Wednesday, May 7, 2008

புல்நுனி மேல் பனித்துளி

பூமியில் ஊன்றி நில்
வானம் வசப்படும்
பார்...புல்நுனி மேல் பனித்துளி!

இரவின் மரணத்துக்கு
நட்சத்திரங்கள் சிந்திய கண்ணீரா
புல்நுனி மேல் பனித்துளி!

இரவில் விண்ணும் மண்ணும் புணர்ந்ததைக்
காட்டிக் கொடுக்கிறதே
புல்நுனி மேல் பனித்துளி!

திருடிச் சென்றான் சூரியன்
மண்ணில் விளைந்த முத்தை
புல்நுனி மேல் பனித்துளி!

இரவுப் பறவை
இட்டுச் சென்ற எச்சமா
புல்நுனி மேல் பனித்துளி!

இரவு பூசிய கருமையிலிருந்து
புல் செய்த அதிசய வெண்துகளோ
பனித்துளி!

கையில் நீர்ப்பந்தத்தோடு
விடியலில் விண்ணைத் துழாவுதோ மண்
புல்நுனி மேல் பனித்துளி!

கதிர்க் குழாயிட்டு
சூரியன் உறிஞ்சும் இளநீரோ
புல்நுனி மேல் பனித்துளி!

விடியற் குழந்தை அழுகிறது
அதைத் தாலாட்டி மண் மகிழ்கிறது
புல்நுனி மேல் பனித்துளி!

மண்ணுக்கு இத்தனை மார்ச்சளியா
ஒவ்வொரு விடியலும் மூக்கு சிந்துகிறதே
புல்நுனி மேல் பனித்துளி!

No comments: