Wednesday, January 12, 2011

வாலைப் பாட்டு

மாயா நிலையமாய்
மாளாமல் யாம் வாழக்
குறியொன்று சொல்வாயே வாலைப் பெண்ணே!

வாயாடும் யாமெல்லாம்
நாபூட்டித் தவஞ்செய்யக்
குருமொழி அருள்வாயே வாலைப் பெண்ணே!

மாமாயைப் பேயாட்டம்
ஓயவே மாயோக
நெறியொன்றைத் தருவாயே வாலைப் பெண்ணே!

சிவகாதல் தன்னுள்ளே
அவகாமங் கரைகின்ற
ரசவாதம் செய்வாயே வாலைப் பெண்ணே!

தேகமெய் தன்னுள்ளே
போதமெய் உயிர்க்கின்ற
போதகந் தருவாயே வாலைப் பெண்ணே!

உலகம் பழிக்கின்ற
கருமனம் வெளுக்கவே
அருட்பாலைப் பொழிவாயே வாலைப் பெண்ணே!

பேதச் செயற்கையைப்
பேணும் மனிதர்க்கு
நேச இயற்கை தா வாலைப் பெண்ணே!

சுத்த சமரசம்
புத்தியில் தோயவே
எம் சித்தஞ் சுத்தி செய் வாலைப் பெண்ணே!

நொந்த எம்மவர்
நல்லீழங் காணவே
சித்தியை அருள்வாயே வாலைப் பெண்ணே!

எங்குஞ் சமாதானம்
என்றங்கே இன்புறும்
நன்னெறி நாட்டுவாய் வாலைப் பெண்ணே!

சிங்கம் புலியைப்
பசுவாய் மாற்றியே
ஈழத்தில் மேயச் செய் வாலைப் பெண்ணே!

உத்தம ஆண்டவர்
எம்முள்ளே காணும்
மெய்வழி அருள்வாயே வாலைப் பெண்ணே!

வள்ளலார் போலே
பெருவாழ்வை யாம் காண
நிச்சயம் செய்வாயே வாலைப் பெண்ணே!

பரஞான போதம்
உச்சியில் சேரமேம்
பாலந் திறப்பாயே வாலைப் பெண்ணே!

தூயநன் நோக்கம்
நெற்றி வெளுக்கவே
திருவிழி திறப்பாயே வாலைப் பெண்ணே!

அகதீட்சை தருகின்ற
குருமொழித் தேனைத்
தொண்டையில் ஊற்று நீ வாலைப் பெண்ணே!

இருதயத் திருபூமியைச்
சேர்ந்தே யாம் உய்ய
எம் நெஞ்சம் திறப்பாயே வாலைப் பெண்ணே!

சத்திய தரிசனம்
யாம் காண எம்மேல்
பூசிய பொய்யுரி வாலைப் பெண்ணே!

அற்புதப் பரிமாற்றம்
எம்முள்ளே தோன்றவே
தந்திரஞ் செய்வாயே வாலைப் பெண்ணே!

ஜோதி ஸ்வரூபமாய்
பூமியில் யாம் எழ
சாகாக் கலை தா வாலைப் பெண்ணே!

மெய்யாம் நல்உடம்பைத்
தயவின்றி வருத்தும்
பொய்யோகம் ஏனோடி
வாலைப் பெண்ணே!

மெய்யாம் நல்உடம்பின்
மெய்யான பொருளை
யாம் உணரத் தருவாயே வாலைப் பெண்ணே!

போலிச் சாமியார்
காலில் போய் வீழுங்
குருடோடி நீ வாலைப் பெண்ணே!

தேக மெய்யுளே
உயிராய் வாழுவார்
உட்குருவைச் சேர் நீ வாலைப் பெண்ணே!

மூர்த்தி பூசை
மோகந் தீரவே
குரு உள்ளே காட்டுவாய் வாலைப் பெண்ணே!

எம்மன மாசுகள்
நீக்கியே தேக மெய்ச்
சுத்தந் தருவாயே வாலைப் பெண்ணே!

ஆணவக் காரனை
ஓட விரட்டும்
நற்றவத்திரு நீ வாலைப் பெண்ணே!

ஆண்டவர் தம்மை
மணஞ் செய்துள்ளே
கூடியிரு நீ வாலைப் பெண்ணே!

