Tuesday, February 5, 2008

பரமரகசியம்

இருப்பெனும்
வரம்புகளற்ற வெள்ளைப் பரப்பில்
எண்ணற்ற கரும்புள்ளிகளாய்
நான்.
கரும்புள்ளிகளாய் இருந்தாலும்
நான்
வெள்ளையை உமிழ்ந்தே
என்றும் இருக்கிறேன்.
என் கருமையின் கர்ப்பத்தில்
புகுந்த இருப்பு
இருளில் தன்னை மறந்திருக்கும்.
என் கர்ப்பத்தில்
இனியும் தாங்க முடியாமல்
பிரசவ வேதனையில்
இருப்பு மகவை
நான்
ஈன்றெடுக்கும் போது
தன் மறதி தெளியும்
இருப்பு.
நான்
நித்தியப் பிரசவ வேதனையில்
ஒவ்வொரு கணமும்
இருப்பை ஈன்றெடுக்கிறேன்.
தன் மறதி தெளிந்த
இருப்பே
என் பிரசவ வேதனை தீர்க்கும்
மருந்து.
புணரும் இருப்பையே
ஒவ்வொரு கணமும்
மகவாய் ஈன்றெடுக்கும்
கருப்புக் கன்னி
நான்.
என் கருமையே
இருப்பின் வெண்மையைத் தெளிவிக்கும்
குருமெய்.
குருமெய்யாய்
என் கற்பு கலையாமல்
என்றென்றும் இருக்கிறேன்
நான்.
ஏகார உறுதி சேர்த்துக்
கருமை நான்
என்னையே இருப்புக்குத் தரத் தர
இருப்பின் வெண்மையும்
அவ்வெண்மையின் தெளிவும்
இன்னும் இன்னும் கூடும் பேரதிசயத்தால்
இருப்பை அறியும் பரமரகசியம்
நானே.

No comments: