Tuesday, May 13, 2008

பேனா

உன் இரத்தம்
எம் மொழிகளின்
நாவு

உன் கண்ணீர்
எம் எண்ணங்களின்
வரி வடிவம்

காகிதப் பாதையில்
நீ
நடக்கும் போது
சிந்தும் வியர்வைத் துளிகளே
எம் இலக்கிய விதைகள்

எப்போதும்
எச்சிலைத்
துப்பிக் கொண்டிருக்கும்
உன் அநாகரிகம் தான்
எம் நாகரிகத்தின்
முகவரி

நீ
எம் நெற்றிக் கண்களின்
இமைகளைக் கிள்ளியெறிந்த
ஆறாவது விரல்

காகிதச் சிலுவையில்
எம் எண்ணங்களின்
சிலுவைப்பாட்டை
நீ
வழங்காவிட்டால்
எமக்கு
உயிர்த்தெழல்கள்
இல்லாமலே போய்விடும்

உன் தலை கவிழ்தலில் தான்
மானுடராம்
எம் தலை நிமிர்தல்கள்
நிச்சயிக்கப்படுகின்றன

ஏட்டுப் பாறையில்
உன் தலையால் முட்டி
நீ
செதுக்கும்
தலையெழுத்துக்கள் தாம்
எம் எதிர்காலத் தலையெழுத்தை
நிர்ணயிக்கின்றன

கைக் கூண்டிலிருந்த
விரல்கட்குச்
சிறகாக
நீ
முளைத்த போது
அவை காகித வானில்
பறந்து விட்டுச் சென்ற
சுவடுகள் தாம்
எம் எழுத்துக்கள்

உன் பாதைகள்
எம் இலட்சியங்களை
முடிவு செய்கின்றன

உன் சுவடுகள்
எம் பாதங்களுக்குப்
பாதைகளைத்
தெரிவு செய்கின்றன

உன் குருதித் துளிகள்
எம் நிஜ முகங்களைப்
பிரதிபலித்து விடுகின்றன

விரல்களின் தூக்கில்
தொங்கும் போது
நீ
உயிர்க்கிறாய்

உன் கழுத்தைச் சுற்றி
மனித விரல்களையே
அணிந்த போதையில் தான்
தலை கால் தெரியாமல்
நீ
தலையால் நடக்கிறாயா!

ஆறாவது அறிவு
மனிதனுக்கு வாய்த்த போது
நீ
ஆறாவது விரலாக
முளைத்து விட்டாயா!

விரல்கள்
என்ற ஓரறிவு உயிரிகள்
ஈரறிவு உயிரிகளாய்ப்
பரிணமிக்க
உன்னைத்
தம் நாவாக
வளர்த்துக் கொண்டனவா!

No comments: