Tuesday, May 13, 2008

பேனா(இன்னும்))

வெள்ளை முட்பரப்பில்
தலையால் நடந்து
மூளையைப் பிழிகிறேன்
அப்பிழிவில் தெரியும்
துடிக்கும் என் இருதய ஈரம்

உலர்ந்தும்
உலராத உயிர்மை
என் உயிர் மை

மை பாய்ந்த காகிதக் கூடும்
என் மெய்
உயிர் மை உறையும் உயர்மெய்
உயிர்மெய்

ஒரு மையின் உண்மையே
கூடுகளனைத்திலும்
ஒரு மெய்யின் உள் மை
உள் மெய்

ஒருமையை உண்
உண் இம்மை
உண் இம்மெய்

உண் மை
உண்மையை உண்ண உண்ண
உன் மெய் விளங்கும்
உன் மை உயிர்மையை
என் மை கசியும்

வெண்மையில் கருமையால்
விழி பிறக்கத் தெரியும்
மெய்ப்பொருள் விளக்கம்

No comments: