Sunday, January 16, 2011

தென்னை-காக்கை

1

தென்னையின் மௌனத்தில்
காக்கை கரைகிறது!
கனக்குங் கருத்த மையுண்டு
கவிதைக் கரு மிதக்கிறது!

2

"கா" "கா" "கா"
தென்னை மரத்தின்
காக்கைப் பூக்கள்
காதினில் பாய்ச்சும்
செந்தமிழ்த் தேன்!

3

தென்னைக் கோபுர உச்சியில்
காக்கைகள் ஒலி பரப்பும்
இயற்கைக் கா*ப்பீட்டு
அவசிய அலை வரிசை!

4

முதுகுத் தண்டுத் தென்னையில்
பூத்திருக்கும் காக்கைக் கண்ணொன்றில்
விழித்திருக்கிறேன் நான்
இருதயக் கனிரசம் இளநீர் பருகி!

5

தென்னையுங் காக்கையும்
நானும் மற்றுள யாவும்
அதீத விழிப்பின்
அழகுப் படிமங்கள்!

6

அவசரச் செயற்கைச்
சிமெண்டுக் காட்டில்
அவசிய இயற்கைத்
தென்னைக் கோடுகள்
வேகமாய் அழியும்
அபாயந் தடுக்க
அலறுங் காக்கைகள்!
நிமிர்ந்து நடக்கும்
யந்திர மிருகம்
இயற்கை காக்கும்
மந்திர மனிதமாய்
மாறும் அற்புதத்
தந்திரஞ் செய்ய
நெஞ்சத் துடிக்கும்!

7

தென்னையில் உயிர்களுக்குதவும்
இன்னல்கள் பொறுக்கும்
நற்றவ மௌனமாய் நிற்கிறேன்!
காக்கையில் உயிர்களைக்
காக்கச் சொல்லிக் கதறும்
ஆத்மார்த்த வார்த்தையாய் ஒலிக்கிறேன்!

8

தென்னைக்கு நீராகி
விழுகிறேன்!
காக்கைக்குக் கவளங்களாகிக்
கொத்தப்படுகிறேன்!
விழுந்தும் கொத்தப்பட்டும்
மனிதனாய் எழுகிறேன்!

9

ஜன்னலை வருடியதால்
வலிய முறிக்கப்பட்டன
தென்னங் கீற்றுகள்!
தென்னையின் இரணங்களுக்குக்
களிம்பாய் நீளும்
என் பார்வைகள்!

10

எந்திரம் *என்னைத்* தாண்டித்
தந்திரத் *தென்னை* மேல்(தகர மெய்ம்முதல் கொண்ட தென்னை)
மந்திரக் காக்கைக்குள் தாவி(கா, கா எனக் காக்கச் சொல்லும் மந்திரம்)
மீள்கிறேன் என்னுள்
அற்புதமாய்ப் பரிமாறி!

11

*தென்னை* நான்
*என்னைத்* தான்
காக்கைக் கண்ணால்
பார்க்க !!!ஆ*கா*கா*!!!
நெஞ்சக் கனிரசத்
தெள்ளிய இளநீர்
மெய்யுள் தெறிக்க
அன்பின் இயற்கை
எங்கும் உயிர்க்குதே!

12

புல்லினத் தென்னை மேல்
வல்லினக் *காக்கை*யை
மெல்லின நெஞ்சின்
கண்ணது பார்க்க
அற்புத மாற்றம்
என்னிடை நிகழுதே!

No comments: