Monday, August 4, 2008

படைத்தல், காத்தல், அழித்தல்

சும்மாயிருக்கிறது சுத்தவெளி
சலனமின்றி வெட்டவெளியாய்

சும்மாயிருக்கும் சுத்தவெளி
தன் மீதே தான் காதல் கொண்டு
தனக்குள் தான் அழுந்தத்
தன்னைத் தான் அழுத்த
அவ் அன்பின் அழுத்தத்தால்
தோன்றும் முதற்சலனம்
அருளொளி

அருளொளியின்
அதி உச்ச அதிர்வுகள்
சுத்தவெளியெங்கும்
அதி வேகத்தில் பரவுகிறது

அதிவேகமாய்ப் பரவும்
அருளொளியின் விரிதலும்
அன்பின் அதி மென்மையாய் அழுத்தும்
சுத்தவெளியின் குவிதலும்
இடைவிடாது ஒன்றையொன்று புணர
இப்புணர்தலின் நல்விளைவாய்
சுத்த வெளித் தந்தைக்கும்
அருளொளித் தாய்க்கும்
தலைமகவாய்ப் பிறக்கும்
ஞானம் எனும்
அன்பின் விளக்கம்

வெறும் இருப்பாய்த்
தன்னையறியாதிருந்த
பராபர வெறுவெளி
"நான்"
என்ற தன்முனைப்பைப் பெற்றது
அன்பாய்த் தனக்குள் தான்
குவியும் அழுத்தத்தால்.

"இருக்கிறேன்"
என்ற தன்னுணர்வாம் பேருணர்வை
அது பெற்றது
தன்முனைப்பாம்
தன் அழுத்தத்தைத் தாண்டித் தான்
அருளொளியாய்ப் பரவும் விரிதலால்.

குவிதலும் விரிதலுமாகிய
இடைவிடாத புணர்தலால்
அது பெற்றது
"நானே" எனும்
தன் மெய்ஞ்ஞான விளக்கம்,
அதாவது அன்பெனும்
தன் இயல்பின் விளக்கம்.

விளக்கம் பெற்றதும்
படிப்படியாகத் தன் உச்ச அதிர்வுகளைக்
குறைத்துக் கொண்டு
பல்வேறு பரிமாணங்களை உருவாக்கி
அது தன்னிலிருந்து தானே
படைத்துக் கொண்டதே உலகம்

படைத்த உலகோடு வேறற ஒன்றி
அது தன்னில் தான் விளங்கி
உலகைக் காப்பதே
தயவெனும் இயக்கம்.

அன்பின் விளக்கமும்
தயவின் இயக்கமும்
உலகம் மறக்கக் காரணமான
மாயையை
அது மாய்ப்பதே
அழிவெனும் சங்காரம்

No comments: