Sunday, August 10, 2008

நாயகனின் பேருபதேசம் 6

திரிந்து தெரியும்
தோற்றப் பிழையாய்
உன் உள்ளத்தை அரிக்கும்
உள்ளதைக் கடந்து
உன் உள்ளத்துட் கடந்து
தோற்றப் பிழைகளின் மூல காரணமான
மாயத் திரையெலாங் கடந்து
உன் உள்ளே கடந்து
உள்ளுள்ளே கடந்து
மெய்க் கடத்துள்ளே
ஆனந்த நடம் ஆடும்
நடராச வள்ளல் எனைக் காணும்
மெய் வழி ஒன்றை
நீ உய்வதற்கென்றே
என் ஏழாந்திருமுறை உறுதியாய்
உன் செவிப்பரைகள் அதிர
உன் இருதய விழி திறக்கப்
பர விந்தாய் மின்னும்
குரு மந்திர நாதமாய்
இடை விடாது அறைகின்றேன்
"இரு தயவாய்"
என் மகனே(ளே)!
தயை கூர்ந்து
செவி மடுப்பாய்
என் பேருபதேசத்தின்
இரத்தினச் சுருக்கம்!
மற்றபடி இருமை இருளில்
மதி மருண்டு
நீ செய்யும்
ஆறறிவுத் தந்திரங்கள்
சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்
என்னும் என் மெய் வழியில்
உன்னை ஒரு காலும் சேர்க்கா!
அன்பின் மிகுதியால்
அறைந்து சொன்னேன்
சுளீரென்றும்
பளாரென்றும்
சுடச் சுடச் சுடரும்
இரு வார்த்தைகளால்!
தயை கூர்ந்து
செவி மடுத்து
"இரு தயவாய்"
அன்பெனும் ஒருமை அருளில்
மதி தெருண்டு
என் மெய் வழி சேர
நீ
"இரு தயவாய்"
அரிய மனிதம்
அரிந்து போகாமல் பிழைக்க
எளிய வழி ஒன்றை
உனக்குச் சொன்னேன்!
காலமில்லை மகனே!
இருக்குங் கணங்களை
இனியும் விரயம் செய்யாது
நீ விரைந்துணர்வாய்!
பொய்ச் சாக்காட்டுப் படுகுழி தாண்டி
மெய்யின்பப் பெருவாழ்வு ஜோதிமாமலை ஏற
நீ
கணப்போதும் மறவாமல்
அதி கவனமுடன்
எல்லாந் தழுவிய
முழுமையாம் அன்பெனும்
ஒருமையில் ஊன்றி நின்று
எப்போதும்
"இரு தயவாய்"
நீ கேட்டவாறே
ஊற்றுகிறேன் என் கருணையுடன்
ஆசி!
என் அன்பு மகனே(ளே)!
நீ இதை ஆழ
யோசி!
உன் நாசியில் வாசியாய்ப் பாய்ந்து
உன் இருதய ஊசி விழி திறக்க
இடைவிடாது
பர விந்தாய் மின்னும்
குரு மந்திர நாதம்
வாசி!
வீணே பேசி
வாணாளை விரயமாக்காமல்
என் ஆசி ஏற்றே
நீ
"இரு தயவாய்"!
தெரிய வேண்டியதைப்
பகிரங்கமாய்த் தெரியச் சொன்னேன்!
புரிய வேண்டியதை
அறைந்தறைந்து புரியச் சொன்னேன்!
இருதயத்தில் மனமடங்கி
இகவுலகில் நீ
"இரு தயவாய்!"
உறுதியுடன் என் மெய் வழி
உரைக்கின்றேன்
உன் அம்மையப்பன்
நானே!
என் மெய்யுரை விளங்கியே
என் மெய்ப்பொருள் விளக்கமாய்
இம்மருட்பொய்யுலகில்
உறுதியுடன் நீ
"இரு தயவாய்!"

No comments: