1
அகமதுக் கோப்பை என்னில்
அல்லாவின் அருட்பானம்
நிரம்பி வழிகிறது
நிலமிசை தயவாய்!
2
இருதய ஓட்டையில் ஒழுகும்
அருண்மய அல்லாவின் பானம்!
திரு*முகமது* சாட்சி யாகும்!
3
அலைபாயும் மனமது திரும்பி
*அகமது*வே கதியாய் அடங்க
திரும்பும் எங்கும் அல்லாவின்
திரு*முகமது*வே தென்படும்!
4
அல்லா என்னில்
நீ கரைகிறாய்!
எல்லா மாகி
யாம் மறைகிறோம்!
5
அன்பே அகமது
அருளே முகமது
தயவே சையது(செய்யது)
6
அல்லாப் பளிங்கில்
நல்லார் நபிகளாய்
என்னைக் கண்டதும்
பொல்லா உலகின்
என்பொய்ப் பிம்பம்
பொன்மெய் யாகும்!
7
அவனே என்னுள்
நானாய் எழுகிறான்.
நானே அவனுள்
அவனாய் விழுகிறேன்.
எழுவது
அவனது இர(ற)க்கம்.
விழுவது
எனது ஏற்றம்.
8
வெறும் நானாக
அகமே முகமாய்
நான் நிற்க
அவனே நானான
ஒருமையின் ஞாபகம்
முழுதாய் மீள்கிறது
9
என் இருப்பே
அவனென அறிந்து
சும்மா இருக்கிறேன்
நான்!
நானே நீயென
உறுதி கூறித்
தானே செயலாற்றுகிறான்
அவன்!
10
அல்லாவே வரைந்தான்
அகிலமுள யாவையும்!
உள்ளேபோய் மறைந்தான்
திரு "முகமது"வாய் யாவிலும்!
11
அல்லாவின் திரு முகம்
ஒவ்வொன்றின் உருவெழும்
தென்படா அக முகம்
வரையவொணா மறை முகம்
வரையரைகள் கடந்திருந்தும்
இறைந்திருக்கும் ஒரு முகம்
வரந்தரவே யாவுக்கும்
இற(ர)ங்கும் அருண் முகம்
பவ வினை அறு முகம்(கரும வினைகளை அறுக்கின்ற முகம்)
மன இதம் பழுக்க
அக விழி திறக்கத்
தெரிந்திடும் அவன் முகம்
No comments:
Post a Comment