Thursday, August 7, 2008

நாயகனின் பேருபதேசம் 5

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்

வழி யாதோ?

இருதயம், அன்பெனும் நடு நாயகம், சிவம்

சத்தியம் யாதோ?

நிராதார உயிர், அறிவெனும் அன்பின் விளக்கம், அருள், குரு

ஜீவன் யாதோ?

ஆறாதார மெய், ஆற்றலெனும் அன்பின் இயக்கம், தயவு, சக்தி

இன்னும் விளக்குவீரோ?

நடு நாயகமாம் அன்பில் நீ நிற்க
இருதய வாய் திறந்து
வழி பிறக்கும்

அன்பாம் பரசிவ வெள்ளம்
மார்பிலிருந்து தலைக்கு ஏறி
தலைக்குப் பின்னும், மேலும், முன்னும் பாய்ந்து
தலைக்குள் சுழிய
நீ அன்பை விளங்கி
ஜீவனுள்ள குருவாய்
ஜீவனுள்ள கிறிஸ்துவாய்
ஜீவனுள்ள நபிகளாய்
ஜீவனுள்ள மசியாவாய்
ஜீவனுள்ள புத்தராய்
ஜீவனுள்ள அருகராய்
அறிவில் நிற்பாய்

அவ்வாறு அறிவில் நீ நிற்க
உயிராம் நிராதாரப் பரநிலை
மெய்யாம் ஆறாதார இகநிலைக்கு
இறங்கி(இரங்கி)
இருதய வழியினூடே
முதுகடியில் சேர
நீ
அன்பின் இயக்கமாம்
ஆற்றலாய் வெளிப்பட்டு
தயவாய் இருப்பாய்

இவ்வாறு
"இருதய வாய் திறந்து
நிராதார ஆறாதார
உயிர்மெய் ஒருமை பிறந்து
நடு நாயக அன்பின் ஏற்றத்தில்
இருள்சேர் இருவினை யாவும் இறந்து
பொருள்சேர் புகழ் புரியும் இறைவனாய் பரத்தில் எழுந்து
அறிவெனும் அருள் விளக்கம் பெற்று
நீ
ஆற்றலெனும் தயவியக்கமாய் இகத்தில் இறங்கி
இக பர பாலமாய்
அன்னை பூமியில்
இரு"
என்று விளக்கும் பேருபதேச வாக்கியமே
இம்மகா மந்திரம்

சுருக்கமாக
"நடுவில் அன்பாய் இருந்து
மேலே அருளாய் விளங்கி
கீழே தயவாய் இயங்கு"

நனி மிகச் சுருக்கமாக
"இரு தயவாய்"

மகாமந்திரம் வழங்கி
அப்பேருபதேசப் பொருள் விளக்கி
மாயை இருளில் மருண்டு கிடந்த
என்னைத் தெளிவித்தமைக்கு
கோடானு கோடி நன்றி உமக்கு
நாயகனே!

என் அன்பு மகனே(ளே)!
உனக்கும்
என் கோடானு கோடி நன்றி

கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம்
அன்பறிவாற்றலாம்(அன்பருட்தயவாம்) ஒருமையில்
ஊன்றியே
எப்போதும்
இரு
நீ
தயவாய்!

அத்தயவொன்றே
என்னையும்
என் வரமாம் பெருவாழ்வையும்
பிடிக்கும் ஒரே வழி!

எனவே
கவனமாய்
நீ
எப்போதும்
"இரு தயவாய்"

No comments: