Sunday, August 24, 2008

நாயகனின் பேருபதேசம் 8

மேலிருந்துங் கீழிருந்துந்
தனக்குள் சுழிவதை விழுங்கி
மேலுங் கீழுந்
தான் வழியும்
இருதய மெய்யின் ஒழுக்கம்
உனக்குத்
தருவதே உயிரெனும் விழுப்பம்!
எனவே
உயிரினும் ஓம்புக ஒழுக்கம்!

மேலிருந்து சுழிவதை மறந்ததால்
சத்துவ அஞ்ஞானத் திமிரானாய்!

கீழிருந்து சுழிவதை மறந்ததால்
தாமச முடக்க பயமானாய்!

மேலுங் கீழும் வழிவதை மறந்ததால்
இராஜச ஆர்ப்பாட்ட வன்பானாய்!

மேலிருந்து சுழிவதை அறிந்தால்
பரமானந்த மெய்ஞ்ஞான அருளாவாய்!

கீழிருந்து சுழிவதை அறிந்தால்
இகத்தோங்கும் பேரியக்க தயவாவாய்!

மேலுங் கீழும் வழிவதை அறிந்தால்
நடுநாயகப் பேரன்பின் இருப்பாவாய்!

இருதய மெய்யை மறைத்து
உன்னை மயக்கும்
சத்துவச் சுத்த மாயை
மற்றும்
தாமச இராஜச அசுத்த மாயை
இவற்றால்
பிறப்பிறப்புச் சுழலில் சிக்கிப்
பெருவாழவாம் உயிர்ப்பை
மறந்தாய்!

உன்னை மயக்கும்
திரிகுண மாயை களைந்து
இருதய மெய்யை உணர்ந்துப்
பிறப்பிறப்புச் சுழல் தாண்டிப்
பெருவாழ்வாம் உயிர்ப்பை
அறிவாயே!

இருதய மெய்யுள் உயிரடங்கி
நடுநாயகப் பேரன்பாய் இருந்து
மேலே பரமானந்த அருள் விளங்கி
கீழே இகத்தியங்கும் தயவாய் இருப்பாயே!

என் அன்பு மகனே(ளே)!
"இரு தயவாய்"
எனும் என் பேருபதேசத்தின்
இரத்தினச் சுருக்கத்தை

கணப்போதும் மறவாமல்
எப்போதும் நீ
தயவாய் இருப்பாயே!

1 comment:

rahini said...

atputhamana kavithai
rahini