இருதய வாயில்
அன்பு நா சுவைக்கும்
பிரபஞ்சக் காட்சியில்
தித்திக்குதே யாவும்!
இருதய வாசல் திறந்த போது
பிரபஞ்ச முழுமையும்
என் மெய்க்குள் கற்கண்டாய்க் கரைகிறது!
கால வெளிப் பளிங்கில்
காட்சி தரும் யாவும்
இருதயப் பழத்தின்
அமுதப் பிழிவே!
இருதய விழியில்
உரத்துக் கேட்கிறது
சமரச நாத ஒளி!
அதுவன்றோ
மெய்க்கு உயிராகும்
ஆன்ம நேய நெறி!
மனப் பளிங்கு காட்டிய
இருதய வாசலில் நுழைந்து
தொலைந்து போனது பிரபஞ்சம்!
தலை மேல் ஜோதி
மெய்க்குள் திறந்த
இருதய விழியில்
எல்லாந் தெரிகிறது!
நெற்றியில் பற்றிய
வெண் தீப் பிழம்புகள்
மனத்தை உருக்கி
வண்ணக் குழம்புகளாக்கி
இருதயப் பள்ளத்தை
அன்புக் குளமாக்கும்!
படிமப் பளிங்கில்
படர்ந்த உருவம்
பராபர அருவம்!
இதைப்
பார்க்க வேண்டின்
மார்பில் திறப்பாய்
நேச இருதயம்!
இதய யந்திரம்
இயக்கும் மந்திரமாய்
என்றும் இருக்குதே
நின் இருதயம்!
இதன் ஞாபகம்
மனத்தை ஞான வழியாக்கும்
குரு ராஜ தந்திரம்!
இருதயப் பழத்தைக்
கால வெளி பிழியும்
அமுத வேதனை தவிர
எனக்கும் எதுவும் புரியவில்லை!
என் சக்திக்கு மீறி
என்னைப் பகிரச் சொல்லும்
ஒன்றின் குரல் மட்டுமே
எனக்கு உரத்துக் கேட்கிறது!
பகிர்பவன்
பகிரும் பொருளில் கரைந்த பின்
எஞ்சுவது அன்பின் சுவை மட்டும்!
பரமாகாசத்திலிருந்து(தலையுச்சி)
சிதாகாசத்துக்கு இறங்குது(நெற்றி)
பரிசுத்த ஆவி வெண் புறா!
பூதாகாசப் பளிங்கில் பிரதிபலிக்குது
பிரபஞ்சத் தெளிவு!
மூச்சின் வாசத்தில்
திறக்குது இருதய வாசல்!
உள்ளே தீப்பிழம்புகள் உருகத்
தேங்கும் அன்புக் குளத்தில்
இலேசாகி மிதக்கிறது மெய்!
தலைக் கிரி மேல் உதித்த
ஞானக் கதிரவனின் வெம்மையில்
இருதய வாசலை மூடிய
மாயைப் பனிப் படலம்
கரைந்து போக
பிரபஞ்சப் பளிங்கில்
பளபளக்கும் வண்ணங்களில்
பரப்பிரம்ம தரிசனம்!
பிரபஞ்ச வெளியில்
தொங்கும் படிமப் பளிங்கில்
சுக சொரூப தரிசனம்!
மனத்தைத் தாண்டி
இருதய வாசலில் நுழைந்தால்
பிரபஞ்சமாய் வழியும்
பரப்பிரம்மம் புலப்படும்!
No comments:
Post a Comment