நாகம் எழுப்பிநற்
பாம்பாக மாற்றவே
மந்திரம் ஓது நீ வாலைப் பெண்ணே!

ஆதாரம் ஆறில்
நிராதாரம் சேரும்
மாயா உயிர்மை தா வாலைப் பெண்ணே!

கனவும் நனவும்
உறக்கமுங் கடந்தத்
துரிய விழிப்பைத் தா வாலைப் பெண்ணே!

பூஜ்ஜியமென்னைப்
பூரணமாக்க
உச்சியில் சேர்வாயே வாலைப் பெண்ணே!

இருட்கிடங்கென்னை
ஒளி மயமாக்க
நெற்றியில் சேர்வாயே வாலைப் பெண்ணே!

பிறந்திறந்துழலும்
சுழலைத் தாண்ட
தொண்டையில் அளி தா வாலைப் பெண்ணே!

ஆணவம் வீழ
ஆன்மநேயம் எழும்
ஆண்டவ ஒளி தா வாலைப் பெண்ணே!

வன்பிருள் நீங்கி
அன்பருள் ஓங்க
இருதயத் தமர்வாயே வாலைப் பெண்ணே!

மயக்கம் தெளிந்தே
ஞானம் விளங்க
மார்படி சேர்வாயே வாலைப் பெண்ணே!

முக்குணம் நீக்கி
சச்சிதானந்தமாய்
நாபியில் சேர்வாயே வாலைப் பெண்ணே!

இருண்மை நீக்கிக்
கருணை அருளுமாய்
நாபியடி சேர்வாயே வாலைப் பெண்ணே!

மனித மிருகமெனில்
கடவுள் தானோங்க
முதுகடி சேர்வாயே வாலைப் பெண்ணே!

கொடுங்கோன்மை நீங்கி
அருளாட்சி ஓங்க
முழந்தாள் சேர்வாயே வாலைப் பெண்ணே!

உன்மத்தம் நீங்கி
மெய்ஞ்ஞானம் விளங்கப்
பாதங்கள் சேர்வாயே வாலைப் பெண்ணே!

யாதும் ஊரேயெனும்
பூங்குன்றன் நோக்கை
நெஞ்சத்தில் விரிய வை வாலைப் பெண்ணே!

தேவன் ஒருவனெனும்
திருமூலர் வாக்கை
சித்தத்தில் பதிய வை வாலைப் பெண்ணே!

வரண்ட பூமிக்கு
மழை வரந் தரவே
வானந் திறப்பாயே வாலைப் பெண்ணே!

நிலத்தடி நீரை
நிர்மலமாக்கி
மேலெழச் செய்வாயே வாலைப் பெண்ணே!

எங்கும் பசுமை
கண்களில் நிரம்ப
எம் நெஞ்சைப் பண்பட வை வாலைப் பெண்ணே!

செயற்கை உரம் போட்டு
மண்ணைப் பாழாக்கும்
எம்மை மன்னிப்பாய் வாலைப் பெண்ணே!

இயற்கை உரம் போட்டு
மண்ணை வளமாக்க
எமக்குக் கற்பிப்பாய் வாலைப் பெண்ணே!

ஆலைக் கழிவுகளால்
மண்ணைப் புண்ணாக்கும்
எம்மை மன்னிப்பாய் வாலைப் பெண்ணே!

ஆலைக் கழிவுகளால்
ஆற்றை நஞ்சாக்கும்
எம்மை மன்னிப்பாய் வாலைப் பெண்ணே!

ஆலைக் கழிவுகளால்
காற்றை நஞ்சாக்கும்
எம்மை மன்னிப்பாய் வாலைப் பெண்ணே!

கழிவில்லா ஆலைகளை
உருவாக்கும் தொழில் நுட்பம்
எமக்குக் கற்பிப்பாய் வாலைப் பெண்ணே!

மரங்களை வெட்டி
மனிதத்தைச் சிதைக்கும்
எம்மை மன்னிப்பாய் வாலைப் பெண்ணே!

மரங்களை நட்டு
மனிதத்தைப் பேணும்
மன இதம் அருள்வாயே வாலைப் பெண்ணே!

மிருகங்கள் கொன்று
மாமிசந் தின்னும்
எம்மை மன்னிப்பாய் வாலைப் பெண்ணே!

மிருகங்கள் பேணி
சைவமே உண்ணும்
ஆன்ம நேயந் தா வாலைப் பெண்ணே!

No comments: