பெயர்கள் இறைந்து கிடக்கும்
தெருக்களெங்கும்
பெயர்கள் குறிக்கும் பொருட்களுள்
உட்பொருளாய் ஒளிந்திருக்கிறேன்..
பெயர்களால் பொருட்களை அழைத்துப்
பெயர்களைப் பொருட்களாக்கிக்
குழம்பிப் போனவர்கள்
உட்பொருளாம் என்னை
ஒரு பொருளாயும் மதியாதவர்கள்..
பெயர்கள் அனந்த வண்ணத் திரைகளாகி
பொருட்களை மறைக்கக்
கண் கவரும் வண்ணங்களில் மயங்கி
கண்மூடித்தன எண்ணங்களில் இறுகி
பொருட்களை வெளிப்படுத்தும்
கருப் பொருளாம் என்னைக்
கருது பொருளாய்க் கொள்ளாதவர்கள்..
பெயர்களுக்குப் பின்னே
பொருட்களுக்குள்ளுள்ளே
அழிந்து போகா எனதடையாளத்தில்
விழித்து சாகாதிருக்க முயலாதவர்கள்..
நிலையிலாப் பெயர்களோடு
தோன்றி மறையும் பொருட்களின் உள்ளடக்கமான
நிலைபெயரா அருட்பொருள்
தோன்றா மறைப்பொருள் என்னை
ஆளென்ற தடிமனால்
ஆணவமாக்கிப் பழகியவர்கள்..
உருவெடுத்துப் பெயரேற்றேன்
தெருவெல்லாம் இறைந்துள்ளேன்
என்றாலும்
உரு பெயர் கடந்து
அருவாகிப் பெயரற்று
ஒவ்வொன்றின் உள்ளுள்ளே
எக்காலும் உள்ளேன்
நேசப் பேரிருப்பாய்
ஞானப் பேரறிவாய்
ஆனந்தப் பேருணர்வாய்..!
முத்தமிழ் மன்றத்தில் அப்துல் காதர் அவர்களின் "பெயரற்றவன்" கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை
No comments:
Post a Comment