குருவாம் வள்ளலேயெந் தன்சர ணாகதி!



தாயாகித் தந்தையாய்க் குருவுமாகி

ஓயாது பாய்கின்ற அருளினாலே

பேயானப் பாழ்மனத்தைத் தெருட்டித்தன்

சேயாக்கி உய்வித்தார் வள்ளலாரே!

No comments: