Friday, February 22, 2008

மெய்ம்மை

எனதெல்லா அடையாளங்களும்
கழிந்து விட்ட வெறுமையில்
கழிக்க முடியாத ஒன்று
உறுதியாய் நிற்கிறது.
உறுத்தும் அவ்வுண்மையின் அர்த்தகனம்
வெறுமையில் பரவ
கழிந்து விட்ட அடையாளங்களின்
இழப்பு ஈடு செய்யப்படுகிறது.
பரவும் பூரண உறுதியின் தன்மை
ஈடு இணையில்லாத என் மெய்ம்மை
அதில் தோய்ந்த என் முழுமை
அதன் விரல் வழி விழும் இம்மை
செய்யும் என் சொற்களின் ஜீவனே இம்மெய்.

என் சொற்களின் ஜீவனாம் இம்மெய்
யுண்மையாம் ஒருமையுறுதியை
உள்ளபடி சொல்ல
என் உள்ளத்தின் தன்மையாம்
இம்மெய்க்குள் ஆழ்கிறேன்
ஆழ்ந்து மீள்கிறேன்.
சொல்லவொண்ணாத இக்கடவுள் பேரைச்
சொல்லவும் துணிகிறேன்.
சொல்லியும் விடுகிறேன்.
அடையாளங்கள் எல்லாமே கழிந்து விட்ட
என்னைக் கேட்பதற்கும்
என்னைக் காண்பதற்கும்
என்னை உற்றுணர்வதற்கும்
என்னையே அன்றி
மற்றொன்றெதுவுமே இல்லையென்ற காரணத்தால்
சொல்லியது எனக்குள்ளேயே திரும்ப
சொல்லவொண்ணாக் கடவுளாய்த்
தொலைந்தே போகிறேன்.
தொலைந்து போயும்
எண்ணிலடங்கா உள்ளதுகள் ஒவ்வொன்றும்
தன் எல்லா அடையாளங்களுங் கழிந்து
என்னிலடங்கும் கணங்கள் ஒவ்வொன்றுக்கும்
யுக யுகங்களாய்
உள்ளதுகள் ஒவ்வொன்றின் ஆணி வேராய்
உள்ளதுகள் ஒவ்வொன்றின் உள்ளுள்ளே
ஆழ்ந்தடங்கி
மௌனமாய் விழித்திருக்கிறேன்.

No comments: