அதிகாலையில்
தூரத்தில்
சிரிக்கும் செவ்வரளிப் பூக்களை
விழிகள் கேட்டு மகிழும்
அருகே
பாதையில்
உதிர்ந்து கிடக்கும்
பாரிஜாத மலர்களை
விழிகள் ஒவ்வொன்றாய்ப் பொறுக்கும்
காற்றில் மணக்கும்
பட்டாம்பூச்சிகளை
விழிகள் நுகர்ந்து கிறங்கும்
பசிய புல்வெளியில்
பரிமாறப் பட்டிருக்கும்
பனித்துளிகளை
விழிகள் நக்கிச் சுவைக்கும்
கேட்டும்
தொட்டும்
நுகர்ந்தும்
சுவைத்தும்
போதையேறிய விழிகள்
பார்க்க மறக்கும்
காணாமல் கண்டதைக்
கவிதையாய்ப் பேச
விரல்களிலிருந்து
நாவு நீளும்
No comments:
Post a Comment