Tuesday, August 5, 2008

நாயகனின் பேருபதேசம் 4

என் அன்பு மகனே(ளே)!
தலையுச்சியில் பதிந்து
உன் விழிகளில் அருள் விளக்கும்
அறிவாய்ச் சிவந்து
இருதயத்தில் பதிந்து
உன் கரங்களில் கருணைக் கனியாம்
அன்பாய்ச் சிவந்து
முதுகடியில் பதிந்து
உன் பாதங்களில் தயவு இயங்கும்
ஆற்றலாய்ச் சிவந்து
வாடாத செஞ்சுடர்ப்பூவாம்
பராபர வள்ளல் நான்
உன் மெய்க்குள் உயிராய்
வேறற ஒன்றி
இகத்தில் புகுந் தருணம்
இதுவே!


ஐயனே! வள்ளல் உமக்கு
எப்படி ஆற்றுவேன் கைம்மாறு?

என் அன்பு மகனே(ளே)!
எல்லாந் தழுவிய
முழுமையாம் அன்பெனும்
ஒருமையில்
எப்போதும் ஊன்றி நின்று
இரு நீ தயவாய்!
இதுவே
நீ எனக்கு
ஆற்றும் கைம்மாறு!
அன்பறிவாற்றலாம் உயிராய்
உன் மெய்க்குள்
வாடாது பூத்திருக்கும்
என்னை விளங்கி நேசித்து
என் போல் ஆகவும் இயங்கவும்
தயவொன்றே மெய் வழி!
ஐயமின்றி இதை அறி!
தயவெனும்
மெய்வழிச் சாலையாய்
பராபர நான்
இகத்தில் நீளும்
உண்மை தெளி!
பிறப்பிறப்புப் பொய்ம்மாயச் சுழல் தாண்டி
பேரின்பப் பெருவாழ்வில்
ஆனந்தமாய் ஆடிக் களி!
என் அன்பு மகனே(ளே)!
என்றும் நீ
இரு தயவாய்!
உன் செவிப்பறைகள் அதிர
உன் செவிகளில்
இனி எப்போதும்
தப்பாமல் ஒலிக்கும்
"இரு தயவாய்" என்ற
இருதய நாதம்,
மாயை நள்ளிரவைக் கீறும்
பரவிந்துப் பட்டப்பகல் வெளிச்சமாய்!

கவனம்!
அதி கவனம்!
அன்பெனும் தயவே பேரின்பப் பெருவாழ்வு
அவ்வொருமை நழுவிய கணமே
கடுந்துன்பச் சாக்காடு!
எனவே கவனமுடன்
எப்போதும் நீ
"இரு தயவாய்"

No comments: