இணைய வானில் வலம் வரும்
வெள்ளை உள்ளக் காக்கைகளே!
கொத்த வாருங்கள் கருநாகம் படைக்கும்
கவிச் சோற்றுக் கவளங்கள்!
1. இயற்கை *வகுத்த* விஞ்ஞை
*கூட்டுப்* புழுவில்
கம்பளிப் புழுவின் நெளிதல் *கழிய*
வண்ணத்துப் பூச்சியாய்ப் பறக்கும்
வேகப் *பெருக்கல்*!
2. அமோக வியாபாரம்
"நான்" என்னும் முதலாளி
நாகராத் தொழிலாளி
ஆதாயம் அன்பை
யாவருமே துய்க்க
ஆகாகா இன்பம்!
3. அமைதி நுண்ணலை வரிசை!
நுண்ணலைக் கோபுர உச்சியில்(வயர்லெஸ் டவர்)
வெண்புறாப் போதகர் குந்தியே
எத்திக்கும் கற்பிக்கும் அற்புதம்!
4. காக்கை
நீல வானில்
கரு மை பாயப்
பறக்கும் உயிரோவியம்!
காக்கை _________ எங்கள் சாதி
காணாமல் போனக் குருவியால்
மாளுமோ மனித சாதி!
6. முரண்பாடு
தென்னைத் தலைகளின்றி
முண்டமான மண்ணில்
தலையிருந்தும் முண்டமாய்
நான்!
7. தன் வினை தன்னைச் சுடும்!
மரங்களைத் தின்னும்
மனிதப் பூச்சிகள்
கான்க்ரீட்டுக்கு இரையாகும்
8. காக்கையார் அருள் வாக்கு
எவ்வுயிருங் காக்கச் சொல்லிக்
கத்துங் 'கா' 'கா' 'கா' என்றே
கொத்தித் தின்னுங் காக்கை!
9. இரவின் வெளிச்சம்
விழியிலிருந்து நீளும்
புலப்படா விரல்கள்
விண் மீன்களைத் தொட
என்னுள் பரவும்
இரவின் வெளிச்சம்!
10. கொத்தல்கள்
சோற்றைக் கொத்துங் காக்கை
காக்கையைக் கொத்தும் என் பார்வை
என் பார்வையைக் கொத்தும் நான்
என்னைக் கொத்துவார் யாரோ?!
தும்பியைப் பிடிக்கத்
துள்ளும் நெஞ்சே!
அண்டமே அடங்கும்
விஞ்ஞை நீயே!
தயாபரத் தரத்தைத்
தராதலத் திறக்கத்
"தா! வரம்" என்றே
மோனமாய்த் தவஞ்செயுந்
தாவரம்!
No comments:
Post a Comment