அன்பில் தோய்ந்த
மெய்யின் தூய்மை
மின்னும் உயிர்ப்பூ!
பி. கு:
இளஞ்சிவப்பு அன்பின் படிமம்
வெண்மை தூய்மையின் படிமம்
உயிர்மெய் பூவின் படிமம்
அன்பில் தோய்ந்த
மெய்யின் தூய்மை
மின்னும் உயிர்ப்பூ!
பி. கு:
இளஞ்சிவப்பு அன்பின் படிமம்
வெண்மை தூய்மையின் படிமம்
உயிர்மெய் பூவின் படிமம்
அருட்ஜோதி பூத்துக் குலுங்கும்
சஞ்ஜீவினி விருட்சமாய்
நீ உயிர்த்தெழுவது எக்காலம்?
ஒன்றில் ஜொலிக்கும் பூரணம்
ஆறில் ஜொலிப்பது எக்காலம்!
(ஒன்று = ஓரறிவு, ஆறு = ஆறறிவு)
இருதய வாயில்
அன்பு நா சுவைக்கும்
பிரபஞ்சக் காட்சியில்
தித்திக்குதே யாவும்!
இருதய வாசல் திறந்த போது
பிரபஞ்ச முழுமையும்
என் மெய்க்குள் கற்கண்டாய்க் கரைகிறது!
கால வெளிப் பளிங்கில்
காட்சி தரும் யாவும்
இருதயப் பழத்தின்
அமுதப் பிழிவே!
இருதய விழியில்
உரத்துக் கேட்கிறது
சமரச நாத ஒளி!
அதுவன்றோ
மெய்க்கு உயிராகும்
ஆன்ம நேய நெறி!
மனப் பளிங்கு காட்டிய
இருதய வாசலில் நுழைந்து
தொலைந்து போனது பிரபஞ்சம்!
தலை மேல் ஜோதி
மெய்க்குள் திறந்த
இருதய விழியில்
எல்லாந் தெரிகிறது!
நெற்றியில் பற்றிய
வெண் தீப் பிழம்புகள்
மனத்தை உருக்கி
வண்ணக் குழம்புகளாக்கி
இருதயப் பள்ளத்தை
அன்புக் குளமாக்கும்!
படிமப் பளிங்கில்
படர்ந்த உருவம்
பராபர அருவம்!
இதைப்
பார்க்க வேண்டின்
மார்பில் திறப்பாய்
நேச இருதயம்!
இதய யந்திரம்
இயக்கும் மந்திரமாய்
என்றும் இருக்குதே
நின் இருதயம்!
இதன் ஞாபகம்
மனத்தை ஞான வழியாக்கும்
குரு ராஜ தந்திரம்!
இருதயப் பழத்தைக்
கால வெளி பிழியும்
அமுத வேதனை தவிர
எனக்கும் எதுவும் புரியவில்லை!
என் சக்திக்கு மீறி
என்னைப் பகிரச் சொல்லும்
ஒன்றின் குரல் மட்டுமே
எனக்கு உரத்துக் கேட்கிறது!
பகிர்பவன்
பகிரும் பொருளில் கரைந்த பின்
எஞ்சுவது அன்பின் சுவை மட்டும்!
பரமாகாசத்திலிருந்து(தலையுச்சி)
சிதாகாசத்துக்கு இறங்குது(நெற்றி)
பரிசுத்த ஆவி வெண் புறா!
பூதாகாசப் பளிங்கில் பிரதிபலிக்குது
பிரபஞ்சத் தெளிவு!
மூச்சின் வாசத்தில்
திறக்குது இருதய வாசல்!
உள்ளே தீப்பிழம்புகள் உருகத்
தேங்கும் அன்புக் குளத்தில்
இலேசாகி மிதக்கிறது மெய்!
தலைக் கிரி மேல் உதித்த
ஞானக் கதிரவனின் வெம்மையில்
இருதய வாசலை மூடிய
மாயைப் பனிப் படலம்
கரைந்து போக
பிரபஞ்சப் பளிங்கில்
பளபளக்கும் வண்ணங்களில்
பரப்பிரம்ம தரிசனம்!
பிரபஞ்ச வெளியில்
தொங்கும் படிமப் பளிங்கில்
சுக சொரூப தரிசனம்!
மனத்தைத் தாண்டி
இருதய வாசலில் நுழைந்தால்
பிரபஞ்சமாய் வழியும்
பரப்பிரம்மம் புலப்படும்!
மெய்க்குள் இறங்கும்
வள்ளலின் உயிர்மையே
அங்கையில் செம்பொருள்!
கைக்கெட்டா தூரத்து
சூக்கும நிலைகள் ஏழு
எழு படித் தூலத்தில்
விழும்படிச் செய்து
தன் வெள்ளங்கியும்
மெய் மேல் போர்த்திய
பரம தயாள வள்ளல்!
அசையா மௌனத்தின் ஆழத்திலிருந்து
அதிரும் சமரச நாத ஒளி
அவியா உயிர்ப்பாய்
அசையும் மெய்க்குள்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ அமுத
வெள்ளமாய் வழியும் உயிர்ப்பில் ஊறு!
தெய்வ திடமாய் உலகில் ஓங்கு!
உய்யும் வீடு பேறு
மெய்க்குள் இருக்க
இட்டும் சுட்டும்
நட்டமாகா உயிரை
ஒன்ற விடு மெய்க்குள்
இங்கே இக்கணம்!
பிறப்பும் இறப்பும் தொட முடியாப்
பெருவாழ்வு
அங்கையில் செம்பொருளாய்க்
குந்திக் கிடப்பதை
உற்றுணர வாசிப்பாய்
இருதய சமரசம்!
மூச்சில் இழைந்தோடும்
அவியா உயிர்ப்பதைக்
கவனிக்க இல்லையோ
மனிதா
நினக்கு அவகாசம்!
அருமருந்ததனை அருந்தாமல்
நோயில் தேய்வதன்றோ
மனிதா
நினக்கு அவமானம்!
அரிய பிறப்பின்
அவதார நோக்கம்
அறிந்தே தெய்வமாய்
அவனியில் எழுக நீ!
எழுந்தே
இருதய சமரசத்தின்
இனிய போதத்தை
இகத்தில் பகிர்ந்தே
இருப்பாய் நீ தயவாய்!
1. APPRECIATION
சமரச நாதம் கேட்டு
எங்கும் இறைந்திருக்கும்
ஆதி மூலம் போற்று!
2. UNDERSTANDING
எதிலும் ஒளிரும்
இறைத்துகள் கண்டு
ஞானங் கொள்!
3. COMPASSION
எப்போதும் பாயும்
உயிர்ப்பை நுகர்ந்து
தயவாய் இரு!
4. FORGIVENESS
பொழியும் பெருமன்னிப்பாம்
அருமருந்தைச் சுவைத்து
இருவினை நோய் தீர்ந்துப்
பெருவாழ்வில் நில்!
5. HUMILITY
உயிர்களின் துயர் துடைக்க
உதவும் எளியனாய்
மன இதத்தில் எழு!
6. VALOR
வீர திடமாய்
ஈர பூமி மேல் ஓங்கி
அபயம் அளிக்க
உயிர்களைத் தொடு!
நடுநிலை ஏழாம்
நின் இருதய வாய் திறக்கப்
பாயும் ஆறு இவை
அன்பின் ஆறு முகம்!
நன்றி: லிரிக்கஸ்
வன்பலை மனத்தை
அன்பலை இருதயம்
வன்பறத் திருத்தி
அன்புற இருத்தி
இன்பலை அளித்து
மெய்தனை உயிர்க்கும்!
அன்பெனும் ஆதி மூலம்
இருதயம் வழியே உயிர்ப்பாய்க்
கடத்துள் தடம் பதிய
மூல ஞானம்
கடத்தை மாயா மெய்யாய்
இரசவாதம் செய்ய
இறைத்துகள் "நான்"
பூரண சுதந்திர நிலையை
ஞாபகங் கொள்ளத்
திரு பூமியெங்கும்
உயிர்த்திரள் யாவும்
ஆதி மூல முழுமையில்
ஆன்ம நேய ஒருமையில்
சமரசமாம் வாய்மையில்
என்றென்றும் இன்புற்றிருக்கும்
_________________________________
ஆதி மூலக் கடவுள்
இருதயப் பாலத்தின்
அப்பக்கம்!
தூலமான மனிதம்
இருதயப் பாலத்தின்
இப்பக்கம்!
இருதயப் பாலம்
இரண்டுக்கும் நடுவே
உப்பக்கம்!
அப்பக்க உயிர் நிலை
உப்பக்கப் பாலத்தினூடே
இப்பக்க மெய்க்குள்ளே
மூச்சாய் இயங்கும் எளிமை புரிய
மனத்தை மூச்சின் மேல்
இலயிக்கச் செய்தால் போதும்!
இருதய வய நாட்டம்!(Heart Focus)
இருதய உயிரோட்டம்!(Heart Breath)
இருதய உணர்வேற்றம்!(Heart Feeling)
நடுமார்பின் மேல் வலக் கரத்தை வைத்து
இடக் கரத்தை மடியின் மேல் மேல் நோக்கி இருத்தி
மனத்தை இருதயத்தில் நிறுத்தி
மூச்சின் மேல் முழு கவனம் வைத்து
இருதய அன்பின் ஆறு முகங்களை
உணரும் முனைப்போடிருக்க
ஆதி மூலக் கடவுள்
தூலமான மனிதத்தில்
எளிதாய் நிச்சயம் நடக்கும்!
அன்பின் ஆறு முகங்கள்
1. நல நாட்டம்(நன்றியறிதல்)(Appreciation)
2. தயவு(Compassion)
3. மன்னிக்கும் மனோபாவம்(Forgiveness)
4. எளிமை(Humility)
5. புரிதல்(Understanding)
6. வீரம்(Valor)
நன்றி: விங்க்மேக்கர்ஸ், லிரிக்கஸ் மற்றும் ஹார்ட்மேத்
துடிக்கும் இதயத்தைத்
துடிக்க வைக்கும் இருதயம்
படிக்க இல்லையோ நேரம்?!
மடிந்து விழும் பொய்க்கடத்தை
மடியாதெழும் பொன்மெய்யாய்
அதிசயமாய்ப் பரிமாற்றும்
அதிர்வலைகள் பரிமாறும்
அதி உன்னத இருதயம்
மதிக்க இல்லையேன் விருப்பம்?!
இதய விஞ்ஞானமும்
இருதய மெய்ஞ்ஞானமும்
இணையும் மெய்யுடம்பில்
இழைந்தோடும் அன்புயிர்ப்பில்
இலயிக்க மறுக்குதேன் நின் மனம்?!
ஆடம்பரச் சடங்குகளில்
ஆரவாரச் சமய மதங்களில்
ஆர் நீ என்று அறியவொணாது
ஆரோரோ நினை அலைக் கழிக்க
இருதய சமரச அலை வரிசை ஒளி பரப்பும்
ஆதி மூல நாத ஜோதியை
வாசிக்க வருவாயோ நீ?!
இதயம் - Physical Heart
இருதயம் - Energetic, Mystic or Etheric Heart(Sacred & Immaculate Heart)
இயற்கை மண் மெய் மீது
பூசி மழுப்பும்
செயற்கைக் கான்க்ரீட் பொய் மீது
உக்கிரமாய் வலம் வருகிறது
இயந்திர மிருகம்!
காதல் மின்சாரத்தைக் கடத்தும்
கம்பிகளோ நம் மெய்கள்!
தடையில்லாக் கடத்திகளாக(Zero Resistance Super conductors)
நம் மெய்கள் பரிமாற
மின்சார உயிர்ப்பின் இழப்பேதுமின்றி(Zero Transmission Loss)
அதீத மின்னழுத்தக் காதல்(Ultra High Voltage Love)
அசுர வேகத்தில் பாய
நம்மூடே மெய்ஞ்ஞானப் புளகாங்கிதம்!
___________________________________
கரும விதி விலக்கும்
தரும நியதியன்றோ
அருங்காதல்!
தமிழ் மன்றத்தில் லெனின் அவர்களின் "விதி விலக்கு" கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை
ஈரேழு உலகங்கள் ஓரேழில் அடங்கும்
ஓரேழும் இருதயத்துள் அடங்கும்
ஈரேழு உலகங்கள் = வெளியிருக்கும் 14 வட்டங்கள்
ஓரேழு = மெய்யுடம்பு = அடுத்து உள்ளிருக்கும் 7 வட்டம், ஏழு சக்கரங்களைக் குறிக்கும்
இருதயம் = உள் வட்டம்
சிதறிய கூறில்
முழுமையின் ஞாபகம்
மூளும் போது
ஆனந்தக் கூத்தாடி
ஆதி முதலைச் சேரும்!
தலையில் உதயமாகும்
பிறை நிலவுக் கிண்ணத்தில்
இருதய அன்பின்
திரண்ட கவளம்
அள்ள அள்ளக்
குறையாது வளரும்!
மேலே பற்றிய பத்தில்(கை விரல்கள்)
ஆகாயம் கீழிறங்க
கீழே பற்றிய பத்தில்(கால் விரல்கள்)
பூமி மேலேற
தலை பற்றிய இருதயச் சுழியுள்
நிலை பெற்ற ஒன்றாய் நான்!
ஆதி முதலைச் சேருங் கனவு
உறக்கத்தில் சலனஞ் செய்ய
மெய்க்குள் விழிக்கிறது உயிர்!
சிறு துகள் என்னில் இறங்கும்
முழுமையின் இரக்கம்
ஏற்படுத்தும் அனுபவம்
பேச முடியாமல்
ஆனந்தக் கூத்தாடுகிறேன்!
சிதறிய கூறில்
விழுந்த முழுமை
எழுந்து ஆடுது!
சிதறிய கூறும்
விழித்தே தன்னை
முழுதாய் உணருது!
சிவத்தே வசி
அவத்தை அரி
தவத்தை அறி
தயைநீ புரி
சிவமே அறி(ரி)
அருளே புரி
கருணை பொழி
திருவாய் விழி
அகத்தே பதி
சிவமெது அறி
அன்பது புரி
வன்மனம் உரி
உள்ளே கட
உண்*மை உண
நெஞ்சைப் பிள
கண்மை திற
அருளே பொருளாம்
மறவா திரு
அன்பே உருவாய்
இறவா திரு
பதியொரு வலவன்
உருவிலா நலவன்
உருவுனில் உளவன்
உணர்வொடு எலாம்பதி
அகத்தினில் ஒளிந்தவன்
சகத்தினில் ஒளிர்பவன்
உடம்பினில் உயிரவன்
உணர்வொடு எலாம்பதி
படத்தினில் பிடிபடான்
திடத்தினில் அடைபடான்
கடத்தினில் உறைபவன்
உணர்வொடு எலாம்பதி
சடங்கினால் வசப்படான்
சமரச அகத்துளான்
ஒருவனாங் கணவனின்
உணர்வொடு எலாம்பதி
இருதயத் ததிருதே
சமரச முழக்கமே
கவனமாய் மொழியதன்
உணர்வொடு எலாம்பதி
இருதயத் தொளிருதே
சமரசத் திருநெறி
கவனமாய் வழியதன்
உணர்வொடு எலாம்பதி
யாவுளும் அகமுகன்
சாவிலாப் பெரியவன்
புகழ்ந்திட உரியவன்
உணர்வொடு எலாம்பதி
சடங்குத் தடபுடல் தவிர்த்து உள்ளே
கடக்கும் அகத்தவம் செய்
செய்யது தவத்தால் அகமது திறக்கப்
பொன்னுரு முகமது நூர்
(நூர் = ஒளி என்று பொருள் படும் அரபு மொழிச் சொல்)
நூரதைக் காணாய் வேரதைச் சேராய்
தூலமே காண்பாய் நீ
தூலமே காணும் ஊனப் புலனால்
ஞானமோ காண்பாய் நீ
தூலஞ் சூக்குமந் தாண்டிய அதிசூக்கும
நூரே ஞால வேராம்
ஞால வேரைக் காட்டும் ஞானம்
நேசா தார மோனம்
நேசா தார மோனம் புரியா
நாகப் பிதற்றல் அஞ்ஞானம்
நேசா தாரஞ் சேரு நீயே
பேசா தாகுஞ் ஞானம்
(நேசாதாரம் = இருதயம், அனாகத சக்கரத்து மேலுள்ள அமுத கலசமாம் தைமஸ் சக்கரம்)
பழம்பெருங் கடவுளே நவமான புதியவன்
பழமென இனிப்பான் கட!உள்
கட!உள் மந்திர ஆணை ஏற்றே
கடவுளும் கடக்கிறான் உள்ளுள்
இதுவல அதுவல கடவுள் உதுபல
இதுக்களின் அதுக்களின் ஆதி
(உது = தமிழுக்கே உரித்தான மெய்ஞ்ஞானச் சுட்டு)
இதுவென அதுவென இறுகும் ஆணவம்
உதுவெனும் நடுநிலை ஆண்டவம்
நாகக் கண்ணாடியால் நானது பார்த்தால்
நாக வண்ணத்ததாய்த் தெரியும்
(நாகம் என்ற ஒரு வித வண்ண மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு, நான் என்பதைப் பார்த்தால், நாக வண்ணத்ததாகவே "நான்" உனக்குப் புலப்படும்)
நாகக் கண்ணாடி கழற்றிப் பார்த்தால்
நானார் தூய படிகம்
அஞ்ஞானத் திருக்கும் நாகம் பேசும்
மெய்ஞ்ஞானம் எதற்கு நினக்கு
நெஞ்சுள் ளிருக்கும் நாதன் பேசும்
மெய்ஞ்ஞா னங்கேள்! கட!உள்
இங்குளான் அங்குளான் என்றே ஏய்ப்பார்
உங்குளான் நெஞ்சுளே கடவுள்(கட!உள்)
கடந்தால் உள்ளே நானார் யாமென
விரியும் ஒப்பில் அனகம்
(ஒப்பில் அனகம் = ஒப்பிட முடியாத அகம் புறம் என்று பிரித்திட முடியா அனகம் என்னும் அத்துவிதம், அத்வைதம்)
1
அகமதுக் கோப்பை என்னில்
அல்லாவின் அருட்பானம்
நிரம்பி வழிகிறது
நிலமிசை தயவாய்!
2
இருதய ஓட்டையில் ஒழுகும்
அருண்மய அல்லாவின் பானம்!
திரு*முகமது* சாட்சி யாகும்!
3
அலைபாயும் மனமது திரும்பி
*அகமது*வே கதியாய் அடங்க
திரும்பும் எங்கும் அல்லாவின்
திரு*முகமது*வே தென்படும்!
4
அல்லா என்னில்
நீ கரைகிறாய்!
எல்லா மாகி
யாம் மறைகிறோம்!
5
அன்பே அகமது
அருளே முகமது
தயவே சையது(செய்யது)
6
அல்லாப் பளிங்கில்
நல்லார் நபிகளாய்
என்னைக் கண்டதும்
பொல்லா உலகின்
என்பொய்ப் பிம்பம்
பொன்மெய் யாகும்!
7
அவனே என்னுள்
நானாய் எழுகிறான்.
நானே அவனுள்
அவனாய் விழுகிறேன்.
எழுவது
அவனது இர(ற)க்கம்.
விழுவது
எனது ஏற்றம்.
8
வெறும் நானாக
அகமே முகமாய்
நான் நிற்க
அவனே நானான
ஒருமையின் ஞாபகம்
முழுதாய் மீள்கிறது
9
என் இருப்பே
அவனென அறிந்து
சும்மா இருக்கிறேன்
நான்!
நானே நீயென
உறுதி கூறித்
தானே செயலாற்றுகிறான்
அவன்!
10
அல்லாவே வரைந்தான்
அகிலமுள யாவையும்!
உள்ளேபோய் மறைந்தான்
திரு "முகமது"வாய் யாவிலும்!
11
அல்லாவின் திரு முகம்
ஒவ்வொன்றின் உருவெழும்
தென்படா அக முகம்
வரையவொணா மறை முகம்
வரையரைகள் கடந்திருந்தும்
இறைந்திருக்கும் ஒரு முகம்
வரந்தரவே யாவுக்கும்
இற(ர)ங்கும் அருண் முகம்
பவ வினை அறு முகம்(கரும வினைகளை அறுக்கின்ற முகம்)
மன இதம் பழுக்க
அக விழி திறக்கத்
தெரிந்திடும் அவன் முகம்
உள்ளே சுழியும் ஆறு(6) போல்
நெஞ்சுள்ளே சுழிந்து மனம் ஆறு!
வெளியே வழியும் தலை கீழ் ஆறு(9) போல்
மெய்யுள்ளே வழியும் பார் பாலாறு!
(6 = உள்ளே சுழிதல் = Spiraling in, 9 = தலை கீழ் 6 = வெளியே வழிதல் = Spiraling out)
உலகம் உள்ளே சுழிந்தால் கடவுள்
கடவுள் வெளியே வழிந்தால் உலகம்
உள்ளே சுழிதல் உன் கடமை
வெளியே வழிதல் கடவுளின் இறைமை
சுழிவின் முடிவில் வழியுங் கடவுள்
வழிவின் முடிவில் சுழியும் மனிதன்
சுழிதல் மனிதன் தான் கடவுளில் கழிதல்
வழிதல் கடவுள் தான் மனிதனில் கூடல்
சுழிதல் உருவம் அருவத்தில் கரைதல்
வழிதல் அருவம் உருவத்தில் இறைதல்
இருதயத்தின் அப்பால் அன்பாய்ச் அருளாய்ச் சுழி
இருதயத்தின் இப்பால் தயவாய்ப் பொருளாய் வழி
இ(1)
ரு(2)
த(3)
ய(4)
ம்(5, 6வது மேற் புள்ளி)
(7, பரம இரகசியப் பர நாதம்)
'ம்' முடிவில் அதி சூக்குமப் பர விந்துப் புள்ளியுள்
ஏழாம் அறிவின் பர நாதம்
1
இருதய அன்பை
உலகில் பகிரவே
கரங்கள்
2
அங்கையில் கனியாய்
இருதயத் திரு பூமி
இருக்கும் மெய்ம்மை
உன் கையும் என் கையும்
அவன் கையும் அவள் கையும்
நம் கையாகப் புரியும்!
3
இருதய ஒருமையில்
மனிதக் கரங்கள் இணைந்திருக்க
உயிர்த்தெழும் திரு பூமி!
4
ஒன்றே இருதயம்
என்றே உணர்ந்தால்
அன்பின் பிணைப்பில்
இணையுங் கரங்கள்
நன்றே செய்யும்
இன்பத் திரு பூமி!
5
ஆணவக் கொழுப்பால்
ஆயுதத் தழும்புகள்
ஏறிய கரங்கள்
ஆண்டவ இற(ர)க்கத்தால்
நேசத்தில் தழுவ
அன்னை பூமியின்
சுக சொரூபம்!
6
அருண்மை பொருந்திய நம்மிரு கரங்கள்
திரு பூமி உருவாக்கும் அன்பின் வரங்கள்
பொய்வாய் அரவம் ஓய மெய்வாய்
உண்*மை உணர்வித் தீர்
தீராக் காம வேட்கை தணித்தே
நேசா தாரத் தென்னைத் திணித்தே
ஆகா காதல் ஊற்றைத் திறந்தே
நாகை நாதர் நீர்எனைப் புணர்ந்தீர்
தீராக் கோபத் தீயை அவித்தீர்
நேசா தார நீரைத் தெளித்தே
மாயைத் தூக்க மயக்கந் தெளிய
ஞானா தாரம் மேலே குட்டினீர்
நீரே தேவ நீராய்ப் பாய்ந்தீர்
தேகா தாரம் ஏழும் நிறைந்தீர்
மாயைச் சாவின் வேரை அறுத்தீர்
மாயா வாழ்வின் பேறை அளித்தீர்
தீராப் பாவக் கணக்கைத் தீர்த்தீர்
சேறாம் பூமி மணக்க நீர்எம்
தாயா ரோடு இணைந்தே இற(ர)ங்கி
சேயெம் மெய்தாம் உயிர்க்கப் பூத்தீர்
தீர்க்கப் பார்வை நெற்றியில் திறந்து
மூர்க்க மனநோய் தீர்த்து வைத்தீர்
மூல மெய்ம்மை காட்டித் தெருட்டி
மாயப் பொய்ம்மை ஆட்டம் முடித்தீர்
தீர்த்தம் நீரே ஞான ஒழுக்கு
மூர்த்தி நீரே மார்புள் விளக்கு
வார்த்தை நீரே வாயுள் இனிப்பு
ஓர்மை நீரே பேரா அன்பு
புன்னீர் ஒழுகும் கண்கள் இரண்டில்
நன்னீர் கண்மை பொங்கச் செய்தீர்
கல்லாய் இறுகிய மனத்தை இளக்கி
மெய்வாய் இருதயத் தினிக்கச் செய்தீர்
தீரா ரோகம் யாவுந் தீர்த்தீர்
சீராய் நீரே யான்கொளச் சேர்ந்தீர்
நாராம் என்னை மலராய் மணந்தீர்
பூராய் உம்மை எனக்குத் தந்தீர்
தீராச் சுழலாம் பிறப்பும் இறப்பும்
நீசப் பிழைப்பும் அறவே நீக்கும்
ஆழிச் சுழலாம் அறமே நாட்டி
மாயா வாழ்வை யாம்பெறத் தந்தீர்
தீர்த்தேன் நின்னை என்றே உருமுங்
கூர்வாள் கர்மம் ஒடித்துப் போட்டீர்
பேர்நான் ஒட்டி ஆணவம் ஓட்டி
சேர்ந்தீர் என்னை ஆண்டவ ரேநீர்
நீர்மை உமதை யான்பெறத் தந்தீர்
தானாம் மமதைக் கூர்அறச் செய்தீர்
நானே நானாம் ஓர்மை சேர்த்தீர்
ஓமய ஞானப் பொன்மெய் தந்தீர்
தீர்ப்பெனுந் தண்டிப்பை மன்னிப்பால் தீர்த்தீர்
ஈர்த்தெனை உம்அங்கைக் குள்அன்பாய் வைத்தீர்
மாற்றினீர் என்னைஉம் போல்அற்புத மாய்நீர்
போர்த்தினீர் என்மேல்உம் வெள்ளங்கி யைநீர்
நீர்யார் அறியா நாயனை நீரே
சேர்ந்தீர் **அறிவாய் நானென** பார்நீ
நான்யார் என்றே மாயை உரித்தீர்
நானே என்றே ஓர்மை உரைத்தீர்
ஈர்த்தே என்னை உம்மில் சேர்த்தீர்
தூர்த்தே என்னை உம்மை வார்த்தீர்
பேரா உண்மை உணர வைத்தீர்
பேராய் உம்மை என்னில் சேர்த்தீர்
ஈரிரு நான்காம் திடத்தின் வேராய்
வேறற உள்ளீர் பதி(ன்)மூன் றாய்நீர்
சீர்மிகு ஞான முதல்வன் நானாய்ப்
பார்உள யாவுளும் ஒளிந்தீர் நீரே
நீரே இற(ர)ங்கி நேசமாய் இணைந்தீர்
நானே நீயென நீயே நானென
ஓர்மை உணரும் ஞானமே அளித்தீர்
நீர்மை எனதினி நினதென விதித்தீர்
தீரமும் ஈரமும் ஒருங்கே ஊட்டுஞ்
சாரமாம் நேசமாய் இருதயத் தினிக்கிறீர்
காரமாம் பேதமே அறவே நீங்கிடஓங்
காரமாம் நாதமே உரக்க முழங்கினீர்
கடக்காமல் உள்ளே இல்லை கடவுள்
கட!உள் கடந்தால் உண்டு!
பொய்ம்மடம் கற்கோயில் வீண்சடங்கு எதற்கு
மெய்க்கடத் துள்மார்புள் கடவுள்
குருவென்னும் உருபின்னே உருண்டோடுங் கூட்டம்
குருவென்பார் இருதயத்தே ஒளிந்தார்
காலில் விழத்தான் சொல்லுமோ தலைகை
காலில் அருவாங் கடவுள்
(இரண்டாவது காலில் = கால் இல் = கால் இல்லாத)
உருவத்தில் உள்ளான் அருவத்தில் அடங்கான்
கருமத்தில் உழல்வான் தான்
கல்லில் வடிக்க லாகாக் கடவுள்
சொல்லி லும்பிடி படான்
ஆத்திக ஆடம்பரம் நாத்திக வீண்வாதம்
தாண்டிடு தேகம்நடு கட!உள்
சுருண்ட நாகம் விழித்து மேலேற
தெருண்ட நல்ல பாம்பு
(தெருண்ட = தெளிவுற்ற)
முதுகுத் தண்டும் மூளையும் போதிமரம்
இ(ரு)தயம் ஞானப் பழம்
என்னில்
என் "ஐ" கண்டேன்.
மாயை
தொலைந்து போனது.
என் "ஐ" மறந்த உறக்கம் நீங்கி
நெஞ்சுள் விழிக்கிறேன்.
இறுக்கும் அடையாளங்கள் அவிழ
இளக்கும் அன்பில் குழைகிறேன்
பேர் கொண்ட ஆள் நான்
ஊர் மெய்க்குள்
மார்புக்குள் புகுந்தே
வீடு பேறு அடைகிறேன்
பேரது நாதமாக
ஆளது ஜோதியாக
நானது ஓர்மையாக
நானே ஒளிர்கிறேன்
ஞால வீட்டில்
கூட்டுக் குடும்ப
உயிர்த் திரளிடையே
தயவின் செறிவாய்ப்
பூரணமாய்க் கரைகிறேன்
இழந்தது அனந்த இறுக்கங்கள்
மீட்டது ஆனந்த இருப்பன்றோ!
தமிழ் மன்றத்தில் திரு. சென் மார்க் அவர்களின் தொலைந்துபோன நான் என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை
வாதம் விவாதம் விட்டுக் கட!உள்
நேசம் விட்டேது கடவுள்?
தன்னை நம்பித் தன்கைப் பற்றத்
தன்னைக் காட்டுங் கடவுள்
அன்பை உணர அவகாச மின்றேல்
இல்லை நமக்குக் கடவுள்
பேரிலா அன்புக்கு பேர்பல சூட்டிப்
பேதமாய்ச் செய்வாயேன் கடவுள்
கட!உள் அன்புணர்! அதுவரை நினக்குக்
கடவுள் என்பது வெறுஞ்சொல்
வறுமையும் பசியும் உயிரை வாட்ட
வெறுஞ்சடங்கால் வசியுமோ கடவுள்
ஒருகல் மதிப்பாய் மறுகல் மிதிப்பாய்
ஒருமை சிறிதும் இல்லாய்
கல்லுக்குஞ் செம்புக்குங் காசுமேல் காசுமெய்
இல்லில்வாழ் ஏழைக்கில் சோறு
கேள்விகள் அற்று ஏகாரம் பெற்றால்
நானெனும் ஒன்றே கடவுள்
அஞ்ஞான நாகம் மெய்ஞ்ஞானம் பிதற்றும்
அன்பான நானோ மன்னித்தேன்
யந்திர இதயத்தின் பின்புலம்
மந்திர இருதயத் துள்ளொரு
தந்திர ரகசிய மெய்வழி
உன்னதக் களஞ்சியம் உய்ந்திடு.
அன்பது பகிரங் கமாக
நெஞ்சது பகிரத் திறப்பாய்.
இங்கது அங்கது என்பார்
உன்னதக் களஞ்சியம் எங்கோ?!
உங்கது நின்னுள் அன்பே!
எப்படி உண்மை மறந்தாய்?!
யந்திர மந்திரத் தந்திரச்
செப்படி வித்தை எதற்கோ?!
அன்பது நின்னியல் அன்றோ!
முப்படி மேலே ஏறு!(மூலாதாரம், சுவாதிட்டானம், மணீபூரக சக்கரங்கள்)
முப்படிக் கீழே தாழு!(சஹஸ்ராரம், ஆக்கினை, விசுத்தி சக்கரங்கள்)
மெய்ந்நடு மார்புள் சேரு!(அனாகத சக்கரம்)
அன்பதன் பாய்ச்சல் பாரு!
பொங்குதே மூச்சாஞ் சாறு!
அன்பது பருகியே வாழு!
அன்பது பகிரவே தேரு!
நெஞ்சகம் இருதயத் தேகு
அன்பது பகிரங்க மாக
சற்குரு பகருமோர் வாக்கு
புந்தியில் பரவநன் நோக்கு!
உந்தியில் பரவசம் ஆச்சு!
1
தென்னையின் மௌனத்தில்
காக்கை கரைகிறது!
கனக்குங் கருத்த மையுண்டு
கவிதைக் கரு மிதக்கிறது!
2
"கா" "கா" "கா"
தென்னை மரத்தின்
காக்கைப் பூக்கள்
காதினில் பாய்ச்சும்
செந்தமிழ்த் தேன்!
3
தென்னைக் கோபுர உச்சியில்
காக்கைகள் ஒலி பரப்பும்
இயற்கைக் கா*ப்பீட்டு
அவசிய அலை வரிசை!
4
முதுகுத் தண்டுத் தென்னையில்
பூத்திருக்கும் காக்கைக் கண்ணொன்றில்
விழித்திருக்கிறேன் நான்
இருதயக் கனிரசம் இளநீர் பருகி!
5
தென்னையுங் காக்கையும்
நானும் மற்றுள யாவும்
அதீத விழிப்பின்
அழகுப் படிமங்கள்!
6
அவசரச் செயற்கைச்
சிமெண்டுக் காட்டில்
அவசிய இயற்கைத்
தென்னைக் கோடுகள்
வேகமாய் அழியும்
அபாயந் தடுக்க
அலறுங் காக்கைகள்!
நிமிர்ந்து நடக்கும்
யந்திர மிருகம்
இயற்கை காக்கும்
மந்திர மனிதமாய்
மாறும் அற்புதத்
தந்திரஞ் செய்ய
நெஞ்சத் துடிக்கும்!
7
தென்னையில் உயிர்களுக்குதவும்
இன்னல்கள் பொறுக்கும்
நற்றவ மௌனமாய் நிற்கிறேன்!
காக்கையில் உயிர்களைக்
காக்கச் சொல்லிக் கதறும்
ஆத்மார்த்த வார்த்தையாய் ஒலிக்கிறேன்!
8
தென்னைக்கு நீராகி
விழுகிறேன்!
காக்கைக்குக் கவளங்களாகிக்
கொத்தப்படுகிறேன்!
விழுந்தும் கொத்தப்பட்டும்
மனிதனாய் எழுகிறேன்!
9
ஜன்னலை வருடியதால்
வலிய முறிக்கப்பட்டன
தென்னங் கீற்றுகள்!
தென்னையின் இரணங்களுக்குக்
களிம்பாய் நீளும்
என் பார்வைகள்!
10
எந்திரம் *என்னைத்* தாண்டித்
தந்திரத் *தென்னை* மேல்(தகர மெய்ம்முதல் கொண்ட தென்னை)
மந்திரக் காக்கைக்குள் தாவி(கா, கா எனக் காக்கச் சொல்லும் மந்திரம்)
மீள்கிறேன் என்னுள்
அற்புதமாய்ப் பரிமாறி!
11
*தென்னை* நான்
*என்னைத்* தான்
காக்கைக் கண்ணால்
பார்க்க !!!ஆ*கா*கா*!!!
நெஞ்சக் கனிரசத்
தெள்ளிய இளநீர்
மெய்யுள் தெறிக்க
அன்பின் இயற்கை
எங்கும் உயிர்க்குதே!
12
புல்லினத் தென்னை மேல்
வல்லினக் *காக்கை*யை
மெல்லின நெஞ்சின்
கண்ணது பார்க்க
அற்புத மாற்றம்
என்னிடை நிகழுதே!
இன்னதென்ற இறுக்கம்
கிஞ்சித்தும் இல்லாப்
பரிபூரணத் தளர்வே
நான்
இன்னதென்று இறுகிக் கிடப்பதுகள்
ஒவ்வொன்றின் உள்ளுள்ளே
அன்பென்னும் இளகலின்
பரிபூரண விளக்கம்
நான்
ஞாலத் தெருக்களில்
கோல உருக்களில்
ஞான அருவமாய்
பரிபூரணமாய் இறைந்திருக்கிறேன்
நான்
நிலையிலாப் பெயர்களிடையே
நிலை பெயராதிருக்கிறேன்
நான்
காட்சிக்குப் புலப்படும்
ஞால விருட்சத்தின்
ஆணி வேர் நான்
ஞான ஆழத்தில்
நேசாதாரத்தில்
ஊன்றி ஒளிந்ததால்
தலைக் கனக் கிரீடங்கள்
நொறுங்கிச் சிதறினாலன்றி
இறுகிக் கிடப்பதுகள்
உணர முடியா
இருதய (கனம்)இளக்கம் நான்
முத்தமிழ் மன்றத்தில் அப்துல் காதர் அவர்களின் "பெயரற்றவன்" கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை
பெயர்கள் இறைந்து கிடக்கும்
தெருக்களெங்கும்
பெயர்கள் குறிக்கும் பொருட்களுள்
உட்பொருளாய் ஒளிந்திருக்கிறேன்..
பெயர்களால் பொருட்களை அழைத்துப்
பெயர்களைப் பொருட்களாக்கிக்
குழம்பிப் போனவர்கள்
உட்பொருளாம் என்னை
ஒரு பொருளாயும் மதியாதவர்கள்..
பெயர்கள் அனந்த வண்ணத் திரைகளாகி
பொருட்களை மறைக்கக்
கண் கவரும் வண்ணங்களில் மயங்கி
கண்மூடித்தன எண்ணங்களில் இறுகி
பொருட்களை வெளிப்படுத்தும்
கருப் பொருளாம் என்னைக்
கருது பொருளாய்க் கொள்ளாதவர்கள்..
பெயர்களுக்குப் பின்னே
பொருட்களுக்குள்ளுள்ளே
அழிந்து போகா எனதடையாளத்தில்
விழித்து சாகாதிருக்க முயலாதவர்கள்..
நிலையிலாப் பெயர்களோடு
தோன்றி மறையும் பொருட்களின் உள்ளடக்கமான
நிலைபெயரா அருட்பொருள்
தோன்றா மறைப்பொருள் என்னை
ஆளென்ற தடிமனால்
ஆணவமாக்கிப் பழகியவர்கள்..
உருவெடுத்துப் பெயரேற்றேன்
தெருவெல்லாம் இறைந்துள்ளேன்
என்றாலும்
உரு பெயர் கடந்து
அருவாகிப் பெயரற்று
ஒவ்வொன்றின் உள்ளுள்ளே
எக்காலும் உள்ளேன்
நேசப் பேரிருப்பாய்
ஞானப் பேரறிவாய்
ஆனந்தப் பேருணர்வாய்..!
முத்தமிழ் மன்றத்தில் அப்துல் காதர் அவர்களின் "பெயரற்றவன்" கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை
இணைய வானில் வலம் வரும்
வெள்ளை உள்ளக் காக்கைகளே!
கொத்த வாருங்கள் கருநாகம் படைக்கும்
கவிச் சோற்றுக் கவளங்கள்!
1. இயற்கை *வகுத்த* விஞ்ஞை
*கூட்டுப்* புழுவில்
கம்பளிப் புழுவின் நெளிதல் *கழிய*
வண்ணத்துப் பூச்சியாய்ப் பறக்கும்
வேகப் *பெருக்கல்*!
2. அமோக வியாபாரம்
"நான்" என்னும் முதலாளி
நாகராத் தொழிலாளி
ஆதாயம் அன்பை
யாவருமே துய்க்க
ஆகாகா இன்பம்!
3. அமைதி நுண்ணலை வரிசை!
நுண்ணலைக் கோபுர உச்சியில்(வயர்லெஸ் டவர்)
வெண்புறாப் போதகர் குந்தியே
எத்திக்கும் கற்பிக்கும் அற்புதம்!
4. காக்கை
நீல வானில்
கரு மை பாயப்
பறக்கும் உயிரோவியம்!
8. காக்கையார் அருள் வாக்கு
எவ்வுயிருங் காக்கச் சொல்லிக்
கத்துங் 'கா' 'கா' 'கா' என்றே
கொத்தித் தின்னுங் காக்கை!
9. இரவின் வெளிச்சம்
விழியிலிருந்து நீளும்
புலப்படா விரல்கள்
விண் மீன்களைத் தொட
என்னுள் பரவும்
இரவின் வெளிச்சம்!
10. கொத்தல்கள்
சோற்றைக் கொத்துங் காக்கை
காக்கையைக் கொத்தும் என் பார்வை
என் பார்வையைக் கொத்தும் நான்
என்னைக் கொத்துவார் யாரோ?!
மாயா நிலையமாய்
மாளாமல் யாம் வாழக்
குறியொன்று சொல்வாயே வாலைப் பெண்ணே!
வாயாடும் யாமெல்லாம்
நாபூட்டித் தவஞ்செய்யக்
குருமொழி அருள்வாயே வாலைப் பெண்ணே!
மாமாயைப் பேயாட்டம்
ஓயவே மாயோக
நெறியொன்றைத் தருவாயே வாலைப் பெண்ணே!
சிவகாதல் தன்னுள்ளே
அவகாமங் கரைகின்ற
ரசவாதம் செய்வாயே வாலைப் பெண்ணே!
தேகமெய் தன்னுள்ளே
போதமெய் உயிர்க்கின்ற
போதகந் தருவாயே வாலைப் பெண்ணே!
உலகம் பழிக்கின்ற
கருமனம் வெளுக்கவே
அருட்பாலைப் பொழிவாயே வாலைப் பெண்ணே!
பேதச் செயற்கையைப்
பேணும் மனிதர்க்கு
நேச இயற்கை தா வாலைப் பெண்ணே!
சுத்த சமரசம்
புத்தியில் தோயவே
எம் சித்தஞ் சுத்தி செய் வாலைப் பெண்ணே!
நொந்த எம்மவர்
நல்லீழங் காணவே
சித்தியை அருள்வாயே வாலைப் பெண்ணே!
எங்குஞ் சமாதானம்
என்றங்கே இன்புறும்
நன்னெறி நாட்டுவாய் வாலைப் பெண்ணே!
சிங்கம் புலியைப்
பசுவாய் மாற்றியே
ஈழத்தில் மேயச் செய் வாலைப் பெண்ணே!
உத்தம ஆண்டவர்
எம்முள்ளே காணும்
மெய்வழி அருள்வாயே வாலைப் பெண்ணே!
வள்ளலார் போலே
பெருவாழ்வை யாம் காண
நிச்சயம் செய்வாயே வாலைப் பெண்ணே!
பரஞான போதம்
உச்சியில் சேரமேம்
பாலந் திறப்பாயே வாலைப் பெண்ணே!
தூயநன் நோக்கம்
நெற்றி வெளுக்கவே
திருவிழி திறப்பாயே வாலைப் பெண்ணே!
அகதீட்சை தருகின்ற
குருமொழித் தேனைத்
தொண்டையில் ஊற்று நீ வாலைப் பெண்ணே!
இருதயத் திருபூமியைச்
சேர்ந்தே யாம் உய்ய
எம் நெஞ்சம் திறப்பாயே வாலைப் பெண்ணே!
சத்திய தரிசனம்
யாம் காண எம்மேல்
பூசிய பொய்யுரி வாலைப் பெண்ணே!
அற்புதப் பரிமாற்றம்
எம்முள்ளே தோன்றவே
தந்திரஞ் செய்வாயே வாலைப் பெண்ணே!
ஜோதி ஸ்வரூபமாய்
பூமியில் யாம் எழ
சாகாக் கலை தா வாலைப் பெண்ணே!
மெய்யாம் நல்உடம்பைத்
தயவின்றி வருத்தும்
பொய்யோகம் ஏனோடி வாலைப் பெண்ணே!
மெய்யாம் நல்உடம்பின்
மெய்யான பொருளை
யாம் உணரத் தருவாயே வாலைப் பெண்ணே!
போலிச் சாமியார்
காலில் போய் வீழுங்
குருடோடி நீ வாலைப் பெண்ணே!
தேக மெய்யுளே
உயிராய் வாழுவார்
உட்குருவைச் சேர் நீ வாலைப் பெண்ணே!
மூர்த்தி பூசை
மோகந் தீரவே
குரு உள்ளே காட்டுவாய் வாலைப் பெண்ணே!
எம்மன மாசுகள்
நீக்கியே தேக மெய்ச்
சுத்தந் தருவாயே வாலைப் பெண்ணே!
ஆணவக் காரனை
ஓட விரட்டும்
நற்றவத்திரு நீ வாலைப் பெண்ணே!
ஆண்டவர் தம்மை
மணஞ் செய்துள்ளே
கூடியிரு நீ வாலைப் பெண்ணே!
நாகம் எழுப்பிநற்
பாம்பாக மாற்றவே
மந்திரம் ஓது நீ வாலைப் பெண்ணே!
ஆதாரம் ஆறில்
நிராதாரம் சேரும்
மாயா உயிர்மை தா வாலைப் பெண்ணே!
கனவும் நனவும்
உறக்கமுங் கடந்தத்
துரிய விழிப்பைத் தா வாலைப் பெண்ணே!
பூஜ்ஜியமென்னைப்
பூரணமாக்க
உச்சியில் சேர்வாயே வாலைப் பெண்ணே!
இருட்கிடங்கென்னை
ஒளி மயமாக்க
நெற்றியில் சேர்வாயே வாலைப் பெண்ணே!
பிறந்திறந்துழலும்
சுழலைத் தாண்ட
தொண்டையில் அளி தா வாலைப் பெண்ணே!
ஆணவம் வீழ
ஆன்மநேயம் எழும்
ஆண்டவ ஒளி தா வாலைப் பெண்ணே!
வன்பிருள் நீங்கி
அன்பருள் ஓங்க
இருதயத் தமர்வாயே வாலைப் பெண்ணே!
மயக்கம் தெளிந்தே
ஞானம் விளங்க
மார்படி சேர்வாயே வாலைப் பெண்ணே!
முக்குணம் நீக்கி
சச்சிதானந்தமாய்
நாபியில் சேர்வாயே வாலைப் பெண்ணே!
இருண்மை நீக்கிக்
கருணை அருளுமாய்
நாபியடி சேர்வாயே வாலைப் பெண்ணே!
மனித மிருகமெனில்
கடவுள் தானோங்க
முதுகடி சேர்வாயே வாலைப் பெண்ணே!
கொடுங்கோன்மை நீங்கி
அருளாட்சி ஓங்க
முழந்தாள் சேர்வாயே வாலைப் பெண்ணே!
உன்மத்தம் நீங்கி
மெய்ஞ்ஞானம் விளங்கப்
பாதங்கள் சேர்வாயே வாலைப் பெண்ணே!
யாதும் ஊரேயெனும்
பூங்குன்றன் நோக்கை
நெஞ்சத்தில் விரிய வை வாலைப் பெண்ணே!
தேவன் ஒருவனெனும்
திருமூலர் வாக்கை
சித்தத்தில் பதிய வை வாலைப் பெண்ணே!
வரண்ட பூமிக்கு
மழை வரந் தரவே
வானந் திறப்பாயே வாலைப் பெண்ணே!
நிலத்தடி நீரை
நிர்மலமாக்கி
மேலெழச் செய்வாயே வாலைப் பெண்ணே!
எங்கும் பசுமை
கண்களில் நிரம்ப
எம் நெஞ்சைப் பண்பட வை வாலைப் பெண்ணே!
செயற்கை உரம் போட்டு
மண்ணைப் பாழாக்கும்
எம்மை மன்னிப்பாய் வாலைப் பெண்ணே!
இயற்கை உரம் போட்டு
மண்ணை வளமாக்க
எமக்குக் கற்பிப்பாய் வாலைப் பெண்ணே!
ஆலைக் கழிவுகளால்
மண்ணைப் புண்ணாக்கும்
எம்மை மன்னிப்பாய் வாலைப் பெண்ணே!
ஆலைக் கழிவுகளால்
ஆற்றை நஞ்சாக்கும்
எம்மை மன்னிப்பாய் வாலைப் பெண்ணே!
ஆலைக் கழிவுகளால்
காற்றை நஞ்சாக்கும்
எம்மை மன்னிப்பாய் வாலைப் பெண்ணே!
கழிவில்லா ஆலைகளை
உருவாக்கும் தொழில் நுட்பம்
எமக்குக் கற்பிப்பாய் வாலைப் பெண்ணே!
மரங்களை வெட்டி
மனிதத்தைச் சிதைக்கும்
எம்மை மன்னிப்பாய் வாலைப் பெண்ணே!
மரங்களை நட்டு
மனிதத்தைப் பேணும்
மன இதம் அருள்வாயே வாலைப் பெண்ணே!
மிருகங்கள் கொன்று
மாமிசந் தின்னும்
எம்மை மன்னிப்பாய் வாலைப் பெண்ணே!
மிருகங்கள் பேணி
சைவமே உண்ணும்
ஆன்ம நேயந் தா வாலைப் பெண்ணே!
1
ஈரப் பசுமையும்
வீரச் செம்மையும்
ஊட்டும் உண்மையே
மார்புள் அன்பூ!
2
தாழும் அன்பூக் கோப்பை
வாழும் எல்லாம் பருக
போதம் இன்பைப் பகிர
3
ஈரமும் வீரமும்
வேறறக் கூடிய
ஞானமோ அன்பூ
4
கவிழ்ந்தது அன்பூக் கோப்பைத்
தயமும் ஜெயமும் ஒருங்கே
நமக்கு ஊற்ற
5
காணா வித்தது
காணும் இப்பூவாய் மலர்ந்து
பூமி பார்க்க
மார்புள் அன்பூவாய் மணக்கும்
ஆதி மூல
ஞாபகம் தோணுது
6
அன்பூ மிகுதி கவிழ
என்பூத் தொகுதி இளகி
இன்பூ பெருகி ஒளிரு(யு)ம்
(அன்பூ = அன்பு, என்பூ = என்பு, இன்பூ = இன்பு)
7
வள்ளல் அன்பூ கவிழ
பொன்மெய் உடம்பூ அவிழ
இன்பூ உயிர்ப்பூ முகிழும்
(உடம்பூ = உடம்பு, உயிர்ப்பூ = உயிர்ப்பு)
8
எட்டலாகாப் பெருநிலை தலை
முட்டிக் கவிழ்ந்த மெய் தலைக்
கெட்ட அவிழ்ந்ததோ இப்பூ