Saturday, May 3, 2008

பாறை மேல் செடி

உடம்புக்கு வெளியே
துடிக்குமா
இருதயம்!

பிறந்த பின்னும்
முட்டையோடே ஒட்டியிருக்கும்
அதிசயக் குஞ்சு!

வழுக்குத் தலை மேல்
ஒரே ஒரு முடி!

புவி மிசை
இது வரை தோற்காத
உயிர்ப்பின் கட்சிக் கொடி!

பரிணாம மலையேற்றம்
வென்ற சிகரத்தில்
கொடியேற்றம்!

செடியின் வேரில்
பழுத்த பலா!

கல்லுக்குள் ஈரம்
சொல்ல நீளும்
நா!

உயிரற்ற பூஜ்ஜியம்
ஈன்ற
உயிருள்ள ஒன்று!

கல் நெஞ்சம் என்றால்
ஈரமுள்ள நெஞ்சம்!

மகாபலியின் தலை மீது
வாமனன் தாள்!

மண் மேல் மரம்
என்ற மரபைப்
புரட்டும் புதுக்கவிதை!

திறந்தது நெற்றிக் கண்
பறந்ததோ ஈரப் பொறி!

ஆணிலிருந்து
பெண்ணின்
ஜனனம்!

சூரியக் கதிரறுக்க
நீளும்
ஈர வாள்!

இயற்கை
எழுதிய
ஹைக்கூ!

ஜட மேற்கில்
உதித்த
உயிர்க் கிழக்கு!

இறுகிய மரபு இளகத்
தோன்றிய
புதுக்கவிதை!

இரத்த தானம்
மூளையிலிருந்து
இருதயத்துக்கு!

சூரியனைக்
குத்தும்
ஈர முள்!

மூளையின் மேலே
இருதயத்தின் ஆளுமை!

பாறைக்கும் இருதயமுண்டு
பாராங்கே
சிறு செடி!

ஒரே ஒரு மயிர்
பாறைக் கவரிக்கு
செடி தான் உயிர்

குருடென்றே நினைத்தேன்
செடியால் எனைப் பார்த்துக்
கண்ணடித்தது பாறை

செவிடென்றே நினைத்தேன்
செடியால் என் பேச்சை
செவி மடுத்தது பாறை

ஊமையென்றே நினைத்தேன்
செடியால் என்னோடு
நாவாடியது பாறை

முடமென்றே நினைத்தேன்
செடியால் எனை நோக்கிக்
கையசைத்தது பாறை

மூச்சற்றதென்றே நினைத்தேன்
செடியால் என் மூச்சுக்குக்
காற்றடித்தது பாறை

என்னிலிருந்து செடி உயிர்க்கிறது!
உன்னிலிருந்து கடவுள் ஏன் உயிர்க்கவில்லை?
மனிதனைக் கேட்கிறது பாறை.

வானைச் செதுக்கவா
செடி உளி நீட்டுகிறான்
பாறைச் சிற்பி!

பாறைக் கூடு விட்டு
செடிக் கூடு பாய்ந்ததோ
உயிர்!

ஜடப் பொருளென்றே நினைத்தேன்
தன் உச்சிப் பிளவில் செடி நீட்டி
என்னை மறுதலித்தது பாறை!

பாறை தானே உருவாக்கி
சூடிக் கொள்ளும் கிரீடமோ
செடி!

வான போதியின் கீழ்
பாறையின் ஞானோதயமோ
செடி!

என்னை மனிதனாய்ச் செதுக்க
செடி உளியோடு நீள்கிறதோ
பாறை!

சுரணையோடிருக்கிறேன்
பறைசாற்றுகிறதோ
செடி முளைத்த பாறை!

பொருள்முதல் வாதம்
நிரூபித்துக் காட்டுகிறதோ
செடி முளைத்த பாறை!

ஆண்மையே பெரிதென்று நினைத்தேன்
பெண்மையின் பெருமை சொன்னது
செடி முளைத்த பாறை!

மரணத்தைப் பொய்யாக்கி
வாழ்வை மெய்ப்பிக்கும்
செடி முளைத்த பாறை!

அருளற்றவனைக் கன்னெஞ்சனென்றேன்
தன்னெஞ்சைப் பிளந்துள்ளே ஈரங்காட்டி
என்னை மறுதலித்தது
செடி முளைத்த பாறை!

கொல்லும் ஆயுதமெடுத்தேன்
அகிம்சா மூர்த்தியாய்
என் முன்னெழுந்தது
செடி முளைத்த பாறை!

ஈரடித் திருக்குறளாய்க்
கண் கூடாக அறம் போதிக்கும்
செடி முளைத்த பாறை!

No comments: