பொய்வாய் அரவம் ஓய மெய்வாய்
உண்*மை உணர்வித் தீர்
தீராக் காம வேட்கை தணித்தே
நேசா தாரத் தென்னைத் திணித்தே
ஆகா காதல் ஊற்றைத் திறந்தே
நாகை நாதர் நீர்எனைப் புணர்ந்தீர்
தீராக் கோபத் தீயை அவித்தீர்
நேசா தார நீரைத் தெளித்தே
மாயைத் தூக்க மயக்கந் தெளிய
ஞானா தாரம் மேலே குட்டினீர்
நீரே தேவ நீராய்ப் பாய்ந்தீர்
தேகா தாரம் ஏழும் நிறைந்தீர்
மாயைச் சாவின் வேரை அறுத்தீர்
மாயா வாழ்வின் பேறை அளித்தீர்
தீராப் பாவக் கணக்கைத் தீர்த்தீர்
சேறாம் பூமி மணக்க நீர்எம்
தாயா ரோடு இணைந்தே இற(ர)ங்கி
சேயெம் மெய்தாம் உயிர்க்கப் பூத்தீர்
தீர்க்கப் பார்வை நெற்றியில் திறந்து
மூர்க்க மனநோய் தீர்த்து வைத்தீர்
மூல மெய்ம்மை காட்டித் தெருட்டி
மாயப் பொய்ம்மை ஆட்டம் முடித்தீர்
தீர்த்தம் நீரே ஞான ஒழுக்கு
மூர்த்தி நீரே மார்புள் விளக்கு
வார்த்தை நீரே வாயுள் இனிப்பு
ஓர்மை நீரே பேரா அன்பு
புன்னீர் ஒழுகும் கண்கள் இரண்டில்
நன்னீர் கண்மை பொங்கச் செய்தீர்
கல்லாய் இறுகிய மனத்தை இளக்கி
மெய்வாய் இருதயத் தினிக்கச் செய்தீர்
தீரா ரோகம் யாவுந் தீர்த்தீர்
சீராய் நீரே யான்கொளச் சேர்ந்தீர்
நாராம் என்னை மலராய் மணந்தீர்
பூராய் உம்மை எனக்குத் தந்தீர்
தீராச் சுழலாம் பிறப்பும் இறப்பும்
நீசப் பிழைப்பும் அறவே நீக்கும்
ஆழிச் சுழலாம் அறமே நாட்டி
மாயா வாழ்வை யாம்பெறத் தந்தீர்
தீர்த்தேன் நின்னை என்றே உருமுங்
கூர்வாள் கர்மம் ஒடித்துப் போட்டீர்
பேர்நான் ஒட்டி ஆணவம் ஓட்டி
சேர்ந்தீர் என்னை ஆண்டவ ரேநீர்
நீர்மை உமதை யான்பெறத் தந்தீர்
தானாம் மமதைக் கூர்அறச் செய்தீர்
நானே நானாம் ஓர்மை சேர்த்தீர்
ஓமய ஞானப் பொன்மெய் தந்தீர்
தீர்ப்பெனுந் தண்டிப்பை மன்னிப்பால் தீர்த்தீர்
ஈர்த்தெனை உம்அங்கைக் குள்அன்பாய் வைத்தீர்
மாற்றினீர் என்னைஉம் போல்அற்புத மாய்நீர்
போர்த்தினீர் என்மேல்உம் வெள்ளங்கி யைநீர்
நீர்யார் அறியா நாயனை நீரே
சேர்ந்தீர் **அறிவாய் நானென** பார்நீ
நான்யார் என்றே மாயை உரித்தீர்
நானே என்றே ஓர்மை உரைத்தீர்
ஈர்த்தே என்னை உம்மில் சேர்த்தீர்
தூர்த்தே என்னை உம்மை வார்த்தீர்
பேரா உண்மை உணர வைத்தீர்
பேராய் உம்மை என்னில் சேர்த்தீர்
ஈரிரு நான்காம் திடத்தின் வேராய்
வேறற உள்ளீர் பதி(ன்)மூன் றாய்நீர்
சீர்மிகு ஞான முதல்வன் நானாய்ப்
பார்உள யாவுளும் ஒளிந்தீர் நீரே
நீரே இற(ர)ங்கி நேசமாய் இணைந்தீர்
நானே நீயென நீயே நானென
ஓர்மை உணரும் ஞானமே அளித்தீர்
நீர்மை எனதினி நினதென விதித்தீர்
தீரமும் ஈரமும் ஒருங்கே ஊட்டுஞ்
சாரமாம் நேசமாய் இருதயத் தினிக்கிறீர்
காரமாம் பேதமே அறவே நீங்கிடஓங்
காரமாம் நாதமே உரக்க முழங்கினீர்
No comments:
Post a Comment